Enable Javscript for better performance
நீச்சலும் கூச்சலும்!- Dinamani

சுடச்சுட

  

  நீச்சலும் கூச்சலும்!

  By - கடுகு  |   Published on : 17th May 2020 05:11 PM  |   அ+அ அ-   |    |  

  kadhir3

   

  ஞாயிற்றுக்கிழமை. சிறிது சாவகாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து, பேப்பரில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியில் இறங்கினேன். என் தலையெழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.

  வாயில் மணி அடித்தது. கதறியது என்று கூடச் சொல்லலாம். மனுநீதி சோழனின் மணியை, கன்றை இழந்த பசு அடித்தது போன்று இருந்தது. நான் சோழனும் இல்லை; எங்கள் பேட்டையில் மாடோ, கன்றோ எதுவும் கிடையாது. என்னிடம் தேர் எதுவும் கிடையாது. இருந்தும் இந்த மணி ஓசை ஒரு பழமொழியைத் தான் லேசாக மாற்றி, நினைவுபடுத்தியது. "யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே!' என்பதை லேசாக மாற்றி, "மணி ஓசை வரும் முன்னே; தொல்லை வரும் பின்னே' என்பது மாதிரி எனக்குத் தோன்றியது மணியோசை கேட்டு சமையலறையிலிருந்து எதிரொலி மாதிரி என் அருமை மனைவி கமலா, ""காது கேட்கலயா? உங்களுக்கு இடி இடிச்சாக் கூட காது கேட்காது. உங்களுக்கு இருக்கிறது காது இல்லை; "கேட்-காது' தான் இருக்கு'' என்று சொல்லி, தன்னுடைய சொல் நயத்தைத் தானே ரசித்தபடி, தன் முதுகில் தானே ஒரு ஷொட்டு கொடுத்தபடியே வந்து வாயிற் கதவைத் திறந்தாள் கமலா.

  ""வாடா... வாம்மா... வாடா குழந்தை'' என்று அன்பு, கரிசனம், பாசம், பரிவு, வாத்ஸல்யம், கனிவு... இன்னும் எனக்குத் தெரியாத பல பாவங்களுடன் கமலா வரவேற்றாள். பூர்ண கும்பம், வாழை மரம், நாதஸ்வர இசை, வேத கோஷம் தான் இல்லை! ஆமாம், திடீரென்று தொச்சுவும் அவனுடைய அருமை மனைவி அங்கச்சியும், அவர்களுடைய நண்டு ஒன்றுடன் வருவார்கள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

  ""சும்மா காலாற நடந்து வந்தோம்... அத்திம்பேரைப் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று வந்தோம்'' என்று தொச்சு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கச்சி குறுக்கிட்டு, ""அது மட்டும் இல்லை, அக்கா. எங்க அபார்ட்மென்ட் காலனியில் நீச்சல் குளம் கட்டி இருக்காங்க. சூப்பரா இருக்கு. பசங்க அதகளம் பண்ணறங்க. காலனியில் இருக்கிற நண்டும் சுண்டும்'' என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது, நான் இடைமறித்து, ""அப்படியா? நம்ப நண்டுதான் லீடரா?'' என்று கேட்டேன்.

  ""பிரச்னையே அதுதான், அத்திம்பேர். எதுக்கு இந்தப் பொடியன் வந்திருக்கான் தெரியுமா? அவனுக்கு நீச்சல் தெரியாது. தொளைச்சு எடுக்கிறான், "நீச்சல் கத்து கொடு' என்று. அவனை "நண்டு' என்று நீங்க சொன்ன வேளை, அவனை நிஜமாகவே நண்டாக நீங்க ஆக்கி வைக்கணும்'' என்றாள் அங்கச்சி.

  ""அங்கச்சி... "கெக்கே பிக்கே' என்று ஏதாவது சொல்லிண்டே இருக்காதே. நான் விளக்கமா சொல்றேன், அத்திம்பேர்'' என்றான் தொச்சு.

