இந்தப் பூட்டின் சாவி

அன்று காலையிலிருந்து தங்கத்திற்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ஒருபுறம் இத்தனை காலம்,
இந்தப் பூட்டின் சாவி

அன்று காலையிலிருந்து தங்கத்திற்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ஒருபுறம் இத்தனை காலம், அவனே அடிக்கடிக் கூறிக் கொள்வதை போல அவன் வளர்த்து வைத்திருந்த இமேஜ். மறுபுறம் பக்கத்தில் வந்து கண் சிமிட்டி அழைத்துக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட தேவதை. எதை ஏற்றுக் கொள்வது? எதைக் கைவிடுவது? குழம்பி போனான்.
 தங்கம் எந்த காலத்திலும் எதற்கும் குழப்பம் அடைந்ததே இல்லை. எப்பொழுதுமே தெளிவாக இருப்பான். ஆனாலும் அவன் ஆழ்மனதில் ஒரு திட்டம் இருந்து கொண்டேயிருக்கும். அது முற்றும் முழுவதும் அவன் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும். சில நேரங்களில் வடிகட்டிய இந்த சுயநலம், அவனுக்கே கேவலமாக தெரியும். ஆனால் அதைப் பற்றி அவன் கவலை கொள்வதே இல்லை.
 பொதுவெளியில் ரொம்ப கவனமாக இருப்பான். பிறரிடம் நல்லவனாகக் காட்டி அவர்களை நம்ப வைப்பது தான் அவன் புரிந்து கொண்ட இமேஜ். இந்தக் கலையைக் கற்று அதில் தேர்ச்சி பெறுவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறான். கொஞ்ச கவனம் குறைந்தால் கூட எல்லாம் அம்பலப்பட்டுவிடும். இதற்கான தொடர் பயிற்சி என்பது எவ்வளவு சிரமமானது என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை. ஆனால் இப்பொழுது அவன் கவலைப்படுவது அண்ணாச்சி பற்றிதான்.
 சோமு அண்ணாச்சி அவனுடைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். இந்த செயலைச் செய்து விட்டு அவரது முகத்தை எப்படி நேரில் பார்ப்பது? இதை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான் அவனுக்கு இப்பொழுது புரியவில்லை.
 அண்ணாச்சியின் முதல் சந்திப்பு ஞாபகத்திற்கு வருகிறது. அவரது கம்பீரமான தோற்றத்தில் மயங்கிப் போனான். அவர் வாயிலிருந்து வெளி வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனைக் கட்டிப் போட்டு வைத்துவிட்டன.
 தங்கத்தின் முந்தைய வாழ்க்கை வேறுவிதமாகத்தான் இருந்தது. தங்கம் என்ற பெயர் கூட இவன் தாய் தந்தை வைத்த பெயரில்லை. இவனே வைத்துக் கொண்ட பெயர். இவன் பிறக்கும் போது தாய் தந்தையர் வைத்த பெயர் தங்கராஜ். அது அவன் தாத்தாவின் பெயர். மூக்கும் முழியும் அவன் தாத்தாவிடம் உரித்தெடுத்து அப்படியே இவனுக்கு வைக்கப்பட்டதைப் போல் இருந்ததால், தங்கராஜ் என்று பெயர் வைத்தார்கள்.
 தங்கம் என்ற பெயரை இவனே வைத்துக் கெண்டான் என்பது கூட சரியில்லை. நண்பர்களிடம் தங்கம் என்று சுருக்கமாக அழைக்கும் மனநிலையைத் திட்டமிட்டு உருவாக்கினான். பின்னர் எல்லா இடங்களிலும் தங்கம் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. தங்கராஜ் என்ற பெயர் மறைந்தே போனது.
 தங்கம் என்ற பெயர் சில வருடங்களில் கொள்கைத் தங்கமாக மாறியதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. அதற்குள்ளும் ஒரு கதை இருக்கிறது.
 சோமு அண்ணாச்சி தான் அவன் கொள்கைத் தங்கமாக மாறுவதற்கு காரணமாக இருந்தார்.
 அண்ணாச்சி அடிக்கொரு தடவை "கொள்கைப் படி வாழ வேண்டும்' என்பார். ஐந்து நிமிடங்கள் பேசினாலும் குறைந்த பட்சம் ஐந்து தடவை, கொள்கைபடி என்ற சொல்லைப் பயன்படுத்தி விடுவார். அண்ணாச்சியை தனது மாடலாக நினைத்துக் கொண்டு அவரைப் போல பாவனை செய்து பார்க்கிறான் தங்கம். எல்லாரும் அவனை ஆச்சரியம் கொண்டு பார்க்கிறார்கள். இவன் வாயிலிருந்தும் அடிக்கடி கொள்கை என்ற வார்த்தை வெளிவருகிறது. இவன் கொள்கை என்று பேசுவது இவனது நண்பர்களில் சிலருக்கு மனதுக்குள் சிரிப்பை வரவழைத்துவிட்டது. அவர்கள் கிண்டலாக அழைத்த பெயர்தான் "கொள்கைத் தங்கம்' என்பது. என்னதான் கிண்டல் கேலி செய்தாலும் அதைப்பற்றி கவலைபடாத இவன் இந்த பெயரை இவனது அடையாளமாக வளர்வதற்குத் திட்டமிட்டுச் செயல்பட்டான்.
