கரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை!

மனிதர்களின் முகம் தான் கரோனா நோய்க்கான  முதல் நுழையும் வாசல் (entry point) என கூறலாம். என்ன செய்யலாம் கரோனாவை என்று பல் மருத்துவர் ஜி. நடராஜனை கேட்டோம்.
கரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை!

மனிதர்களின் முகம் தான் கரோனா நோய்க்கான  முதல் நுழையும் வாசல் (entry point) என கூறலாம். என்ன செய்யலாம் கரோனாவை என்று பல் மருத்துவர் ஜி. நடராஜனை கேட்டோம்.  அவர் கூறியது: 

கோவிட்-19 என்கிற கரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் அச்சுறுத்தல் வரலாறு காணாதவகையில், சமூக மற்றும் பொருளாதாரச் சீர்குலவை ஏற்படுத்தி வருகிறது.  

கரோனா தொற்று ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு நீர்த்துளிகள் (Droplets) மற்றும் நுண்ணுநீர் பரப்பு (Fomites) மூலம் பரவுகிறது. அதாவது வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ, அவரது வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளிவரும் நீர்துளிகள், அடுத்தவர் முகத்தில் நேரடியாகப்  படும் போது பரவலாம். அல்லது அத்துளிகள் வெளிவந்து விழுந்த இடத்தை அல்லது பொருட்களைச் சிறிது நேரத்தில் அடுத்தவர் தொட்டு, அவர்கள் தங்கள் முகத்தைத் தொடும்போதும் பரவலாம். இது தவிர, சில தருணங்களில் காற்றில் தூசு படலம் (Aerosol) மூலம் பரவும் அபாயகரமான வாய்ப்பும் உள்ளது. அதாவது சில மருத்துவ சிகிச்சை முறைகளிலும், பெரும்பாலும் பல்மருத்துவ சிகிச்சைகளிலும் இந்த தூசு படலம் (Aerosol) உருவாகலாம். வைரஸ் பாதித்தவருக்கு, சிகிச்சை செய்யும் போது இந்த தூசு படலம் சில மணி நேரம் காற்றில் மிதந்து பரவுகிறது. இதனால் அதிகபட்ச பாதுகாப்பு இல்லாவிடில் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், பின்பும்  சமூகத்திற்கும் இது எளிதில் பரவலாம். 

இந்த வைரஸ் பல் மருத்துவத் துறையை அதிகமாகப் பாதித்துவிட்டது என்று கூறினால் இது மிகை இல்லை.  

Covid}19, வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியாமலும் இருக்கலாம், அல்லது லேசான இருமல், சளி, காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படலாம். சிலருக்கு இவை  எல்லாமும் சேர்ந்து அதிகமாக ஆகலாம். அந்த சமயம் இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலைக்கும் போகலாம். அப்படிப் போகும் பட்சத்தில் இதற்கு என்ன சிகிச்சைகள் என்று பார்த்தால், எதுவுமே இல்லை என்று சொல்லும் வருத்தமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இந்த நோயாளிக்கு supportive therapy மட்டும் தான் நாம் கொடுக்க முடியும். அதை தான் உலக அளவில் செய்து கொண்டு வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் வைரஸ் எதிர்ப்பு  மருந்துகள் முதலியவற்றைக் கொடுத்து குணப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்மிடம் கேட்டு வாங்கிக் கொண்ட ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தும் அடங்கும். இதுவும் ஓர்  எதிர்ப்பு மருந்து தான். ரெம்டெசிவிர் (Remdesivir) என்ற புதிய மருந்து நன்கு வேலை செய்வதாக அமெரிக்க ஆய்வுகள் கூறுகின்றன.


பிளாஸ்மா சிகிச்சை:  Convalescent Plasma Therapy என்கிற சிகிச்சை சமீபத்தில் செய்திகளில் அதிகம் அடிபடுகிறது. குருதித் திரவ விழைய சிகிச்சை என தமிழில் இதைக் கூறலாம். நம் ரத்தம்  என்பது பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் சேர்ந்த  கலவையாகும்.

ரத்தத்தின் பெரும்பகுதி (55%) பிளாஸ்மா என்கிற மஞ்சள் நிறத் திரவமாகும். இத் திரவத்தில் அணுக்கள் மிதந்துள்ளன. பிளாஸ்மாவில் 95% நீர் மற்றும்  ரத்த உறைதல் காரணிகள், புரதங்கள், சர்க்கரை, கனிம அயனிகள், ஹார்மோன்கள் போன்றவை உள்ளன. இது தவிர ஆன்டிபாடி என்கிற நோய் எதிர்ப்பு பொருட்களும் உள்ளன. கரோனா நோயிலிருந்து குணமடைந்த ஒருவரின்  ரத்த பிளாஸ்மாவில் கரோனா வைரஸூக்கு எதிரான குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் அதிக அளவில் இருக்கும். இந்த ஆன்டிபாடிகளை பிளாஸ்மா மூலம் கரோனாவால் அவதிப்படும் மற்றொருவருக்குச் செலுத்தும் போது அவர் நோயிலிருந்து குணமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சிகிச்சையையே Convalescent Plasma Therapy எனக் கூறுகின்றனர். இம்முறை முன்பு 2002-ஆம் ஆண்டு சார்ஸ் (SARS), பின்பு மெர்ஸ் (MERS), பன்றிக்காய்ச்சல், எபோலா ஆகிய வைரஸ் நோயாளிகளுக்கும், சமீபத்தில் சீனாவில் தற்போதைய கரோனா நோயாளிகளுக்கும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும், இந்த சிகிச்சை அனுபவரீதியான (Empirical) முறையாகவே உள்ளது. அதாவது, இதன் செயல்திறன் மற்றும் பக்கவிளைவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆதலால், இந்த கரோனாவிற்கெதிரான பிளாஸ்மா சிகிச்சை உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு வேறு சிகிச்சைகள் வேலை செய்யாத போது சோதனை முறையில் , இந்திய மருத்துவ ஆராய்ச்சி  (ICMR) அமைப்பிடமிருந்து அனுமதி பெற்று பயன்படுத்தப் படுகிறது. விரைவில் இம்முறை கரோனா இறப்பைத் தடுக்கும் சிகிச்சையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் கரோனாவைத் தடுக்கும் தடுப்பூசி சோதனை விருப்பார்வ தொண்டர்களிடம் (Human volunteers) துவங்கி வைக்கப்பட்டது. இது கரோனாவைத் தடுக்கும் தடுப்பூசி தயாரிக்க முன்னோடியாக உதவலாம்''  என்றார் பல் மருத்துவர் ஜி. நடராஜன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com