வழியிலே சில போதிமரங்கள்

 "நல்லது நினைச்சா நல்லது நடக்கும்னு சொல்வாங்களே... அது சரியாயிட்டுது பாருங்க தம்பி. அந்த காயை வித்த நானூறு ரூபாய் கிடைக்கும்னு நினைச்சேன்
வழியிலே சில போதிமரங்கள்

சென்ற இதழ் தொடர்ச்சி...
 "நல்லது நினைச்சா நல்லது நடக்கும்னு சொல்வாங்களே... அது சரியாயிட்டுது பாருங்க தம்பி. அந்த காயை வித்த நானூறு ரூபாய் கிடைக்கும்னு நினைச்சேன். அது ஆயிரமா வந்துடுச்சு. அந்த புள்ளைக்கும் அதிர்ஷ்டம் இருக்கும் போலிருக்கு. அதுமட்டுமில்லே. அந்த பூசணிக் கொடியோட கடமையும் முழுமையடைஞ்சுடிச்சுப் பாருங்க''
 "நீங்க செஞ்ச செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கு. ஆனா கடைசியா சொன்னீங்களே பூசணிக் கொடியோட கடமையும் முழுமையடைஞ்சுடிச்சுன்னு... அதுதான் புரியலே''
 "அதுவா தம்பி இறைவன் ஒவ்வொரு உயிரையும் சும்மா படைச்சிடறதில்லே... ஒரு கடமையோடத்தான் அனுப்பி வைக்கிறான். அது பிறந்தவுடனே அதுங்க காதிலே தப்புத்தண்டா பண்ணாம பொறுப்பை மறக்காம நல்லபடியா வாழ்ந்து உன்னையும் காப்பாத்திகிட்டு இந்த உலக இயக்கத்துக்கு உன் பங்களிப்பு என்னவோ அதையும் செஞ்சு முடிச்சுட்டு வா.. இல்லேன்னா நீ சொர்க்கத்துக்கு போகமுடியாதுன்னு சொல்லி அனுப்பிவைக்கிறான். அதை வேதவாக்கா எடுத்துகறதாலேத்தான் எத்தனை கஷ்டம் வந்தாலும் வாழ்ந்து தீரணுங்கற முடிவோட உயிர்கள் வாழுது. இந்த பூசணிக்கொடியை எடுத்துக்குங்க... கடும் வறட்சியிலே சோர்ந்து வாடிய போதும், ஆடுமாடுகள் மிதிச்சு துவைச்சப்போதும் தாங்கி நின்னுது. அதன் மனவுறுதியைப்பார்த்து அதுக்கு நிறைய காய்களைத் தந்தான். கடைசியிலே காய்கறிகடைகாரனை அனுப்பி அவன் தனக்கே எடுத்துகிட்டான். இதிலேயிருந்து ஒவ்வொரு உயிருக்கும் ஒரு நோக்கம் இருக்கறது தெரிஞ்சுக்கலாம். அந்த நோக்கத்தை பூசணிக்கொடி முழுமை செஞ்சுடுச்சு அதைத்தான் சொன்னேன். இப்ப புரியுதுங்களா?''
 அவர் சொன்னதை மட்டுமின்றி அதைத்தாண்டி பலவற்றைப் புரிந்துகொண்ட அவன் தலையசைத்தான். அதன் பிறகு வெவ்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த பின் இரவு ஏழு மணியளவில் வீட்டிற்குப் புறப்பட்டான்
 "சரிங்க நான் புறப்படறேன்... சேஷாத்ரி வந்தா பேசச் சொல்லுங்க''
 "வீட்டுக்குப் போங்க தம்பி''
 வாட்ச்மேன் சொல்ல அவரை தீர்க்கமாய் திரும்பிப் பார்த்தான்.
 "அதான் போக வெச்சுட்டீங்களே அப்புறம் என்ன?'' என்று கூறியவாறு வண்டியை விட்டான். அவனது சிந்தனையில் பாலமுருகனும் வாட்ச்மேனும் நிரம்பியிருந்தனர்.
 மேம்பாலம் ராஜாமுத்தையா மருத்துவமனை தாண்டி வந்தபோது கலுங்குமேடு அருகில் ஓர் இளம்பெண் கையைக்காட்டினாள். யார் இவள் எதற்காக நிறுத்துகிறாள் என்ற சிந்தனையுடன் நிறுத்தலாமா வேண்டாமா என்பதாய் தயங்கி பின்னர் நிறுத்தினான்.
 "அண்ணா எனக்கொரு உதவி செய்யமுடியுமா'' என்ன இந்த டாஸ்மாக் கடைதாண்டி விட முடியுமா?''
 முன்னிரவு நேரத்தில் இந்த இளம்பெண் எதற்காக டாஸ்மாக் கடையைத்தாண்டி விடச்சொல்கிறாள். இந்த பெண்ணை முன்பின் பார்த்ததில்லை. ஒருவேளை இவளுக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருந்து டாஸ்மாக் கடையருகே வழிமறித்து தகராறு செய்யுமோ?
 "என்னன்னா தயக்கம், ஏதாவது பிரச்னை வரும்னு பயப்படுறீங்களா? அந்த கடைகிட்டே நான் ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கு. அதை அவாய்ட் பண்ணத்தான் உங்க உதவியைக் கேக்கறேன். என்னாலே உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. நான் உங்க பின்னாடி உட்கார்ந்து முகத்தை மூடிப்பேன். நீங்க அதைத் தாண்டி என்னை விட்டுட்டா போதும்''
 தயங்கினான். அவன் தயக்கத்தைப் பார்த்தவள் அவனை போகச் சொல்ல, எது நடந்தாலும் பரவாயில்லை என்பதாய் அவளை அமரச்சொல்லி கடையைதாண்டி அவள் சொன்ன இடத்தில் அவளை இறக்கிவிட்டான். இறங்கியவள் நன்றி சொன்னாள்.
 "அதோ தெரியிதே அந்த குடிசை வீடுகளில் ஒண்ணுதான் என்னோடது. நான் ப்ளஸ்டூ படிச்சுட்டு தபால்லே டிகிரி படிச்சிகிட்டே ஒரு வீட்ல நோயாளியை கவனிச்சிக்கற வேலப் பார்க்கிறேன். அப்பாவும் அம்மாவும் விவசாய கூலிங்க. அப்பா சம்பாதிக்கறதை முழுசும் குடிச்சே தீர்த்துடுவார். அம்மாதான் என்னையும் என் தங்கச்சியையும் காப்பாத்துறாங்க. அம்மாவுக்கு ஒத்தாசையா வேலைக்குப் போறேன். தினமும் அஞ்சு மணிக்கே வந்துடுவேன். ஒரு தொண்டு நிறுவனம் இலவசமா புட்பால் கோச்சிங் கொடுக்குது. அதிலே சேர்ந்து பயிற்சி எடுத்துக்கறேன். பல போட்டிகளில் பங்கேற்று ஜெயிச்சு கப் வாங்கியிருக்கேன். இப்போ அதுக்கான பயிற்சிக்குப் போய்ட்டு ஸ்டேட் அளவிலே நடக்கப் போற ஒரு டோர்னமெண்ட்டிலே கலந்துக்க ஒரு ஜவுளிக்கடைகாரர் கிட்டே ஸ்போர்ட்ஸ் டிரஸ் தாங்கன்னு கேட்கப் போனேன். அதனாலே லேட்
 ஆயிடுச்சு. எங்கப்பாவோட வேலைபார்க்கிற ஒருத்தன் இந்த கடையிலே வந்து தண்ணீ போட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அடிக்கடி தொந்தரவு பண்ணுவான். இன்னைக்கும் என்னை வழிமறிப்பான். அதனாலேதான் உங்க உதவியைக் கேட்டேன்''
 அவள் கதை அவனுக்கு வியப்பை மட்டுமின்றி வேதனையும் அளித்தது. கஷ்டத்துக்கு நடுவே போராடும் அவளை கனிவுடன் பார்த்தான்.
 "உதவிக்கு உங்கப்பாவை கூப்பிட வேண்டியதுதானே ?''
 "அவரும் அங்கதான் தண்ணியடிச்சுட்டுப் படுத்திருப்பாரு''
 "இத்தனை சிரமத்திற்கும் நடுவே ஸ்போர்ட்ஸ் பயிற்சிக்கு போற பாரு. உன்னை பாராட்டணும்''
 "எல்லோருக்கும் ஒருபோல வாழ்க்கை கிடைச்சிடாது கஷ்டங்களும் சிரமங்களையும் நினைச்சு கவலைப்படறதை விட அதை போக்க என்ன வழின்னு யோசிச்சா மனசும் அமைதியா இருக்கும் வாழ்க்கையும் புரிபட்டுவிடும்னு எங்க கோச் சொல்வாரு. அதைத்தான் நான் வேதவாக்கா எடுத்திட்டிருக்கேன்''
 அவள் சொல்ல சாரதி வாயடைத்துப் போனான்.
 "உன் நெம்பரைக் கொடு உனக்கு உதவமுடியுமான்னு பார்க்கிறேன்''
 "நேற்றுவரைக்கும் யார் என்று தெரியாத ஒருத்திக்கு உதவுணும்னு நினைக்கறீங்க. ஆனா பெத்த அப்பன் தண்ணியடிச்சுட்டு கிடக்கிறான். ரொம்ப தேங்க்ஸ்ண்ணா''
 நெம்பரைச் சொல்ல தன் போனில் ஏற்றி மிஸ்டு கால் கொடுத்தான்.
 "பேரு?''
 "வெற்றிச்செல்வி''
 "பொருத்தமான பேரு. நிச்சயம் சக்சஸ் பண்ணிடுவ. வாழ்த்துக்கள். என் நம்பரை சேவ் பண்ணிக்க. அவசிய அவசரத்துக்கு கூப்பிடு''
 விடைபெற்று வண்டியை விட்டான். மனது முன்பைவிட இலகுவாக இருந்தது. பாலமுருகனும், வாட்ச்மேனும், வெற்றிச்செல்வியும் மாறிமாறி நினைவை ஆக்கிரமித்துக் கொண்டு ஏதேதோ சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தனர். வீட்டருகில் சென்றபோது அம்மா வந்து கேட்டை திறந்துவிட்டாள்.
 "மத்தியானம் சாப்பிட்டியா?''
 "மண்டபத்திலே சாப்பிட்டேன். அப்பா எங்கே?''
 "அப்பாவோட சண்டை போட்டுகிட்டு போன இப்ப வந்து கேட்கறே?''
 "நீ என்னைப்பத்தி கவலைப்பட்டல்லே அதுமாதிரிதான்''
 "வயலுக்கு தண்ணீர் ஓடிகிட்டிருக்கு பார்த்துட்டு வரேன்னு போனாரு. பொழுது போச்சு, இன்னும் காணலே. லைட் எடுத்துட்டும் போகலே''
 "எடுத்துட்டு வா நான் கொண்டு கொடுத்துட்டு வரேன்''
 தெருவைத்தாண்டி வரப்பில் ஏறும்போது அப்பா வாய்க்கால் மதகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். சற்றே தயக்கத்துடன் அவரருகே சென்றவன் லைட்டை அவர் அருகில் வைத்தான். அப்பா பேசவில்லை.
 "சீக்கிரமா அம்மா வந்துடச் சொன்னாங்க. பகல்லேப் பார்த்துகலாம்னாங்க''
 "அவ மட்டும்தான உரிமையுள்ளவ. அவளாலேதான் அக்கறைப்பட முடியும். அங்கே வந்துதான் என்னப் பண்ணப் போறேன். நீ போ''
 "ஸாரிப்பா''
 "எதுக்கு?''
 "மத்தியானம் கோபத்திலே பேசிட்டேன்''
 "சின்ன வயசிலே வலிக்காம அடிச்சே. இப்போ வலிக்கிறமாதிரி அடிச்சிட்டே அவ்வளவுதான். உங்ககிட்டேல்லாம் அடிபடணும்ணு விதி இருக்கும் போது என்ன பண்ணமுடியும். அனுபவிச்சுதானே ஆகணும். அவனுங்க ரெண்டுபேரும் ஒரு நிலைக்கு வந்துட்டாங்க. நீ அல்லாடிறியேன்னு அனுதினமும் கவலைப்படுவேன். அந்த கவலை கொஞ்சம் ஓவராயிடுச்சு. அதனாலேத்தான் பேசவேண்டியதாயிட்டுது. இனிமே எதுவும் கேட்கமாட்டேன்''
 அப்பா சொல்ல அவன் கண்கள் கலங்கின.
 "பிறக்கிறது விதிடா. நான் உன்னை பெக்கலேன்னாலும் யாரோ ஒருத்தன் மூலமா நீ இந்த உலகத்துக்கு வரணும்னு இருக்குடா. அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி பிறக்கறது கஷ்டமில்லே வாழ்றதுதான் கஷ்டம். வாழ்வதற்கான வழியை உருவாக்கிக்கறதுதான் கஷ்டம். அதனாலே காலம் கடத்தாம ஒரு வேலையோ இல்லே பிழைப்போ தேடிக்கோ. நீ வீட்டுக்கு போ, நான் அப்புறம் வரேன்''
 "அப்பா உங்ககிட்டே பேசணும்''
 "பேசு''
 "நான் ஒரு ஹோட்டல் திறக்கலாம்னு இருக்கேன்''
 "இன்ஜினியரிங் படிச்சிருக்க. ஹோட்டல் நடத்த மனசு இடம் கொடுக்குதா? ''
 "வேற வழிகள் சரியில்லாததால... இது பெட்டரா படுது''
 "நல்ல விஷயம். ஆனா இன்னும் நிறைய யோசிச்சு முடிவுக்கு வா. பிசினசலாம் துவக்குகிற வரையில் பெரிய மகிழ்ச்சியைத் தரும். அப்புறம் அதோட அல்லாடும்போது போரடிச்சிடும். மேலும் நீ சொல்ற ஒட்டல் தொழில் தனியாளா இருந்து நடத்த முடியாது. அதுக்கு ஆள் பலம் வேணும். குக்கர், சப்ளையர்னு ஆட்கள் வேணும். அதேசமயம் ஆள் வச்சு வரலேன்னா நாய் படாதபாடு படணும். தினம் தினம் போராட்டம். அதுமட்டுமில்லே உணவுப்பொருட்கள் விக்காம மிகுந்தா அத்தனையும் நஷ்டம். அதற்கு பதிலா கிராண்டா ஒரு டீ கடை தொடங்கு. பில்டர் காபி ஹார்லிக்ஸ் பூஸ்ட், மசாலா டீ, இஞ்சி டீ ,பொதினா டீ, பிளாக் டீ, கிரீன் டீ, மசாலா பால், வடை போண்டான்னு விதவிதமா விற்பனை செய். ஆள்பலமும் பாடும் குறைவு பலனும் அதிகம். அதிலேயே ஒருபக்கம் கூலா ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் வை. ராத்திரி மட்டும் தோசையும் சப்பாத்தியும் கொடு. எது வாங்கினாலும் பத்து ரூபாய். பலகாரம் மட்டும் ரெண்டு பத்துரூபாய்ன்னு. தரமா செஞ்சு விலையை குறைச்சு வித்தேன்னு வெச்சுக்க. மக்கள் உன்னைத் தேடி வருவாங்க. நீ விக்கிற டீயும் போடற பலகாரமும் ஊரை... மக்களைச் சுண்டி இழுக்கணும். அப்படி வர்ற வாடிக்கையாளரைத் தக்க வெச்சிகிட்டு அடுத்த பிசினசை துவக்கு. அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு தோணுதோ அதையெல்லாம் செய். ஆனா தனியா செய்யாதே. வேலையாட்களும் தேவை, பங்குதாரர்களும் தேவை. அதுக்கு ஒரே வழி உன்னைப்போல அல்லாடற உன்னோட பிரண்ட்ஸ் வேல்முருகன், கிறிஸ்டோபர் அவனுங்களை சேர்த்துக்க. பாவம் அவுங்களும் ஏழைவீட்டுப் பிள்ளைங்கதானே? ஆளுக்கொரு வேலையாச் செய்யலாம். எப்போதும் எல்லோரும் ஒற்றுமையாவும் ஒண்ணா முன்னேறலாம். இதுபற்றி உன் அண்ணன்கிட்டேயும் தம்பிகிட்டேயும் ஒரு வார்த்தை பேசிடு''
 அப்பா சொன்ன ஐடியா பிடித்துவிட அதுபற்றிய சிந்தனையிலேயே வீட்டிற்கு வந்தான். முகம் கழுவி அம்மா கொடுத்த காபியை குடித்தவன் மீண்டும் வண்டியை எடுத்தான்.
 "மறுபடியும் எங்கேடா போறே? ''
 "அண்ணணைப் பார்த்துட்டு வரேன். ஏதாவது வாங்கணுமா? ''
 "வேண்டாம். இப்பத்தான் கடைப் பையன் எல்லாத்தையும் கொடுத்துட்டுப் போனான்.''
 அண்ணி கடையைப் பார்க்க அண்ணன் டீவி பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் வரவேற்றனர். தன் விருப்பத்தையும் அப்பாவின் ஒப்புதலையும் சொன்னான். இருவரும் சந்தோஷப்பட்டனர்.
 ""முதலீடு எங்களோடது''
 அண்ணனை முந்திக்கொண்டு அண்ணி சொல்ல, ""முதலீடு உன்னுடையது ஆனா முதலாளி அவன். நாளைக்கு உரிமை கொண்டாடக்கூடாது புரிஞ்சுதா?'' அண்ணன் சொல்ல அண்ணி சிரித்தாள். அவர்களது பேச்சு மகிழ்ச்சியை தந்தது.
 "சரிண்ணா நான் போய் கிறிஸ்டோபரையும் வேல்முருகனையும் பார்த்து பேசிட்டு வரேன்''
 "ஆமான்டா அவனுங்களும் நல்ல பசங்க அவனுங்களை பார்ட்னரா சேர்த்துக்க. பிரச்னை இருக்காது. அப்பா சொன்ன எதுவும் சரியா இருக்கும்''
 இருவரையும் போன் செய்து மண்டபத்திற்கு வரச்சொன்னவன் சேஷாத்ரியிடமும் சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் அவனுக்குப் போன் செய்தான்.
 "நான் மண்டபத்திலேதான் இருக்கேன் வந்துசேரு''
 அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்.
 "ஏன்டா கூப்பிட்ட? ''
 கிறிஸ்டோபரும் வேல்முருகனும் ஒரே நேரத்தில் கேட்க சாரதி ஆரம்பித்தான். வீட்டு சண்டை தொடங்கி அன்று நடந்தது அதன் பின்னர் தனது மனதில் ஏற்பட்ட மாற்றம் அத்தனையும் சொன்னான். அதன் பிறகு அப்பா சொன்னதையும் சொன்னான்.
 அடுத்த நிமிடம் கிறிஸ்டோபரும் வேல்முருகனும் ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டு ""சூப்பர் ஐடியா'' என்றனர்.
 "வேலை கிடைக்கும்போது போய்க்கிலாம்... இப்போ இதைப்பார்ப்போம்னு இறங்கிட்டீங்க... பேஷ்... ஆனா என்னை மறந்துட்டீங்க பார்த்திங்களா?''
 சேஷாத்ரி கூற சாரதி இடைமறித்தான்.
 "டேய்... உனக்கு நிறைய பொறுப்புகளை உன் சித்தப்பா பிக்ஸ் பண்ணிட்டார். அதுமட்டுமில்லாம இத்தனை சொத்துக்கும் நீதான் வாரிசு. உனக்கென்னடா குறைச்சல்? ''
 "இதெல்லாம் அவரு சொத்துடா நான் சம்பாதிச்சதில்லே. இன்னைக்கு உனக்கு ஞானத்தைக் கொடுத்த பாலமுருகன் போல... வாட்சமேன் போல... வெற்றிச்செல்வி போல எனக்கு ஞானத்தைக் கொடுத்துகிட்டிருக்கிறவர் அவர். அண்ணன் பிள்ளைக்குத்தானே சேரப்போகுது இன்னமும் கஷ்டப்படணுமான்னு நினைக்காம என்னை வாரிசா நினைச்சு தான் சம்பாதிச்ச சொத்தை தாரைவார்க்கிற அந்த மனுஷனுக்கு எத்தனை பெரிய மனசிருக்கும்? இத்தனை வயசிலும் சம்பாதிக்கிற அவரோட சொத்தை நான் எடுத்துக்க மாட்டேன்டா. அவரு பேர்ல ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன்மூலம் பள்ளிக்கூடம் திறக்கணும், படிக்கறவங்களுக்கு உதவி செய்யணும். கல்யாணம் பண்ணிக்கலே புள்ளைக்குட்டி பெத்துக்கலே. சம்பாதிக்கறதெல்லாம் யாருக்கோ போகப்போவுதுன்னு நினைக்காம இன்னும் உழைக்கிறார் பார்த்தியா? அந்த மனுஷனை கொண்டாடணும். இதுதான் என் விருப்பம் மட்டுமில்லே. எங்கம்மாவோட விருப்பமும் கூட. அதனாலத்தான் கேட்கிறேன் என்னையும் ஒரு பார்ட்டனரா சேர்த்துகுங்க. நானும் உங்களோட சேர்ந்துடறேன்''
 "அப்படியே ஆகட்டும்டா சேஷா'' கிறிஸ்டோபர் கூற வேல்முருகன் தன் பங்கிற்கு வழிமொழிந்தான்.
