அந்திபூக்கள்

தாராபாய் முதியோர் இல்லத்திற்கு அந்த சிட்டியில் நல்ல பெயரும் புகழும் உள்ளது.  
அந்திபூக்கள்


தாராபாய் முதியோர் இல்லத்திற்கு அந்த சிட்டியில் நல்ல பெயரும் புகழும் உள்ளது. இரண்டு முறை தன் சமுதாயத் தொண்டுகளுக்காக தேசிய விருது பெற்ற நிறுவனமும் கூட. பெரிய மாளிகை நாலு பக்கமும் விசாலமாய் வளர்ந்த தென்னை, மா, வேப்ப மரங்கள். பக்கத்தில் தாமரைகளுடன் ஓர் அழகிய குளம்,அதை சுற்றி பூங்கா. அதில் நாற்காலிகள் , பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மரத்தோடு இணைந்த பூக்கொடிகள், அதில் அழகாய் சத்தம் செய்து கொண்டிருந்த வண்ண வண்ண பறவைகள்.

காலை பதினோரு மணிக்கு ஒரு வெள்ளை நிற வசதியான கடல் போன்ற சொகுசு கார் பார்கிங் ஏரியாவில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு தம்பதி, ஒரு எழுபதுக்கு மேற்பட்ட வயதுடைய ஒரு முதியவர் இறங்கி உள்ளே வந்தனர். அலுவலகத்தில் உள்ள மேனேஜர் ராமகிருஷ்ணா அவர்களை அன்போடு உள்ளே கூப்பிட்டு அமரச் செய்தார். அந்த பெரியவர் கண்களில் ஓர் இனம் புரியாத அச்சமும் வருத்தமும் காணப்பட்டது. எதையோ பறி கொடுத்தாற்போல் அவர் மெளனமாய் அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தார். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பென்ஸ் காரில் இருந்து, இறங்கி உள்ளே நுழைந்தாள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ரமா நடராஜன். வணக்கம் சொல்லிக் கொண்டே உள்ளே வந்து தன் குஷன் நாற்காலி மேலே மல்லிகை பூக்கள் ரோஜா மாலைகளுடன் ஜொலிக்கும் பெருமாளுக்கு கை கூப்பினாள். அடுத்தபடியாக அந்த படத்தின் கீழே மாலை சூடி உள்ள தன் தாய், தந்தையின் படத்திற்கும் கண்களை மூடி வணங்கி விட்டு அமர்ந்து கொண்டே, ""சொல்லுங்கள்'' என்றாள்.

முன்னே அமர்ந்தவர்களில் உள்ள ஓர் நடுவயதினர், ""என் பெயர் மாதவன். சயின்டிஸ்ட்டாக இருக்கேன். இவங்க என் மனைவி லதா. நாங்க பேமிலியோட வெளிநாடு போகப் போறோம். அதுனால அப்பாவை உங்களிடம் விட்டு செல்லலாம்னு...'' இழுத்தபடி சொன்னார். மேலும், ""ரெகுலராய் மாதா மாதம் பீஸ் கட்டிவிடுவேன். ஒரு அட்மிஷன் வேணும். நீங்க பெண்களைப் பெற்ற பெற்றோருக்குதான் முதலிடம் தருவீர்கள் என்று கேள்வி பட்டேன். ப்ளீஸ், எங்கப்பாவுக்கு ஒரு சீட் குடுங்கள்'' என்றார் பணிவுடன். அந்த பெரியவர் எங்கேயோ பார்த்து கொண்டிருந்தார்.

""உங்கள் குழந்தைகளோடு போறீங்களா?'' கேட்டாள் ரமா.

""ஆமாம் மேடம், என் குழந்தைகளோடு மொத்த பேமிலியும் போறோம்'' என்றான். ""அப்படீன்னா, உங்க அப்பா உங்க பேமிலி லிஸ்டில் இல்லை, அவ்வளவுதானே?'' என்று சற்று குத்தலாக ஆனால் சிரித்துக் கொண்டே கேட்டாள் ரமா, ஒரு விதமான கிண்டலுடன்.

