எனது முதல் சந்திப்பு 9 - டி.எஸ்.சொக்கலிங்கம்

​தமிழ்நாட்டுக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு இரண்டு நன்மைகள் செய்திருக்கிறார். அந்த இரண்டும் காற்றையும் தண்ணீரையும் போலத் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாதவை.
எனது முதல் சந்திப்பு 9 - டி.எஸ்.சொக்கலிங்கம்

டாக்டர் நாயுடு

தமிழ்நாட்டுக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு இரண்டு நன்மைகள் செய்திருக்கிறார். அந்த இரண்டும் காற்றையும் தண்ணீரையும் போலத் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாதவை. ஒன்று, தேசபக்தி, மற்றொன்று மொழி பக்தி. இரண்டும் ஒன்றிற்கொன்று ஆதாரமானவை. தமிழ்நாட்டில் ஹோம்ரூல் கிளர்ச்சிக் காலத்தில் தேசபக்தியை வளர்த்தவர் டாக்டர் நாயுடு. ஊர் ஊராகச் சென்று அவர் செய்த பிரசங்கங்கள் மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டித் தைரியத்தை வளர்த்தன. அச்சமயம் மக்களுக்கு இருந்த அதைரியம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. அவ்வளவு மோசமாய் இருந்தது. போலீஸ்காரன் என்றால், ஒரே நடுக்கமும் ஓட்டமும்தான். அந்த நிலையில் இருந்த தமிழர்களுக்கு டாக்டர் நாயுடு போலீஸ்காரனைக் கேலி செய்து தாக்கிப் பேசியது பெரிய அதிசயமாய் இருந்தது. டாக்டர் நாயுடுவைப் பெரிய வீரராய்ப் போற்றினார்கள். அவருடைய பிரசங்கம் என்றால், ஆயிரக்கணக்காய் கூடுவார்கள். அவர் பிரசங்கங்களைக் கேட்டு மக்கள் தைரியம் அடைந்து சுயராஜ்ய ஆவலை வளர்த்து வந்தார்கள்.
அக்காலத்தில் தென்காசியில் முதன்முதலாக அவருடைய பிரசங்கத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அச்சமயம் தான் முதன்முதலாக டாக்டர் நாயுடுவைச் சந்தித்தேன். தென்காசியில் கோயில் மண்டபத்திற்கு முன்பாக அவருடைய பிரசங்கம் நடப்பதற்கு ஏற்பாடு செய்தோம். அவருடைய குரல் இனிமையாகவும், பேச்சு கம்பீரமாகவும், விஷயங்கள் தோதுவாகவும், தாக்குதல்கள் வீரம் செறிந்தனவாகவும் இருந்தன. அவ்வளவுதான் மக்களுக்கு ஒரே உற்சாகம் தோன்றியது. தமிழ்நாடெங்கும் அவர் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களுக்கு உற்சாகத்தைக் கிளப்பிவிட்டார். அவர் செய்த அந்தச் சேவையேதான் பின்னால் 1920- இல் மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தபோது அதில் கலந்து கொள்ள மக்களைத் தயாராக்கி வைத்திருந்தது. தமிழ்நாடெங்கும் அச்சமயம் டாக்டர் நாயுடு ஒருவரே தலைவராய் விளங்கினார். அவர் பெயர் தெரியாத ஊரே கிடையாது.
மதுரையில் அவர் மீது நடந்த ராஜத்துவேஷ வழக்கும், அந்த வழக்கு சென்னை ஹைக்கோர்ட்டில் விடுதலையில் முடிந்ததும் அவருடைய செல்வாக்கைப் பிரமாதமாய்ப் பெருக்கின. அடுத்தாற்போல ஒத்துழையாமை இயக்கத்திலும் சரி, அதற்குப் பின்னாலும் சரி, தேசீய இயக்கத்தில் ஈடுபட்டுக் கஷ்ட நஷ்டமடைந்த காங்கிரஸ் ஊழியர்களுக்கு டாக்டர் நாயுடு சளைக்காமல் பண உதவி செய்து வந்தார். தமிழ்நாட்டில்அவருடைய பிரச்சார வழிகளே புது மாதிரியாய் இருந்தன. பிரச்சார வித்தைகளில் அவரை யாரும் அக்காலத்தில் மிஞ்ச முடியாது. திடீரென்று தடையுத்தரவை மீறப் போவதாகக் கிளம்புவார், வருமான வரியைக் கொடுக்க முடியாது என்று சொல்லுவார். இம்மாதிரியான காரியங்களால் மக்களின் உற்சாகம் குறைந்துவிடாமல் காப்பாற்றி வந்தார். ஹோம்ரூல் கிளர்ச்சிக்கும், உப்புச் சத்தியாக்கிரகத்திற்கும் மத்தியில் தமிழ்நாட்டில் தலைசிறந்த தலைவராய் டாக்டர் நாயுடு விளங்கினார். அந்தக் காலத்தில் ராஜீய விடுதலைக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும் அவர் செய்த சேவைகள் பிரமாதமானவை.

