கனவுகள்... கற்பனைகள்... நிஜங்கள்

"வாரேன் டியர்'' என்று கணவன் காரை ஸ்டார்ட் பண்ணி வாசலை விட்டுக் கிளம்பிப் போய்விட்டான். கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருக்கும் நான், இன்று
 கனவுகள்... கற்பனைகள்... நிஜங்கள்

"வாரேன் டியர்'' என்று கணவன் காரை ஸ்டார்ட் பண்ணி வாசலை விட்டுக் கிளம்பிப் போய்விட்டான். கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருக்கும் நான், இன்று ஏனோ கதவோரம் நின்று கொண்டே இருந்தேன். தெருவோ வெறிச்சோடி போய் இருந்தது. தனிமையை விரும்பும் கணவர் கோபியின் விருப்பப்படி, சென்னை மகாபலிபுரம் கிழக்குக் கடற்கரை சாலை உட்புறத்தில் தனி வீடு வாடகைக்கு எடுத்து குடி வந்துவிட்டோம். காதலிக்கும் போதே நம் திருமணத்திற்குப் பின்பு, நான் வேலையை விட்டுவிடுவேன் என்று கோபியிடம் பேசி வைத்திருந்தேன். மூன்று வருடக் காதல். என் வயது முப்பதைக் கடந்த பின்பே என்னுடைய காதல் பற்றி வீட்டில் சொல்ல விரும்பினேன்.
 கோபி, பல தடவை என்னிடம் கேட்டும் நான் என் காதலை வீட்டில் சொல்ல மறுத்து விட்டேன். என்னுடைய பெற்றோரும் மகள் விரும்பும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டார்கள். ஒரு நாள் கோபியிடம் நம் காதலைப்பற்றி வீட்டில் சொல்ல நேரம் வந்துவிட்டது எனக் கூறினேன். இப்போது எப்படி சரி சொல்கிறாள் என்று கோபி யோசிக்கவே, "இந்த எட்டு வருட சம்பளத்தில் பத்து லட்சம் அப்பா, அம்மா பெயரில் டெபாசிட் செய்து விட்டேன். திருச்சி அருகே உள்ள எனது சொந்த ஊரான லால்குடியில் எட்டு வீட்டு காம்பவுண்ட் வீடு ஒன்று பதிந்து கொடுத்துவிட்டேன். பெத்த கடன் தீர்த்து விட்டேன்'' என்றார்.
 அதற்குப் பின்தான் பிரச்னை. வெவ்வேறு மதம், வெவ்வேறு சாதி. நான் ஏதோ சுதந்திரமாக சம்பாதிக்கிறோமே, வீட்டில் என் இஷ்டப்படிதானே நடக்கும் என மெத்தனமாக இருந்துவிட்டேன். அவர்கள் வீட்டிலும் பெரிய போராட்டம்தான், எப்படியோ இருவீட்டிலும் பேசி, இரண்டு வீட்டாரும், இந்த பக்கமும், அந்த பக்கமுமாக சுமார் பதினைந்து பேர் மட்டுமே கலந்து கொண்டு அவர்கள் வழக்கப்படி என் வீட்டாரின் வேண்டா வெறுப்புடன் தாலியைக் கட்டிக்கொண்டதும், எங்கள் வழக்கப்படி மோதிரம் மாற்றிக் கொண்டதும், ஒரு பழைய நினைவு.
 கதவோரம் இன்னும் கொஞ்ச நேரம் நின்று கொள்ளலாம் என்று எந்தவித நினைவுகளும் அற்று தெருவை வேடிக்கைப் பார்த்தவாறிருந்தேன். எல்லாருடைய வீட்டிலும் நாய் மட்டும் தான் மிச்சம். சுத்தமாகவே அந்த ஏரியாவே சலனமற்று இருந்தது. திருமணம் ஆகி இந்த ஆறு மாதத்தில் என்னிடம் ஒரு மாற்றம். இது ஏமாற்றமா! அல்லது இதுதான் நிஜமா?. கற்பனை வேறு, நிஜம் வேறு. எதன்படி வாழ்வது என்றே எனக்குப் புரியவில்லை.
