ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புகைபிடிப்பதும்... கரோனா ஆபத்தும்!

என் கணவர் அதிகம் புகை பிடிக்கிறார்.  அதிகம் சிகரெட், பீடி பிடிப்பவர்களுக்கு கரோனா தொற்று எளிதில் ஏற்பட்டுவிடும் என்பதை அறிந்தும் அவரால் சிறிதும் குறைக்க முடியவில்லை.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புகைபிடிப்பதும்... கரோனா ஆபத்தும்!


என் கணவர் அதிகம் புகை பிடிக்கிறார். அதிகம் சிகரெட், பீடி பிடிப்பவர்களுக்கு கரோனா தொற்று எளிதில் ஏற்பட்டுவிடும் என்பதை அறிந்தும் அவரால் சிறிதும் குறைக்க முடியவில்லை. அவருடைய இந்த கெட்ட பழக்கத்தை எப்படிக் குறைப்பது? அவருக்கு வயது 36.

பிரவீணா, சென்னை-40.

நுரையீரல் புற்றுநோய், விஷ வாயுவான கார்பன் மோனாக்சைடு  ரத்தத்துடன் கலத்தல், உறுப்புகளில் காட்மியம்  தங்குதல், வைரஸ் தொற்று எளிதில் ஏற்படுதல் , பெரிய தமனிகளின் (ARTERIES) சுவர் தடித்து ரத்தக் குழாயின் உட்பகுதி குறுகி ரத்த ஓட்டம் தடைபட்டு இருதய நோய் ஏற்படுதல் போன்ற ஆபத்துகளை புகைபிடிப்பவர்கள் அதிகம் சந்திக்கும்  வாய்ப்புகள் உள்ளன. அவர்களுடைய ரத்தத்திலும் உறுப்புகளிலும் வழக்கமாக இருக்க வேண்டிய அளவை விட, வைட்டமின் "சி' சத்து குறைவாக இருக்க வாய்புள்ளதால், ரத்தத்தில் கொலஸ்டிராலும், வேறு சில கொழுப்புப் பொருள்களும் (LIPIDS) அதிகரித்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவை அதிகரித்தால் சில பெரிய ரத்த நாளங்களின் சுவர்கள் தடித்து குழாய்களின் விட்டம் குறையும் ATHEROSCLEROSIS  என்ற உபாதைக்கு  வித்திடுகின்றது. நாற்பது வயதிற்கும் குறைவாக  உள்ள சில  புகைபிடிப்பவர்கள் ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிக அளவில் இருப்பதால், வைட்டமின் "சி' மாத்திரைகளை ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரை தினமும் எடுத்துக் கொள்வதால், கொலஸ்டிரால் அளவைக் குறைத்துவிட முடியும் என்று ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. 

வைட்டமின்  "சி' யை  ஒருவர் தகுந்த அளவு உட்கொண்டால், ரத்தக்குழாய் குறுகி இருதயத்திற்கு ரத்தம் குறைவாகச் செல்லும்  ISCHAEMIC HEART DISEASE, ரத்தம் கட்டி ஏற்படும்  DEEP VEIN THROMBOSIS, ஜலதோஷம், புற்றுநோய், சர்க்கரை வியாதி, சில ரத்த சோகைகள், தோல் வியாதிகள் போன்றவற்றைத் தடுக்க முடியும்.  காய்ச்சல், மன அழுத்தம் போன்ற நிலைகளில் உடலிலிருந்து அதிக அளவு வைட்டமின் "சி' யை இழக்க நேர்வதால், அவற்றைக் குணப்படுத்துவதற்கான மாத்திரைகளை தற்சமயம் கரோனா வைரஸ் தாக்குதல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. 

அதனால் புகைபிடிப்பவர்களும், புகைபிடிக்கும் பழக்கமில்லாதவர்களும் அதிகப்படி வைட்டமின் "சி' உள்ள காய்கறி, பழங்களை  நாள்தோறும் சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பாக  புகைபிடிப்பவர்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். புகை பிடிக்காமலே இருப்பது மிக நல்லது. மனதைக் கட்டுப்படுத்த முடியாத தங்கள் கணவர், அதிக அளவு ûட்டமின் "சி'  சாப்பிட வேண்டும்.  நாள்தோறும் 2, 3 (500 மி.கிராம்) வைட்டமின் "சி' மாத்திரைகளை விழுங்குவது ஒன்றும் கஷ்டமான செயலல்ல அல்லது அதிகமாக பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும். 

அதற்கு காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் இவற்றைத்தாம்  வாங்க வேண்டும் என்பதில்லை. இவற்றை விட முருங்கை இலையில் அதிக அளவு வைட்டமின் "சி' இருக்கிறது.  ஆரஞ்சுப் பழங்களை விட  நம்ம ஊர் கொய்யாப் பழங்களில் இந்த வைட்டமின் சத்து நிறைய உள்ளது.  தவிர நெல்லிக்கனிகளிலும் மிக அதிக அளவில் இந்த வைட்டமின் இருக்கிறது. நெல்லிக்கனி நிறைந்த" சியவனப்ராசம்' எனும் ஆயுர்வேத லேகிய மருந்தை உங்கள் கணவர் காலை, மாலை சுமார் பத்துகிராம் வெறும் வயிற்றில் சாப்பிட மிகவும் நல்லது. 

உங்களுடைய கணவரால் புகைபிடிக்கும் வழக்கத்தை நிச்சயமாக நிறுத்த முடியவில்லை என்றால்- 

சிகரெட் அல்லது பீடியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாகக் குறைக்கலாம்.

புகையை உள்ளே நுரையீரல் வரை செல்லும்படி  இழுப்பதன் அளவைக் குறைக்கலாம்.

ஒவ்வொரு சிகரெட் அல்லது பீடியின் அளவில் சிறிதளவே உபயோகிக்கலாம்.

கடைசி வரை பயன்படுத்துவதால் வர வர புகையில் அதிகமாகும் தார்நிகோடின் நஞ்சு  உடலில் ஏறாமலிருக்க சிகரெட்டை முழுவதும் பயன்படுத்தாமல் எறிந்துவிடலாம்.

புகையை  சிறிதளவே உட்கொள்ளலாம்.

தார் நிகோடின் குறைந்த அளவே சேர்க்கப்பட்டுள்ள  சிகரெட்டையே உபயோகிக்கலாம்.

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com