ஹோட்டல்களில் ஹரிஜனங்களுக்கு இடமோ, உணவோ கொடுக்க மறுப்பவர்களுக்கு இக்காலத்தில் ஜெயில் தண்டனை கிடைக்கும். அக்காலம் அப்படியல்ல. சமபந்தி போஜனம் கூட பிராமணர் அல்லாத பிறரோடு பிராமணர் செய்யக் கூடாது என்று சொல்லிவந்த காலம். அதற்காக டாக்டர் நாயுடு ஒரு போராட்டத்தையே நடத்தி வெற்றி பெற்றார். தம்முடைய இல்லத்தில் ஒரு ஹரிஜன சமையல்காரரை வேலைக்கு அமர்த்தினார். இவையெல்லாம் அக்காலத்தில் பெரிய புரட்சிகளாய் விளங்கின.
டாக்டர் நாயுடு முதலில் "பிரபஞ்சமித்திரன்' என்ற வாரப் பத்திரிகையைத் திருப்பூரில் நடத்தி வந்தார். அப்புறம் "தமிழ்நாடு' பத்திரிகையைச் சேலத்தில் ஆரம்பித்தார். பிரபஞ்சமித்திரனும், "தமிழ்நாடு'ம் தான் அக்காலத்தில் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பத்திரிகைகளாய் இருந்தன. அவற்றின் மூலம் தமது பிரச்சாரத்தை வேகமாய் நடத்தி வந்தார். "பிரபஞ்சமித்திர'னை நான் படித்து வந்தபோதுதான் பத்திரிகையில் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. நானும் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன். பின்னால் "தமிழ்நாடு' பத்திரிகையில் சேவை செய்ய 1923-இல் சேலத்திற்குப் போனேன். ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா நிறுத்திய பின்பு என்னைப்போன்ற முழுநேர காங்கிரஸ் ஊழியர்களுக்குச் சோர்வு ஏற்பட்டது. உற்சாகமான காங்கிரஸ் வேலைகள் எதுவும் இல்லாதபடியால் பத்திரிகைக் காரியாலயத்தில் சேர்ந்தால் என்ன என்ற நினைப்பு எனக்குத் தோன்றியது. அச்சமயம் "உதவி ஆசிரியர்கள் தேவை' என்று "தமிழ்நாடு' பத்திரிகையில் விளம்பரம் வந்தது. நானும் ஒரு மனு போட்டு வைத்தேன்.
அச்சமயம், அதாவது 1923 ஆரம்பத்தில், காங்கிரஸ் நிதிக்குப் பணம் திரட்டுவதற்காக டாக்டர் நாயுடு ஒரு சுற்றுப் பிரயாணம் ஆரம்பித்தார். ஜில்லா தலைநகருக்கு ஆயிரம் ரூபாய், தாலுகா தலைநகருக்கு ஐந்நூறு ரூபாய், மற்ற இடங்களுக்கு நூறு ரூபாய் வீதம் கொடுத்தால் அந்த இடங்களுக்குப் பிரசங்கம் செய்ய வருவதாய்ச் சொன்னார். அதன்மூலம் சுமார் இருபத்தையாயிரம் ரூபாய் வசூல் செய்ததாக எனக்கு ஞாபகம். தென்காசியில் ஐந்நூறு ரூபாய் வசூல் செய்து கொடுத்து அவர் பிரசங்கத்திற்கு ஏற்பாடு செய்தோம். அவர் தென்காசிக்கு வந்திருந்தபோதுதான் நான் "தமிழ்நாடு' பத்திரிகையில் சேருவதென்று தீர்மானமாயிற்று. ஆகவே, நான் பத்திரிகைத் தொழிலில் சேருவதற்கு டாக்டர் நாயுடுதான் காரணம். அவர் அச்சமயம் என்னைச் சேர்க்காமல் இருந்தால் அதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.