 எவ்வளவு பிஸியாக இருந்து, வேலைக்குச் சென்று, பல லட்சம் வரை சேமித்தது, ஒரு மிஷின் வாழ்க்கை தான். அன்று வெறுத்தது. ஆனால் இன்று நினைத்தால் சுகமாகத்தான் தெரிகிறது. வேலையை விட்டிருக்கக் கூடாதோ! சே....வேண்டாம்..இன்னும் எத்தனை நாள் அப்படி ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வது? கணவன் சம்பாதிக்கணும், மனைவி குடும்ப நிர்வாகம். இது தான் சமஉரிமை என சிறுவயது முதல் என் மனதில் பதிந்துவிட்டது. காதல் திருமணம் எங்களுடையது. திருமண வீடு என்றால் எவ்வளவு சந்தோஷம். ஆடல், பாடல், பட்டுப்புடவை சரசரக்க எத்தனை பெண்கள், எல்லோரையும் "வாங்க, வாங்க' என்று கை கூப்பி வரவேற்பதும், யாராவது தூரத்து உறவினர்கள் நம்மைப் பார்த்து விட்டால் "நம்ம ஜெனியா நீ! எப்படி வளர்ந்துட்ட, சின்ன வயதில் பார்த்தது' என்றவுடன் பூரிப்பு அடைவது, "சாப்பிட வாங்க' என்று சாப்பிடாதவர்களையும், ஏன் சாப்பிட்டவர்களையும் அழைப்பது, "இப்பதான் சாப்பிட்டேன்மா' என்று சொல்வதும், சிரித்துக்கொண்டே மற்றவர்களையும் அழைப்பது. இப்படிதான் பார்த்துப் பேரானந்தப் பட்டிருக்கிறேன்.
 எனது கல்யாணம் ... எல்லாரும் உர்ரென்று, இந்த பக்கமும், அந்த பக்கமும் பிரிந்து நின்று, அவர்கள் வழக்கப்படி முருகன் கோயிலில் தாலி கட்டிக் கொண்டும், அடுத்து சர்ச்சில் எங்கள் வழக்கப்படி மோதிரம் மாற்றிக் கொண்டதும், ஏதோ சூப்பர் மார்க்கெட்டில் பொருள்களை ஸ்கேன் பண்ணி பில் போடுவது போல் அமைந்துவிட்டது எனது திருமணவிழா.
 மூன்று வருட காதல் வாழ்க்கை மறக்க முடியாதது. இருவரும் வெவ்வேறு கம்பெனியில் தான் வேலை பார்த்தோம். முதல் சந்திப்பிலேயே ஒரு புன்னகை, ஓரிரு நாளில் பேசிக் கொண்டோம். செல்போன் தொடர்பு எங்களை மிகவும் நெருங்க வைத்துவிட்டது. தினமும் அம்மா, அப்பாவிடம் போனில் பேசுவதைத் தவிர மீதி நேரங்களில் கோபியிடம்தான் பேசியிருக்கிறேன். தோழிகள் நான்கு பேர் ரூம் எடுத்து தங்கியிருந்தோம். ஆறு மாதத்திற்கு ஒருவர் திருமணமாகி போய்விடுவர். அவர்களின் திருமணத்திற்குச் சென்று அலப்பறை பண்ணிட்டுதான் வருவோம். பின்னர் எங்களுடன் புதிதாக ஒருத்தி வந்து சேருவாள். எத்தனை நட்புகள்... எத்தனை சந்தோஷங்கள்... புதுப்புது அனுபவங்கள்... நான்கு பேர் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்துகொண்டு போனில் பேசிக்கொண்டிருப்போம். அது யாருடன் என்று அவரவர்களுக்கு மட்டுமே தெரியும். யாரும் யார் விஷயத்திலும் தலையிட மாட்டோம். பின்பு அரட்டைதான், கூத்துதான்.
