ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உள்ளத்தைப் பண்படுத்த வேண்டும்!

சென்னையிலுள்ள என் சொந்த வீட்டிற்கு வர முடியாமல் என் உறவினர் வீட்டில் புதுச்சேரியில் தங்கி இருக்கிறேன்.  
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உள்ளத்தைப் பண்படுத்த வேண்டும்!

சென்னையிலுள்ள என் சொந்த வீட்டிற்கு வர முடியாமல் என் உறவினர் வீட்டில் புதுச்சேரியில் தங்கி இருக்கிறேன். இ-பாஸ் கிடைக்காமல் திண்டாடி வருகிறேன். எதற்கெடுத்தாலும் என் உறவினர்கள் என்னிடமுள்ள குற்றம் குறைகளையே இடித்துக் காண்பிக்கின்றனர். இதனால் என் மனம் வெதும்புகிறது. நான் ஒன்றும் அப்படி மோசமானவள் அல்ல. திருக்குறளிலுள்ள அறிவுரைகளை அடிக்கடி மேற்கோள் காட்டி "இதைச் செய், அதைச் செய்' என்று அவர்கள் கூறுவது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. என் மனம் அமைதியடைய என்ன செய்வது?

புஷ்பா, புதுவை.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் நல்லதொரு வாழ்க்கையை நடத்த வேண்டுமானால் எல்லா விஷயங்களிலும் விதிப்படி நடக்கத்தான் வேண்டியிருக்கிறது. இந்த விதிமுறைகளை அவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமும்தான். ஆனால் அவற்றை அவர்களாக ஏற்று, சுயேச்சையாகப் பின்பற்றுவதே அழகு. ஒருவரை நிர்பந்தப்படுத்தி விதிகளை அனுசரிக்கச் செய்வதில் பெருமை இல்லை. "சம்பிரதாயம்' என்பது தானாக வழிவழியாக வந்திருக்கிறது. மக்கள் அதைத் தாமாக ஏற்றுப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். சம்பிரதாயத்தில் வந்துள்ள அத்தனை விதிமுறைகளையும் சட்டம் போல் எழுதி வைக்கவில்லை. சட்டம் என்று எழுதிவிட்டால் அது நிர்பந்தமாகி விடுகிறது என்பதே காரணம்.

திருக்குறளிலுள்ள அறிவுரைகள் அனைத்தும் போற்றத்தக்கவை. ஆனால் அவற்றைக் கூறுபவர்களுக்குப் பூரண யோக்யதை இருக்க வேண்டும். தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக் கொண்டு மற்றவருக்கு அறிவுரை கூறினால் நாம் சொல்வதாலேயே அவர்கள் முன்பை விட வீம்பாகத் தங்கள் தவறை வெளிப்படச் செய்யவும் தொடங்கலாம். "நமக்கு யோக்கியதை இருக்கிறது, உரிமை இருக்கிறது, நம் வார்த்தை எடுபடும்' என்று நிச்சயமானால்தான் பிறருக்கு அறிவுரை கூறலாம்.

ஒருவரிடம் எத்தனை குறைகள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல், சிறிது நல்ல குணவிசேஷம் இருந்தாலும் அதையே கொண்டாட வேண்டும் என்பது பெரியோர் உபதேசம். குறைகளை இதமாக எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஓயாமல் குறைகளை இடித்துக் காண்பித்துக் கொண்டிருக்கக் கூடாது.

உங்களிடமுள்ள நல்ல குணங்களைப் பிறர் பாராட்டினால் மேலும் உற்சாகம் ஏற்படும். அந்த நல்ல குணங்களை மேலும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் ஏற்படும். ஆனாலும் ஒருவரைப் புகழ்வதிலும் நமக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரேயடியாகப் புகழ்ந்து ஒருவரை அகங்காரத்துக்கு ஆளாக்கிவிடக் கூடாது. புகழ்ச்சி ஒரு நுட்பமான விஷயம். இதனால் பெரியோர்கள், " ஈசுவரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம். உறவினர் மற்றும் நண்பர்களை நேரில் புகழாமல், மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும். வேலையை முடித்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம்; பிள்ளையை ஒருபோதும் புகழக் கூடாது' என்றார்கள்.

வாழ்க்கை என்பது "உள்ளிருந்து வெளியே போகும் ஒரு செயல்' என்கிறார்கள் அறிஞர்கள். நாம் அச் செயலைப் புரிந்து கொள்ள வேண்டும். விதை எப்படி தண்ணீர் பட்டவுடன் பூரித்து முளைவிடுகிறதோ, அதேபோல் எண்ணங்கள், மனத்திலே வளம் பெற்று வெடிக்க வேண்டும்; வெளிவர வேண்டும். அதற்கு உங்கள் உறவினர்கள் தம் உள்ளத்தைப் பண்படுத்த வேண்டும்.

மனம் வெதும்பியுள்ள தங்களுக்கு மன தைரியத்தையும், பிறரது கடும் சொற்களைத் தாங்குவதற்கான மனோபலத்தையும் தரக் கூடிய பிராம்ஹீகிருதம் எனும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தை, காலை, மாலை, வெறும் வயிற்றில் சுமார் பத்து மில்லி லிட்டர் சாப்பிட்டு, மேலே சிறிது பசும்பால் அருந்தவும். சிலருக்கு இதனால், மலம் இளகிப் போகலாம். சோலாப்பூரி சாப்பிட்டு மலமிளகினால் பயப்பட வேண்டும். ஆனால் இந்த மருந்தினால் மலமிளகினால் நல்லதே. அதிமதுர சூரணத்தை சுமார் மூன்று முதல் ஐந்து கிராம் வரை, இரவில் படுக்கும் முன் சிறிது பசும்பாலுடன் கலந்து சாப்பிடவும். புதுவையில் வல்லாரைக் கீரை கிடைக்கும். பச்சையாக எடுத்து, அரைத்துச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com