Enable Javscript for better performance
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீண்ட ஆயுளுக்கான ரகசியம்!- Dinamani

சுடச்சுட

  

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீண்ட ஆயுளுக்கான ரகசியம்!

  By பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்  |   Published on : 17th May 2020 05:06 PM  |   அ+அ அ-   |    |  

  kadhir2


  நீண்ட ஆயுளுடன் நோயற்ற வாழ்வையும் வாழ விரும்புகிறேன். இரு மகள்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும். வயதான தாய் தந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்புகள் இருப்பதால், நான் ஆசைப்படுவதில் தவறு ஏதுமில்லை என்று கருதுகிறேன். அதனால், நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறதா?

  -மாணிக்க சுப்ரமணியன், ஈரோடு.

  "சாந்தே அக்னௌ ம்ரியதே' என்கிறார் சரகர் எனும் முனிவர் தான் இயற்றிய சரகஸம்ஹிதை எனும் ஆயுர்வேத மருத்துவ நூலில். வயிற்றிலுள்ள ஜாடராக்னி எனும் பசித் தீ அணைந்துவிட்டால், அதுவே மரணத்திற்குக் காரணமாகும் என்று அதற்கு அர்த்தம் கூறலாம். அடுத்த வரியில் அவர்- "சிரம்ஜீவத்யனாமய:' என்றும் எடுத்துரைக்கிறார். அதை நோய் வராமல் பாதுகாத்தால் நீண்ட ஆயுளானது கிட்டும் என்பதை உணர்த்துகிறார். "ரோகீ ஸ்யாத் விகிருதே: மூலம் அக்னிஸ்தஸ்மான் நிருச்யதே' என்று முடிக்கிறார்- பசித்தீ கெட்டுவிட்டால் அது நோய்களுக்குக் காரணமாவதால், ஆயுளும் ஆரோக்யமும் அதைச் சார்ந்தே இருக்கின்றன எனும் அவருடைய கூற்றை நாம் மதித்து நடந்திட வேண்டும்.

  அதிகம் பட்டினியிருத்தல், அஜீரணம், அதிகம் உண்ணுதல், நேரம் தவறி கண்டபடி உண்ணுதல், உடலுக்கு ஒவ்வாததை உண்ணுதல், செரிப்பதில் கடினமானவை, குளிர்ந்தவை, வறண்டவை, கெட்டுப் போனவை, நோயினால் உடல் இளைத்தவர், தனக்கு சிறிதும் பொருந்தாத தேசத்தில் வாழ்வது, உடலுக்கு ஒவ்வாத பருவகாலத்தில் அவ்விடத்தில் வாழ்வது , பருவ காலங்களுக்குத் தகுந்தவாறு வாழாமல் இருப்பது, இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர், உறக்கம், பசி போன்றவற்றை மதிக்காமல் வலுக்கட்டாயமாக அடக்குதல் போன்ற காரணங்களால் பசித்தீ கெட்டு, எளிதில் செரிக்கும் உணவைக் கூட, செரிக்க முடியாமல் தடுமாறி, வயிற்றில் புளிப்பு வாடையை ஏற்படுத்தி, விஷத்தன்மையை உருவாக்கும் என்கிறார்.

  இதனால், வயிறு உப்புசம், சோர்வு, தலைவலி, மயக்கம், தலைச் சுற்றல், முதுகு மற்றும் இடுப்புப் பிடிப்பு, கொட்டாவி, உடல்வலி, நாவறட்சி, காய்ச்சல், வாந்தி, முக்கி முக்கி மலம் போதல், ருசியின்மை, அசீரணம் போன்ற உபாதைகள் தலை தூக்கிவிடும். இதற்கு அன்ன விஷம் (உணவு விஷமாக மாறுதல்) என்று பெயர்.

  அதனால் பசி கெட்டுவிடாமல் இருப்பதற்காகவும், அது பாதிப்படைந்துபோன நிலையில், அதற்கான நிவாரணங்களும் ஆயுர்வேத நூல்களில் வழங்கப்பட்டுள்ளன. பசித் தீபாதிப்படைந்த சில நிலைகளில் - கீரைப்பூச்சி அடிக்கடி மலத்தில் காணப்படும். ஆசன வாயில் அரிப்பு அதிகம் உண்டாகும். அது போன்ற நிலையில் - இனிப்பைக் குறைக்கவும். கீரை, மைதா மாவு, கடலை, பட்டாணி, உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, உளுந்து, இலந்தைப்பழம், ஐஸ் கலந்த பானம் இவற்றைக் குறைக்கலாம். புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மிளகு, கண்டந்திப்பிலி, பெருங்காயம், ஓமம் இவற்றை அதிகம் கூட்டலாம். வெந்நீர் அடிக்கடி அருந்துவது நல்லது. ஓமத்தையும் வேப்பிலையையும் சேர்த்தரைத்துக் காலையில் சாப்பிட்டு வரலாம். முதல் நாளிரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்துத் தயிரில் கலக்கிச் சாப்பிடலாம்.

  விடியற்காலையில் சிலருக்கு புளிப்பு மிகுந்த வாந்தி வரும். புளித்தும் கசந்தும் நீராக வாந்தி எடுப்பர் - அதற்கு, சம்பா கோதுமையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து அத்துடன் அரைப் பங்கு தூளான சர்க்கரை கலந்து, சிறிது நெய்விட்டுப் பிசறி படுக்கும் போது தலைமாட்டில் வைத்துக் கொள்ளவும். விடியற்காலை 4 - 5 மணிக்குப் படுக்கையில் இருந்தபடியே இந்தத் தூளில் சுமார் 20 கிராம் வரை சாப்பிட்டு, தண்ணீர் அருந்தி விட்டு உடன் படுத்து விடவும். அரை- ஒருமணி நேரம் தூங்கிய பிறகு எழுந்து விடவும். பத்து - பதினைந்து நாட்கள் இப்படிச் சாப்பிட, வாந்தி நிற்கும். கர்ப்பிணிகள், பித்தப்புண் ஏற்பட்டு வயிற்று வலியுள்ளவர்கள் ஆகியோர் இப்படிச் சாப்பிடலாம்.

  வைச்வாநரம் எனும் சூரணம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இந்தச் சூர்ணத்தில் கடுக்காய்த் தூள் பாதி அளவு கலந்துள்ளது. வைச்வாநரம் எல்லாவற்றையும் எரிக்கக்கூடிய அக்னி என்ற பெயருக்கேற்றபடி, உணவை நன்கு ஜீரணமாக்கி உடலில் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும், வெளியேற்ற வேண்டியவற்றை வெளியேற்றியும் உதவக் கூடியது.

  நல்ல ஜீரண மருந்து. துவர்ப்பும் காரமும் உப்பும் கணிசமாக இருப்பதால் நாக்கின் கேடால் ஏற்படும் உணவின் மீது வெறுப்பு, உமிழ்நீர்ப் பெருக்கம், உமட்டல், எதுக்களித்தல் முதலியவற்றைப் போக்கும், தொடர்ந்து மலச்சிக்கலுள்ளவர்களுக்குத் தேங்கியுள்ள பழைய மலம் வெளியாக உதவும். அவ்விதமே உணவு செரியாமல் மலம் இளகி வெளியேறும் போதும், உணவை செரிக்கச் செய்து மலம் இறுகி, எளிதாக வெளியேறச் செய்யும்.

  வயிற்றுப் பொருமல், வயிற்றில் வாயுத் தங்கல், கொழுப்புப் பதார்த்தம் செரிக்காதிருத்தல், அன்ன த்வேஷம், அஜீர்ணம், நாட்பட்ட மலம் பந்தம், கிராணியில் அஜீரணமாக மலம் இளகி வெளிப்போகும் நிலை, அஜீரணத்தால் குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் ஏற்படும் இருமல், சளி முதலிய உபத்திரவங்கள் இவை இதனால் குணப்படும். வயதான காலத்தில் ஜீரண சக்தி குன்றியவர்கள் இரவில் தினம் ஒருவேளை சாப்பிட்டு வர ஜீரண சக்தி சீராகி இரைப்பை, கல்லீரல், குடல் முதலியவை சுறுசுறுப்புடன் இயங்கும்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai