Enable Javscript for better performance
எளியோரைத் தாழ்த்தி...- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  எளியோரைத் தாழ்த்தி...

  By DIN  |   Published On : 01st March 2020 11:41 AM  |   Last Updated : 01st March 2020 11:41 AM  |  அ+அ அ-  |  

  USHADEEPAN

  என்னங்க... எடத்த மாத்திட்டீங்க... தேடு... தேடுன்னு தேடிட்டேங்க... இன்னைக்கு'' - என்றவாறே போய் நின்றேன் நான். மனம் சலித்துப் போன நிலையில் அவனைக் கண்டுவிட்டதில் ஒரு மகிழ்ச்சி. மெல்லிய குளிர் காற்று வீசிக் கொண்டிருப்பது எங்கோ மழை பெய்கிறது என்று உணர வைத்தது.
   ஒரு மெல்லிய புன்னகையோடு வரவேற்றான் அவன். கவனம் முழுவதும் வறுத்து கொண்டிருக்கும் கடலையின் மீதிருந்தது. வேப்பெண்ணெய் மணம் அந்தப் பகுதி முழுவதும். மழைக் குளிர்ச்சிக்கு சூடாய் கடலை சாப்பிட்டால்... அடடா என்ன சுகம்? மணத்தை மோப்பம் பிடித்துத்தான் நானே அவனைக் கண்டுபிடித்தேன். தெரு மாற்றி நின்றிருந்தான் அன்று.
   கொஞ்சம் காது கொடுத்துத் தொடர்ந்து என்னோடு பேசிவிட்டால் வறுத்த கடலையைப் பதமாய் எடுத்துப் பாத்திரத்தில் சேர்க்க முடியாது. நிமிஷத்தில் கருகி விடும். அந்தக் கணத்தில் கடலை வறுபடும்
   மணம் எனக்கு அதை உணர்த்தியது. இது அவனுக்கும் தெரியாமலா போகும்? அதிலும் ஒன்றிரண்டு கருகி விடுகிறதே!
   "அது தவிர்க்க முடியாது சார்... எப்டியும் சிலது வந்திரும்... நம்ம உறவுகள்ல சிலபேர் இப்டி நெருடுறதில்லையா? அதப்போலதான்'' என்றானே பார்க்கலாம்- எனக்கானால் ஆச்சரியம். எத்தனை பொருத்தமான உவமை? ரசனையான ஆள் போல் தெரிகிறது.
   பத்து ரூபாய்க்குக் கடலை மடிச்சிக் கொடுக்கிறோம்னா... அதுல ஒண்ணாவது கருகினது இருந்தாத்தான் அந்தப் பொட்டலத்துக்குப் பெருமை. வேணும்னேவா செய்றேன்... அது தானா வந்திடுது... எப்டி ஒழக்குல பூரும்னு எனக்கே தெரியாது... ரசிச்சு அதை மொதக் கடலையா எடுத்து சாப்பிடுறவங்க இருக்காங்க... "இதென்னங்க இப்டி' ன்னு கைல எடுத்துக் காட்டி என் மூஞ்சிக்கு முன்னாடியே கீழ வீசுனவங்களப் பார்த்திருக்கேன். பாருங்க எப்டியிருக்குன்னு சொல்லி வேறே பொட்டலம் கேட்குற ஆளுகளும் இருக்குதான். அத்தனையும் சூத்தைன்னு திட்டி காசை வாங்கிட்டுப் போனவங்களும் உண்டு. இவ்வளவு ஏன்? "அஞ்சு ரூபாதான ஒரு பொட்டலம்... அதென்ன இப்போ பத்துங்கிறீங்க' ன்னு சடைக்கிற, சண்டைக்கு வர்ற ஆசாமிகளும்தான் வராங்க. உலகம் பலவிதம் சார்... இந்தக் காலத்துல இப்டிக் கடலை வண்டியத் தள்ளிட்டிருக்கீங்களே...இது ஒரு பொழப்பான்னுட்டான் சார் ஒராளு... நொந்து போனேன். திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, பிச்சை எடுக்கக் கூடாது... வேறே எந்தத்தொழில் செய்தா என்ன சார்? இப்டி இழிவாப் பேசினா? இதப் பேசுவமா, வேணாமான்னு எவனும் யோசிக்கிறதில்ல சார்... வீட்டுக்குச் சாமாஞ்செட்டு வாங்கைல இஷ்டத்துக்கு விலை ஏறிக் கெடக்கேன்னு யாராச்சும் கேள்வி கேட்குறாங்களா? நீட்டுற பில்லுக்கு கார்டு தேய்க்கன்னு ஸ்டைலா எடுத்து நீட்டுறாங்க. அதே ஆளுங்க எங்கிட்ட வர்றைல, என்னங்க... இதுக்கு பத்து ரூபாயா?ன்னு வாயைப் பிளக்குறாங்க... இன்னும் ரெண்டு கடலை போடுங்கன்னு ஓசி கேட்குறாங்க... மனுஷங்களே பலதரப்பட்டவங்கதான்... நம்ப நடிகர்திலகம் இருக்காருங்கல்ல சார்... அவரு கடலை சாப்பிடைல கடைசியா ஒரு ஊத்தக்கடலை வரும்...அப்பத்தான்யா டேஸ்டுன்னுட்டு அப்டியும் ஒருத்தன் இருக்கத்தான்யா செய்வான்ம்பாரு... ஒரு படத்துல...கேள்விப்பட்டிருக்கீங்களா? என்ன படம்னு ஞாபகமில்ல.....''
   அவ்வளவு சங்கடத்திலும் அவனது விஷய தானம் என்னை ரசிக்க வைத்தது.
   பெயரைச் சொல்லாமல் நடிகர்திலகம் என்று அவன் குறிப்பிட்டது அவரது ரசிகன் என்பதை எனக்கு உணர்த்தியது. அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். விற்கும் கடலைப் பருப்பைப் போலவே அந்தப் பேச்சும் படு ருசி... சுவாரஸ்யம். சொல்லப் போனால் கடலை சாப்பிடலாம் என்கிற ஆர்வத்தைவிட அவன் பேச்சைக் கேட்கலாம் என்கிற உந்துதலில்தான் நானே தினமும் அவனை நாடிப் போய்க் கொண்டிருக்கிறேன். மாலை நேர நடைப் பயிற்சியில் கடைசியாய்க் கடலை தின்னும் பழக்கம் என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்தது. அது அவனைக் கண்ட பிறகுதான்.
   மெயின் ரோட்டுக்கு அடுத்த உள் ரோடுலதான வழக்கமா நிப்பீங்க... அங்கதான உங்களுக்கு ஆட்புழக்கம் அதிகம். ஏன் இடத்த மாத்திட்டீங்க? சேல்ஸ் பாதிக்குமே?''
   "கடலை வறுக்கிறேன்ல சார்...சட்டுவத்தால இரும்புச் சட்டியத் தட்டிட்டே இருப்பேன். கடல வண்டின்னு அப்பத்தான தெரியும்... அது தொந்தரவா இருக்காம்... தள்ளிப்போன்னுட்டாரு பக்கத்து அபார்ட்மென்ட்காரரு... நான் வீதில உருட்டைல தட்டிட்டேதான் வருவேன்... அப்பக் கூட யாரும் எதுவும் சொன்னதில்ல... இது மெயின் ரோடு... அந்த எடம் சித்த ஓரமா இருக்குதேன்னு நிக்க ஆரம்பிச்சேன்... வார போற ஆளுகளும் போக்குவரத்துக்குன்னு ஒதுங்காம வசதியா ஓரமா நின்னு வேடிக்கை பார்த்திட்டே கடலையை மெல்லுவாங்க... அது பொறுக்கல அந்த சாருக்கு... வெரட்டிப்புட்டாரு... ரோட்டுலதான சார் நிக்குறேன்னு சொல்லிப் பார்த்தேன்... காட்டுக் கத்து கத்துறாரு... போலீஸ்ல சொல்வேங்கிறாரு... சித்த நேரம் நின்னுட்டுப் போகப் போறான்ங்கிற இரக்கமில்ல பாருங்க... குப்பை விழுகுதாம்... அம்புட்டுப் பேரா வந்து அடையுறாங்க ? மனசில்ல சார்....
   இங்க நின்னு சளசளன்னு பேசிக்கிட்டு, கெக்க பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு. என்னய்யா இது கூத்து?போங்கய்யா அந்தப் பக்கம்னு எல்லாரையும் சேர்த்து சகட்டுமேனிக்கு சத்தம் போடுறாரு... எப்டியெல்லாம் ஆளுக இருக்குது பாருங்க?
   அவன் சங்கடம் அவனுக்கு. குறிப்பிட்ட இடத்தில் நின்றால் வழக்கமாய் வருபவர்கள் வரலாம். ஆள் புழக்கம் உள்ள இடம் போவோர் வருவோரை கடலை வாங்கத் தூண்டலாம். வறுத்த, எண்ணெய் மணக்கும் கடலை வாடைக்கு யாருக்குத்தான் ஆசை வராது? அவன் இடம் வியாபாரத்தை மனதில் வைத்துதானே இயங்கும்?
   "ரோட்டுல போனா பிரச்னைன்னு இப்டி ஒதுங்கி வந்தேன்... இங்கயும் விரட்டினா?'' அவன் குரலில் துக்கம் அதிகம் தென்பட்டது. அலையாய் அலைந்து இந்தக் கடலையை விற்று என்ன பெரிய லாபம் பார்த்து விடப் போகிறான்? இது அவன் குடும்பச் சாப்பாட்டுக்குப் போதுமானதாய் இருக்குமா?
   "டிராஃபிக் அதிகமா இருக்குதே... அதச் சொல்றீங்களா?'' என்றேன்.
   என் கை அவனிடம் வாங்கிய கடலையை ஒன்வொன்றாய் வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தது.
   "அது பரவால்ல சார்... அதோட அதாத்தான் நம்ம சோலியப் பார்த்தாகணும்... ஒதுங்கிப் போக முடியுமா? ஆனா ஒதுங்க வச்சிருவாங்க போல்ருக்கு... இப்டி ஆளாளுக்கு என்னமாச்சும் சொன்னா அப்புறம் எங்கள மாதிரி அன்றாடங்காய்ச்சிங்க எங்கதான் சார் போறது ? முந்தா நா ரோட்டுல ஒருத்தர் அப்டித்தான் சார் பேசிப்புட்டாரு... அதிர்ச்சியாப் போச்சு சார்... அதத்தான் சொல்ல வந்தேன்''
   என்னா சொன்னாரு?'' - சங்கடத்தோடு கேட்டேன்.
   நா வழக்கமா வண்டியக் கொண்டு கோயில் வாசல்ல நிப்பாட்டி சாமி கும்பிட்டிட்டுத்தான் வியாபாரத்த துவக்குவேன்... எத்தனையோ வருசமா இப்டித்தான் செய்திட்டிருக்கேன். பழைய வண்டிதான். டயர் கூட மாத்த முடில என்னால... ஆளுங்க வராதப்ப நடிகர்திலகம் பாட்டுக் கேட்க இந்த டிரான்சிஸ்டரை வச்சிருக்கேன். வியாபாரம் பண்ண வந்தியா? பாட்டுக் கேட்க வந்தியா? கடலை வித்துப் பொழைக்குறவனுக்கு என்னய்யா ஜாலி வேண்டிக் கிடக்குன்னு அந்தாளு சொல்றாரு.. ..என்னெல்லாம் ஆயிப்போச்சு பாருங்க நம்மூர்ல....? எச்சவன், எளைச்சவன்னா என்னமும் பேசலாமா? போற வழிக்குக் கடல வாங்குற அவுரு... என்னை எப்டி மிரட்டுறாரு பாருங்க சார்...''
   " அப்டியா...எந்த ஏரியா ஆளு?''
   "அதெல்லாம் தெரியாது சார்... நமக்கெதுக்கு அது?''
   "அதுக்கில்லே...இது புதுசால்ல இருக்கு? அப்புறம் என்ன பண்ணினீங்க?'' - பதற்றத்தோடு கேட்டேன்.
