அடினாய்டு வீக்கம்...மூச்சு விடச் சிரமம்!

என்னுடைய வயது 82. எனக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளாக தொண்டையில் சளி இருந்து கொண்டே இருக்கிறது.
அடினாய்டு வீக்கம்...மூச்சு விடச் சிரமம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
என்னுடைய வயது 82. எனக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளாக தொண்டையில் சளி இருந்து கொண்டே இருக்கிறது. இரவில் உறக்கத்தின் போது, கவனமாக வாயை மூடிக் கொண்டு உறங்கினாலும் உதடுகள் பிரிந்து வாய் வழியே மூச்சு போய் வருகிறது. மூக்கடைப்பு எதுவும் இல்லை. கண் விழிக்கும் போது நெஞ்சு எரிவது தெரிகிறது. தொண்டையும் நாக்கும் வறண்டு போகின்றன. அதனால் அவ்வப்போது நீரைப் பருகி ஈரப்படுத்திக் கொள்கிறேன். வழக்கம் போல் மூக்கு வழியே சுவாசிக்க வழி என்ன?
-ந.திருநாவுக்கரசு, அலிவலம் - 610106. 
உங்களுக்கு அடினாய்டு (ADENOID) என்றழைக்கப்படும் சுவாசப்பகுதி சுரப்பி வீங்கி பெரிதாகியிருப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. இது சுவாசத்துளைக்கு வெகு அருகில் உள்ள நிண நீர் திசுக்குரிய ஒரு சுரப்பி ஆகும். வாயின் மேற்கூரையின் பின்புறம் இறுதியில், மூக்கு தொண்டைக்குள் இது இணைகிறது. இந்த அடினாய்டில் ஏற்படும் தொற்று, அதிகப்படியான சளி உற்பத்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
இதயத்தின் மேற்பகுதியில் கபதோஷத்தின் ஆதிக்கப் பகுதியாக இருப்பதால், அங்கு நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழவழப்பு, கொழகொழப்பு, நிலைப்பு போன்ற குண ஆதிக்கங்களை, அதற்கு அனுகூலமான உணவு, நடவடிக்கையின் மூலமாகப் பெற்று வளர்க்கப்பட்டு, இவற்றைக் கொண்டு அடைப்பை ஏற்படுத்தி, வீக்கமடைந்து மூச்சுக்குழாயைச் சுருக்கி சுவாசக் காற்றைப் பெற முடியாத அளவில் உபாதையைத் தோற்றுவிக்கிறது.
நெய்ப்பிற்கு எதிரான வறட்சி, குளிர்ச்சிக்கு எதிரான சூடு, கனத்திற்கு எதிரான லேசு, மந்தத்திற்கு எதிரான ஊடுருவும் தன்மை, வழவழப்பு மற்றும் கொழகொழப்புக்கு எதிரான சொரசொரப்பு, நிலைப்புக்கு எதிரான அசைக்கும் தன்மை கொண்ட உணவுகளையும் மருந்துகளையும் செயல்களையும் உங்களுக்குப் பிரயோகம் செய்தால், அடினாய்டு வீக்கம் குறைந்து மூக்கு வழியே சுவாசம் போய் வர ஏதுவாய் இருக்கும். அந்த வகையில் காரம், துவர்ப்பு, கசப்பு மிக்க உணவு ஏற்றது. இனிப்பு, புளிப்பு, உப்புமிக்கவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது. நெய், வெண்ணெய், ஆடைத் தயிர், பகல் தூக்கம், அதிக ஓய்வு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தேகப்பயிற்சி, சுறுசுறுப்பாக எல்லாச் செயல்களிலும் அதிகம் ஈடுபடுதல், வழிநடை ஆகியவை நல்லது. கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு போன்ற புஞ்சை தானியங்களாலான உணவு, வாற்கோதுமை அதிக அளவிலும், அரிசி, கோதுமை முதலிய நஞ்சைத் தானியங்கள், பருப்பு வகைகளை குறைந்த அளவிலும் சேர்ப்பது நல்லது.
வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, புளியாரை, கத்தரிப்பிஞ்சு, பாகல், அவரை, முள்ளங்கி, வெங்காயம், மிளகு, இஞ்சி ஊறுகாய் ஏற்றவை.
குக்குலுவை முதன்மையாகக் கொண்ட ஆயுர்வேத மருந்துகள் தங்களுக்கு அடினாய்டு வீக்கத்தை வற்றச் செய்யலாம். அந்த வகையில் - 2 காஞ்சநாரகுக்குலு எனும் மாத்திரையை காலை உணவிற்குப் பிறகு வெந்நீருடன் சாப்பிடுவதையும், வீக்கத்தைச் சுரண்டி சிறிதாகச் செய்துவிடும் தன்மையுடைய சிலாசத்து எனும் பஸ்மத்தை 2 கேப்ஸ்யூல்களாக இரவு உணவிற்குப் பிறகு வெந்நீருடன் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம். வரணாதி கிருதம், குக்குலுதிக்தகம் கிருதம் போன்ற நெய் மருந்துகளை, மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். தலைக்கு அஸன ஏலாதி தைலத்தை உபயோகித்து வர, சளியினால் ஏற்படும் பல உபாதைகளைத் தவிர்க்கலாம்.
அபராஜித தூமம் என்றொரு முறையுண்டு. மஞ்சள், சாம்பிராணி, ஏலரிசி, வாய்விளங்கம், நாயுருவி விதை இந்த ஐந்து பொருள்களை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும். ஐந்தும் கிடைக்காவிடில் கிடைத்த மட்டில் போதும். ஒரு மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியில் ஒரு ஸ்பூன் அளவு தூளைப் பரப்பி அந்தத் துணியைப் பென்சில் போல அழுத்திச் சுருட்டிக் கொள்ளலாம். சிலர் ஐந்து சரக்குகளையும் தண்ணீர் விட்டரைத்துத் துணிமேல் மெல்லியதாகப் பூசித் திரிபோலச் சுருட்டிக் காய வைத்துக் கொள்வர். இந்தத் திரியின் மேல் 4 -5 சொட்டுத் தேங்காய் எண்ணெயையோ நெய்யையோ விட்டு அதைக் கொளுத்த வேண்டும். எரியும் போது ஊதி அணைத்துவிட்டால் அந்தத் திரி புகையும். அந்தப் புகையை லேசாக முகர்ந்தால் தும்மல் வரும். சளியும் உடைபட்டுத் தலைவலி நிற்கும். அவசியமானால் தினம் இரு முறை இதைச் செய்யலாம். இந்த மாதிரி புகையை நாசி வழியே உள்ளிழுக்கும் போது ஒரேயடியாக மூச்சு இழுக்க முடியும் வரை இழுக்கக் கூடாது. லேசாக இழுத்தால் போதுமானது. இல்லாவிடில் அதன் நெடி தாங்காமல் திணறல் ஏற்படும். இவையனைத்தையும் செய்து வந்தால் உங்களுக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com