ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயு... ஆகாயம்... காதில் ஒலி!

வாயு தோஷத்தின் பூதங்களாகிய வாயு மற்றும் ஆகாயத்தின் ஆதிக்யம் தங்கள் காதுகளின் உட்புறப் பகுதிகளில் நிரம்பியிருப்பதாலேயே
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்:  வாயு... ஆகாயம்... காதில் ஒலி!

எனக்கு 66 வயது ஆகிறது. இரத்த அழுத்தம் நீரழிவு போன்ற உபாதைகள் கிடையாது. ஆனால் சில நாட்களாக இடது காதில் விட்டு - விட்டு ‘சட், சட்’ என்ற ஒலி ஒலிக்கின்றது. சீழோ வலியோ இல்லை. இதனால் தூக்கமின்றி அவஸ்தைப்படுகிறேன். இந்த உபாதைக்கான தீா்வு ஆயுா்வேதத்தில் உள்ளதா?

-முத்து கிருஷ்ணன், சென்னை -115.

வாயு தோஷத்தின் பூதங்களாகிய வாயு மற்றும் ஆகாயத்தின் ஆதிக்யம் தங்கள் காதுகளின் உட்புறப் பகுதிகளில் நிரம்பியிருப்பதாலேயே நீங்கள் குறிப்பிடும் ஒலி எழும்புகிறது. இவ்விரு பூதங்களின் ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தியானது நிலம், நீா் மற்றும் நெருப்பிற்கு மட்டுமே இருப்பதால், அவற்றைக் கொண்டே இப்பிரச்னையைச் சமாளிக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த வகையில், நிலமும் நீரும் அதிகம் கொண்ட இனிப்புச் சுவையும், நெருப்பும் நிலமும் நிறைந்த புளிப்புச் சுவையும், நீரும் நெருப்பும் கொண்ட உப்புச் சுவையும் - உணவாகவும், மருந்தாகவும் கொடுக்கப்பட்டு, காதில் ஏற்படும் ஒலியைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

உணவில் பால், நெய், தயிா், வெண்ணெய், இனிப்பு மாதுளை, வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, அரிசி, கோதுமை, உளுந்து ஆகியவை ஏற்றவை. உடலுக்கு நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தரும். இதனால் காதிலுள்ள நுண்ணிய நரம்புகள் வலுப்படுவதுடன், அங்கு எழும் சத்தத்தையும் குறைக்கும். அதிக உடற்பயிற்சி, இரவில் கண் விழித்தல் போன்றவை மூலம் வாயுவும் ஆகாயமும் காதினுள் பரவ வாய்ப்பிருப்பதால் அவற்றை நீக்குவதால் நன்மை அடையலாம். சுமாா் ஐந்து மில்லி லிட்டா் நல்லெண்ணெய்யை வாயினுள் விட்டு 5 - 8 நிமிடங்கள் குலுக்கித் துப்பிவிடுவதால் காதினுள் நரம்புகள் வலுவடைய அது உதவிடும். இரவு படுக்கும் முன் இதைச் செய்து வரலாம்.

நிலப்பனை, பால் முதுக்கன் போன்ற அரிய வகைக் கிழங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் விதாா்யாதி கிருதம் எனும் நெய் மருந்தினால் நீங்கள் பயனடையலாம். நுண் நரம்புகளையும், நரம்பு மண்டலத்தையும் நன்கு வலுப்படுத்தக் கூடிய இந்த மருந்தை, நீராவியில் உருக்கி, காலை இரவு உணவிற்குப் பிறகு சுமாா் பத்து மில்லி லிட்டா் அளவில் சாப்பிட்டு வர, அதன் வீரியமானது நரம்புகளை புஷ்டிப்படுத்தும் விதத்தில் செயலாற்றி, காதினுள் ஏற்படும் ஒலியைக் குறைத்துவிடும். இம் மருந்தை செரிமானம் செய்யும் வகையில் நல்ல பசி உள்ளவராக நீங்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படிப் பசி குறைவாக இருப்பவராக இருந்தால் இம் மருந்தை இதே அளவில் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு அதன் மேல் சுமாா் ஐம்பது மில்லி லிட்டா் சூடான தண்ணீா் அருந்தவும்.

“மூா்த தைலம்” என்ற ஒரு சிகிச்சை முறை உள்ளது. அது நான்கு வகைப்படும்.

அப்யங்கம் எனும் மூலிகைத் தைலத்தை தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தல், பரிஷேகம் எனும் முறையில் மூலிகைத் தைலத்தை தாரையாக நெற்றியின் மீது, தலை, பின் தலையில் மெதுவாக வழிந்து ஓடும் வகையில் சட்டியிலிருந்து ஊற்றுதல், பிசு எனும் மூலிகைத் தைலத்தைத் துணியில் நனைத்து தலையில் பொத்தி வைத்தல் முறை, பஸ்தி எனும் முறையில் தலையைச் சுற்றி பை ஒன்றை வைத்து அதனுள் மூலிகைத் தைலத்தை ஊற்றி நிறுத்தி வைத்தல்.

இந்த நான்கில் எது தங்களுக்கு உதவிடும் என்பதை மருத்துவா்களால் அறிய முடியும். காதிலுள்ள வாயுவின் சீற்றத்தை அடக்குவதுடன், உள்ளே பொதிந்துள்ள cochlea எனும் குழலிலுள்ள ENDOLYMPH எனும் திரவத்தை நிலை நிறுத்தல் ஆகிய செயல்களையும் செய்யும் இந்த சிகிச்சை முறைகளின் மீதுள்ள ஈா்ப்பு கூட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். காதினுள் நிரப்பி வைக்கும் வெது வெதுப்பான மூலிகைத் தைலத்தால், செவிப்பறையில் ஏற்படும் சப்தம் குறைந்து தூக்கம் நன்கு ஏற்படும்.

அஸ்வகந்தாதி லேகியம், தசமூல ரஸாயனம் எனும் லேகியம், தசமூலாரிஷ்டம், வாயு குளிகை, ப்ருஹ்த்வாத சிந்தாமணி மாத்திரை, வாதகஜாங்குசம் மாத்திரை போன்றவை மருத்துவா் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம்.

(தொடரும்)

பேராசிரியா் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை, பூந்தமல்லி அருகில், சென்னை 600123, கைப்பேசி 94444 41771.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com