திரைக் கதிர்

"வர்மா' பட சர்ச்சைகளுக்குப் பின் பெரும் அமைதி காத்து வந்தார் இயக்குநர் பாலா. இப்போது தனது அடுத்த  படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
திரைக் கதிர்

"வர்மா' பட சர்ச்சைகளுக்குப் பின் பெரும் அமைதி காத்து வந்தார் இயக்குநர் பாலா. இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். ஆனால் இந்த முறை இவர் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் நடிப்பில் வெளியான படம், "ஜோசப்'. இதன் தமிழ் ரீமேக் உரிமையை ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். இதில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். எம்.பத்மகுமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக ஆர்.கே.சுரேஷ் தன்உடல் எடையை 73 கிலோவிலிருந்து 95 கிலோவுக்கு அதிகரித்துள்ளார். அவரை "தாரை தப்பட்டை' என்ற படத்தில் நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலா தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.

"போடா போடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர் வரலெட்சுமி.நடிகர் சரத்குமார் மகளான இவர் "தாரை தப்பட்டை', "சண்ட கோழி 2', "சர்கார்' என பல படங்களில் தொடர்ந்து கதாநாயகி என்றில்லாமல் எதிர்மறை வேடம் என கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ""இதுவொரு நீண்ட கடினமான பயணம். நல்ல விஷயங்களை அடைவது சுலபம் அல்ல என்பார்கள்.

என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. ஆனால் கண்டிப்பாக கனவுகள் ஒருநாள் நிஜமாகும். எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களைச்சந்தித்து உள்ளேன்.இப்போது நான் 25 படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன் என்பதே பெரிய அளவு கோலாக எனக்குத் தெரிகிறது. என்ன நடந்தாலும் என்னுடன் நின்று என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் எதிர்ப்பக்கம் நின்று என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் அவர்களின் எதிர்மறை எண்ணம் என்னை இன்னும்வலிமை ஆக்கியது. அவர்களை தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதமாக என்னை நிற்க வைத்தது. என்னை ஆதரித்து அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் வெளியான "டியர் காம்ரேட்', "கீதா கோவிந்தம்' என விஜயதேவர கொண்டா படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா. அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
ஒருமுறை ராஷ்மிகா குறிப்பிடும்போது,""ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டு காணாமல்போகும் கமர்ஷியல் நடிகையாக நான் இருக்க மாட்டேன். நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன்'' என்றார். அப்போது அருகில் இருந்த விஜயதேவர கொண்டா,""எதிர்காலத்திலும் ராஷ்மிகா இதே பார்முலாவை அதாவது நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரமாக ஏற்று நடிக்க வேண்டும். ஸ்டார் ஹீரோவுடன் நடிக்கிறேன் என்று சொல்லி ஒரு பாடலுக்கும், காதல் காட்சிகளிலும் நடித்து விட்டுச் சென்றால் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவார்'' என எச்சரித்தார். அவரது எச்சரிக்கை இப்போது நிஜமாகியிருக்கிறது. மகேஷ்பாபு ஜோடியாக ""சரிலேரு நீகெவ்வரு'' தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பாடல் காட்சியிலும், காதல் காட்சியிலும் வந்து விட்டு காணாமல்போய் விடுகிறாராம். அதைக்கண்டு ரசிகர்கள் ராஷ்மிகாவை கிண்டலடித்து வருகின்றனர்.

1983-ஆம் இந்திய கிரிக்கெட் அணியினர் முதன் முதலாக உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் படம் "83'. அப்போது கிரிக்கெட் அணியில் இருந்த வீரர்கள் போல் பல நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். கபீர்கான் இயக்குகிறார். கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங், அவரது மனைவியாக தீபிகா படுகோன், தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்ததில் ஜீவா நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தமிழில் வெளியிடுகிறார். இதையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஜீவா இருவரும் மேடையில் தமிழ் பாடலுக்கு ஏற்ப நடனமாடினர். பிறகு கமல்ஹாசன் மாதிரி நடனமாடிய ரன்வீர் சிங் பேசும்போது, ""இங்கு கமல்ஹாசன், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகிய ஜாம்பவான்களுடன் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். உலக கோப்பை வென்ற தருணத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம். நான் கபில்தேவாக நடிக்க அனுமதித்த அவருக்கு நன்றி. வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் படம் வெளியாகிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com