மேலும், ""பரவாயில்லை , உங்களை விட அப்பாவை நாங்கள் அன்பாகப் பார்த்து கொள்வோம். ஆனால் இங்கு சில சட்ட விதிமுறைகள் உள்ளன. அதெல்லாம் எங்க மேனேஜர் அப்ளிகேஷன் தரும்போது சொல்வார். நாங்கள் பெண்ணைப் பெற்றோருக்கு முதலிடம் கொடுப்பதற்கு காரணங்கள் நம்ப பாரத சமுதாயத்தில் சட்டங்களில் அவர்களின் முதுமைக்குத் துணை இல்லை. பையன் இல்லாதவர்களின் மாப்பிள்ளைகள் அரக்கர்களாய் இருந்தால் அந்த முதுமையில் அவர்கள் படும் வேதனையைப் பார்க்க முடியாமல்தான் அவர்களுக்காகவே உருவானது''

இதைச் சொல்லும்போது அவள் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீரும் வெளி வந்தது. அதை தெரியாமல் துடைத்து ஒரு லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் கட்டி, அபிடவிட்டில் கை எழுத்து போட்டு, ""ஐ ஆம் சாரி, அவருடைய இறுதிச் சடங்குகளுக்கும் அனுமதி தரணும். ஏனென்றால் இன்றிலிருந்து, நான் அவர் மகள்'' என்றாள் சிரித்துக் கொண்டே.

""இது ஒரு பார்மாலிட்டி தான். அப்பா நூறு வயது வாழுவார், ஆண்டவனின் அருளில்'' என்றாள் ரமா.

""சரிங்க மேடம்'' என்று சொல்லி பத்து நிமிடங்களில் பெட்டி படுக்கை எல்லாம் அட்டெண்டருக்குக் கொடுத்து பணத்தைக் கட்டி எல்லா கையெழுத்துகளையும் போட்டு காரில் ஏறும் போது, ""அப்பா, கிளம்பறேன்'' என்று சொல்லி காரில் பறந்து விட்டனர்.

அந்த பெரியவர் கார் போன திசையை நோக்கி, செயலிழந்து மெளனமாக நின்று கொண்டு இருந்தார். அவர் கண்களில் கண்ணீரைப் பார்த்து மெளனமாய் வருத்தப்பட்ட ரமா, ""அப்பா, நான் உங்கள் மகள், இங்கு நிறைய மகள்கள், நண்பர்கள் உள்ளனர், வாருங்கள்'' என்று அன்போடு அவரைக் கை பிடித்து கூட்டிச் சென்று, ""நம்ப குடும்ப மக்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்... வாருங்கள்'' என்று லான் பக்கத்தில் உள்ள பூங்கவிற்குகூட்டி வந்தாள்.

அந்த இடத்தில் சுமார் முப்பது, நாற்பது ஆண், பெண் முதியவர்கள் காணப்பட்டனர். ரமா சத்தமாய், ""அம்மா, அப்பாக்கள் எல்லாம் இங்கு வாருங்கள் , இவர் நம்ப குடும்பத்திற்குக் கிடைத்த புது அப்பா, பெயர் ராமநாதன்'' என்று அறிமுகப்படுத்தினாள். சற்று முன் நடந்து நின்றாள் ரமா.

அங்கே வைத்யநாதன், தன் அருகில் உள்ள கிருஷ்ணகாந்துடன். ""உனக்கு தான் தெரியுமே, கிருஷ்ணா உயிரை விட்டு படிக்க வைத்தேன், பையன்தான் எல்லாம் என்று எல்லா சொத்தையும் எழுதி வைத்தேன். என் மனைவி போனவுடன் என்னை இங்கே வீசி எறிந்துவிட்டு போய் விட்டான். ஒரு போன் கூட செய்ய வில்லை. அவன் முதல் நாள் பள்ளிக்கு அழுது கொண்டு போகும்போது நானும் என மனைவியும் ஸ்கூல் வாசலில் காவலாளிகளாய் மூன்று மணி நேரம் வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தோம்'' என்று தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டு இருந்தார்.

ரமா அதைக் கேட்டு கொண்டே, ""உங்களை யாரால் தூக்கி எறிய முடியும்? முத்துகளை தூக்கி எறிந்தால் யாருக்கு நஷ்டம்? நீங்கள் வருத்தப்படாதீர்கள். மறந்து விடுங்கள். அவர்களை மன்னித்து விடுங்கள் அப்பா'' என்று சொல்லிக் கொண்டே ராமநாதனிடம், ""இவர் உங்களைப்போல் , பையனின் தந்தை, சிறப்பு அட்மிஷன்'' என்று அவரை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி, பின்பு அவர் அறைக்குக் கூட்டிச் சென்றாள்.

அவர் அறையை சுற்றும் முற்றும் பார்த்தார். அந்த அறை நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்டத்துடன் இருந்தது. ஏ.சி, ஒரு கலர் டி.வி , ஒரு மேசை , இரண்டு நாற்காலிகள் , மேசை மேல் பிளாஸ்க் , இரண்டு டம்ளர்கள் வைத்து காட்சி அளித்தது. பக்கத்தில் பெரிய டபுள் பெட், அதன் மேல் இரண்டு தலையணைகள் பூக்களின் டிசைனுடன் , சுத்தமாய் காட்சி அளித்தது. அறை பெரிதாகத்தான் உள்ளது. ஏழுமலையான் படமும் அதில் போட்ட சென்ட் நறுமணமும் இதயத்திற்கு நிம்மதியை அளித்தது. பக்கத்தில் ஓர் பெரிய பாத்ரூம். அதற்கு அடுத்தபடியாக ஓர் வெஸ்டர்ன் கழிவறை, உள் பக்கத்திலிருந்து ஓர் சிறிய பால்கனி அழகாகவே இருந்தது. தொலைபேசி. ஒரு பேஜர் தலை அணைக்கு பக்கத்தில் உள்ள மேஜையில் காட்சி அளித்தன.

ரமா அன்பாக, ""அப்பா ! இதுதான் உங்கள் அறை, நீங்கள் வேணும்னா வேறொருவருடன் இங்கு தங்கலாம்'' என்று சொல்லிக் கொண்டே டைனிங் ஹாலை, டி. வி. ஹாலை பஜனை ஹாலைக் காண்பித்தாள். பணிப்பெண் தேவியாள் ஓர் டம்ளர் பெருங்காயம், இஞ்சி, கொத்துமல்லி உப்பு கலந்தமோரைத் தந்து குடிக்கச் செய்தாள்.

ராமநாதனுக்கு அந்தச் சூழ்நிலை ஒரு வாரத்திலேயே பிடித்து விட்டது. எல்லோரிடமும் சகஜமாய்ப் பழகி விட்டார். பேச்சில் கிருஷ்ணகாந்த் அந்த சிட்டியில் உள்ள செல்வந்தர் என்றும் , மனைவி இறந்தபின் தானாக இங்கு வந்தார் என்றும் உள்ளூரில் உள்ள மகள்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை காண செல்வாரென தெரிந்து கொண்டார். ஓர் நாள் உள்ளூரில் இருந்து கொண்டு, ""ஏன் இங்கு வந்தாய் ?'' என கேட்டதற்கு அவர் சிரித்துக்கொண்டே , ""இத பார் , ராமநாதா , இது மாடர்ன் வெப் உலகம் , நம் எல்லாரும் அந்நியநாட்டுக்காரங்க. பசங்களுக்கு "டாம் அண்ட் ஜெர்ரி' வேண்டும். தாத்தா , பாட்டி வேண்டாம். இந்தக் காலத்து இளைஞர்கள் தமக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு மயக்கத்தில் இருப்பார்கள். ஆனால் ஒண்ணும் தெரியாது. பணம் , இளமை இருந்தால் மட்டும் போதாது. முதியவர்களை , பெரியவர்களை, படித்தவர்களை , பெண்களை எல்லாத்தையும் மீறி மனிதர்களை மதித்து புண்படாமல் அன்போடு பேசும் பண்பாடு தேவை. இதெல்லாம் இப்ப இல்லேவே இல்லை. அன்பில்லை , கொடை இல்லை , இரக்கம் இல்லை , நேரம் இல்லை. எல்லாம் ஓட்டம் தான். எல்லோரும் ஓட்டப் பந்தய வீரர்கள். என் பையனுக்கும், என் மருமகளுக்கும் என் மேல் அன்பில்லாதபோது நான் ஏன் அங்கு இருக்கணும் ? பெண்ணைப் படிக்க வைத்து அரசு அதிகாரியாய் ஆக்கினேன். அங்கே அவளையே சரியாக கவனிக்காத பணபேய்க்கு பிறந்த மருமகன். மனைவியுடன் சேர்ந்து இங்கே வந்து விட்டேன். பாதி சொத்து பிள்ளைகளுக்கு , மீதி பாதி எனக்கு. பிறகு இந்த ஆசிரமத்திற்கு என்று'' தன் கதையை சுருக்கமாக முடித்தார் கிருஷ்ண காந்த்.

