நூல் அறிமுகம்: சூரிய வம்சம்  நினைவலைகள் - சிவசங்கரி

இன்று மாம்பலம் ஹெல்த் சென்டர் 150 படுக்கைகள் வசதியுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாக வளர்ந்திருக்கிறது.
நூல் அறிமுகம்: சூரிய வம்சம்  நினைவலைகள் - சிவசங்கரி

மாம்பலம் ஹெல்த் சென்டருக்கு அடிக்கல்!

இன்று மாம்பலம் ஹெல்த் சென்டர் 150 படுக்கைகள் வசதியுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாக வளர்ந்திருக்கிறது. எனது பதினோராவது வயதில் சி.ஆர்.ராமசாமி, டி.டி.கே. மாமா முன்னிலையில் அஸ்திவாரம் போட அப்பா அழைத்துச் சென்றார். ""ஜிபு, இங்கே வா'' அழைத்தார். அங்கே இருந்த ஐயர் என் கையில் ஒரு செங்கல்லைக் கொடுத்து, ""எல்லாரும் நல்லா இருக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு இந்தக் கல்லை அந்தக் குழிக்குள் வைம்மா'' என்றார். நானும் அப்படியே செய்தேன்.

முதல் தொகுதி பக்-10

""என்னுடைய வாழ்க்கையில் நடந்த, என்னைச் சிலிர்க்க வைத்த, என்னை நெகிழ வைத்த, என்னை அழவைத்த, என்னைச் சிந்திக்க வைத்த, முக்கியமாக எனக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்த பல விஷயங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சம்பவங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். கண்டிப்பாக என்னுடைய நினைவலைகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்'' என்று இந்நூலின் முன்னுரையில் சிவசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுவாரஸ்யம் "சூரியவம்சம்' என்கிற தலைப்பு வைத்ததிலிருந்து தொடங்குகிறது. இத்தலைப்புக்கும் ஒரு கதை இருக்கிறது. சிவசங்கரியின் பாட்டி சங்கரி ஐந்தாவது முறையாக கர்ப்பம் அடைந்தபோது அவருக்குப் பேய் பிடிக்க- அதனை விரட்ட குணசீலத்துக்கு அழைத்துப் போகிறார்கள். அங்கே சங்கரிப்பாட்டிக்கு பிடித்திருப்பது பேய் அல்ல; முனீஸ்வரன் என்று தெரிய வருகிறது. தான் விலக வேண்டுமானால் பிறக்கப்போகும் குழந்தைக்கு தனது பெயர்களில் ஒன்றான "சூரியநாராயணன்' எனப் பெயர் வைக்கவேண்டும் என்று கூறி முனீஸ்வரன் விலகுகிறார். அதுபோலவே சங்கரி பாட்டி பிரசவித்த ஐந்தாவது பிள்ளைக்கு "சூரியநாராயணன்' என்று பெயர் வைக்கிறார்கள். அதுதான் சிவசங்கரியின் தந்தை! சூரியநாராயணன் வம்சம் - சூரிய வம்சமாயிற்று என விஸ்தாரமாக விவரிக்கிறார்.

