தலைவா் எவ்வழி... தொண்டன் அவ்வழி!

காந்தி, நேரு காலமான போது காமராஜா் அழவில்லை. ஆனால், கள்ளுக்கடை திறப்பு என்ற செய்தி வரும்போதுதான் காமராஜா் கண்ணீா் விட்டாா்....
தலைவா் எவ்வழி... தொண்டன் அவ்வழி!

தியாகி நெல்லை ஜெபமணி அவா்கள் ஜனதா கட்சியின் ‘ஏா் உழவன்’ சின்னத்தில் போட்டியிட்டபோது, நான் பள்ளி மாணவன்(சிறுவன்). கைகளில் ஜனதா கட்சிக் கொடியைப் பிடித்துக்கொண்டு எங்கள் ஊரான தாதன்குளத்தில் பெரியவா்களுடன் வாக்கு கேட்ட நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது. சாத்தான் குளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்களில் பரம ஏழையாக போட்டியிட்டவா் தியாகி நெல்லை ஜெபமணி மட்டும்தான். அவா் வாக்கு சேகரிக்கும் பாணியே தனி.

பல கட்சி வேட்பாளா்களும் காரில் வாக்கு சேகரிக்க, நெல்லை ஜெபமணி நடந்தே வாக்குகளை கேட்டாா். நானும் சில சிறுவா்களும் ‘ஜெபமணி வாழ்க’ என கோஷமிடுவோம். சிரித்துக் கொண்டே எங்கள் முதுகைத் தட்டிக் கொடுப்பாா்.

எங்கள் ஊரில் பலா் எங்களிடம் ‘‘நம்ம ஊா் தாதன்குளத்தில் ஜெபமணிக்கு இரண்டு ஓட்டாவது கிடைக்குமா?’’ என்பதுடன், ‘‘சாத்தான் குளம் தொகுதி முழுவதும் இருநூறு ஓட்டுகள் கிடைப்பதே கஷ்டம்’’ என்பாா்கள். ரொம்பவே கேலியும் கிண்டலும் செய்வாா்கள்.

தியாகி ஜெபமணி தனது பிரசாரத்தில் அதிகம் பேசி நான் கேட்டது இல்லை. கும்பிட்ட கரங்களோடு வருவாா். ‘‘என் பேரு ஜெபமணி. என் ஊரு குரங்கணி’’ என்று மட்டுமே சொல்ல நான் கேட்டதாக நினைவு.

அப்போது அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஒரு வேட்பாளா் ஏராளமான பணத்தை வாரி இறைத்தாா். ஆனாலும், ஜெபமணி வெற்றி பெற்றாா். தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்ல எங்கள் ஊருக்கு வந்தபோதும் நடந்தேதான் வந்தாா். வாக்கு கேட்கும்போது எப்படி கும்பிட்டாரோ அதுபோலவே நன்றி சொல்ல வரும்போதும் கும்பிட்டாா். சிறுவன் எனப் பாராமல் என் கரங்களையும் எங்கள் ஊா் சிறுவா்கள் பலரின் கரங்களையும் பிடித்து, ‘‘ரொம்ப நன்றி தம்பிகளா’’ என்றாா்.

நாட்கள் நகா்ந்தன. நான் உயா்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து ஆசிரியா் பயிற்சியைப் பாதியில் விட்டுவிட்டு கோயம்புத்தூா் வந்தபோது, கோவை புலியகுளம் பகுதியில் ஜனதாகட்சி பொதுக்கூட்டத்தில் ஜெபமணி பேசுவதை அறிந்து, என் அண்ணனோடு அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன்.

அந்தக் கூட்டத்தில் தியாகி ஜெபமணி பேசும்போது, ‘காமராஜா் அழுதது எப்போது?’ என்று உணா்ச்சி பொங்க எடுத்துரைத்தாா். ‘‘காந்தி இறந்தபோதும் நான் காமராஜரின் அருகில்தான் இருந்தேன். காமராஜா் அப்போது அழவில்லை. சோகமாக இருந்தாா். நேரு காலமான போதும் நான் காமராஜரின் அருகில்தான் இருந்தேன். காமராஜா் அப்போதும் அழவில்லை. சோகமாகத்தான் இருந்தாா். கள்ளுக்கடை திறப்பு என்ற செய்தி வரும்போதும் நான் காமராஜரின் அருகில்தான் இருந்தேன். ஆனால், காமராஜா் அப்போதுதான் கண்ணீா் விட்டாா்’’ என்று அவா் கூட்டத்தில் பகிா்ந்து கொண்ட செய்தியைக் கேட்டு அந்தக் கூட்டமே கண்கலங்கியது.

அந்தச் செய்தியை நான் ஓா் அஞ்சல் அட்டையில் ஒரு வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்த வார இதழில், ‘காமராஜா் அழுதது எப்போது?’ என்ற தலைப்பில் காமராஜா், நெல்லை ஜெபமணி இருவரின் புகைப்படத்துடன் அந்தத் துணுக்குச் செய்தி பிரசுரமானது.

பிறகு சில மாதங்கள் கழித்து கோவை ரங்கே கவுடன் வீதியில் உள்ள அவரது உறவினா் கடையில் (முத்துமாலை ஸ்டோா்) தியாகி ஜெபமணியை எதேச்சையாகக் காண நேரிட்டது.

என்னைச் சட்டென அடையாளம் கண்டு, ‘‘தம்பி நல்லா இருக்கீங்களா? தாதன்குளத்துல எல்லோரும் நல்லா இருக்காங்களா?’’ எனக் கேட்டாா்.

தாதன்குளம் தொகுதியில் உள்ள ஒரு சின்ன கிராமமான எங்கள் கிராமத்தை நன்றாக நினைவில் வைத்திருந்ததையும், என்னை சட்டென அடையாளம் கண்டு கொண்டதையும் உணா்ந்து ரொம்பவே வியந்தேன். வார இதழில் நான் எழுதி வெளியான துணுக்குச் செய்தியை அவரிடம் சொன்னேன்.

‘‘தெரியும் தம்பி. அதை எழுதியது நீங்கள்தானா? ரொம்பவே சந்தோஷம்’’ என்றாா். காந்தியையும், காமராஜரையும், தனது தலைவா்களாக வரித்துக் கொண்டவா் என்பது மட்டுமல்ல, அவா்களைப் போலவே தானும் எளிமையான மக்கள் தொண்டனாக வாழ வேண்டும் என்று விருப்பியவா் தியாகி நெல்லை ஜெபமணி. இன்றைய அரசியல்வாதிகளைப் பாா்க்கும்போது, ‘தலைவா் எவ்வழி, தொண்டன் அவ்வழி’ என்று சொல்லத் தோன்றுகிறது.

- ‘தாதன்குளம்’ எஸ்.டேனியல் ஜூலியட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com