தன் மனைவி ராஜம் அம்மாவையும் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், ""இந்த நிர்வாகி ரமா நம் எல்லோரின் புத்தியையும், திறமையையும் அழகாய் சமுதாயத்திற்கு தொண்டாய் அளிப்பாள்.படித்த மூத்தவர்களை விட்டு ஏழை பிள்ளைகளுக்கு கல்வி தரச் செய்வாள். கலை ஆர்வமுள்ளவர்களை இங்கு வரவைத்து நம் வைதேகி அம்மாவின் பாட்டுகளை உலகத்திற்கே எடுத்துக் காட்டினாள். யார் எதில் திறமை சாலியோ அதை உலக மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களால் புதிய சமுதாயத்தை ஏற்படுத்துகிறாள். யோகா , பஜனை எல்லாம் முறைப்படி இங்கு நடக்கும்'' என்றார். சாப்பாட்டிற்கு நேரமானதால் தேவி வந்து அனைவரையும் கூட்டிச் சென்றாள்.

அதே போல் மறுநாள் கணேசன் பேசுகையில், ராமநாதனுடன் வைத்யநாதனை அறிமுகம் செய்து தன்னைப் பற்றி கூறுகையில், ""எனக்குப் பையன்கள் கிடையாது. இரண்டு மகள்கள் தான். சென்னையில் ஒரு வீடு உள்ளது. அதை விற்று காசு தா என்று கழுகுகளைப் போல் மருமகன்கள் சுத்துறாங்க. பெண்கள் ரெண்டு பேரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாங்க. நல்லா படிக்க வைத்தேன். இத்தனை இருந்தும் பெற்றோரை கூட வைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறோமே என்று அழுவார்கள் என் ஆசை மகள்கள். அவளுக்காக ஓர் மாதம் தங்கினால் நாங்கள் ஏதோ விதியில்லாமல் வந்தோம் என்று நினைக்கும் அரக்க மருமகன்கள்... போதும் இங்க நான் என் மனைவியோட நிம்மதியாய் இருக்கேன். வாரம் ஒரு முறை பேரன்பேத்தியைக் கொஞ்சி விட்டு வருவோம்''என்றார் பெருமூச்சுடன்.

அங்கு பூ கட்டிக் கொண்டிருந்த மூதாட்டி சுசீலா அம்மா, ""நீங்களாவது பரவாயில்லே அண்ணே, என் கணவர் மறைந்தபின் பையனை நம்பி எல்லா சொத்தையும் எழுதி குடுத்து விட்டேன். ஒரு நாள் பாண்டிச்சேரி செல்லலாம் என கூட்டி போய் எங்கேயோ ஹை வே யில் விட்டு விட்டு போய் விட்டான் மகன். கடவுள் கிருபையால் ரமாவிற்குக் கிடைத்தேன்'' என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.

(அடுத்த இதழில்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com