ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலைக்குள் இடி முழக்கம், பேரிரைச்சல்!

வயது முதிர்ந்த என் சித்தப்பாவுக்கு கபாலத்துக்குள் அவ்வப்போது இடி முழக்கமும் பேரிரைச்சலும் கேட்டு மிகவும் துடிதுடித்துப் போகிறார். ஆயுர்வேத மருத்துவத்தில் இதை குறைக்க ஏதேனும்  மருந்து உள்ளதா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலைக்குள் இடி முழக்கம், பேரிரைச்சல்!

வயது முதிர்ந்த என் சித்தப்பாவுக்கு கபாலத்துக்குள் அவ்வப்போது இடி முழக்கமும் பேரிரைச்சலும் கேட்டு மிகவும் துடிதுடித்துப் போகிறார். ஆயுர்வேத மருத்துவத்தில் இதை குறைக்க ஏதேனும்  மருந்து உள்ளதா? அவர்படும் வேதனையைப் பார்க்க முடியவில்லை. 

-எஸ். மைக்கேல் ஜீவநேசன்,  
மதுரவாயல், சென்னை.  

அதிக ஒலியை எழுப்பக் கூடிய பாண்டு வாத்தியம், மேளம், கிடார், தபலா, டிரம்பட் போன்ற இசைக் கருவிகளை  இசைக்கக் கூடிய குழுவில் நீண்டகாலம் வேலை செய்பவர்களுக்கும்,   ரயில் ஓடும் சத்தம், பஸ் ஆட்டோ, ஒலிபெருக்கி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் சத்தத்தை அடிக்கடி கேட்க வேண்டிய நிர்பந்தத்திலுள்ள வீட்டின் அமைப்பு கொண்டவர்களுக்கும் நீங்கள் குறிப்பிடும் வகையில் உபாதை தோன்றக் கூடும். செவியின் வழியாக மூளையில் ஏற்படும் அதிர்வுகளின் பிரதிபலிப்பு,  அவர்கள் அமைதியான சூழ்நிலைக்கு மாறினாலும் கேட்டுக் கொண்டேயிருக்கும் நிலை பலருக்கும் ஏற்படுகிறது. காதினுள் இருக்கக் கூடிய நரம்புகள், இது போன்ற தொடர் ஒலி எழுச்சியினால் பண்ய்ய்ண்ற்ன்ள் என்ற உபாதையைத் தோற்றுவிக்கும். காது அழற்சி, இதய அல்லது ரத்த நாள உபாதைகள்,

மூளையில் ஏற்படும் கட்டிகள், தொடர்ந்து சில மருந்துகளைச் சாப்பிடுதல், முன் எப்போதோ ஏற்பட்ட தலை அடிபடுதல், காதினுள் சேரும் அழுக்குகள், மன அழுத்தம் போன்றவையும் இதற்குக் காரணமாகலாம்.

பிராண வாயுவை இருப்பிடமாகக் கொண்டு மூளையில்,  அதில் ஏற்படும் செயல்திறன் சீற்றம் அல்லது அதற்கு நேர் எதிரான மந்த நிலை, மூளைக்குள் பேரிரச்சலை ஏற்படுத்தலாம். பிராண வாயுவைச் சீராக்கி, நரம்புகளின் அணுக்கூட்டத்தை வலுவாக்குவதைச் செய்வதால், இந்த உபாதையின் தாக்கத்தைக் குறைக்க முடியும் அந்த வகையில் - மூக்கினுள்ளே க்ஷீரபலா 101 எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, 4 - 5 சொட்டுகள் காலை, மாலை உணவிற்கு முன் விட்டு வருவது நல்லது. சற்று நேரம் கழித்து வாய் வழியாகத் துப்பி வெளியேற்றி விடவும்.

உச்சந் தலையில் ராஸ்னாதி எனும் சூரண மருந்தில்  மஹா நாராயண தைலத்தைக் குழைத்து லேசாகச் சூடாக்கிக் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு, வெது வெதுப்பான தண்ணீரில் குளிப்பதும் நல்லதே. காலையில் உணவிற்கு முன் இவ்வாறு செய்து வருவது உகந்தது. 

காதினுள் நீராவியின் உதவியால் இளஞ்சூடான பதத்தில் சூடாக்கப்பட்ட வசாலசுனாதி தைலத்தை விட்டு நிரப்பி, 5 - 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து அதன் பிறகு தலையைச் சாய்த்து, தைலத்தை எடுத்துவிட்டு, காதைப்  பஞ்சினால் துடைத்து விடவும்.  இதையே காலையிலேயே உணவிற்கு முன் செய்து வரலாம்.

கண்களில் நயனாமிருதம் எனும் சொட்டு மருந்தை 1 -2 துளிகள் இரவில் படுப்பதற்கு முன் விட்டுக் கொள்ளலாம். சில நிமிடங்களுக்கு லேசான எரிச்சலை ஏற்படுத்தி, கண்ணீரை வரவழைத்து கண்களைக் குளுமையாக்கி, சுத்தப்படுத்திக் கொள்ளுதல் எனும் இந்த சிகிச்சை முறை ஏற்றதே.வாயினுள் அரிமேதஸ் தைலம் எனும் மூலிகைத் தைலத்தை 5 மி.லி. அளவு வாயினுள் விட்டு 8 - 10 நிமிடங்கள் நிதானமாக எச்சிலுடன் சேர்த்துக் குலுக்கித் துப்பி விடுவதால், தலை சார்ந்த நரம்புகள் வலுப்படும். இதைப் பகலில் மூக்கினுள் விட்ட மருந்தை வெளியேற்றிய பிறகு, செய்து கொள்ளலாம்.

ஐம்புலன்களின் இருப்பிடத்தைக் கொண்ட தலையில், ஒவ்வொரு புலன்களுக்கும் வெவ்வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தைல மருந்துகளின் தொடர் உபயோகத்தால், அவருக்கு ஏற்பட்டுள்ள இடி முழக்கமும் பேரிரைச்சலும் குறைய வாய்ப்பிருக்கிறது.

தலை சார்ந்த உபாதைகளுக்கு, உள் மருந்தாக தசமூல ரசாயனம் எனும் லேகியத்தை சுமார் 8 - 10 கிராம் வரை காலை, இரவு உணவிற்குப் பிறகு நக்கிச் சாப்பிட்டு வரலாம். குடலையும், தலையிலுள்ள நரம்புகளையும் வலுவூட்ட, இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை சுமார் 10 - 15 மி.லி. நீராவியில் உருக்கி, காலை, மாலை வெறும் வயிற்றில் சிறிது சிறிதாகச் சாப்பிட்டு, அதன் மேல் 50 மி.லி. வெந்நீர் பருகி வருவது, உடல் நலத்திற்கு நல்லது. 

உணவில் சில கட்டுப்பாடுகள் தேவை. வாயுவை சீற்றம் கொள்ளச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை தவிர்த்து, இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகிய சுவைகளை சமச்சீரான அளவில் உணவில் சேர்க்கலாம். குளிர்ந்த நீரைப் பருகுவதற்குப் பதில், வெது வெதுப்பான நீரை குடிப்பதற்குப் பயன்படுத்தலாம். 

மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் பொதுவானவை. நோயின் தன்மையை,  நாடி மூலம் அறிந்தால், மேலும் சில வைத்திய முறைகளான சிரோவஸ்தி, மாது - தைலிக வஸ்தி, நவரக்கிழி, பிழிச்சல், நாடீஸ்வேதம் எனும் வியர்வை சிகிச்சைப் பற்றி மருந்துவர்களால் அதிகம் எடுத்துரைக்க முடியும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com