 திருமணமான முதல் நாளில் இருந்தே என்னுள் ஒரு மாற்றம் உணர்கிறேன். கோபி என்னவோ என்னைத் திருமணம் செய்ததை ஓர் ஒலிம்பிக் சாதனையாகவே வெற்றிக்களிப்புடன் காட்சியளிக்கிறான். எனக்கும் ஓர் இறுமாப்பு, பெற்ற கடனைத் தீர்த்து விட்டேன்னு, அவர்களுக்காக இனி வருந்த வேண்டியதில்லைன்னு ஒரு சுதந்திர மனப்பான்மை. தனிமை... இந்த வீட்டில் பன்னிரண்டு மணி நேரம். வெறுமை... பொழுதுபோக்கு என்று எனக்கு எதுவுமே இருந்ததே இல்லை. சீரியலுக்கு விரோதி. கிரிக்கெட் பிடிக்காது. சினிமா வேஸ்ட் என்ற நினைப்புடன், வசதியாக சோபாவில் படுத்துக் கொள்வதே எனது ஒரு நாள் பொழுது. எங்கள் காலத்தில்தான் செல்போனைத் தவிர புத்தகம், கதை, நாவல், பேப்பர் படிப்பது, இலக்கியச் சிந்தனை என்பதெல்லாம் லட்சத்தில் ஒருவரென்றாகிவிட்டதே!
 ஆடம்பரமான வீடு, நான் நினைவுடன் தான் இருக்கிறேன் என்பதற்கு சாட்சியாக எங்கோ கேட்கும் முகம் காட்டாத அந்த குயில் சத்தம், நாய்கள் குரைக்கும் சத்தம், கூலி வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் பலத்த குரலில் பேசிக்கொண்டே செல்வதுதான். பூஜை அறையைத் தவிர, வீட்டில் அனைத்து இடங்களுக்கும் செருப்பு காலுடன்... நினைக்கவே வேடிக்கையாக இருக்கிறது. தாத்தா, அப்பா நான் செருப்பை முற்றத்தில் விடாமல் கதவு வரை வந்து விட்டாலே திட்டித் தீர்ப்பார்கள். இப்பொழுது எல்லாமே மாறிவிட்டது. வீட்டிற்கு நான் ஒரே குழந்தை. ரொம்ப செல்லம். அப்பா எலக்ட்ரிசியன். வயதான காலத்தில் அவர்கள்கள் கஷ்டப்படக்கூடாது என்று எனது திருமணத்தை தள்ளிப் போட்டு பணம் சேர்த்தேன். பெரிய ஆச்சரியம் கோபி எனக்காக ஒத்துழைத்தது. கோபி ரொம்ப ஸாப்ட். அதிர்ந்து பேச மாட்டான்.
 நாங்கள் அவரவர் சொந்த ஊருக்குப் போன நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சந்தித்துக் கொள்வோம். காலையில் "குட் மார்னிங்' மெசேஜிலிருந்து இரவு குட் நைட் போடுவதிலிருந்து எதுவும் தவறாது. ஒவ்வொரு நாட்களும் பல போட்டோக்கள் பரிமாறிக் கொள்வோம். எனது ஹாஸ்டல் பீஸ் தவிர எனது அனைத்துச் செலவுகளையும் அவனே பார்த்துக் கொண்டான். தினமும் மாலையில் சந்தித்துக் கொள்வோம். தினமும் விதவிதமான ஹோட்டல், உடம்புக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள் என வாட்ஸ் அப்பில் நாங்களே ஷேர் பண்ணிக் கொள்ளும் உணவு வகைகள் அனைத்தையும் தின்று தீர்ப்போம். அவனே விரும்பி எனக்கு மாதம் இரண்டு உடைகள், அதற்கேற்ற பேன்சி ரகங்கள், கலர்கலரான காலணிகள் என வாங்கிக் கொடுத்து விடுவான். நான் வேண்டாம், இதெல்லாம் எதுக்கு கோபி என்றால் தான் வருத்தப்படுவான். பல சமயம் நான் ஊருக்குச் செல்ல அவனே டிக்கெட் போட்டுக் கொடுத்து விடுவான். அவனது சொந்த ஊர் தாத்தைங்கையார் பேட்டை, சேலம் போய் மாறுவான். மிகவும் ஆச்சாரமான குடும்பம் என்பான். ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தெரியாது
 இன்று வெறுமை... தூரத்தில் இருந்து பார்க்கும் நிலாவும், சலிக்காத கடல் அலையும் இல்லை இந்த திருமண வாழ்க்கை. எங்களுக்குள் ஒரு சுமுகம் இல்லையோ என்று நினைப்பேன். ஆனால் நிஜத்தை உணர்ந்து சமாதானம் பண்ணிக் கொள்வேன். நிஜம் இதுதான்... என்னால் புரிந்து கொள்ள முடிகிறது... அன்று தூரத்தில் இருந்தோம். தினமும் மெசேஜ், செல்பி, நேரில் சந்திக்கும் போதெல்லாம் ஒரு சிணுங்கல், ஒரு சீண்டல். எப்பவும் வானத்தில் பறப்பது போன்ற உணர்வு. கார்ப்பரேட் கம்பெனியில் வேலை எனக்கு. கோபி தினமும் என்னை விதவிதமாகப் பார்க்க விரும்புவான். அவன் டேஸ்டுக்கு உடைகள் வாங்கிக் கொடுத்து என்னை ரசித்துப் பார்ப்பான். இப்பொழுது எல்லாமே அருகில் தான். எதுவும் தொலைவில் இல்லை. தன் கற்பனையில் இரவில் நான் எப்படி இருப்பேன் என்று கற்பனை, பண்ணி பண்ணி வாழ்ந்து வந்த கோபிக்கு இன்று எல்லாமே அவனுக்கு உரிமையாகி விட்டது. அவனுக்கும் அலுத்து விட்டதா! இல்லை...இல்லை... அவன் அவனே தான். என்னிடம் உள்ள ஈர்ப்பு அவனுக்கும் குறையவே இல்லை. அவனை விட நான் சுமார்ட்னெஸ் கம்மிதான்.
 ஏன்? நான் தப்பு தப்பாக கற்பனை பண்ணுகிறேன். ஏன் என்னையே வருத்திக் கொள்கிறேன். கடிகாரம் தான் என் ஒரே கூர் பார்வை. அமைதியான நேரத்தில் அந்த "டிக்... டிக்' ஓசை சிலநேரம் நடுக்கத்தை உண்டாக்கும். பொழுது போகவில்லை என்று தோழிகளுக்கு போன் பண்ணினால் அவர்கள் போன் பிஸியாக இருக்கும், அல்லது பிஸி என்று தவிர்த்து விடுவார்கள். அவர்களுடன் வாழ்ந்த அந்த டோன்ட் கேர் வாழ்க்கை, எதுவும் நிரந்தரம் இல்லை. இந்த ஆறு மாத வாழ்க்கையே அலுத்து விட்டதே! இன்னும் எழுபது வயது வரை எப்படி கடத்த முடியும்?
 காதலிப்பதற்கு முன்பு தினமும் இரண்டு வேளை, காதலிக்கத் தொடங்கிய பிறகு, படிப்படியாக வீட்டிற்கு போன் பேசுவது குறைந்து விட்டது. இப்பொழுதோ அம்மா, அப்பா போனில் பேசுவதே இல்லை. அப்படியே பேசினாலும் தங்கள் உடல் உபாதைகளை பேசிவிட்டு வைத்து விடுவார்கள். கடவுளே... அந்த பள்ளிக்கூட நாட்களில் அம்மா அப்பா மடியில் படுத்துறங்கிய வாழ்க்கை, புதுப்புது தோழிகளுடன் வாழ்ந்த அந்த வருத்தமில்லா கல்லூரி வாழ்க்கை, வேலை தேடிய அந்த பரபரப்பு வாழ்க்கை, அவ்வளவு ஏன்! நான் காதல் வசப்பட்ட நாட்களுக்கு முன்பு இருந்த அந்த பட்டாம்பூச்சி வாழ்க்கை எனக்கு திரும்ப கிடைக்குமா?
 கோபி மேல் எந்த தப்பும் இல்லையே, நான் ஏன் என்னையே வருத்திக்கொள்கிறேன். அந்த மூன்று ஆண்டு கால காதல் வாழ்க்கையை என் திருமண வாழ்க்கையுடன் ஒப்பிடுவது தவறா? தவறே என்று படுகிறது. என்னுடன் வேலை பார்த்த மகாலிங்கம் எங்கள் திருமண த்திற்குப் பிறகு "ஹாய்' என்ற மெசேஜும், ஒரு நாள் "ஹலோ' என்றும், பின்பு "ஹவ் ஆர் யூ', சில நாட்கள் கழித்து "ஹவ் ஈஸ் யுவர் மேரேஜ் லைப்' என்று தொடராக அனுப்ப, நான் எந்தப் பதிலும் அனுப்பவில்லை. பின்பு எந்த மெசேஜும் வருவது இல்லை. ஆனால் கோபிக்கு அப்படி இல்லை, காலையில் எழுந்து, இரவு வீட்டுக்கு வந்த பின்பும் மெசேஜ் வந்து கொண்டே இருக்கும். சில நேரம் ஆபீஸ் போன், அல்லது நட்பு வட்டார போன், அது ஆணா, பெண்ணா என்று யோசிக்கத் தோணும், அதை ஏன் கேட்கணும்ன்னு விட்டு விடுவேன்.
 கோபி வீட்டுக்கு வந்த உடன் அவனுக்குப் பிடித்த அனைத்தையும் ரெடி பண்ணிக் கொடுத்திடுவேன். உடையைக் கூட மாற்றாமலே என் அருகில் அமர்ந்துகொண்டு அதே கொஞ்சலுடன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே என் அருகில் அமர்ந்துகொண்டு ஆசையுடன் பேசுவான் . தொட்டுக் கொண்டும், சீண்டிக்கொண்டும் மிகவும் சந்தோஷமாக இருப்போம். ஒரு மணி நேரம் கழித்து டிவி போடுவான். எதையும் உருப்படியாக பார்க்க மாட்டான். பிறகு ஆப் பண்ணி விடுவான்.
 "ஓ...இன்று கிரிக்கெட் இருக்குல' என மறுபடியும் டிவியை போடுவான். ஐயோ! மணி எட்டாகிவிட்டதே என்று அவன் அம்மாவிற்கு போன் பண்ணுவான். டிவி அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.
 அம்மாவிடம் இன்று என்னென்ன சமையல் என்று பட்டியல் இடுவான். அவன் அம்மாவிடம் இருந்து வரும் முதல் கேள்வியே நான் காலையில் எத்தனை மணிக்கு எழுந்தேன் என்ற கேள்வியாகத்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியும். அவன் சமாளிப்பது எனக்குப் புரியும். திருநீறு இட்டுக் கொள்கிறாயா! இன்று பிரதோஷம், அசைவம் சாப்பிட்டுவிடாதே என்று சொல்வதும், வெள்ளிக்கிழமையன்று ஏதேனும் கோயிலுக்குப் போக மறந்து விடாதே என்ற அட்வைஸ் தான். ஆனால் நாங்கள் காதலிக்கும் போது, இது எதுவும் அவன் செய்ததை நான் பார்த்தது கிடையாது. நான் சமாதானம் செய்து கொள்வேன். அவர்கள் பயம் அவர்களுக்கு நியாயம்தான் என்று மனதுக்குள் சிலுவை போட்டுக் கொள்வேன்.
 ஒருநாள் கூட கோபியின் அப்பா, அம்மா என்னிடம் போனில் பேசியது இல்லை. என் அம்மாவும் கோபியிடம் பேசியது இல்லை. என்ன ஓர் இடைவெளி. பெற்றோர்களால் ஏற்பாடு செய்த திருமணமும் இப்படித்தான் இருக்குமா! இல்லை சொந்த பந்தங்கள் கூடிக் குலாவும் இல்லறமாக இருக்குமா! வேண்டாம்... இப்படியே இருக்கட்டும்... இதுவும் நல்லதுதான். ஒருத்தொருக்கொருத்தர் கோள் மூட்டி பிரச்னை உண்டாக்காமல் இருப்பார்களே! என்னிடம் அவர்கள் ஏன் பேசக்கூடாது? பேசினால் என்னைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இருக்குமே! என் அம்மா, அப்பாவும் ஒரு நாள் கூட கோபியிடம் பேசியதில்லை.
 ஒரு நாள் அம்மாவிடம் தைரியமாகக் கேட்டேன், "ஒரு நாளாவது கோபி எப்படி இருக்கிறான், உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கக் தோணலையா?''ன்னு, அப்பா போனை வாங்கிக் கொண்டு, ""நீங்கள் தான் மூன்று வருடம் காதலித்து இருந்திருக்கிறிர்களே! நன்றாகப் புரிந்து கொண்டுதானே திருமண முடிவு எடுத்து இருப்பீர்கள். உனக்கு முப்பது வயது. வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும்னு ஒரு கற்பனை, ஒரு உத்தி வகுத்து இருப்பீர்களே, நாங்கள் என்ன புதுசா அட்வைஸ் பண்ண வேண்டியிருக்கு'' என பேசி வைத்து விட்டார்.
 ஏன்? அப்பா இப்படி பேசுகிறார். உங்களுக்குத்தான் பத்து லட்சம் பணம், எட்டு வீட்டு காம்பவுண்ட் வீடு, உங்கள் கனவிலும் காணக் கிடைக்காத வாழ்வு வந்துவிட்டது, இனிமேல் மகள் மேல் என்ன கவலை? யென தனியாக அழுது கொண்டேன். காதல் என்பது சேர்க்கவும் பிரிக்கவும் தெரிந்த ஒரு வார்த்தை போல! மறந்துவிடவில்லை அப்பா... நீங்கள் கரண்டில் கை வைக்கப் போறேன் என்று பயமுறுத்தி வயரில் கைவைத்து வேடிக்கை காட்டுவதும், நான் பயந்து அலறுவதும், "ஐயோ அவளை ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்?' என்று அம்மா, அப்பாவை திட்டுவதும், என்ன ஒரு வாழ்க்கை!, அழுதுகொண்டிருக்கும் என்னை, சைக்கிளில் வைத்துக்கொண்டு நான் சமாதானம் ஆகும் வரை அந்த சுடு வெயிலில் சுற்றி வந்தது மறந்து விட்டதாப்பா? இந்த ஜெனியை! உங்கள் மகளை! தன் செல்ல மகள் தங்கள் பேச்சைக் கேட்காமல், ஜாதி விட்டு, மதம் விட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு அநியாயமாகப்பட்டாலும் எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்ன்னு உங்களுக்கு தெரியலையாப்பா? ஏன் இவ்வளவு கோபம்?
 என்றும் வெறுமை... ஒரு நாள் தோழிகள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்தோம். யாருமே திருமணமாகாத இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்கள். வீட்டை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்கள். கோபி மேல் எனக்குப் பயம். நல்லவேளை அவன் கோபப்படவில்லை, அவர்களுக்கு வேண்டிய பணிவிடை செய்து கொடுத்தான். எத்தனை மகிழ்ச்சி. நானும் உங்கள் வயதில் இப்படித்தான் இருந்தேன் என்று அவர்களிடம் சொல்லத் துடித்தேன். திருமண பந்தம் தடுத்து விட்டது. அனைவரும் சென்று விட்டார்கள். மீண்டும் கோபியும் நானும் தனிமையில் இருப்பதாகப்பட்டது. இருவரும் வீட்டைச் சுத்தப்படுத்தி கிடைத்த இடத்தில் படுத்து அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டோம்.
 காலை அதே தனிமை... வெறுமை... வேண்டாம்! அப்பா, அம்மா இல்லாத இந்த திருமண பந்தம் வேஸ்ட். உற்றார் இல்லை, உறவினர் இல்லை. இருவருடைய பெற்றோர்களும் பேசிக்கொள்வதே இல்லை. என் வழிபாட்டில் கூட விரைவில் ஆதிக்கம் செலுத்தத் தொடக்கி விடுவார்கள். வேலையில் இருக்கும் பொழுதும், காதலிக்கும் போதும் எத்தனை விதவிதமான உடைகள், இன்றோ இரவில் ஒரு நைட்டி, காலையில் ஒரு நைட்டி. வெளியே செல்லும் போது ஒரு பிடித்தமான உடை, காரில் செல்லும் பொழுது கோபிக்கு ஏகப்பட்ட போன் கால்கள். காரை ஓரம்கட்டி கம்பெனியுடன் பேசிக்கொண்டே இருப்பதும். நான் காரில் அமர்ந்துகொண்டு சென்னையின் நளினத்தை பார்த்து அலுத்துவிட்டது. இதெல்லாம் காதலிக்கும் போது கோபி ஏன் பிசியாக இருந்ததாக காட்டியதே இல்லை. ஒரு நாள் இதை விட்டு ஓடிப்போய் வயதான அம்மாவிடம் திரும்பப் போய்விட வேண்டும். கண்டிப்பாக சேர்க்க மாட்டார்கள். நல்ல காதலன்... நல்ல கணவன்... கோபிதான் சந்தேகமே இல்லை. ஆனாலும் வாழப் பிடிக்கவில்லை. அவன் மிகவும் நல்லவன். அவனுக்கு நான் வேஸ்ட். இருவரும் மனமொத்துப் பிரிந்து விடவேண்டும். கோபி யாரையாவது அவங்க அப்பா அம்மாவுக்கு பிரியப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும். அவனுக்கும் அவுங்க அப்பா அம்மா உறவு வேண்டுமே! என்னால் அவன் அவர்களை இழக்க வேண்டாமே.
