தரகர் மகள்

கல்யாணத் தரகர் தங்கப்பன் ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பியபோது  உச்சிவெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.
தரகர் மகள்

கல்யாணத் தரகர் தங்கப்பன் ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பியபோது உச்சிவெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெயிலின் வெப்பஉக்கிரம்,மழையின் தணப்பு, அதிகாலையின் பனிப்பொழிவு, குடலையே நடுங்க வைக்கும் கடுங்குளிர், கோடையின் வெக்கை இவற்றையெல்லாம் பொருட்படுத்தினால் வீட்டில் அடுப்பெரியாது.
இத்தனைக்கும், சிலர்நூறோ, இருநூறோ தருவார்கள். பயணக் கட்டணத்திற்கே அது சரியாகி
விடும். அதிலும் சிலசமயம் மிச்சம் பிடித்து வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்கி வருவார் தங்கப்பன்.
வரன் பிடித்துப்போய் திருமணம் நடந்தால் வசதிக்கேற்ப ஐயாயிரமோ, பத்தாயிரமோ சுளையாகக் கிடைக்கும். மாதத்தில் ஒன்றோ, இரண்டோ இதுபோன்றுஅமைந்துவிட்டால் ஒரு மாதத்தைச் சுலபமாக ஓட்டிவிடுவார்.
அதுபோன்ற ஓர் எதிர்பார்ப்பில்தான் இப்போதும் போய்க் கொண்டிருக்கிறார் தங்கப்பன்.
பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே அந்த வீட்டை அடைந்துவிட்டார்.
அழைப்புமணியை அழுத்திவிட்டு, பிடறியில் பிசுபிசுத்து வழிந்த வியர்வையைத் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டே, ""ஸ்...'' என்றவாறு காத்திருக்க, கதவைத் திறந்த தணிகாசலம், ""அடடா, வாங்க தங்கப்பன். உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்'' என்றவாறு வரவேற்றார்.
உள்ளே நுழைந்து, ஹாலில் இருந்த சோபாவில், மின்விசிறியின் அடியில் அமர்ந்தபோது ஏதோ சொர்க்கத்துக்கே வந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது தங்கப்பனுக்கு. போதாத குறைக்கு தணிகாசலத்தின் மனைவி பிரேமா, ஃபிரிஜ்ஜிலிருந்து ஆரஞ்ச் ஜூஸ் வேறு கொண்டு வந்து உபசரிக்க, பருகிப் புத்துணர்ச்சி பெற்றார்.
""சொல்லுங்க தங்கப்பன். என் மகன் கோபிக்காக எத்தனை பெண்களைப் பார்த்திருக்கீங்க?'' என்று கேட்டுக் கொண்டே எதிர்சோபாவில் அமர்ந்தார் தணிகாசலம்.
ஜோல்னா பையிலிருந்து பொறுக்கி எடுத்து நான்கு வண்ணப் புகைப்படங்களை ஸ்டூல் மீது பரப்பினார் தங்கப்பன்.
""மொதல் பொண்ணு பி.இ., படிச்சிருக்கு. இரண்டாவது எம்.காம்., படிச்சிருக்கு. அடுத்தது பி.காம்., படிச்சிட்டு பேங்க்ல ஒர்க் பண்ணுது. கடைசியா இருக்கிற ஃபோட்டோ கொஞ்சம் வசதியான இடத்துப் பொண்ணோடது. படிப்பு ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லேன்னாலும், ஏகப்பட்ட சொத்துக்கு வாரிசு...'' என்று அடுக்கிக் கொண்டே போனார் தங்கப்பன்.
""இதோ பாருங்க, வேலைக்குப் போற பொண்ணு வேண்டாம்னு ஏற்கெனவே கோபி சொல்லிட்டான். நல்ல வசதியான இடத்திலிருந்து பொண்ணு எடுத்தா அவ ""குடும்பப்பாங்கான வீட்டு வேலை
களுக்கு ஒத்து வர மாட்டாங்கறது என் வீட்டுக்காரியோட அபிப்பிராயம். ஆக, நீங்க கொண்டு வந்திருக்கிற இந்த நாலு இடங்கள்ல ரெண்டு கேன்சல். மீதியுள்ள ரெண்டைத்தான் பார்க்கணும் என்றார்
தணிகாசலம்.
""அதனால் என்னங்க? உங்க விருப்பம்தானே முக்கியம்? கொண்டு வர வேண்டியது என் வேலை. தேர்வு செய்து விசாரித்துக் கொடுப்பது உங்க பொறுப்புதானே?'' என சூட்சுமமாகப் பேசினார் தங்கப்பன்.
இறுதியாக பி.இ., படித்த பெண்ணையும்,
எம்.காம்., முடித்த பெண்ணையும் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். கோபியும் பி.இ., படித்து இன்ஜினியராக இருப்பதால் பி.இ., படித்த பெண்ணையே விரும்பினான்.
பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் தெரிந்தது.
அந்த நேரத்தில்தான் நண்பன் ஒருவன் வந்து சொன்ன சேதி கோபியைக் கலங்கடித்தது.
