திரைக் கதிர்

இசை, சினிமாக்களைத் தாண்டி சமூகம் சார்ந்த விஷயங்களில் அவ்வப்போது ஆர்வம் காட்டுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது "த பியூச்சர்' என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார்.
திரைக் கதிர்

• இசை, சினிமாக்களைத் தாண்டி சமூகம் சார்ந்த விஷயங்களில் அவ்வப்போது ஆர்வம் காட்டுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது "த பியூச்சர்' என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது... "தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இக்கால குழந்தைகள் யூ டியூப் வழியாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றனர். அதன்மூலமாக நமது பண்பாடு, நற்பண்புகள் ஆகியவற்றை அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை இந்த அமைப்பு மேற்கொள்ளும். குறிப்பாக, குழந்தைகள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தடுத்து, அவர்களை இசை வழியாக நல்வழிப்படுத்த முயற்சிப்போம். இயக்குநர் பரத் பாலா, எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் என்னுடன் கைகோர்த்துள்ளனர்'' என்றார் ஏ.ஆர். ரஹ்மான். 

• "கல்லுக்குள் ஈரம்' படம் மூலம் அறிமுகமானவர் விஜயசாந்தி. "ராஜாங்கம்', "நெஞ்சிலே துணிவிருந்தால்' என பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரஜினியுடன் "மன்னன்' படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தார். 1990-ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த "வைஜெயந்தி ஐபிஎஸ்' படம் விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்த்தியது.
இதையடுத்து அவர் அரசியலில் குதித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் "சரிலெரு நீகெவ்வரு' படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இப்போது தன்னைத்தேடி வரும் தயாரிப்பாளர்களுக்கு அவர் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார்: "பெரிய தொகை சம்பளமாகத் தர வேண்டும். அக்கா, அம்மா, அண்ணி வேடங்களிலும், சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன். கதைக்கு முக்கியத்துவம் மற்றும் எனக்கு முக்கியத்துவமும் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.

• மறைந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை, படமாக தயாராக விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை காட்டி நடித்ததுடன் அரசியல் பணிகளிலும் ஆர்வம் காட்டினார் எம்.ஆர்.ராதா.
அவரது செயல்பாடுகள் பெரியாரைக் கவர்ந்தன. இதையடுத்து அவருக்கு "நடிகவேள்' என்ற பட்டத்தை வழங்கினார். எம்.ஆர்.ராதா வாழ்க்கைப் படத்தை அவரது மகள் நடிகை ராதிகா தயாரிக்க உள்ளாராம். இயக்குநர் ஜீவ் இயக்குகிறார். இவர் "சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இயக்குநர் மட்டுமல்ல, எம்.ஆர்.ராதாவின் பேரனும் ஆவார். 

• "பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். இருவரும் முதன்முறையாக இணைவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் திருநெல்வேலி வட்டார வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இப்படத்துக்கு "கர்ணன்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தைத் தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணு, தனது சுட்டுரையில் இதை சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் சிவாஜி மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவாஜி சமூக நலப் பேரவையினர் தாணுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சிவாஜி நடித்த இதிகாச காவியமான "கர்ணன்' தலைப்பை நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம். அதனுடன் வேறு வார்த்தைகள் சேருங்கள். "கர்ணன்' என்ற தலைப்பு சிவாஜி படத்துக்கு மட்டுமே இருக்கட்டும்' என்று கூறியுள்ளனர்.

• "அன்பே சிவம்', "ஜெமினி', "வில்லன்', "வின்னர்', "பரசுராம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிரண். திடீரென்று சரிந்த மார்க்கெட்டால் அவர் பாடலுக்குக் கவர்ச்சி நடனம் ஆடுவது, ஒரு சில காட்சிகளில் வந்து செல்வது என மாறிப் போனார். இதனால் மார்க்கெட் சரிந்ததே தவிர, வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை. 
சில ஆண்டுகள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். "ஆம்பள' படத்தில் ஹீரோயினுக்கு தாயாக நடித்தார். அதிலிருந்து ஆளையே பார்க்க முடியவில்லை. இப்போது கடுமையான உடற்பயிற்சி செய்து பல கிலோ எடை குறைத்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இளமை தோற்றத்துக்கு மாறியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக தனது இணைய தள பக்கத்தில் படுகவர்ச்சியான உடைகள் அணிந்து படங்களைப் பகிர்ந்து வரும் கிரண், "என்னையா ஆன்ட்டினு சொல்றீங்க... இப்ப எப்படியிருக்கேன்' என்று கேட்டிருக்கிறார். புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கும் கிரண் மீண்டும் கதாநாயகியாக நடிக்க சில இயக்குநர்களுக்குத் தூது விட்டு வருகிறார்.
- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com