இந்த "நினைவலைகள்' எழுத காரணமாக இருந்தவர், அவரது செகரட்டரியும், தோழியுமாக இருந்து மறைந்த லலிதா. லலிதாவின் அரிய செயல் சிவசங்கரியின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. "சிவசங்கரியின் கணவர் சந்திரசேகர் இறந்து இறுதிச்சடங்கு சமயம், குடும்ப வழக்கப்படி, அவரைக் குளிப்பாட்டும் காரியத்தை மகள் தான் செய்ய வேண்டும். உறவினர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, செய்வதறியாமல் சிவசங்கரி திகைத்திருந்த சமயத்தில், லலிதா குளித்துவிட்டு ஈர உடையுடன் வந்து, சந்திரசேகரைக் குளிப்பாட்டும் செயலில் ஈடுபடுகிறார். அந்த கணத்தில் லலிதா தனது மகளாகி விட்டார்' என்று கூறுகிறார் சிவசங்கரி. இதனை நீண்ட அஞ்சலியாக இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்நூல் இரு பாகங்களைக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் பிறப்பு தொடங்கி, சென்னை திருமலைப்பிள்ளை ரோட்டில் வசித்தது. அங்கிருந்த வித்யோதயா பள்ளி, பின்னர் ஆயிரம்விளக்கு சர்ச் பார்க்கில் ஆரம்பக் கல்வியும், உயர்நிலைக் கல்வி சாரதா வித்யாலயாவிலுமாகப் பயின்று, எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் கல்லூரிக் கல்வியும் பெறுகிறார். கே.ஜே. சரசாவிடம் நடனம் கற்கிறார். அரங்கேற்றம் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற கலைநிகழ்ச்சியில்தான் நடக்கிறது. நடுவராக வித்யாவதி (ஜெயலலிதாவின் சித்தி) மார்க் போடுகிறார். அவருக்கும் சந்தியா அம்மையாருக்கும் தனது நடன குருவை அறிமுகம் செய்கிறார். கே.ஜே சரசாவிடம் தான் ஜெயலலிதாவும் நடனமும் கற்கிறார். அது முதல் ஜெயலலிதாவின் கடைசி காலம் வரை இருவரின் நட்பும் தொடர்ந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

தனது முதல் இருபது வருடங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறார். குறிப்பாக அவரின் திருமணம் அவரது அண்ணியின் சகோதரர் சந்திரசேகரருடன். சென்னை சைதாப்பேட்டை
ஸ்ரீநகர் காலனியில் 8 ஆயிரம் சதுரஅடியில் கட்டிய பங்களாவைச் சுற்றிப் பந்தல் அமைத்து டி.கே.பட்டம்மாள் கச்சேரியுடன் திருமணம் நடந்ததாம். சந்திரசேகர் போபாலில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸில் வேலையானதால் அவருடன் போபால் செல்கிறார்.

அங்கிருந்து சென்னை திரும்பியதும் கதீட்ரல் கார்டன் சாலை, விழுப்புரம் (ஸ்பன் பைப் கம்பெனி), ஸ்ரீநகர் காலனி, அடையாறு கற்பகம் கார்டன்ஸ்- என தனிக்குடித்தன வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கிறார்.
கணவர் சந்திரசேகரரின் யோசனையின்படி "ஃபர்ஸ்ட் நேஷனல் சிட்டி பாங்கில்' மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலையில் சேர்கிறார்.
கல்கியில் முதல் கதை. விகடனில் இரண்டாவது கதை- என எழுத்துப் பணி அவருக்குத் தொடங்குகிறது.

1963-இல் அவரின் 20-ஆவது வயதில் திருமணமாகியும் குழந்தை இல்லையென்று, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய வைத்தபோது கண்ணீர்விட்ட சம்பவத்தை விகடனில் எழுதிய "எதற்காக?' என்ற நாவலில் பதிவு செய்ததையும் அப்போது எழுந்த விவாதங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டாம் பாகம் முழுவதும் எழுத்தாளராக வந்த பின்னர் ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறார். பாலசுப்பிரமணியன் (விகடன்), மணியன், சாவி இவர்களுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறுகள், பயணக் கட்டுரைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என்று எழுதிக் குவித்ததைப் பட்டியலிடுகிறார். ஒவ்வொன்றையும் எழுத நேர்ந்த பின்னணி குறித்தும் சுவைபட பதிவு செய்கிறார்.

குறிப்பிடத்தக்கதாக சொல்லவேண்டும் என்றால் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து, "இந்திராவின் கதை' (கதிரில்) எழுதுகிறார். பிற்காலத்தில் ராஜீவ் காந்தியைச் சந்திக்கிறார், எழுதுகிறார். அவருடன் காமன்வெல்த் மாநாடுகளுக்கு இருமுறை எழுத்தாளராகப் பயணம் செய்கிறார். அப்போது கொண்டாடிய பிறந்தநாள் குறித்து தனது வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாள் என்றும் விவரிக்கிறார். மூன்றாவது பிறந்தநாள் அவருடன் கொண்டாட முடியாமல் போனதற்கு தேர்தல் (1989) அறிவிப்பே காரணம் என்கிறார்.

