விழிப்புணர்வுப் பயணம்!

விழிப்புணர்வுப் பயணம்!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அவ்வப்போது ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் சிக்கிக் கொள்கிறார்கள் என செய்தி வருகிறது. இதில் சில குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அவ்வப்போது ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் சிக்கிக் கொள்கிறார்கள் என செய்தி வருகிறது. இதில் சில குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றன. சில குழந்தைகள் கிணற்றினுள் இறந்து விடுகின்றன. இது குழந்தைகளின் பெற்றோர்களை மட்டுமல்லாது சமுதாயத்தையும் பாதிக்கிறது. தொலைக்காட்சிகள் இக்காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பி மக்களை மேலும் தவிக்க விடுகிறார்கள். எனவே ஆழ்துளைக் கிணற்றால் நேரும் மரணங்களைத் தவிர்க்க பைக் மூலம் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை செய்து வருகிறார் சிவாஜி. ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளரான அவர் கரூரில் இருந்து வருகிறார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி மரணம் அடைந்தது என்னை வெகுவாகப் பாதித்தது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என நான் இது குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை கரூரில் நவம்பர் 25 - ஆம் தேதி அங்குள்ள சுழற்சங்கம் ஆதரவுடன் தொடங்கினேன்.

கரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் கொடியசைத்து எனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

இதுவரை நான் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எனது பைக் மூலம் சென்று பொதுமக்கள் கூடுமிடமான பேருந்துநிலையம், காய்கறிச் சந்தை ஆகிய இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறேன். உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகள் இருந்தால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 -இல் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். பெரும்பாலும் பெற்றோர்களின் அலட்சியத்தால்தான் இவை போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே சிறு குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாடவிட்டால் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். தற்போது பிள்ளைகளை விளையாட விட்டுவிட்டு, பெற்றோர்கள் கைபேசியிலும் டி.வி.யிலும் மூழ்கிவிடுகிறார்கள். எனவே பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் ஆழ்துளைக் கிணற்று மரணங்களைத் தவிர்த்து விடலாம்.

இது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 1 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து வைத்துள்ளேன். இதனைப் பொதுமக்களிடம் விநியோகம் செய்கிறேன். கிராமங்களில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருந்தாலோ, உபயோகப்படுத்தப்படாமல் இருந்தாலோ அது குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதோடு, குழந்தைகளிடமும் கூற வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் 50 அடிக்குள் குழந்தை கீழே விழுந்தாலும், நவீன கருவிகள் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும், அதனைக் காப்பாற்றுவது கடினமான பணியாகும். குழந்தை விழுந்து சில மணிநேரங்களில் மீட்டால் மட்டுமே குழந்தை பிழைக்க வாய்ப்பு உள்ளது. எனவே பெற்றோர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதுவரை சுமார் 3500 கி.மீ.தூரம் பைக்கில் பயணித்துள்ளேன். வரும் ஜனவரி 15 - ஆம் தேதி எனது

பயணத்தைக் கரூரில் முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com