பேல்பூரி

""படிக்கிற காலத்திலே நல்லா படிக்காமப் போனது நல்லதாப் போச்சு''""ஏன்டா அப்பிடிச் சொல்றே?''
பேல்பூரி


கண்டது

(மதுரையில் ஆட்டோ ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

எல்லாத் துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று, காலம்.
இன்னொன்று மெளனம்.

எஸ்.எம்.சுல்தான், மதுரை-7.

(திண்டுக்கல்லில் உள்ள ஒரு முடிதிருத்தும்கடையின் பெயர்)

சுட்டி சலூன்

கே.எம்.நஜ்முத்தீன், காயல்பட்டினம்.

(திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஓடும் ஆற்றின் பெயர்)

மொட்டை ஆறு

சு.மோகித், தஞ்சாவூர்.

கேட்டது


(ஈரோடு சொக்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தாத்தாவும் மூன்றரை வயதுப் பேத்தியும்)

தாத்தா: உலர வைத்த கீரையில் தண்ணீர் ஊற்றாதே. கீரை கெட்டுடும்.
பேத்தி: தண்ணீர் குடி, நல்லதுங்கிறீங்க...
கீரை மட்டும் எப்படி தாத்தா கெட்டுப் போகும்?
தாத்தா: ??????

மங்கையர்க்கரசி, ஈரோடு.

(செங்கல்பட்டு அளகேச நகரில் ஒரு மருந்துக்கடையின் முன்இருவர்)

""படிக்கிற காலத்திலே நல்லா படிக்காமப் போனது நல்லதாப் போச்சு''
""ஏன்டா அப்பிடிச் சொல்றே?''
""நல்லா படிச்சிருந்தா அமெரிக்காவுக்கோ, இத்தாலிக்கோ வேலைக்குப் போயிருப்போம். கரோனா வந்ததாலே அங்கேயில்ல மாட்டியிருப்போம்''

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!

எல்லாம் தெரியும் என்று
குழப்பத்தோடு இருக்காதே...
எதுவும் தெரியாது என்று
தெளிவோடு இரு.

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.

மைக்ரோ கதை


மரத்தின் அடியில் அமர்ந்திருந்த துறவியிடம் ஒரு யோகி வந்தார்.

""என்னால் வானில் பறக்க முடியும். நீருக்குள் வாழ முடியும். மண்ணுக்குள் நீண்ட நாள்கள் இருக்க முடியும்'' என்று பெருமையாகச் சொன்னார்.

அவரைப் பார்த்து புன்னகை செய்த துறவி, ""என்னோடு வாருங்கள்'' என்று அவரை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த வயலுக்குச் சென்றார். மண்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியே வந்தன. அதை யோகியிடம் காட்டினார். வயல் அருகில் இருந்த கிணற்றில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அதையும் யோகியிடம் காட்டினார். அப்போது வானத்தில் தலைக்கும் மேலே காகம் பறந்து சென்றது. காகத்தை யோகியிடம் காட்டினார்.

""மண்புழு மண்ணுக்குள் இருப்பதைப் போலவும், மீன் நீருக்குள் வாழ்வதைப் போலவும், காகம் வானில் பறப்பதைப் போலவும் உங்களால் செய்ய முடியும். அப்படித்தானே?''

துறவியின் கேள்வியால் அதிர்ந்த யோகியிடம் துறவி மேலும் சொன்னார்:
""மனிதனாக வாழ்வதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்''

ம.செ.மயில், திருநெல்வேலி.


எஸ்.எம்.எஸ்.

ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்;
ஒவ்வோர் இழப்பும் ஒரு லாபம்;
ஒவ்வோர் ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை;
ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்.

எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி-1


அப்படீங்களா!


நியூசிலாந்தில் உள்ள மண்டா 5 என்ற நிறுவனம் தண்ணீரில் செல்லும் சைக்கிளைத் தயாரித்துள்ளது. சாலையில் பெடலை மிதித்துச் செல்வதைப் போலவே இந்தச் சைக்கிளின் பெடலை மிதித்தால் தண்ணீரில் மிதந்து செல்லும். பெடலை மிதிக்கச் சிரமமாக இருக்கிறது என்பவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த சைக்கிளில் லித்தியம் பேட்டரியினால் இயங்கும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 21 கி.மீ. வேகத்தில் தண்ணீரில் செல்லலாம்.

இந்த பேட்டரியை முழுமையாக ரீ சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 1 மணி நேரம் தொடர்ந்து இந்த தண்ணீரில் செல்லும் சைக்கிளில் பயணம் செய்யலாம். இதன் விலை 7490 அமெரிக்க டாலராகும்.

என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com