   "ஒண்ணும் பண்ணல சார்... நாம்பாட்டுக்கு வண்டிய ஓட்டிட்டு வந்திட்டேன். எதுக்கு சார் தகராறு? வர வரத் தேவையில்லாம பயமாயிருக்கு சார்... என்னமாவது ஆயிப்போச்சின்னா என்ன பண்றதுன்னு தோணுது... எல்லா விஷயத்துலயும் ஆளுக அங்கங்க ரொம்ப மாறிப் போயிட்டாங்க சார்... முன்னமாதிரியெல்லாம் இல்ல இப்ப''-அவன் குரலில் துக்கம் அதிகமாயிருந்தது. உண்மையான, மெய்மையான வருத்தம் அது.
   "உண்மைதான் நீங்க சொல்றது... எதுத்த வீடு... பக்கத்து வீடுன்னு தாயா புள்ளையாத்தான் பழகியிருக்கோம்... வளர்ந்திருக்கோம்... வாழ்ந்திட்டிருக்கோம்... இப்ப எப்டி மனசுல வெறுப்பு வந்திச்சின்னுதான் புரியல... சகஜமாப் பேசிட்டிருந்தவங்க... பழகிட்டிருந்தவங்க... ஒதுங்குறாங்க... ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தயோட நிறுத்திக்கிறாங்க... கண்டும் காணாம விலகிப் போறாங்க... முகம் கொடுத்துப் பேச மாட்டேங்கிறாங்க... இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது?'' - நானும் என் பங்குக்கு மனசில் அழுத்திக் கொண்டிருந்த ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
   பள்ளியில் படிக்கையில், "இதுவரைக்கும் நம்ப வகுப்புல ரயிலில் போகாதவங்க யார்...யாரு?'' என்று கேட்டு கொடைக்கானல் ரோடு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மதுரை வரை தன் சொந்தச் செலவில் மாணவர்களை கூட்டிக் கொண்டு போய்த் திரும்பக் கூட்டி வந்து விட்ட சூசை வாத்தியாரை நினைத்துக் கொள்கிறேன்.
   "ரஹீம் பாய்... எங்கிட்ட இவ்வளவுதான் பைசா இருக்கு... இத வச்சிக்கிங்க... பசங்க மூணு பேருக்கும் துணிமணி எடுத்து ட்ரவுசர் சட்டை தச்சுக் கொடுத்திடுங்க தீபாவளிக்கு... உங்க தையக்கூலி என்ன உண்டோ அதை அப்புறம் தர்றேன்...சரியா?''
   "அதுக்கென்ன... அது அப்புறம் வாங்கிட்டாப் போச்சு... குழந்தைங்களா... வாங்க என்னோட...'' என்று எங்களை அழைத்துப் போய் அப்பா கொடுத்த பணத்திற்குள் அடங்குவது போல் எங்களுக்குப் பிடித்த துணிகளை எடுத்துத் தைத்து, அந்த தீபாவளியைக் குதூகலமாக்கிய பஜார் தெரு முட்டுச் சந்து தையற்காரரை இன்றும் நான் மறக்கவில்லைதான். தூக்கித் தூக்கி என்னமாய்க் கொஞ்சுவார்? தலைக்குப்பின் தோளில் இருத்திக் கொண்டு சுற்றிச் சுற்றி ஆட்டம் போடுவாரே? மறக்க முடியுமா?