  ஏதோ நாடக வசனத்தை எழுதி, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல தொச்சு, அங்கச்சி வசனங்கள் இருந்தன.

  ""உள்ளே வாடா தொச்சு... வந்தவனை வா என்று சொல்லாமல், ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிற வழக்கத்தை எப்பதான் விடுவீங்களோ?'' என்றாள் கமலா.
  ""கமலா, முதலில் காபி கொண்டு வந்து கொடு'' என்றேன்.

  பொங்குகிற பாலில் சிறிது தண்ணீர் தெளித்தது போல், கமலாவின் கடுகடுப்பு "புஸ்' என்று அடங்கிப்போயிற்று. அது மட்டுமல்ல, உற்சாகம் ஊற்றாகப் பெருக்கெடுத்தது.

  நான் சொல்லி முடிப்பதற்குள், எள் என்பதற்குள் எண்ணெய்யாக இருக்கும் என் மாமியார் காப்பியுடன் வந்து விட்டாள்- வழக்கத்தை விட 50% அதிக பாசத்துடன்!

  ""தொச்சு! வாடா, அங்கச்சி வாம்மா. பப்ளி வாடா'' என்று சொல்லியபடியே, மேஜையில் காப்பியை வைத்தாள்.

  (பப்ளி? தொச்சுவின் பையனின் உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். சில சமயம் அது திட்டு மாதிரி கூட இருக்கும்; உதாரணமாக, புளிமூட்டை, ரோடு ரோலர், பீம சேனா, ஃபுட்பால் தடியா, கரடிக் குட்டி, வெல்லக்கட்டி, பலூன் கண்ணா என்று பல பலப் பெயர்கள்)

  ""தொச்சு.. நீ குழந்தையை " பப்ளி'ன்னு கூப்பிடறயே, அது என்ன பப்ளி?'' என்று கேட்டால், ""இந்த பெயர்களுக்கெல்லாம் அர்த்தம், விளக்கம் எதுவும் கிடையாது அத்திம்பேர். என் பெயரை "தொச்சு' என்று வைச்ச மாதிரி, இதுவும் ஒரு பேர்... இந்த பப்ளி என்ற பெயர் "பப்ளிமாஸ்' என்ற பெயரின் சுருக்கம். அவ்வளவுதான்'' என்றான்.

  காப்பியை நோக்கி பொடிநடையாகச் சென்றபடி, ""அத்திம்பேர்... நாங்க இன்னிக்கு வந்ததே இந்த பப்ளிக்காகத்தான். எங்க காலனியிலே இப்போ சூப்பரா நீச்சல்குளம் கட்டி இருக்காங்க; போன வாரம் திறந்து வெச்சாட்டங்க. பசங்க பாடு கும்மாளம் தான். பாவம், பப்ளி வெறுமனே வேடிக்கை பார்த்துண்டு இருக்கான்'' என்று தொச்சு சொன்னான்.

  ""அங்கச்சி, அவன் நீச்சல் கற்றுக் கொள்ளத் துடியா துடிக்கிறான்''என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான், ""தொச்சு, நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே?'' என்று கேட் டேன்,

  காபியை ஒரு முழுங்கு குடித்துவிட்டு, ""தொச்சு அம்மா, எப்படிம்மா இப்படி பிரமாதமா காபி போடறே? அங்கச்சியும் போடறாளே... போகட்டும், என்ன சொன்னீங்க, அத்திம்பேர்? நீச்சல் நீயே சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே என்று தானே சொன்னீங்க. ஐயோ, எனக்கு ஆயிரம் வித்தை தெரிஞ்சிருந்தாலும் (!) இந்த பாழாப் போன நீச்சல் தெரியாது. அதனால வந்து'' என்று லேசாகத் தயங்கியபடி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ""அங்கச்சி என்ன மென்னு முழுங்கறீங்க? நீங்க பணமா கடன் கேட்கிறீங்க? நானே அத்திம்பேரைக் கேட்கிறேன். அத்திம்பேர் மாதிரி ஒருத்தர் கிடைச்சது நம்ப பாக்கியம். அத்திம்பேர், நீங்க நாலு நாள் வந்து, இந்தக் குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கணும்... பப்ளி அசகாய சூரன். இரண்டே நாளில் கற்றுக்கொண்டு விடுவான்''என்றாள்.

