ஜூனியர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்!

தேசிய அளவில் காதுகேளாதோருக்கான தடகளப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வருபவர் சமீஹா பர்வின்.
ஜூனியர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்!

தேசிய அளவில் காதுகேளாதோருக்கான தடகளப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வருபவர் சமீஹா பர்வின். அவர் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளியின் மகள். காதுகேளாதோருக்கான மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கம் வெல்வதே லட்சியம் என்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியான கடையாலுமூடு என்னும் சிறு கிராமத்தில் ஹோட்டல் தொழிலாளியான முஜீப்-சலாமத் தம்பதியின் காது கேளாத மாற்றுத் திறனாளி மகளான சமீஹா பர்வினின் கதை வித்தியாசமானது. தனது 6 -ஆவது வயதில் திடீரென்று தாக்கிய காய்ச்சல் காரணமாக காது கேட்கும் திறனை இழந்த சமீஹா பர்வின், அதனைத் தொடர்ந்து சந்தித்ததெல்லாம் வலியும், வேதனையும் நிறைந்த நிகழ்வுகள். உள்ளூர் பள்ளியில் படிக்க முடியாத சமீஹா, நாகர்கோவிலில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இதனால் மனதளவில் அவர் நொறுங்கிப் போனார். வறுமையான சூழல் கொண்ட இவரது பெற்றோர், இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பட்ட போராட்டத்தில் சொந்த வீடும் கைவிட்டுப் போனது.

இந்நிலையில் தான் சமீஹா நாகர்கோவிலில் மாணவர்களும் பயிலும் ஜோசப் கான்வென்ட் மேல் நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தப் பள்ளியில் தான் சமீஹாவின் எதிர்காலம் திசை திருப்பப்பட்டது. இப் பள்ளியிலுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்தர் மற்றும் புள்ஸி ஆகியோர் தான் சமீஹாவிடம் இருந்த தடகள விளையாட்டுத் திறமையை அடையாளம் கண்டு கொண்டு அதில் உற்சாகப்படுத்தினர்.

அதன் பிறகு சமீஹா சந்தித்ததெல்லாம் வெற்றிகள்தாம். பள்ளிகள் அளவில், மாவட்டத்தில், மாநிலத்தில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டம், தொடர் ஓட்டம் என வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார் சமீஹா. இதன் பிறகு தான் சமீஹாவை தடகள விளையாட்டில் தேசிய அளவில், சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்ற ஆவலும், உத்வேகமும் அவரது தாய் சலாமத்திற்கு ஏற்பட்டது.

இதற்காக அவர் சந்தித்த நிராகரிப்புகள், சவால்கள், நடத்திய போராட்டங்கள் ஏராளமானவை. இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலுள்ள கேஎஸ்ஆர் பள்ளியில் சமீஹா பர்வினை சேர்த்ததுடன், தொடர்ந்து ஒவ்வொரு நகரங்களிலும் நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவற்றில் பங்கேற்கவும் வைத்தார். கடந்த மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் சமீஹா பர்வின் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதில் 100 மீட்டர் இதுவரை இருந்த சாதனையான ஓட்டத்தில் 1986-ஆம் ஆண்டின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும் 100ல4 தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் தேசிய அளவிலான இதே போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் 4 பதக்கங்கள் ரெக்கார்டு ஆகும்.

இவரது தாய் சலாமத் உதவியுடன் சமீஹா பர்வினுடன் பேசியதிலிருந்து...

""சிறு வயதில் காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட காது கேளாத நிலையில் நான் கலங்கிப் போனேன். அம்மாவும், அப்பாவும் என்னை ஒவ்வொரு நாளும் தேற்றினர். நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் பயிலும் போது உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்தர் மற்றும் புள்ஸி ஆகியோர் தடகளத்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டு உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து நான் இப்போது தேசிய அளவில் காது கேளாதோருக்கான ஜூனியர் தடகளப் போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறேன். இந்நிலையில் காது கேளாதோருக்கான ஜூனியர் ஒலிம்பிக் போட்டிகளில் (ஒன்ய்ண்ர்ழ் ஈங்ஹச்ப்ஹ்ம்ல்ண்ஸ்ரீள்) ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்'' என்றார்.

பேட்டி - படங்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com