வீழ்வேனென்று நினைத்தாயோ?

""என்னோட வேலையை ராஜினாமாப் பண்ணீட்டு வந்து வங்கியில் லோன் வாங்கி  விராலிமலையில் சிலமாடுகளோடு சிறிய அளவில் ஒரு நாட்டுமாட்டுப் பண்ணை ஆரம்பிச்சேன். இப்ப அதில நிறையப் பால் தரக்கூடிய கிர்,
வீழ்வேனென்று நினைத்தாயோ?

சென்ற இதழ் தொடர்ச்சி...

""என்னோட வேலையை ராஜினாமாப் பண்ணீட்டு வந்து வங்கியில் லோன் வாங்கி விராலிமலையில் சிலமாடுகளோடு சிறிய அளவில் ஒரு நாட்டுமாட்டுப் பண்ணை ஆரம்பிச்சேன். இப்ப அதில நிறையப் பால் தரக்கூடிய கிர், காங்கிரேஜ், சாஹிவால், ரெட் சிந்தி, ராசி, காங்கயம் இன நாட்டு மாடுகளை வளர்க்கிறேன். ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனியா பொலி காளைகள் வளர்க்கிறேன். அந்த நாட்டுமாட்டுப் பண்ணையில நூறு மாடுகளுக்கு மேல இப்ப இருக்கு. பாலை திருச்சியில நியாயமான விலையில் விற்பனை செய்கிறேன்.

நாட்டுமாட்டுக் கன்றுகளையும் விற்பனை செய்கிறேன். பண்ணையில கிடைக்கிற சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி தொழு உரமும், பஞ்சகெளவியமும் தயாரிக்கிறேன். அருகிலேயே மண்புழு உரமும் தயாரிக்கிறேன்.

குடுமியான்மலை, சித்தன்னவாசல், நார்த்தாமலைப் பகுதிகளில் நிறைய நிலங்கள் வாங்கி அனைத்துவகைக் காய்கறிகளையும் பயிர் பண்ணுகிறேன். அங்கே தொழு உரம், மண்புழு உரம் மட்டுமே உபயோகிக்கிறேன். பஞ்சகெளவியம், இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கிறேன். அங்கே அபரிமிதமா விளையிற காய்கறிகளை திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்கிறேன்.

இந்த இடத்தில் அரியவகை மாமரங்கள் ஐந்து ஏக்கரிலும், திராட்சை ரெண்டு ஏக்கரிலும், தென்னை, மாதுளை, சப்போட்டா, எலுமிச்சை, பப்பாளி, மட்டி வாழை, நெல்லி மரங்கள் எல்லாம் ஒவ்வொரு ஏக்கரிலும் பயிர்பண்ணியிருக்கிறேன். எல்லாம் இயற்கை விவசாயம்தான். இங்கே விளையிற இளநீர், மாம்பழங்கள், மற்ற பழங்கள் எல்லாத்தையும் திருச்சியிலேயே குறைந்த விலையில் விநியோகம் பண்ணுகிறேன்.

முக்கொம்புக்குப் பக்கத்தில் எட்வர்ட் ரோஸ்னு சொல்ற நாட்டு ரோஜா பத்து ஏக்கர் பூமியில் பயிர்பண்ணி அங்கேயே ஒரு சென்ட் ஃபேக்டரி வச்சு சென்ட் தயாரிக்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்து மஸ்க் வரவழச்சு மஸ்க் சென்ட்டும் அங்கே தயாரிக்கிறேன். எல்லாத்தையும் துபாய், சவூதி, கத்தார், ஜார்ஜா மாதிரி அரபு நாடுகளுக்கு அனுப்புகிறேன்.

என் மனைவி அகல்யா ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினீயர். திருச்சி மெயின் கார்ட் கேட் தாண்டி வெஸ்ட் புலிவார்டு ரோட்டில் இருக்கிற "அகல்யா டவர்ஸ்'ன்னு சொல்ற ஆறுமாடிக்கட்டிடம் என்னோடதுதான். அதில் கம்ப்யூட்டர் நிறுவனம் வச்சிருக்கேன். அதில நூற்றைம்பது சாஃப்ட்வேர் இஞ்சினீயர்கள் வேலை பார்க்கிறாங்க. அந்த நிறுவனத்துக்கு நான்தான் மேனேஜிங் டைரக்டர். நிர்வாகத்திலே என் மனைவி எனக்குத் துணையா இருக்கிறாங்க. நேர்மையா உழைக்கிற எந்த வேலையும் கேவலமில்லைன்றதுனால, மரமேறுறது, விவசாய வேலைகள் செய்யிறதுன்னு எல்லா வேலைகளையும் கத்து வச்சிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானே பண்ணையில் வந்து வேலை செய்கிறேன்''

வைத்த கண் வைத்தவாறு வாய் பிளந்து பார்த்தவாறு அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கலியபெருமாள் சுயநினைவுக்குத் திரும்பியபோது, ஒரு ஃபாரின் சொகுசுக்கார் உள்ளே வந்து நின்றது. வெள்ளைநிற யூனிஃபார்மில் இருந்த டிரைவர் இறங்கி சல்யூட் அடித்துநின்றார்.