 எனக்கு நானே விரிசல் ஏற்படுத்திக் கொண்டு பிரிய விரும்புகிறேன். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. செத்துவிடலாம்ன்னு தோணும். தற்கொலை பண்ணிக்கொள்ளலாமா! எப்படி பண்ணிக்கொள்ளாலாம்? ஐயோ எல்லாமே கோரமாக இருக்கே. கோரமாகி விட்டால் வாழ்நாள் முழுவதும் நரகம் தான். ஒருவேளை நான் தற்கொலை செய்து கொண்டால் கோபியை போலீஸ் படாதபாடு படுத்திவிடுமே. செய்யாத தவறுக்கு பாவம் அவன் ஏன் அல்லல் படணும்? நான் ஏன் இப்படி இருக்கிறேன்? குடும்ப வாழ்க்கைக்கே லாயக்கற்றவள் நான். காதலித்தவனையே கல்யாணம் பண்ணிக்கொள்வது அதிர்ஷ்டம். அதிலும் அவன் நல்லவனாகவும், அன்பானவனாகவும், இருந்து விட்டால் பேரதிஷ்டம். எல்லாம் அமைந்தும் நான் ஏன் இப்படி? அட கடவுளே... தலைவலி தாங்க முடியவில்லை. கொல்லைப்புறம் வந்து அமர்ந்தேன்.
 பூச்செடிகளின் மேல் ஒரு வண்ணத்துப்பூச்சி. எத்தனை அழகு? அதன் இறக்கைகளில் தான் எத்தனை வண்ணம்? மெதுவாகப் போய் உள்ளங்கைகளில் பிடித்துக்கொண்டேன். அதன் இறக்கைகளின் படபடப்பு என் உள்ளங்கைகளை வருடியது, சுகமாக இருந்தது. சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் அதனை விடுவிடுத்தேன். அதன் வண்ணங்கள் என் உள்ளங்கைகளில் ஒட்டி இருந்தது. தள்ளாடி, தள்ளாடி பறந்து ஒரு பூவின் மேல் அமர்ந்த பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு மைனா அதனை கவ்விக்கொண்டு பறந்தது.
 குற்றவுணர்வுடன் அழுகை வந்தது. என் கையில் சிறைப்பட்டிருந்தாலும், வண்ணங்களை இழந்தாலும் அது உயிரோடு தானே இருந்தது? என் கையை விட்டு பறந்ததும் அதற்கு ஆபத்து வந்துவிட்டதே! புரிந்தது! இந்த வாழ்க்கையை சுகமாக, வண்ணமயமாக்கிக் கொள்ளலாம். இந்த வாழ்க்கையை ஏன் தனிமை, வெறுமை, சிறையென நினைத்து விலக வேண்டும்? உறவுகளை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டுக்குள் வந்தேன்.
 இதென்ன, தேதியை பல நாட்களாக கிழிக்காமல் இருந்து விட்டேன் , ஐயோ இன்று என்ன தேதி? ஓ.... நாட்கள் தள்ளிப்போய் இருக்கே! வயிற்றை மெதுவாக தடவிக் கொடுத்தேன். என்னது எனக்கு ஒரு குழந்தையா? என் வயிற்று சிறைக்குள் ஒரு சிசு. ஆஹா... இனி வரப் போகிற புது வரவினால் என் கனவு, கற்பனை அனைத்தும் நிஜமாகிவிடும். வாழ்க்கை குதூகலம் ஆகலாம். சேராத உறவுகள் இனி தம்மை வந்து சேருமென்றும், இனி ஒவ்வொரு நொடியும் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கே, தனிமை என்ற வார்த்தை வாழ்வில் இனி இருக்கப்போவதில்லை கனவுகள். கற்பனைகள் நிஜமாகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com