  ""இரண்டு நாளில் கற்றுக்கொண்டு விடுவான் என்றால், நான் எதுக்கு நாலு நாள் வரணும்? அடுத்த இரண்டு நாள், ஒலிம்பிக் வீரனைப்போல நீச்சல் அடிக்கக் கத்துக்கப் போறானா?'' என்று கேட்டேன். நான் எதிர்பார்த்தபடி, ""அங்கச்சி, இதுதான் அத்திம்பேர் என்கிறது... ஒரு அல்ப நீச்சல் விஷயத்திலும் ஜோக் அடிக்கிறார்'' என்றாள். (எல்லாம், ஐஸ்!)

  ""நீச்சலும் சரி, ஜோக்கும் சரி... இரண்டும் ஒன்றுதான். இரண்டும் அடிக்கிற விஷயங்கள்தான்'' என்றேன் இதற்குள் பொறுமை இழந்த என் மாமியார், ""ஏன்டி கமலா, நீங்க பேசிக்கொண்டே இருப்பதை பார்த்தால், பப்ளி நீச்சல் கத்துக்கப் போறானோ இல்லையோ, நன்னா ஜோக் அடிக்கக் கத்துண்டு விடுவான்'' என்றாள்.

  ""அதுவும் இரண்டு நாளிலேயா?'' என்று ஆகாயத்தைப் பார்த்து கேட்டேன். எதிர் விமர்சனம் எதுவும் வரவில்லை. (எல்லாம் அனுபவத்தில் அடிபட்டு கற்றுக் கொண்ட பாடம்) இன்னும் காலம் தாழ்த்தினால், ""இருந்து சாப்பிட்டு விட்டு போயேன்டா'' என்று புத்திர பாசம் பொங்க, என் மாமியார் சொல்லக்கூடும். அதனால் நான், ""சரி...சரி... நாளைக்கு நான் வரேன், நீச்சல் பாடத்திற்குப் பூஜை போடலாம்.. ஏய், பப்ளிகுட்டி, நீ சரியா கத்துக்கலே, உனக்கும் சரியான பூஜை கிடைக்கும்'' என்று சொல்லிச் சிரித்தேன். எல்லாரும் (என் மாமியார் உட்பட) சிரித்தார்கள்.

  மறுநாள் காலை 5 மணிக்கு என்னை எழுப்பினாள் கமலா.

  ""மணி ஆகலை? சீக்கிரம் எழுந்திருங்கோ. குழந்தை வந்து காத்துண்டு இருப்பான்'' என்றாள்.

  ""எட்டு மணிக்குத் தானே நீச்சல் கற்றுக் கொடுக்க வரேன்னு சொல்லி இருந்தேன்'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது கமலா, ""அது எனக்குத் தெரியாதா? நீங்க எழுந்திருக்கணும், பேப்பரை எழுத்து எழுத்தாப் படிக்கணும். அப்புறம் உங்க ஃப்ரண்ட் ராஜப்பா கிட்ட நியூஸ் மொத்தத்தையும் அலசணும். அதுவும், கோஸ்டரீகா பூகம்பம், நிகரகுவாவில் பஞ்சம், அங்கே வெள்ளம், இங்கே சுனாமி என்றெல்லாம் பேச வேண்டாமா? அந்த நாடு எல்லாம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் அரட்டை அடிச்சாகணும், இல்லையா? அப்புறம், நல்ல காலம். கிராமத்திற்கு போய் இருக்கிறாள் உங்கம்மா. இல்லாவிட்டால் பேரன், பேத்தி எல்லாரையும் பத்தி பேசணும். அதுக்குள்ள மணி எட்டு ஆயிடும்; இல்லை எட்டுமணி நேரம்கூட ஆயிடும்... சரி, சரி, எழுந்து ரெடி ஆயிடுங்க'' என்று அதட்டினாள்.