அதைப் போலவே பத்திரிகைத் தொழிலில் என்னைப் பயிற்றுவித்ததும் அவரேதான். கட்டுரைகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் தமிழ் மரபே இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்டிப்பானவர்.
"நீர்வீழ்ச்சி' என்று ஆங்கிலப் பதங்களை மொழிபெயர்ப்பதை அவர் அடியோடு விரும்பமாட்டார். "அருவி' என்ற தமிழ்ச் சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்பார். எழுத்துகளை அநாவசியமாக அதிகரிப்பதையும் அவர் ஆட்சேபிப்பார், "மகாத்மாவின் பிரசங்கம்' என்பதை "மகாத்மா பிரசங்கம்' என்று போட்டாலே போதுமே என்று சொல்லுவார். "போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம்' என்ற மாதிரி வார்த்தைகள் அக்காலப் பத்திரிகைகளில் அடிபடும். டாக்டர் நாயுடுவுக்கு அது பிடிக்காது. "துப்பாக்கிப் பிரயோகம்' என்று அவ்வளவு நீளமாக ஏன் எழுத வேண்டும் "போலீசார் சுட்டனர்' என்று போட்டாலே போதுமே என்று சொல்லுவார்.

ஆங்கிலத்தில் உள்ளதைப் படித்து மனத்தில் வாங்கிக் கொண்டு தமிழில் பிறருக்கு அதைச் சொல்லுவது என்றால் எப்படிச் சொல்லுவோமோ அம்மாதிரி எழுத வேண்டும் என்று சொல்லுவார். இம்மாதிரியாகப் பத்திரிகைத் தமிழில் அவர் செய்த சீர்திருத்தங்கள் ஏராளமானவை. நேராக மனத்தில் படும்படி எழுத வேண்டும் என்பதே அவருடைய கொள்கை. பேசுவதில் எப்படி மக்களைக் கவரும்படி செய்து வந்தாரோ அதேமாதிரி எழுதுவதிலும் அவர் திறமையானவராய் இருந்தார்.
"தமிழ்நாடு' பத்திரிகை சேலத்தில் நடந்து வந்தபோது ஒவ்வொரு வாரமும் அவர் எழுதும் தலையங்கத்தைத் தந்தியில் வரவழைத்து, "ஹிந்து' பிரசுரித்து வந்தது. அவ்வளவு செல்வாக்கு அவருக்கு இருந்தது. "சுதேசமித்திர'னும் அவருடைய "தமிழ்நாடு' கட்டுரைகளைத் தவறாமல் வாரா வாரம் பிரசுரித்து வரும். கருத்துகளை விளக்குவதற்காக அவர் கையாண்ட கதைகளும் உதாரணங்களும் அபூர்வமாய் இருக்கும்.
வெற்றிலை பாக்கோடு வாய் மணத்திற்காகப் போட்டுக் கொள்ளுவதற்கு "ஜின்டான்' என்ற ஜப்பான் தாம்பூல மாத்திரை அக்காலத்தில் பிரபலமாய் இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு விரோதமாக மகாகனம் சீனிவாச சாஸ்திரியாரைப் பிரிட்டிஷ் சர்க்கார் உபயோகித்து வந்தார்கள். இரண்டையும் உதாரணம் காட்டி டாக்டர் நாயுடு அச்சமயம் எழுதிய கட்டுரை எனக்கு இன்னமும் நன்றாய் ஞாபகத்தில் நிற்கிறது. "வயிற்றில் கோளாறு ஏற்பட்டால் வாயில் மணம் மாறுகிறது. அதை மறைப்பதற்காக "ஜின்டான்' உபயோகமாகிறது. அதேமாதிரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வயிற்றில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதை மறைத்து வெளியே பகட்டைக் காட்டுவதற்காகச் சாஸ்திரியை உபயோகிக்கிறார்கள்' என்று பொருள்படும்படியாக எழுதினார். அந்தக் கட்டுரைக்கு "ஜின்டான் சாஸ்திரி' என்று தலைப்புக் கொடுத்தார்.
