பேல்பூரி

 இந்த உலகில் கவலையில்லாத மனிதர் இருவர். ஒருவர் கல்லறையில்...இன்னொருவர் கருவறையில்.
பேல்பூரி


கண்டது

(சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் அறிவிப்புப் பலகையில்)

இந்த உலகில் கவலையில்லாத மனிதர் இருவர்.
ஒருவர் கல்லறையில்...
இன்னொருவர் கருவறையில்.

ஆர்.விஸ்வநாதன், சென்னை-78.

(தஞ்சாவூரில் பேனா பழுது பார்க்கும் கடை ஒன்றில்)


இங்கு பேனா மருத்துவம் பார்க்கப்படும்.

எஸ்.ஏ.விஜயலஷ்மி, தஞ்சாவூர்.

(விழுப்புரத்தில் ஓர் இரு சக்கர வாகனத்தில்)
 

அன்பு ஒன்றினாலே பகைமை விலகும்.

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

(திருச்சியில் சுந்தர் நகரில் ஒருபேனரில்)

கேட்டது


(தஞ்சாவூர் - மேலவீதியில் உள்ள ஒரு தேநீர்க் கடையொன்றில்)


""பெஞ்ச் எல்லாம் எங்கண்ணே... எடுத்துட்டிங்களா?''
""ஊர்க்கதையெல்லாம் பேசிட்டே டீ குடிக்க இது கலிகாலம் இல்லே; கரோனா காலம்! சட்டுபுட்டுனு குடிச்சிட்டு கிளம்புங்க தம்பி!''

பா.து. பிரகாஷ், தஞ்சாவூர்.

(காட்டாங்குளத்தூரில் தெருமுனைச் சந்திப்பின் போது இருவர்)


பெரியவர்: அந்தக் காலத்துல, என் பொண்டாட்டி, வெங்காயம் நறுக்கும்போது மட்டும்தான் கண்கலங்கி, நான் பார்த்திருக்கேன்!
இளைஞர்: இந்தக் காலத்துல, என் பொண்டாட்டி சீரியல் பார்க்கும்போது மட்டும்தான் கண்கலங்கி, நான் பார்த்திருக்கேன்!

-வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

எஸ்.எம்.எஸ்.

வாழ்க்கையின் மிக நீண்ட தேடல்...
நல்ல மனிதர்களைத்
தேடிக் கண்டுபிடிப்பது.

மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி.

மைக்ரோ கதை
 

ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.

அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே... ""நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் இல்லையா?'' என்று கேட்டார்.

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்:

"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கேன். பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...

உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க... இந்த வேலையில்லைன்னா நீங்க திணறிப் போயிடுவீங்க. இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு. இந்த வட்டாரத்தில் நல்ல பேர் இருக்கு. நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாதிக்கிறேன். நாளை என் வாரிசுகளுக்கு இந்தத் தொழிலை நான் தர முடியும். ஆனால் உங்கள் மகனுக்கு நீங்க வேலை தேட வேண்டும்''

மேனேஜர் வாயடைத்துப் போய் நின்று கொண்டு இருந்தார்.

சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

யோசிக்கிறாங்கப்பா!


எதுவும் இல்லாதபோது
சமாளிக்கும் திறமையும்,
எல்லாம் இருக்கும்போது நடந்துகொள்ளும் முறையுமே
வெற்றியைத் தீர்மானிக்கிறது.

பி. கோபி, கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!

கரோனா தொற்று உள்ள ஒருவரின் உடல்நிலையைப் பிறர் கண்காணிக்க நிறைய செல்லிடப் பேசி செயலிகள் வந்துவிட்டன. உலகின் பல நாடுகளிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு, வயது முதிர்ந்தவர்களுக்குக் கரோனா பாதிப்பு வந்துவிட்டால் எப்படி அவர்களுடைய உடல்நிலையைக் கண்காணிப்பது? அதற்காக சிங்கப்பூரில் புளூ டூத் மூலம் இயங்கக் கூடிய டிஜிட்டல் காண்டாக்ட் ட்ரேஸிங் கருவியை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தக் கருவியைக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கொடுத்துவிடுவார்கள். அவருக்கான தனிப்பட்ட ணத இர்க்ங் ஐயும் ஏற்படுத்திவிடுவார்கள். இந்தக் கருவி புளூ டூத் மூலம் இயங்கக் கூடியது என்பதால் இதற்கு இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை. இந்தக் கருவிக்கென தனிப்பட்ட செயலி உள்ளது. அதன் மூலம் செல்லிடப் பேசிக்கு தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

இந்தக் கருவி அதை வைத்துள்ளவரின் உடல்நிலையைப் பதிவு செய்கிறது. உடனுக்குடன் உடல்நிலை பற்றிய தகவல்களை அவருக்கு நெருக்கமானவர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தெரிவிக்கிறது. 25 நாள்கள் வரை அந்தத் தகவலைப் பாதுகாத்தும் வைத்துக் கொள்கிறது.

புளூ டூத் மூலம் இயங்குவதால் அதிக தூரத்தில் உள்ள ஒருவரைப் பற்றிய தகவல்களை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியாது. பேட்டரியால் இயங்கும் இந்தக் கருவி ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை செயல்படும். அதற்குப் பின் மின்னேற்றம் செய்தால் போதும்.

என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com