  தீயணைக்கும் வீரர்கள் கூட இத்தனை பரபரப்பாக, அவசரமாக வேலையில் இறங்க மாட்டார்கள். நீச்சல் குளத்திற்குத் தீப்பிடித்து விட்டது மாதிரி அவசரம் அவசரமாக காலனிக்குப் போகத் தயாரானேன்.

  கமலா கொடுத்த மூட்டையை, இருமுடி கட்டிக் கொண்டு போவது போல், எடுத்துக் கொண்டு கிளம்பினேன். மூட்டையில் என்ன என்று கேட்காதீர்கள். இட்லி, சட்னி, சாம்பார் என்று தம்பி குடும்பத்திற்குக் கொடுத்து அனுப்பி இருந்தாள் கமலா. ராமருக்குக் கூட தம்பி லட்சுமணன் மேல் இத்தனை பாசம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்.

  தொச்சுவின் காலனிக்கு போய் சேரும் போது மணி எட்டாகி இருந்தது. தூரத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது. நீச்சலும் கூச்சலும் உடன் பிறப்பு என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.

  எங்கே இருக்கிறது நீச்சல் குளம்? என்று யாரையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. கூச்சல் வந்த திக்கை நோக்கிப் போனேன். அதை நெருங்குவதற்குள் அங்கச்சி மற்றும் சில கொசுறுகள் என்னை நோக்கி ஓடி வந்தன. இரண்டு கைகளையும் விரித்தபடி தொச்சு ஓடி வந்தான். அவன் என்னை பார்த்தபடி வரவில்லை என்பது இரண்டு நிமிஷத்தில் தெரிந்துவிட்டது.
  ""என்ன, அத்திம்பேர்! பெரிய மூட்டையைக் கொண்டு வந்திருக்கீங்க? எதுவும் அனுப்பாதே என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன். இவ்வளவு அனுப்பி இருக்கிறாள். இந்த அம்மா எப்பவும் நான் சொல்றதை கேட்கவே மாட்டாள்'' என்றான்.

  ""நீ சொல்றதை அம்மா அப்படி கேட்காமல் இருக்கிறதாலதானே, நீயும் சொல்லிண்டே இருக்கே. ஒண்ணும் இல்லை... இட்லி, சாம்பார், சட்னி கொடுத்து அனுப்பி இருக்கிறாள். நீச்சல் கிளாஸ் ஆரம்பிக்கலாமா? எங்கே பப்ளிமாஸ்?'' என்றேன்.

  பப்ளி வந்தான்.

  ""சரி, சரி வாடா. ஆரம்பிக்கலாம்'' என்றேன்.

  ""எனக்கு ரொம்பப் பசிக்குது'' என்று இழுத்தான்.

  உடனே அங்கச்சி, ""இட்லியை பார்த்துட்டானோ இல்லையோ, பசி வந்துட்டது'' என்றாள்.

  ""சாப்பிட்டுவிட்டு நீச்சலடிக்கிறது உடம்புக்கு நல்லதில்லை, வாடா கண்ணா ! இன்னைக்கு நீச்சல் கிளாஸ் முடிந்ததும், பாவ்-பாஜி வாங்கித் தரேன்'' என்றேன்.

  ""பாவ்-பாஜியா! ஆவ்!'' என்று பெரிதாக ஏப்பம் விட்டான் பப்ளி.

  மளமளவென்று நீச்சல் உடையுடன் பப்ளி வந்தான். நான் முதலில் தண்ணீரில் இறங்கினேன்.

  (அடுத்த இதழில்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai