உலகத் திரைப்பட விழா: நெஞ்சைத்  தொட்டவை!

டிசம்பர் மாதம் இசை விழாக்களுக்கு மட்டுமல்ல: திரைப்படவிழாவுக்கும் தான். டிசம்பர் 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற 17-ஆவது உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படங்கள் என ரசிகர்களால்
உலகத் திரைப்பட விழா: நெஞ்சைத்  தொட்டவை!

டிசம்பர் மாதம் இசை விழாக்களுக்கு மட்டுமல்ல: திரைப்படவிழாவுக்கும் தான். டிசம்பர் 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற 17-ஆவது உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படங்கள் என ரசிகர்களால் கருதப்பட்ட படங்கள் இதோ:

The Photographer - சீனா

இத்திரைப்படம் சீனாவின் சென்ஹன் நகரில் ஒரு புகைப்பட ஸ்டுடியோவை வைத்து நடத்தும் குடும்பம் பற்றிய கதை. மூன்று தலைமுறைகளின் நாற்பது ஆண்டுகளில் இத்தொழிலில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றன என்பதை விளக்குவதே இப்படம். இப்படத்தின் ஊடே "சீர்திருத்தமும் சந்தை திறந்து விடலும்', என்ற கொள்கை தொடங்கிய நாற்பது ஆண்டுகளில் சீனா எத்தகைய மாற்றங்களை அடைந்திருக்கிறது என்பதையும் நாம் காண
முடிகிறது.

படத்தின் முக்கிய கதாநாயகனான மூன்றாம் தலைமுறை கேய் ஆங்வோ குடும்ப இளைஞன் வேடத்தில் நடித்த லியூ மியூ காலத்திற்கேற்ப தன் நடை, உடை, தலை அலங்காரம் ஆகியவற்றை ஹாங்காங் பாப் நட்சத்திரங்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றிக் கொள்கிறார்.

அவரது அப்பா ஆர்ட் போட்டோக்களை எடுப்பதில் சிறப்பானவர். பாரம்பரிய முறையில் படம் எடுக்க வேண்டும் என்பவர். ஆனால், மகனோ நவீன தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு ஸ்மார்ட் போன்களில் புகைப்படங்கள் எடுக்கும் மென்பொருள் ஒன்றை உருவாக்கி இள வயதில் பெரும் புகழ் பெறுகிறார்.

இளைஞனின் தாய் வணிகத்தில் ஈடுபாடு உள்ளவர். பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட்டு பணம் சேர்ப்பதும் இழப்பதுமாக இருக்கிறார். மகனின் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த இயலாத நிலையில், தாய் - மகன் பாசம் சில உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது.
புகைப்படக் கலையின் பரிணாம வளர்ச்சி, மேம்பாடு வண்ணக் காட்சிகளின் கலவையாக மிக நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் மாற்றம் பற்றியும் காட்சிகள் வருகின்றன. மிகச்சிறந்த படம் ஒன்றைப் பார்த்த மகிழ்வு மனதில் ஏற்படும்.

Despite the Fog -இத்தாலி

இந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற 50-ஆவது இந்திய உலகத் திரைப்பட விழாவில் தொடக்கப் படமாக திரையிடப்பட்ட பெருமை பெற்றது இத்திரைப்படம். செர்பிய திரைப்பட இயக்குநரான கோரன் பாஸ்கல்ஜெவிக் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

போரின்போது இத்தாலிய கடலில் படகில் பயணித்தபோது இறந்து போன பெற்றோருக்குப் பிறந்த அலி முஸ்கா சார்ஹான் என்ற இஸ்லாமிய சிறுவனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களே இப்படத்தின் மையக்கரு. தங்களுடைய ஒரே மகனான மார்க் இறந்து போன சோகத்தில் வெறுமையான வாழ்க்கை வாழும் ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் சார்ஹானை வழியில் பார்த்து ஆதரவு கொடுத்து தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து வளர்க்கிறார்கள். இவர்
களுக்குள் பல உணர்ச்சிப் போராட்டங்கள்.

ஆனாலும், அந்த இஸ்லாமிய சிறுவனை தங்கள் மகன் மார்க் போலவே கருதி ஒரு கிறிஸ்தவ சிறுவனாக வளர்க்க முற்படுகிறார்கள். ஆனாலும் சிறுவன் இஸ்லாமியனாகவே இருக்கிறான். அதன் காரணமாக அவன் வளர்ப்புத் தந்தை சிறுவன் மீது ஆத்திரம் அடைந்து அவனை இனிமேலும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று முடிவு செய்து அகதிகள் முகாம் அதிகாரிகளை வீட்டுக்கு வரவழைக்கிறார்.

அவர்கள் வரும்போது வீட்டில் யாரும் இல்லை. கிளைமேக்ஸ் காட்சியில் சிறுவனை காரில் அமர வைத்து அவனது வளர்ப்புத்தாய் நகருக்கு வெளியே பயணத்தில் இருக்கிறார். தனக்கு இனி கணவன் தேவையில்லை. புதிய மகனே போதும் என்று அவர் தீர்மானித்திருப்பதை இயக்குநர் உணர்த்துகிறார். மத நல்லிணக்கம், மனிதநேயம் இரண்டும் பொங்கிப் பிரவகிக்கும் திரை இலக்கியம்.

Sons of Denmark-டென்மார்க்

2025-ஆம் ஆண்டு டென்மார்க்கில் நடப்பதாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

டென்மார்க் நாட்டு குடிமகனான இயக்குநர் உலா சலீம் தன் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களையும் இணைத்தே இக்கதையை உருவாக்கி இருக்கிறார். கோபன்ஹேகனில் ஏற்பட்ட ஒரு திடீர் வெடிகுண்டினால் ஏற்பட்ட பேரிழப்புகளுக்குப் பிறகு புலம்பெயர் மக்களால் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு "டென்மார்க் மகன்கள்' என்ற ஒரு தீவிரவாத அரசியல் அமைப்பு உருவாகிறது. அது பொதுமக்களின் பேராதரவைப் பெறுகிறது.

டேனிஷ் மக்களின் உரிமைக்குரல்களைப் பிரதிபலிக்கும் இரண்டு நண்பர்கள் இடையில் நடைபெறும் சம்பவங்களே கதையைக் கொண்டு செல்கின்றது. இரண்டு நண்பர்களில் ஒருவர் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெறுகிறார். அவரைப் பற்றி சில கசப்பான உண்மைகளை அறிந்து கொண்ட போராளி நண்பர் அவரை வெற்றியுரை நிகழ்த்திய உடன் சுட்டுத் தள்ளி விடுகிறார். விறுவிறுப்பான அரசியல் திரைப்படம். உலக திரைப்பட விழாக்களில் பல பரிசு பெற்றுள்ள படம் இது .

Kathaah@8! - சிங்கப்பூர், இந்திய கூட்டுத் தயாரிப்பு

உலகின் முதலாவது 8 இந்திய மொழிகளில் - அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பஞ்சாபி - உருவாக்கப்பட்ட சிறு படங்களை ஒன்றாக தொகுத்து அந்தந்த மொழியிலேயே உருவாக்கி தருகின்ற, ஒரே இயக்குநரின் படைப்பு.

ஷில்பா கிருஷ்ண சுக்லா என்ற பெண் இயக்குநர் உருவாக்கிய இப்படத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி 8 மணி நேரத்தில் கதைகள் நடக்கின்றன. கதை நிகழ்வுகள் பல்வேறு நகரங்களில், நாடுகளில் நடைபெறுகின்றன. அவை காதல், கண்ணீர், அச்சம், நம்பிக்கை, கனவுகள் ஆகிய மையக் கருத்தைக் கொண்டுள்ளன.

தமிழ் கதையில் ஒரு மனைவி தன்னுடைய ஆசைகள், விருப்பங்கள், அபிலாஷைகள் பற்றிய எந்தவித அக்கறையும் காட்டாத வழக்கமான ஆணாதிக்க சுயநலப்போக்கில் இயங்கி வரும் கணவருடன் இனிமேலும் கடமைக்காக, ஒப்புக்காக சகித்துக்கொண்டு வாழ விரும்பவில்லை என்று அண்ணியிடம் சொல்கிறாள். அப்போது கணவனும் உடன் இருக்கிறார். ஆனால், தங்கள் குழந்தைக்காக விவாகரத்து ஆன பிறகும் ஒரே கூரையில் தனித்தனியாக இருவரும் வாழப் போகிறோம் என்ற அந்த மனைவியின் வாதம் யாருக்கும் விளங்கவேயில்லை.

பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வை திரையில் பார்ப்பது போலவே இருந்தது.

இப்படம் சிங்கப்பூர் தெற்காசிய உலகத்திரைப்பட விழா 2019-இல் ஜூரிகளின் விருதை பெற்றுள்ளது.

Girl with No Mouth-கனடா

அணு ஆயுதங்களால் ஏற்படும் அவலங்களை விளக்கும் உருக்கமான திரைப்படம். ஓர் அணு ஆயுதப் பேரழிவு ஏற்பட்ட பிறகு ஏராளமான குழந்தைகள் பல உடற்கோளாறுகளுடன் பிறக்கின்றன. பெரிஹான் என்ற பெண் குழந்தை வாய் இல்லாமல் பிறக்கிறது. ராணுவமும் அந்த குழந்தையின் சித்தப்பாவும் உடற்குறைவோடு பிறந்து வாழும் குழந்தைகளைக் குறிவைத்து தேடுகிறார்கள். குறிப்பாக பெரிஹானை. ஆனால், தன் குழந்தையை இராணுவத்தின் கையில் சிக்க விடாமல் ஒரு மறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வளர்க்கிறார் அக்குழந்தையின் தந்தை.

இத்தகைய உடல் குறைபாடுடன் பிறந்த குழந்தைகள் அவற்றுக்கேற்ற முகமூடிகளை அணிந்து கொண்டு வாழ்கிறார்கள். அவர்களைத் திரையில் காணும்போது பார்ப்பவர் மனதைப் பிழிந்து எடுக்கிறது. இனிஓர் அணு ஆயுதப்போர் வேண்டவே வேண்டாம் என்ற மெசேஜ் இந்த படத்தின் மூலம் தரப்படுகிறது. என்றென்றும் நினைவில் நிற்கும் படங்களில் இதுவும் ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com