எல்லாமே சுவையான அனுபவங்கள். அமெரிக்கா, எகிப்து, மலேசியா, அலாஸ்கா (அயோவா) உள்ளிட்ட நாடுகளில் மேற்கண்ட பயணங்களையும், பல தேச எழுத்தாளர்களைச் சந்தித்ததையும் எழுதுகிறார்.
தனது வாழ்வின் பெரும் பணியாக "இலக்கியம் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு' என்று கிழக்கு - மேற்காகவும், வடக்குத் தெற்காகவும் பயணப்பட்டு நாட்டின் பிறமொழி எழுத்தாளர்களைச் சந்தித்து பேட்டி கண்டு, அந்தப் பேட்டிகளுடன், அவர்களது சிறந்த படைப்புகளையும் மொழிபெயர்த்து நூலாக்கி வெளியிட்ட அனுபவங்களை, உள்ளது உள்ளபடி தெரிவிக்கிறார்.

இத்தொகுதிகளை வெளியிடுவதற்கு உதவிய ஜி.கே.மூப்பனாருக்கும் உரிய வகையில் நன்றியும் தெரிவித்திருக்கிறார். நூல் வெளியீட்டில் பொருளாதாரரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகளை குறிப்பிட மறக்கவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பே குழந்தையின்மை, கண்தானம், போதைப்பழக்கம், போதையிலிருந்து மீளுதல், மறுமணம், வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம், அதன் தோல்வி, புற்றுநோய், கருணைக்கொலை உள்ளிட்ட பிரச்னைகளை கருப்பொருளாகக்கொண்டு, தனது படைப்புகளை உருவாக்கியது என ஒன்றையும் விடவில்லை.

வாசகர்கள் பாராட்டைப் பெற்றது போன்றே பொதுவெளியில் விமர்சனம் எழுந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். நடனம் கற்றார், பல சபாக்களில் நிகழ்ச்சிகள் கொடுத்தார். சங்கீதம் கற்றார். ஆனால், திருமணத்துக்குப்பிறகு இனி வேண்டாமே எனத் தோன்றியதாகவும் அதனால் அவற்றை ஒதுக்கியதாகவும் எழுதியிருக்கிறார்.

இவரின் நாவல்கள் "47 நாட்கள்', "அவன் அவள் அது', "நண்டு' முறையே பாலசந்தர், முக்தா சீனிவாசன், மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில் திரைப்படங்களாக வெளிவந்ததையும் பதிவிட்டிருக்கிறார்.
சிறந்த சமூகப் பின்னணி, பொருளாதாரப் பின்னணியுடன், மெத்தப் படித்த குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த சிவசங்கரியால் யாரும் தொட முடியாத கருப்பொருள்களைக் கொண்டு கதைகளைப் படைக்கவும் முடிந்திருக்கிறது. இது மிக மிக அபூர்வமானது.

தனது வாழ்க்கையில் நேர்ந்த உன்னதங்களை, பெருமிதங்களை, துயரங்களைப் பதிவு செய்தது போலவே, தனக்கு நேர்ந்த இழிவுகளையும், அவமானங்களையும் பதிவு செய்ததன் மூலம், இந்நூலின் உண்மைத் தன்மைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார் சிவசங்கரி. பாராட்டுக்குரிய படைப்பு.
பா.


சூரியவம்சம்

நினைவலைகள் - சிவசங்கரி

பகுதி 1
பக்கம்-352விலை: ரூ. 375


பகுதி 2
பக்கம்-304
விலை: ரூ. 325


வெளியீடு:

வானதி பதிப்பகம்,
23 தீனதயாளு தெரு,
தியாகராயநகர்,
சென்னை-600017
044-2434 2810
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com