திரைக் கதிர்

தமிழில் கடைசியாக கடந்த வருடம் "கேம் ஓவர்' படத்தில் டாப்ஸி நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்புக்கு விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன.
திரைக் கதிர்

* தமிழில் கடைசியாக கடந்த வருடம் "கேம் ஓவர்' படத்தில் டாப்ஸி நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்புக்கு விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து தமிழில் இவருக்கான மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. இப்போது ஜெயம் ரவி ஜோடியாக "ஜனகனமண' படத்தில் நடிக்கிறார். அஹமத் எழுதி இயக்குகிறார்.
இந்தநிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் படத்தில் அவர் நடிக்கிறார். இது "ரன் லோலா ரன்' ஆங்கில படத்தின் ரீமேக்.
தொடர்ந்து ஹிந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் கேட்பதாக கூறப்படுகிறது.இது பற்றி டாப்ஸி பேசும் போது... "ஹீரோவை போலவே ஹீரோயின்களையும் நடத்த வேண்டும் என நான் கேட்கிறேன். அதாவது, எதற்காகவும் மரியாதையை நான் விட்டுத் தர முடியாது. இப்படி சொல்லும்போது, நான் ஹீரோவுக்கு இணையான சம்பளம் கேட்பதாக புரளி கிளப்புகிறார்கள். எனக்கான மார்க்கெட்டுக்கு ஏற்பதான் சம்பளம் கேட்கிறேன். அதே சமயம், படத்தில் நடிக்க எனக்கு இந்தச் சலுகைகள் வேண்டும் என எப்போதும் கேட்டதில்லை. என்னைப் பற்றி தவறாக தகவல் பரப்புவோர் பற்றி எனக்குக் கவலைஇல்லை.
அதைப் பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை'' என்றார்.

* தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்கள் கோவா கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. சுதந்திரமாக படமாக்குதல், அதற்கான அனுமதி, நட்சத்திரங்களின் தங்குமிடங்கள் என சகல வசதிகளும் இருப்பதால் தென்னிந்திய சினிமா இயக்குநர்கள் அந்த இடத்தைத் தேர்வு செய்கின்றனர். அழகிய தேசம் என்று திரையுலகினரால் கோவா வர்ணிக்கப்பட்டாலும் திரைப்படங்களில் காட்டும்போது அங்குதான் போதை மருந்து விற்பனை, விபசாரம் போன்ற சட்டவிரோதச் செயல்கள் நடப்பதுபோல் சித்திரிக்கப்படுகிறது.இது கோவா அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து கோவாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இனி கோவாவில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் அரசு அமைத்துள்ள குழுவில் படத்தின் திரைக்கதையைக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும் என அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கோவாவில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதுபோல் காட்டினால் அதற்கு அனுமதி தரப்படாது என கூறப்படுகிறது.

* ரஜினி நடித்த "பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது "மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். மாளவிகாவுக்கு காட்டுப் பகுதிகளில் விலங்குகளின் வாழ்வியல் குறித்த புகைப்படங்கள் எடுப்பது பிடித்தமான விஷயம். சில தினங்களுக்கு முன் அவர் ஆப்ரிக்கா காட்டுப்பகுதிக்குச் சென்று பிரத்யேகமான புகைப்படங்கள் எடுத்துவிட்டு காரில் திரும்பினார். அப்போது மாலையில் சூரியன் அஸ்தமனமாகும் காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியவர் அந்த அனுபவம் குறித்து பகிர்ந்தார்."நீண்ட தூரத்திலிருந்து பயணித்து வரும் சூரிய கதிர்கள் என்னை மஞ்சள் நிற ஒளிவெள்ளத்தில் நிரப்பின. நான் என் கண்களை மூடிக் கொண்டேன். எனது இமைகள் மீது சூரியகதிர்களின் வெப்பத்தை உணர்ந்தேன்.அது இதமாக இருந்தது' என குறிப்பிட்டிருந்தார். பின்னர் சேலைகள் உடுத்தி போட்டோ ஷூட் நடத்தினார். பார்வை ஊடுருவிச் செல்லும் கண்ணாடி இழைபோன்ற சேலை அணிந்து விதவிதமான போஸ்களில் எடுக்கப்பட்ட அந்த படங்கள் இப்போது இணையத்தில் வலம் வருகின்றன.

* கே.பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த படம் "நெற்றிக்கண்'. ரஜினி, லட்சுமி, சரிதா, மேகனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
விசு கதை எழுதியிருந்தார். கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. தனுஷ் நடிப்பில் "நெற்றிக்கண்' படம் ரீமேக் ஆகவிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து எழுத்தாளர் விசு, "படத்திற்கு கதை எழுதியது நான். என் அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என்பதை தனுஷுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பேசியிருந்தார்.
கவிதாலயா நிறுவனம் சார்பில் விசுவின் கேள்விக்கு பதில் அளித்துள்ள புஷ்பா கந்தசாமி, "நெற்றிக்கண் ரீமேக் உரிமை கேட்டு யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை; நாங்கள் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை என விசு கூறுவது அடிப்படை ஆதாரமற்றது அவ்வாறு ரீமேக் உரிமை விற்கப்படுமானால் சம்பந்தப்பட்டவர்களின் உரிமையை மனதில் கொண்டே செயல்படுவோம்'' என குறிப்பிட்டிருக்கிறார். கதாசிரியர், தயாரிப்பாளர்கள் மோதிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தை ரீமேக் செய்ய விருப்பதாக கூறப்படும் நடிகர் தனுஷ் எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.

* ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு படங்களை இயக்கி முடித்துள்ளார் ஆர். கண்ணன்.
சந்தானம் நடிக்கும் "பிஸ்கோத்' படத்தை இயக்கி முடித்துள்ள ஆர்.கண்ணன், அடுத்து "பூமராங்' படத்துக்கு பிறகு அதர்வா நடிக்கும் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படத்துக்கு "தள்ளிப் போகாதே' என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான "நின்னுகோரி' என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை இது. பி.எச்டி பட்டதாரியாக அதர்வா, பரத நாட்டியக் கலைஞராக அனுபமா நடித்துள்ளனர். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். விரைவில் இரு படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கண்ணன் தெரிவித்தார்.
- ஜி.அசோக்










 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com