 "சரி கடை எங்கே பார்க்கறது? முதலீடு எவ்வளவு? எப்போ துவங்கறது? ''
 "நம்ப மண்டபத்துக்கு முன்னேயிருக்கிற ரெண்டு கடையும் குடோனுக்குத்தானே வாடகைக்கு விட்டிருக்கோம். அவுங்களை காலி பண்ணச் சொல்லிடலாம்''
 "உங்க சித்தப்பா ஒத்துக்கணுமே''
 "நல்ல விஷயத்தைத் தள்ளிப் போட வேண்டாம், இப்பவே கேட்டுடலாம்''
 போனை அடித்தான்.தொடர்பு கிடைத்தது.
 பேசினான்.
 "ஆமாம்பா... ஆனா அதுக்குரிய மரியாதையை நான் கொடுக்கணும். அதை பத்திரமா பார்த்துக்கணும். அதுக்கான அனுபவத்துக்காகத்தான் இது''
 ""ரொம்ப மகிழ்ச்சிடா, நீ எல்லாத்தையும் பார்த்துப்ப. கடையை காலிபண்ணச் சொல்லி டாக்குமெண்டை வாங்கிட்டு அட்வான்சை திருப்பிக் கொடுத்துடு. உங்க பிசினசுக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு அனுப்பி வைக்கிறேன்''
 "தேங்கஸ்ப்பா''
 "எங்கே அவனுங்ககிட்டே கொடு''
 போனை மூன்று பேருக்கும் நடுவே காட்டினான்.
 "பசங்களா''
 "சொல்லுங்கப்பா''
 "இன்ஜினியர் படிப்பு படிச்சிருக்கோம்ங்கறதையும் பட்டத்தையும் தூக்கி மூலையிலே வைச்சிட்டு உழைங்க. முன்னுக்கு வந்துடலாம். காபி கடை நடத்திகிட்டே மண்டபத்திலே பிக்ஸ் பண்ற நிகழ்ச்சிகளுக்கான கேட்டரிங் ஆர்டரை எடுத்து ஆள் வெச்சு செய்யுங்க. வெளி ஆர்டரையும் எடுங்க. முதலில் சிரமமா இருக்கும் போகப்போக புரிபட்டுடும்''
 "சரிங்கப்பா''
 அடுத்த இரண்டாவது மாதம் ஒரு புதன்கிழமை அவர்களது நற்சுவை தேனீரகத்திற்கு திறப்புவிழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ஒவ்வொருவரும் தங்களது உறவினர்கள் நண்பர்கள் என பலரை அழைத்திருந்தனர். சாரதியும் உறவினர்களைத் தாண்டி தனக்குள் ஞானத்தை ஏற்படுத்திய பாலமுருகன், வாட்ச்மேன் வடிவேலு, வெற்றிச்செல்வி ஆகியோரையும் அழைத்திருந்தான். குரு தட்சணையாக பாலமுருகனுக்கு காக்கிபேண்ட் சட்டையும் வாட்ச்மேனுக்கு ஒரு கம்பளி போர்வையும் வெற்றிச்செல்விக்கு ஸ்போர்ட்ஸ் டிரஸ்சும் எடுத்துக்கொடுத்து அவர்களை ஆச்சரியப்படுத்தினான். வாழ நினைப்பவருக்கு வழிகள் வரிசைக் கட்டிக் கொண்டு வரத்தானே செய்யும்?
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com