வெந்நீரின் அற்புதச் செயல்கள்!

கடும் காய்ச்சல் உள்ள நிலையில் ஒருவருக்கு தண்ணீர்தாகம் ஏற்பட்டால், வெந்நீரைச் சிறிது சிறிதாகப் பருகக் கொடுப்பது நம் முன்னோர் வழக்கத்திலிருந்தது.
வெந்நீரின் அற்புதச் செயல்கள்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
கரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கும், தொண்டையில் கரோனா தொற்று இருந்தால் உருக்குலைப்பதற்கும் தண்ணீர், டீ, காபி போன்றவற்றைச் சூடாகப் பருகினால் சாத்தியமாகும் எனும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றை ஆயுர்வேதம் அங்கீகரிக்கிறதா? நான் டீ, காபி அருந்துவதில்லை. சூடான தண்ணீர் அருந்தினால் நான் அடையும் நன்மைகளென்ன?
-சங்கரன், கடலூர்.
கடும் காய்ச்சல் உள்ள நிலையில் ஒருவருக்கு தண்ணீர்தாகம் ஏற்பட்டால், வெந்நீரைச் சிறிது சிறிதாகப் பருகக் கொடுப்பது நம் முன்னோர் வழக்கத்திலிருந்தது. ஆனால் அந்தக் காய்ச்சல், வாதம் மற்றும் கபதோஷங்களால் ஏற்பட்டிருந்தால் மட்டுமே இந்த ஏற்பாடு. பித்த தோஷத்தினால் ஏற்படும் காய்ச்சலில் ஷடங்கபானீயம் எனும் மூலிகைத் தண்ணீரைப் பருகத் தருவார்கள். 
மந்தமான காய்ச்சல், பசியின்மை, மூட்டுகளில் வலி, தலைவலி, மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், மலச்சிக்கல், சிறுநீர்த் தடை, குளிர்நடுக்கம், மந்தமானதன்மை, பார்வை மங்குதல், தலைசுற்றல், அலுப்பு ஆகியவை வாத, கப காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளாகும். இதில் பல அறிகுறிகள் கரோனா வைரஸ் தொற்றால் தென்படுவதையும் நீங்கள் காணலாம். அதனால் இந்தத் தொற்றுத் தொண்டையிலுள்ள போது, வெந்நீரைப் பருகுவதால் அந்த வைரஸுக்கு ஒரு STRUCTURAL DAMAGE உருவாக்குகிறதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. இந்நிலையில், வெந்நீரைப் பருகுவதால், அது செய்யும் அற்புதச் செயல்களை ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் வர்ணிக்கிறது.
1.தொண்டையிலுள்ள கபத்தை நீர்க்கச் செய்கிறது. அதனால் அதன் வெளியேற்றமானது எளிதாகிறது. நீர்வேட்கை இதன் மூலம் குறைகிறது.
2.வயிற்றிலுள்ள பசித்தீயைத் தூண்டிவிடுகிறது.
3.உடல் உட்புறக் குழாய்களை மிருதுவாக்கி, அதன் உட்புறங்களில் படிந்துள்ள அழுக்குகளான பித்தம், வாயு, வியர்வை, மலம், சிறுநீர் ஆகியவற்றை அதன் தன் பாதைகளுக்குத் திருப்பி, குழாய்களைச் சுத்தப்படுத்துகிறது.
4.அதிக உறக்கம், மந்தத்தன்மை, நாக்கில் ருசியின்மை போன்ற உபாதைகளைத் தீர்த்துவிடுகிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால், உயிரை உடலில் தங்கச் செய்து காப்பாற்றுகிறது என்கிறார் வாக்படர் எனும் முனிவர், தான் இயற்றிய "அஷ்டாங்கஹிருதயம்' எனும் ஆயுர்வேத நூலில். இதற்கு நேர்மாறாக , குளிர்ந்த நீரைப் பருகினால், வாத- கப தோஷங்களை ஒன்றிணைத்து உடல் உபாதைகளை மேலும் வலிமையாக்குகிறது.
இந்தத் தண்ணீரையே ஒருசில மூலிகைகளைக் கொண்டு காய்ச்சி அதையே வெந்நீராகப் பருகினால், மேலும் அது பல நன்மைகளைத் தரக் கூடும். கோரைக்கிழங்கு பத்து கிராம், ஐந்து கிராம் சுக்கு ஆகியவற்றைப் பெருந்தூளாக இடித்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, ஐநூறு மில்லி லிட்டராக வற்றியதும் வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாகப் பருகினால், வாத- கப சுரத்தில் ஏற்படும் பல உபாதைகளையும் நீக்கக் கூடிய சிறந்த குடி நீராகப் பயன்படும்.
தண்ணீரை கால் பங்கு வற்றுமளவிற்கு (உதாரணம் : 1 லிட்டர் தண்ணீர் 750 மிலி ஆக சுண்டு மளவு காய்ச்சுவது) காய்ச்சி, வெந்நீராகச் சாப்பிடுவது வாயு உபாதைகளுக்கு நல்லது. வயிற்றில் வாயு சத்தத்துடன் இரைச்சல் ஏற்படுத்துதல், ஏப்பமாகவோ, கீழ்வாயுவாகவோ வாயு வெளியேறாமல் ஸ்தம்பித்த நிலை போன்றவை இந்த வென்னீரால் நன்கு குணமடையும்.
தண்ணீரை அரைப் பங்கு மீதமாகுமளவில் சுண்ட வைத்துக் காய்ச்சிச் சாப்பிடுவது பித்த நோய்களுக்கு நல்லது. நல்ல கோடையிலும் (சித்திரை- வைகாசி) காற்றடிக்கும் காலத்திலும் (ஆனி - ஆடி) இப்படிப் பாதி அளவு குறுக்கிய நீரைப் பருகுவது நல்லது. 
கால் பங்கு மீதமாகுமளவில் குறுக்கிய நீர் முக்கியமாகக் கப நோய்களுக்கும், எல்லா நோய்களுக்கும் நல்லது. தொண்டையிலும் மார்பிலும் கபக்கட்டு, உணவு செரிமானமாகாமல் வயிறு கனத்திருத்தல், இருமல், காய்ச்சல் முதலிய நிலைகளில், இந்த வெந்நீர் கபத்தை இளக்கி வெளியேற்றும். சிறு நீரை அதிக அளவில் பிரிக்கும். உடல் லேசாகும். உணவு நன்கு செரிக்கும். காய்ச்சலின் தாபம் குறையும். இருமல் வேகம் அடங்கும்.
ஆறிய வெந்நீரை மறுபடியும் காய்ச்சக் கூடாது. "சுக்கு வெள்ளம்' என்பது கேரளத்தில் மிகவும் பிரசித்தம். மலையாளிகள் எங்கு வசித்தாலும் அவர்கள் வீட்டில் இந்த சுக்கு வெள்ளம் சூடாகக் கிடைக்கும். சுக்கு, தேங்காய் கொட்டாங்கச்சி, வறுத்த கொள்ளு, கருங்காலிக்கட்டை, சீரகம், கொத்துமல்லிவிதை முதலியவற்றை ருசிக்கு ஏற்பச் சேர்த்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடிக்கின்றனர். உடலில் காணும் தடிப்பும், சினப்பும், எளிதில் செரிமானமாகாத தன்மையும் விஷத்தன்மையும் நீங்க, இது மிகவும் பயன்படுகிறது.
பொதுவாகவே விலாப்பிடிப்பு, விலாவலி, சளி, வாதரோகம், தொண்டைக்கட்டு, வயிற்று உப்புசம், குடல் திமிர்த்திருத்தல், விக்கல், நெய், எண்ணெய் முதலியவை ஜீரணமாகாமல் ஏற்படும் காணாக்கடி போன்ற தடிப்பு, அஜீரணத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவற்றுக்கு வெந்நீர் அருந்துவது மிகவும் நல்லது.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com