ஐயாரப்பன் கலியபெருமாளிடம், ""ஐயா, இருங்க இதோ வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் குடிசைக்குள் போனான். சற்று நேரத்தில், ""டிரைவர்'' என்று குரல் கொடுத்தான். டிரைவர் உள்ளே போனார். இருவரும் குடிசையிலிருந்து வெளியே வந்தபோது டிரைவர் கையில் கயிற்றால் இறுக்கிக் கட்டிய ஒரு பெரிய அட்டைப் பெட்டி இருந்தது.

ஐயாரப்பன் கலியபெருமாளிடம் வந்து, ""ஐயா, அடுத்து நீங்க எங்கே போகணும்?'' என்றான்.


அவர், ""மத்திய பஸ்நிலையம்போய், தஞ்சாவூர் போகணும்'' என்றார்.


ஐயாரப்பன், "" ஐயா, அட்டைப்பெட்டியில மாம்பழங்கள், திராட்சை, மாதுளை, சப்போட்டாப் பழங்கள் எல்லாம் வச்சிருக்கேன். வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போங்க'' என்று சொல்லிவிட்டு, டிரைவரைப் பார்த்து, ""ஐயாவை மத்திய பஸ்நிலையத்துக்கு அழைச்சிட்டுப்போய் தஞ்சாவூர் பஸ்ஸில் ஏற்றி விட்டுட்டு வா. அட்டைப்பெட்டியை நீயே பஸ்ஸில் கொண்டுபோய் வை. பெட்டியைக் காரில் கொண்டு போய் வை'' என்றான்.


டிரைவர் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்க் காரின் டிக்கியில் வைத்தார். ஐயாரப்பன் காரின் பின் கதவைத் திறந்தான். கலியபெருமாளிடம் அழகாகப் பேக் செய்யப்பட்ட ஒரு சிறிய அட்டைப் பெட்டியை நீட்டி, ""இதில இங்கு தயார் பண்ற சென்ட் பாட்டில்கள் இருக்கு'' என்று கூறிக்கொடுத்தான். அதை அவர் வாங்கிக்கொண்டு காரின் பின்சீட்டில் ஏறி அமர்ந்ததும், அவன் காரின் கதவைச் சாத்தினான். அவர் அவனிடம் விடைபெறவும் கார் புறப்பட்டுப் போனது.


கணக்குத் தேர்வில் பூஜ்யம் மார்க் வாங்கி அவமானப்பட்ட அந்த நாள் ஐயாரப்பனுக்கு நினைவுக்கு வந்தது. விருத்தாசலத்திலிருந்து வந்து மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த கருப்புசாமி என்னும் இவனுடைய வகுப்பில் படித்த மாணவன் இவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக இருந்தான். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒருவர் தோள்மீது இன்னொருவர் கை போட்டுக்கொண்டு நடந்து போவார்கள். இவர்களுடன் படித்த மற்ற மாணவர்கள் இவர்களைத் "தோளர்கள்' என்று சொல்லிக் கேலியாக அழைப்பார்கள்.


அன்று கணக்கு வாத்தியார் கலியபெருமாள் ஐயாரப்பனை எழுந்து நிற்க வைத்துத் திட்டிய நிகழ்ச்சி நடந்த பின்பு, வகுப்பு முடிந்து மதிய உணவு உண்ணப் போகும் நேரத்தில் கருப்புசாமி இவனைக் கண்டு கொள்ளாமல் எழுந்துபோனான். எப்போதும் ஒன்றாகவேபோய், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். ஐயாரப்பன் சாப்பிடப் போகாமல், வகுப்பிலேயே இருந்தான். சற்றுநேரத்தில் சாப்பிட்டுவிட்டு கருப்புசாமி வகுப்பிற்குத் திரும்பியவுடன் ஐயாரப்பன், ""கருப்பசாமி''என்று அழைத்தான். உடனேஅவன், ""என்னோட மாமா, உன் மாதிரி சரியாப் படிக்காத பசங்க கூட எல்லாம் சகவாசம் வச்சுக்கிறக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்''என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தான். அத்துடன் அவனுடைய நட்பு முறிந்துபோனது. பள்ளி முடிந்து மனசில் வலியுடன் வெளியே நடந்தபோது எவனோ ஒருவன் அதோ, ""பூஜ்யம் போறான்டா'' என்று இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டு வந்தது கேட்டது.