 கொள்கைத் தங்கம் என்று பெயர் மாறினாலும் அடிப்படையில் அவன் குணம் மாறவில்லை. அண்ணாச்சியின் வழி நடப்பவனாகக் காட்டிக் கொண்டாலும் அடிக்கடி அவன் மனதில் வேறு ஓர் எண்ணம் ஓடிக் கொண்டேயிருக்கும். நாற்பது ஆண்டுகளாக அண்ணாச்சி ஒரே இடத்தில் இருக்கிறார். நல்லவர் என்ற பெயர் மட்டும் போதுமா? என்று யோசிக்கிறான். ஆனாலும் அண்ணாச்சியை அவனால் விலக்கவும் முடியவில்லை அவரை அடி ஒட்டி நடக்கவும் முடியவில்லை. அப்பொழுது தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
 பதினைந்து ஆண்டுகளாக நடக்காமல் இருந்த பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவன் கட்சியில் பஞ்சாயத்து கவுன்சிலர் சீட் கேட்டிருந்தான். வேறு சிலரும் கேட்டிருந்தார்கள். தங்கத்தின் மீது தலைமையில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை இல்லை. சோமு அண்ணாச்சியின் சிபாரிசில் அவனுக்கு சீட்டு ஒதுக்கி தரப்பட்டது. அவனும் வெற்றி பெற்றுவிட்டான்.
 வெற்றிக்குப் பின் தன்னை சுற்றிப் பார்க்கிறான். "கொள்கைத் தங்கம் அண்ணன் அவர்களுக்கு வாக்களியுங்கள்' என்ற வாசகங்கள். மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிடுவதைப் போல அவனது படம். எதையும் பொருட்படுத்தாத இவனை இந்தச் சூழல் பாதித்துவிடுகிறது. ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறான். ஆனால் அந்த முடிவை ஒரு நாள் மட்டுமே அவனால் வைத்திருக்க முடிந்தது.
 திடீரென்று ஒரே பரபரப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளாக இவனை பார்த்தால் முகத்தை கடுமையாக வைத்துக் கொள்ளும் அந்த அரசியல் பிரமுர் வீட்டுக்குத் தூது அனுப்பியிருந்தார். தங்கத்துக்கு நிலைமை புரிந்தது. சேர்மனை மக்கள் நேரடியாக ஓட்டுப் பேட்டு தேர்ந்தெடுக்கப்படும் முறையை மாற்றி கவுன்சிலர் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றியிருந்தார்கள்.
 இவனது ஓர் ஓட்டுதான் பஞ்சாயத்து யூனியன் சேர்மனை முடிவு செய்யப் போகிறது. ஜனநாயக வாசலை திறந்து வைக்கும் இந்தப் பூட்டின் சாவி தன்னிடம் இருப்பதைத் தெரிந்து கொண்டான். அதற்கான திட்டங்களை ஆழ்மனம் தயாரிக்கத் தொடங்கி விட்டது.
 ஆனால் தூதுவன் சொன்ன வார்த்தைகள் தங்கத்திற்கு அதிர்ச்சியைத் தந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு மயக்கம் வந்ததைப் போல் இருந்தது. 25 லட்சம் ரூபாயை உடனே பெற்றுக்கொள் என்றான். இவன் வாழ்நாளில் இவ்வளவு தொகையைக் கற்பனை செய்து பார்த்தது கூட இல்லை.
 இரவெல்லாம் ஒரே குழப்பம். சோமு அண்ணாச்சி கண் முன்னால் தோன்றி மறைகிறார். தூக்கம் வரவில்லை. விடிவதற்குள் முடிவு எடுக்க வேண்டும். என்ன செய்வது என்ற பரபரப்பு அவனை ஆட்டிப் படைக்கிறது. அவனை அறியாமலேயே கண் அயர்ந்து தூங்கிப் போகிறான். எழுந்தவுடன் மனதுக்குள் தெளிவு.
 அதை யார் சொன்னார்கள் என்பது அவன் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யோசித்துப் பார்க்கிறான். ஞாபகத்திற்கு வர மறுக்கிறது. குத்துமதிப்பாக இருவர் கவனத்திற்கு வருகிறார்கள். முதல் நபர் வடிவேலு, இரண்டாம் நபர் கவுண்ட மணி.
 சினிமாவில் அவர்கள் பேசிய வசனம்தான் "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'" என்பது. இதை மீண்டும் சொல்லிப் பார்க்கிறான். கொள்கை தங்கத்திற்கு இன்றைய காலத்திற்கேற்ற வாழ்க்கையை நடத்த ஒரு தத்துவம் கிடைத்து விட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com