தமிழ்நாட்டின் ராஜீய வாழ்விலும் சரி, பத்திரிகைத் தமிழ் வளர்ச்சியிலும் சரி, 1917 முதல் 1930 வரையில் டாக்டர் நாயுடு இணையில்லாத மகத்தான சேவை செய்து தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தி இருக்கிறார். அந்த அஸ்திவார வேலையைத் தமிழ்நாடு என்றென்றும் மறக்க முடியாது.
1923- ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்திலிருந்து 1931- ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முடிய நான் "தமிழ்நாடு' பத்திரிகையில் சேவை செய்தேன். இந்த எட்டு வருஷ காலங்களில், தமிழ்நாடு நடத்திய போராட்டங்கள் எத்தனையோ உண்டு. முக்கியமான பிரச்னை எதையாவது ஒன்றைத் தமிழ்நாடு கிளப்பி மக்களுக்குச் சிரத்தை ஏற்படும்படி செய்து கொண்டே இருக்கும். ஹிந்துமத பரிபாலன போர்டு என்ற இலாகா கோயில் நிர்வாகங்களைச் சரியாய் நடத்துவதற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இக்காலத்தில் எல்லாரும் அறிவார்கள். ஆனால், ஹிந்துமத பரிபாலன போர்டு சட்டம் ஏற்பட்ட சமயத்தில் சில தினப் பத்திரிகைகளும் அவைகளைச் சேர்ந்தவர்களும் பிரமாதமாக அதை எதிர்த்து வந்தார்கள். காங்கிரசைச் சேர்ந்த பத்திரிகைகளில் "தமிழ்நாடு' அந்தச் சட்டத்திற்கு தீவிரமாக ஆதரவு கொடுத்தது.
கோயிலில் தேவதாசிகள் பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்கச் சட்டம் செய்யப்பட்டபோது அதையும் சத்தியமூர்த்தி உள்பட பல பிரபலஸ்தர்களும், பத்திரிகைகளும் பலமாய் எதிர்த்தார்கள். ஆனால், அந்தச் சட்டத்தைத் "தமிழ்நாடு' தீவிரமாய் ஆதரித்து மக்களிடம் கிளர்ச்சி செய்தது. சமபந்தி போஜனத்திற்காக நடந்த குருகுலக் கிளர்ச்சியைத் "தமிழ்நாடு' முன்னின்று நடத்தி வந்தது. அக்காலத்தில் காங்கிரசைச் சுமாராக ஆதரிக்கக் கூடிய தமிழ்ச் தினப் பத்திரிகை என்பது "சுதேசமித்திரன்' ஒன்றுதான். தீவிரமாகக் காங்கிரசை ஆதரிக்கவும், முற்போக்குக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யவும் தமிழ்த் தினசரி ஒன்று அவசியம் என்று டாக்டர் நாயுடு நினைத்தார். அதனால் 1927-இல் தமிழ்ப் புதுவருஷப் பிறப்பன்று "தமிழ்நாடு' தினப்பதிப்பை ஆரம்பித்தார். பத்திரிகைக்கு நல்ல ஆதரவு இருந்தது. நல்ல ஆதரவு என்றால், ஆயிரக்கணக்காகப் பிரதிகள் செலவாயின என்று நினைக்க வேண்டாம். தமிழ்நாட்டில் மொத்தம் தமிழ்த் தினப்பத்திரிகை படிப்பவர்களே அக்காலத்தில் நாலாயிரம் பேர்தான். அதனால் 1500 வாசகர்களோடு தமிழ்நாடு தினப்பதிப்பு ஆரம்பமானதைத்தான் நல்ல ஆதரவு என்று சொன்னேன். 1930- ஆம் வருஷம் உப்புச் சத்தியாக்கிரகத்தை மகாத்மாகாந்தி ஆரம்பித்த போதுதான் தமிழ்த் தினப் பத்திரிகைகளின் வாசகர்கள் அதிகமானார்கள். "தமிழ்நாடு' பத்தாயிரம் பிரதிகள் வரை அச்சமயம் செலவாயிற்று.
(தொடரும்)
வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ்,
244/64, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை-600 004.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com