தடுப்பு மருந்து கண்டுபிடிப்புப் போட்டி!
By - ந.ஜீவா | Published On : 19th July 2020 06:00 AM | Last Updated : 19th July 2020 06:00 AM | அ+அ அ- |

கரோனா தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு உலகில் உள்ள எல்லா நாடுகளும் முழுமூச்சோடு போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முறையில் பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. கண்டுபிடித்த மருந்தை மனிதர்களுக்குக் கொடுத்து சோதனை செய்வது அதில் ஒரு கட்டம்.
ரஷ்யா மனிதர்களுக்குச் சோதனை செய்து பார்க்கும் கட்டத்தைத் தொட்டுவிட்டதாகவும், உலகில் கரோனா தீ நுண்மி பாதிப்புக்கு தடுப்பு மருந்தை முதன்முதலில் கண்டுபிடித்ததாகவும் அறிவித்திருக்கிறது.
ரஷ்யாவின் முதல் மருத்துவப் பல்கலைக்கழகமான செச்சனோவ் பல்கலைக்கழகம் கரோனாவுக்கான தடுப்பு மருந்தை கடந்த மாதம் 38 தன்னார்வலர்களுக்குக் கொடுத்து சோதனை செய்து பார்த்திருக்கிறது. இதேபோன்று, கமலே நேஷனல் ரிசர்ச் சென்டர் ஃபார் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை ரஷ்ய ராணுவம் தனது படையினருக்குக் கொடுத்து சோதனை செய்து பார்த்திருக்கிறது.
இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் மாதம் 12 - 14 ஆம் தேதிகளில் பொதுமக்களுக்குக் கொடுத்து சோதனை செய்து பார்க்கப் போவதாக கமலே ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் ஜின்ட்ஸ்பர்க் அறிவித்து இருக்கிறார். அதன் பிறகு வரும் செப்டம்பர் மாதம் தனியார் நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தடுப்பு மருந்து உற்பத்தி நடைபெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சி முடிந்துவிட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும் செச்சனோவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எலீனா கூறியிருக்கிறார். கடந்த மாதம் சோதனை அடிப்படையில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தை 18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள தன்னார்வலர்களுக்குக் கொடுத்து 28 நாட்கள் அவர்களை தனிமையில் வைத்திருந்ததாகவும், இன்னும் ஆறு மாதங்கள் வரை அவர்களை கண்காணிப்பில் வைத்திருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊசியின் மூலம் தடுப்பு மருந்து அவர்களுக்குச் செலுத்தப்பட்டதும் அவர்களின் உடல் வெப்ப நிலை உயர்ந்திருக்கிறது. கடுமையான தலைவலி வந்திருக்கிறது. ஆனால் 24 மணி நேரங்களில் அவர்களின் உடல்நிலை இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்கிறார் எலீனா.
ரஷ்யாவில் இந்த இரண்டு ஆராய்ச்சிகள் மட்டுமே நடத்தப்படவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இந்த இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு முந்தியிருக்றது. ரஷ்யா மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கரோனா தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருக்கின்றன.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் நிறுவனம், புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கோவாக்ஸின் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
பிரிட்டனில் யுனிவர்சிடி ஆஃப் ஆக்ஸ்போர்ட் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் ஆகியவை தடுப்பு மருந்து ஆராய்ச்யில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம், நோவாவாக்ஸ் நிறுவனம் ஆகியவையும், சீனாவில் வூஹான் இன்ஸ்டிடியூட், சினோஃபார்ம் நிறுவனம், சினோவாக் நிறுவனம், பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ டெக்னாலஜி என பல நிறுவனங்கள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
ஜெர்மனியில் பயோஎன்டெக், ஃபைஸர், ஃபோசன் பார்மா ஆகிய நிறுவனங்களும் ஆஸ்திரேலியாவில் இரண்டு நிறுவனங்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் இறங்கி பல கட்ட ஆய்வுகளைச் செய்து வருகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு போட்டியில் யார் முந்துவார்கள்? வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்பது விரைவில் தெரியும்.