   "உங்கப்பாவோட உழைப்புக்காகத்தான் உனக்கு ஃப்ரீ ட்யூஷன்... கஷ்டப் படுற குடும்பம்... நன்னாப் படிக்க வேண்டாமா? பெரியவனாகி வேலைக்கிப் போயி உங்கப்பாம்மாவ உட்கார வச்சு சாப்பாடு போட்டுக் காப்பாத்த வேண்டாமா? இப்டியா கணக்குல மக்கா இருக்கிறது? கஷ்டப்பட்டுப் படிக்கணும்... இல்லன்னா எஸ்.எஸ்.எல்.சி.ல மார்க் குறைஞ்சு போயிடும்... உன்னால காலேஜெல்லாம் போக முடியாது... அப்டியே டைப்ரைட்டிங் படிச்சு, ஷார்ட்ஹாண்ட் படிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி வேலையைக் கைப்பத்தியாகணும்... புரிஞ்சிதா? வயசு போயிடுத்துன்னா அப்புறம் ஒண்ணும் செய்ய முடியாதாக்கும். நாளைலேர்ந்து டியூஷனுக்கு வந்திடு''- மேத்ஸ் டீச்சர் கிருஷ்ணசாமியை மறக்க முடியுமா? மறந்தால் நான் மனிதனா? அந்தக் கடவுளுக்குத்தான் அடுக்குமா? எல்லாம் முடித்து வேலை வாங்கி, பின்னர் கரெஸ்பான்டென்ஸ் கோர்சில் பி.காம் முடித்து... அடேயப்பா... நானும் கொஞ்சம் சாதித்திருக்கிறேன்தான்.
   எப்படியிருந்தது ஊரும் உலகமும்? கையெடுத்துக் கும்பிட வேண்டியவர்கள் கணக்கிலடங்காதவர்களாய் இருந்தார்களே? மனசு எந்த வித்தியாசத்தை உணர்ந்தது? ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வில்லாமல் ஜாதி பேதமில்லாமல் சமமாய்ப் பழகினார்களே? பொறுப்பான குடும்பஸ்தன் என்கிற ஒரே புள்ளியில் ஒருவனை மதித்துப் போற்றினார்களே? நாணயஸ்தன் என்கிற நம்பிக்கையில் என்னைக்கானாலும் காசுக்கு மோசமில்லை என்று விடாமல் கடன் கொடுத்து உதவி கைதூக்கி விட்டார்களே... ஊரெல்லாம் கடன் இருந்தும்... அவர் பிள்ளைகளா நீங்க? என்று மதித்தார்களே...- இந்த எல்லா அறநெறிகளும் எங்கே போயிற்று? எப்படி அழிந்துபட்டது? நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முகத்தில் கவலை ரேகைகள் கனமாய்ப் படிந்திருப்பதை உணர முடிந்தது.
   "சீசனுக்கு சீசன்தான் சார் இதச் செய்ய முடியும்... கடல என்னா வெல விக்குதீங்கிறீங்க? கிலோ அறுபது ரூபா வித்திட்டிருந்தது இப்போ ஏறிப் போயிடுச்சி சார்... வரத்து குறைஞ்சு போச்சி... வாங்கிக் கட்டுபடியாகல சார்... இதவிட்டன்னா காய்கறி விக்கப் போயிருவேன் சார்... எம்பொண்டாட்டி எனக்கு ரொம்ப உதவி சார்... அப்டித்தான் சார் எம்பொழப்பு ஓடிட்டிருக்கு...'' சொல்லியவாறே சரக்...சரக்..சரக்...என்று மணலில் வறுபடும் கடலையைக் கிண்டினான். பெரிய சல்லடைக் கரண்டியை எடுத்து அள்ளிச் சலித்து வறுந்த கடலையைப் பிரித்தான்.
   வண்டி நான்கு டயர்களும் அமுங்கிப் போய் தரையோடு தரையாக இருந்தன. பாரம் தாங்காமல் உருட்டும் வழியில் ஏதேனும் ஒரு பக்கம் சடக்கென்று அமுங்கினாலும் போச்சு. எவனாவது கோபத்தில் ஓங்கி ஒரு எத்து விட்டால் கூட அம்புட்டுதான்... அவ்வளவு எதுக்கு... பலமாய்த் தள்ளிவிட்டால்... அப்படி இப்படி வளைந்து நெளிந்து மடங்கி நசுங்கி அடங்கி விடும். அந்த வண்டியே அவன் நிலைக்கு சாட்சி.
   "ராத்திரி எங்க நிப்பாட்டுறீங்க?''
   "எங்க சார் இடம் இருக்கு? தெருவுல எங்கயாச்சும் ஒரு மூலைல தள்ளிட்டுப் போறதுதான்''
   "சரி... ஒண்ணு செய்யுங்க... எங்க வீடு தெரியும்ல?''
   " தெரியும் சார்... வாசுகி தெரு நுழைஞ்சவுடனே வலது பக்கம் நாலாவது வீடு... பச்சைக் கலர் பெயின்ட் அடிச்சிருப்பீங்க...அதானே... அந்தத் தெருவழியா எத்தனையோ வாட்டி வந்திருக்கனே சார்... ஒரு அயர்ன்காரர் கூட உங்க வீட்டு வேப்பமரத்தடில வச்சு துணி தேய்ச்சிக்கிட்டு இருப்பாரே சார்...''
   "அதான்...அதே வீடுதான்... அங்க கொண்டு வந்து ஓரமா நிறுத்திக்குங்க... சரியா? கேட்டைப் பூட்டுறதுக்குள்ள வாங்க... சீக்கிரத்துல ஒரு புது வண்டி வாங்கிருவோம்... நான் ஏற்பாடு பண்றேன்... ஓ.கே.யா...? வர்றேன்'' சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
   அவனுக்கு காய்கறிக் கடை வைக்க நான் வேலை பார்க்கும் வங்கியில் கூட ஒரு லோனுக்கு ஆவன செய்வோமா என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது எனக்கு. எத்தனையோ வாராக் கடன்கள் கிடப்பில் கிடக்கையில் உத்தரவாதத்தோடு நாமே ஜாமீன் போட்டு அவன் பிழைப்புக்கான ஒரு நிரந்தர ஏற்பாட்டைச் செய்து கொடுத்தால் என்ன? என் மனம் அப்பொழுதே தீர்மானித்துக் கொண்டது. யோசனையில் மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்.
   தெருத் திரும்பும் இடத்தின் டூ வீலர் ஒர்க் ஷாப்பிலிருந்து ஒரு பழைய அர்த்தமுள்ள பாடல் காற்றில் மிதந்து வந்து... மனதை இதமாக்கியது... எளியோரைத் தாழ்த்தி / வலியோரை வாழ்த்தும் / உலகே உன் செயல்தான் மாறாதா? வீட்டுக்குள் காலடி வைத்ததும் சொன்னேன்.
   "முதல்ல அயர்ன்காரர் வந்தார்... இப்போ கடலை வண்டிக்காரனா? எதிர்த்த வீட்டுக்காரர் இந்தக் கார் ஷெட்டுக்கு ஆயிரம் ரூபா மாத வாடகை தர்றேன்... காரை நிறுத்திக்கிறேன்னார்... மாட்டேன்னுட்டீங்க... அவர் வேண்டாம்... இவாள்லாம் வேணுமா? உங்க இஷ்டம்... என்னவோ பண்ணுங்க... உங்களை யார் என்ன கேட்க முடியும்?'' என் பத்தினி திருமதி லீலா கிருஷ்ணனின் புலம்பல் என்னை ஆக்ரோஷமாய் எதிர்கொண்டது.
   இவர்களின் இயற்பெயர்
   கவிஞர் வாலி - டி.எஸ். ரங்கராஜன்
   நடிகர் நெப்போலியன் - குமரேசன் துரைசாமி
   நடிகர் ராஜ்கிரண் - காதர்
   நடிகர் ஜெய்சங்கர் - சுப்ரமணியம் சங்கர்.
   நடிகை ரேவதி - ஆஷா கேளுண்ணி குட்டி
   நடிகர் தனுஷ் - வெங்கடேஷ் பிரபு
   நடிகை மனோரமா - கோபி சாந்தா
   நடிகர் சந்திரபாபு - ஜோசப் பிச்சை
   நடிகை குஷ்பு - நக்கர்த் கான்
   பின்னணி பாடகர் மனோ - நாகூர் பாபு
   நடிகை ஸ்ரீதேவி - ஸ்ரீ அம்மா யாங்கர்
   "திரைப்படத் தகவல்களில்
   விநாடி - வினா விடை' என்னும்
   நூலிலிருந்து
   - முக்கிமலை நஞ்சன்
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp