தவறிய முறுக்குத் துண்டுகள்!

"அனிதா துணிமணிகளை எடுத்துப் பேக்அப் பண்ணு. காலைல ஊருக்குக் கிளம்பணும்''
தவறிய முறுக்குத் துண்டுகள்!

"அனிதா துணிமணிகளை எடுத்துப் பேக்அப் பண்ணு. காலைல ஊருக்குக் கிளம்பணும்''
"என்னங்க நாளைக் கழிச்சுத்தானே ஆபீஸ் போகணும்? நாளைக்கும் லீவுதானே? நாளைக்குச் சாயங்காலம் இங்க இருந்து புறப்படுற மாதிரிதானே முடிவு பண்ணி வந்தோம்''
"மரியாத இல்லாத இடத்தில இருக்க மனசு வரல''
"என்ன மரியாத இல்லாத இடம்? அப்பாவும் அம்மாவும் மாஞ்சு மாஞ்சு ஒங்களத் தாங்குறாங்க... மாப்பிள்ள... மாப்பிள்ளைன்னு உருகுறாங்க... இதுக்கு மேலே எப்பிடி முக்கியத்துவம் கொடுக்கிறது?''
"ஒங்கப்பா அம்மாவச் சொல்லல. ஒன்னோட தம்பி, ஃபிரண்டுன்னு வீட்டுக்கு வந்த ஒருத்தர அறிமுகப்படுத்தி வச்சான். அப்பறம் ரெண்டு பேரும் முட்டைப் புரோட்டா சாப்பிடப் போறோம்னு ஒங்கம்மாகிட்ட மட்டும் சொல்லிட்டுப் போயிட்டாங்க. என்னய ஒரு வார்த்த வாங்கன்னு கூப்பிட்டிருக்கலாமுல்ல''
"ஒங்களுக்குப் புரோட்டாவே பிடிக்காது. அடுத்து நீங்க சுத்த சைவம். முட்டைப் புரோட்டா வாடையே ஆகாது ஒங்களுக்கு''
""பிடிக்கிது பிடிக்கல அது... அடுத்த விஷயம் வீட்டுல இருக்கிற அக்கா மாப்பிள்ளையைக் கூப்பிடுறதுதானே... எனக்குத் தர்ற கவுரவம்? அன்னக்கி நாம இங்க வரும்போது நைட் டிபனை மதுரையில முடிச்சிட்டு வந்திடுவோம்னு ஃபோன் பண்ணிச் சொன்னோம். அப்பிடி இருந்தும், வந்தவுடனே சாப்பிடுங்கன்னு ஒங்கப்பா அம்மா சொல்லலையா?''
வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த வாசுதேவனுக்கு மகள்-மருமகன் இருவருக்குள் ஏதோ உரசல் என்று மட்டும் புரிந்தது. எதற்காக என்பது விளங்கவில்லை. நான்கு நாட்கள் தொடர்ந்தாற் போல் விடுமுறை வந்ததால் அனிதா, மாப்பிள்ளையுடன் பிறந்தகம் வந்திருக்கிறாள். மிகுந்த குதூகலத்துடன் மூன்று தினங்கள் ஓடிவிட்டன. நாளை மாலை அவர்கள் ஊருக்குக் கிளம்ப வேண்டும். அதற்குள் என்னவாயிற்று எனத் தெரியவில்லை. வாசுதேவன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், அனிதா ஏதோ ஒரு வேலையாக வரவேற்பறைக்கு வந்தாள். 
மெல்லிய குரலில், "என்னம்மா பிரச்னை?'' பதட்டதோடு விசாரித்தார் வாசுதேவன். 
தனது புருஷன் சொல்வதில் நியாயம் இல்லை என்பது அனிதாவுக்குத் தெளிவாகத் தெரியவே செய்தது. இருந்தாலும், பிறந்த வீட்டுக்கு வந்திருக்கும் போது "அவரை' விட்டுக் கொடுக்க முடியுமா?
""மோகன், அவனோட ஃபிரண்டு வந்தவுடனே அவரை அம்போன்னு விட்டிட்டுப் போயிட்டான். முட்டை புரோட்டா சாப்பிடப் போறவன், வாங்கன்னு ஒரு வார்த்தை அத்தானையும் கூப்பிட்டிருக்கலாமில்ல... அவன் கூப்பிடாம போனதுக்குத்தான் கோபமாகக் கத்துறாரு. ஊருக்கு இப்பவே போயிடுவோம்னு சொன்னவரைக் கெஞ்சிக் கூத்தாடி சமாதானம் பண்ணி வச்சிருக்கேன். தம்பி வந்தவுடனே அவரைப் பார்த்து மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க'' என்று புருஷனுக்கு கேட்கும்படி உரக்கச் சொல்லி புருஷனை குளிர்விக்க முயற்சித்தாள். 
"சரிம்மா மோகன் வரட்டும். மாப்பிள்ளையிட்ட மன்னிப்புக் கேட்கச் சொல்றேன்... சரியா?''
மோகன் வந்தான். விஷயத்தை விளக்கி மன்னிப்புக் கேட்கச் சொல்லி அனுப்பி வைத்தார் வாசுதேவன். மோகனும் அப்பாவிடம் "என்ன தப்புப் பண்ணினேன் மன்னிப்புக் கேக்க?' என்று வாதம் பண்ணாமல், அத்தானிடம் மன்னிப்புக் கேட்டவுடன், அனிதா மாப்பிள்ளை விக்னேஷ் சமாதானம் அடைந்தார். அனிதாவும் அவரும் ஏற்கெனவே திட்டமிட்ட பிரகாரம் கோயிலுக்குப் போய்விட்டு கடை வீதியைச் சுற்றிவரக் கிளம்பினார்கள்.
"இந்தாம்மா அனிதா... மாப்பிள்ளைக்கும் ஒனக்கும் பஜார்ல ஏதாவது வாங்கிக்கிடுங்க'' - இரண்டாயிரம் ருபாயை வழங்கினார் வாசுதேவன். 
மாப்பிள்ளை விக்னேஷின் வாய் "எதுக்கு மாமா?'' என்றாலும் பணத்தைப் பார்த்ததும் அவரின் முகத்தில் பிரகாசம் பூத்துக் குலுங்கியது. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நெஞ்சில் குடி புகுந்த சினம் போன திசை தெரியவில்லை. 
"என்னப்பா இது... அவருக்கு முட்டை புரோட்டா பிடிக்காது. அவரு சுத்தமான விஜிடேரியன். அவரைப் போய் முட்டை புரோட்டா சாப்பிடப் போறோம் வாங்கன்னு கூப்பிடுறது மொறையா? முட்டை புரோட்டா பிடிக்காது இருந்தாலும் மரியாதைக்காக கூப்பிடணும்னு சொல்றதில என்னப்பா நியாயம் இருக்கு?''
அத்தான்- அக்கா கிளம்பிப் போனதை உறுதிப்படுத்திக் கொண்டு அப்பாவிடம் மோகன் குறைபட்டான்.
வாசுதேவன் அறுபது வயதைத் தாண்டி இருந்த போதிலும் எண்ணங்களால் இருபது, முப்பது வயதுக்காரர்கள் போல் திகழ்பவர். அவர் மருமகனாக இருந்த காலகட்டங்களில் மாமானாருக்கு மனக் கஷ்டங்களைத் தராதவர். யதார்த்தவாதி. ஜென்டில் மேன். அதனால் அவர் பாணியில் மோகனுக்குப் பதில் சொன்னார். 
"அது அப்பிடித்தான்ப்பா மோகன்... என்னதான் ஒருத்தருக்கு சுவையான முறுக்கைத் தந்தாலும் முறுக்கைச் சாப்பிடும் போது தவறி ஒண்ணு ரெண்டு துண்டுக கீழே விழுந்திட்டாப் போச்சு... மனசு முறுக்கோட சுவையை மறந்து கீழே விழுந்த அந்த ரெண்டு துண்டுகளுக்காக வருந்தும். அத எடுத்துச் சாப்பிடவும் கவுரவம் இடம் கொடுக்காது. அதைப்பத்தின ஏக்கமே சுற்றிச் சுழலும். அது மாதிரி நாம மாப்பிள்ளைய எப்பிடி எப்பிடியோ அக்கறையோட கவனிச்சாலும்... நம்மள அறியாம நடந்த சின்ன விஷயந்தான் அவருக்குப் பெருசாத் தோணுது. கல்யாணமாகி எட்டு மாசந்தானே ஆகுது? புது மாப்பிள்ளை முறுக்கு இன்னமும் போகல... நாளாக நாளாக எல்லாம் சரியாப் போகும். அதுவும் கொழந்த குட்டின்னு ஆகிட்டா சுத்தமா மாறிடுவாரு''
"மச்சான் இப்பிடி நடந்துக்கிட்டாரே' என்று மோகன் மனதை வாட்டிய சங்கதி, அப்பா தெரிவித்த அனுபவ மொழிகள் மூலம் மனதை விட்டு மறைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com