அன்றைக்குச் சாயங்காலம் வீட்டிற்குத் திரும்பியவுடன் மனவேதனையோடு மாடியில் அவனுடைய அறையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு காபி கொண்டுவந்த அவனுடய அம்மா சண்முகவடிவு, "ஒருநாளும் பள்ளியிலிருந்து வந்தவுடன் இப்படிப் போர்த்துக்கொண்டு படுக்கமாட்டானே' என்று நினைத்து, அவனுக்கு என்னவோ ஏதோவென்று பதறிக்கொண்டு "காய்ச்சல் எதுவும் அடிக்கிறதா?'என்று போர்வையை விலக்கி அவனுடைய நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். காய்ச்சல் எதுவுமில்லை. ""தலைவலிக்கிறதா?'' என்று கேட்டுக்கொண்டே அவனுடைய முகத்தை அவள் பக்கமாகத் திருப்பினாள். சோர்ந்துபோன முகத்தில் கண்களிலிருந்து கன்னங்களில் கண்ணீர் வடிந்திருந்தது. பதறிப்போய் அவன் தலையைத் தாங்கித் தூக்கி அவனை உட்கார வைத்து, ""என்னடா, ஏன் அழுதிருக்கிறே?'' என்றாள்.

அவன் தலைகுனிந்து குலுங்கிக் குலுங்கி அழுதான்.

""சரி, அழாதே, முதலில் காபியைக் குடி. அப்புறம் பேசலாம்'' என்று சொல்லி அவளுடைய சேலைத்தலைப்பால் அவனுடைய முகத்தைத் துடைத்துவிட்டு, காபி டம்ளரை அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கி "மடக் மடக்'கென்று குடித்துவிட்டுத் டம்ளரைத் தரையில் வைத்தான்.

""சரி, இப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்லு''என்று கேட்டாள்.

பள்ளியில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

""சரி, போனது போகட்டும், இனிமேல் யார் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொண்டு கவலைப்படாதே. உன்னை ஒதுக்கிறவங்க, உன்னைக் கீழா நெனச்சுக் கேலி பேசுறவங்க கண்கள் முன்னாடி நீ உயர்ந்து காட்டணும். அதுக்குத் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு அதோட அவர்கள் கண்கள் முன்னாடி உயர்ந்துகாட்டுவேன் என்கிற வைராக்கியமும், வெறியும் உன் மனசில இருந்தாப் போதும். நீ நெனச்சதை நடத்திக்காட்டலாம், சாதிச்சுக்காட்டலாம். இது வாழ்க்கையில எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னேறுவதுக்குப் பயன்படும். பொதுத்தேர்வுக்கு இன்னும் மூனு மாதங்கள் இருக்கு . இந்த மூனுமாதங்களில், நீ அக்கறையோடும் , ஆர்வத்தோடும் படிச்சாலே போதும் . அதிக மதிப்பெண்கள் வாங்கித் தேர்வடையலாம். தோல்விகளைக் கண்டு ஒருபோதும் துவண்டு போகக் கூடாது. என்ன நான் சொன்னதைச் செய்வாயா?''என்றாள்.

""சரிம்மா, செய்கிறேன்''என்று அன்று நம்பிக்கையோடு தன்னுடைய புதியவாழ்க்கையைத் தொடங்கினான்.

காரில் பயணம் செய்துகொண்டிருந்த கலியபெருமாளுக்குக் காரின் உள்ளே நிரம்பி இருந்த குளுமையும் , அதோடு மிதந்துவந்த மென்மையான மஸ்க் வாசனையும் ஒரு புதிய உலகில் இருக்கிற பிரமையை ஏற்படுத்தியது. "கணக்கு மட்டுமின்றி, சயின்ஸ் படிச்சாலும் வாழ்க்கையில் உயரலாம்' என்பதை உணர்ந்தார். பி.இ.படிச்சிட்டு, ஊரில் உதவாக்கரையாய்த் திரியும் தன் மகன் உமாபதிக்கு, ஐயாரப்பனிடம் சொல்லி, ""எப்படியாவது ஒரு வேலை வாங்கி விடவேண்டும்'' என்று மனதில் எண்ணிக்கொண்டு பயணம் செய்துகொண்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com