""கோபி..உனக்காகப் பார்த்திருக்கிற பொண்ணுக்கும், வேறு ஒரு பையனுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருக்குடா. எதுக்கும் ஜாக்கிரதையா இருடா.'' என்பதுதான் அவனுடைய எச்சரிக்கையாக இருந்தது.
அவன் சொன்னது உண்மைதானா என கண்டறியும் காரியத்தில் இறங்கினான் கோபி. அது நூறுசதவிகித உண்மை என்பதை ஒரேவாரத்தில் கண்டு
பிடித்தான். ஹோட்டலில், பேருந்துநிலையத்தில் ஓர் அந்நிய ஆடவனுடன் அவள் காணப்பட்டாள். மனமுடைந்து போனான் கோபி.
அந்த இடம் நிராகரிக்கப்பட்டது.

வீட்டுக்குள் நுழைந்து அமர்ந்தார் தங்கப்பன்.
காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டு அவரருகில் அமர்ந்தாள் மனைவி மகேஸ்வரி.
""என்னங்க, ஊர், உலகத்துக்கே பல வரன்களைக் கொண்டு வர்றீங்க. உங்களுக்கும் கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருப்பதை மறந்துட்டீங்களா? அவளையும் காலாகாலத்துல கட்டிக் கொடுக்க வேணாமா?''
மகேஸ்வரியை உற்று நோக்கினார்.
""அதுபத்தி எனக்குக் கவலை இல்லைன்னு நீ நினைக்கிறாயா மகேஸ்வரி? விரலுக்குத் தகுந்ததுதானே வீக்கம்? நம் வசதிக்கு ஏத்த வரன்அமைய வேணாமா?''
""இத்தனை நாளாகவும் அமையலையா என்ன?''
""நீ கேக்கறது வாஸ்தவம் தான். ஓரிருமுறை அரசல், புரசலா என் விருப்பத்தைச் சில பேர்கிட்டச் சொன்னப்ப, அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கலை. தரகர் பொண்ணுன்னா ஏளனமாப் பார்க்கிறாங்க.'' தன் மனவேதனையை வெளிப்படுத்தினார் தங்கப்பன்.
""ஏன், தரகருங்க மனுஷருங்க இல்லையா?'' அப்பாவியாய் கேட்ட மனைவியை நிமிர்ந்து நோக்கினார் தங்கப்பன்.
""இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது?''
""இதோபாரு, மகி... உனக்கு ஊர், உலகம் புரியமாட்டேங்குது. இப்பவெல்லாம் அந்தஸ்து நிறையவே பார்க்குறாங்க. வசதியில் கொஞ்சங் கூட குறைஞ்சிருந்தா முகம் சுளிக்கிறாங்க என்றவர், மகேஸ்வரியின்முகம்வாடிப் போனதைக் கண்ணுற்றவர், "சட்'டென சுதாரித்துக் கொண்டார்.
""நீ எதுக்கும் கவலைப்படாதே மகி.. ப்ரியாவுக்கு ஏத்த வரன் இல்லாமலா போய்விடும்? ஆண்டவன் நிச்சயமா அவளுக்கு ஒரு வரனை வெச்சிருப்பார். சரியான நேரத்துல அது அமையும்.'' என ஆறுதலாய்ச் சொல்லிவிட்டு எழுந்துக் கொண்டார் தங்கப்பன்.
ஒரு மாதம் ஓடியது.
""யோவ், தங்கப்பன்.. நீ உடனே கிளம்பி வா...'' என அலைபேசியில் தணிகாசலம் அழைக்கவும் பதறிப் போனார் தங்கப்பன்.
"ஏதோ விவகாரமான மேட்டர்தான்' என உள்மனம் உறுத்தியது. இதுவரையில் தணிகாசலம் தன்னை இப்படி ஒருமையில் அழைத்தது கிடையாது.
ஒருவித நடுக்கத்துடன்தான் அவர் வீட்டை அடைந்தார்.
""ஆமா, நீ உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே? கண்ட, கண்ட கண்றாவிங்களையெல்லாம் என் பையன் தலையில கட்டிடலாம்னு பார்க்கிறாயா? உனக்கு எப்படியாவது கமிஷன் கிடைச்சா போதும்னு பார்க்கிறாயா? உன்னால ஒரு பையனோட வாழ்க்கைப் பாழாகுதேன்னு உனக்குக் கொஞ்சங் கூட அக்கறை இல்லையா? வாங்குற காசுக்கு நேர்மையா உழைக்கலாமுன்னு உனக்குத் தோணலையா?''
தங்கப்பனைக் கடும் வார்த்தைகளால் சரமாரியாக விளாசி விட்டார் தணிகாசலம்.
தடுமாறிப் போன தங்கப்பன், ""ஐயா, நீங்க என்ன சொல்றீங்க?'' என வினவினார்.
""நான் என்னத்தைச் சொல்றது? என் பையன் வாயால கேளு'' என்றவர், மேற்கொண்டு அங்கிருக்கப் பிடிக்காமல் எழுந்து வெளியே போய்விட்டார் தணிகாசலம்.
கோபியைப் பரிதாபமாகப் பார்த்தார் தங்கப்பன்.
அவன் பேசினான்:
""நீங்க கொண்டு வந்த இன்ஜினியரிங் பொண்ணு ஏற்கெனவே வேறு ஒருவனோடு ஊர்சுத்திக்கிட்டிருக்கா. இப்ப என்னடான்னா, எனக்காக நீங்க பேசிய எம்.காம்., படிச்ச பொண்ணு காதலனோடு ஓடிப் போயிட்டாளாம். அதான் அப்பா செம கடுப்பாயிட்டார்.''
""வாஸ்தவம்தானே தம்பி? காலம் ரொம்பவே கெட்டுக் கிடக்கு. யார் நல்லவர்? யார் கெட்டவர்னு கண்டுபிடிக்கிறதே கஷ்டமாயிருக்கு. என் வேலை ஒரு இடத்தைக் கொண்டுவந்து காட்றதுதானே? மேற்கொண்டு அவங்க எப்படிப்பட்டவங்கன்னு அலசி, ஆராய்ந்து பார்க்கறது உங்க பொறுப்பு இல்லீங்களா?'' என்றார் தங்கப்பன்.
அவர் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்தான் கோபி.
""சரி, நீங்க போங்க. முடிஞ்சா வேறு இடம் பாருங்க. நான் வேணா அப்பாகிட்ட பேசிக்கிறேன்'' என்று அவரைஅனுப்பி வைத்தான் கோபி.
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தான் கோபி.
அவனைச் சுற்றி கல்லூரி மாணவிகள் பஸ்ஸýக்காகக் காத்திருந்தனர்.
யாரோ ஒரு வெட்டிப்பயல் மாணவி ஒருத்தியின் பின்னால் தட்டிவிட்டு மறைந்தான்.
"வெடுக்'கென திரும்பிப் பார்த்தாள்அந்த மாணவி.
சரியாக அவளுக்குப் பின்னால் நின்றிருந்தான் கோபி.
""ஏய், என்ன கொழுப்பா?'' என்று கேட்டாள்.
திடுக்கிட்டான் கோபி.
""எ..என்ன சொல்றீங்க..?''
""செஞ்சதும் செஞ்சுட்டு ஒண்ணும் தெரியாதவன்போல் நடிக்கிறியா?''
வியர்த்துவிட்டான்.
உடனே அருகில் நின்றிருந்த இன்னொரு மாணவி, ""உன்னைத் தட்டிவிட்டுப் போனது அதோ போறான் பாரு, அந்தப் பொறுக்கித்தான். இவர் பாவம். இவரைப் போய் நீ..?'' என்று இடைபுகுந்தாள்.
சூழ்நிலை உணர்ந்து தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டாள்அந்த மாணவி.
கோபிக்கு போன உயிர் திரும்பக் கிடைத்த உணர்வு. பார்வையாலேயே நன்றி சொன்னான், அவனைக் காப்பாற்றிய மாணவிக்கு.
அவள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
பிறிதொரு சமயம் அதே மாணவி, பார்வையற்ற ஒருவரை சாலையைக் கடக்க உதவிக் கொண்டிருந்ததையும் பார்த்தான் கோபி.
அன்று ஒரு வேலையாக அந்தப் பக்கம் போயிருந்தான் கோபி.
அருகில்தானே தங்கப்பன் வீடு என நினைவுக்கு வர, ஓர் எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில் போனான்.
கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான்.
சிறிதுநேரம் கழித்து மெல்லத் திறந்தது கதவு.
முழுக்கத் திறக்காமல் இரண்டு அங்குலமே திறந்த கதவின் இடைவெளியிலிருந்து அந்த தேன் குரல் கசிந்தது.
""யாரு..?''
""தங்கப்பன் இருக்காருங்களா?''
""அப்பா வெளியே போயிருக்காரு. நீங்க..?''
""கோபி வந்துட்டுப் போனாருன்னு சொல்லுங்க.''
""சரி..'' "டபக்'கென கதவு சாத்திக் கொண்டது.
கோபி தெருவில் இறங்கி நடக்க, எதிரே தங்கப்பன்.
""அடடா..வாங்க தம்பி... ஏது இவ்வளவு தூரம்?''
""ஒரு வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாமுன்னு..''
""அப்படியா? ரொம்ப சந்தோஷம். வாங்க, காபி சாப்டுட்டுப் போகலாம்.''
""இன்னொரு நாளைக்கு வர்றேனே..'' என மழுப்பப் பார்த்தவனை, ""அட, வாங்க தம்பி'' என வலுக்கட்டாயமாய்த் தள்ளிக் கொண்டு போனார் தங்கப்பன்.
ஸ்டீல்சேரில் அவனை அமரச் செய்துவிட்டு, ஸ்டூலில் அமர்ந்து கொண்டார்.
சிறியவீடுதான். ஆனால், துப்புரவாக இருந்தது.
""வீட்ல யாரும் இல்லையா?''
""என் மனைவி கடைத்தெருவுக்குப் போயிருக்கா. மகள் ப்ரியா இருக்கா என்றவர், ""அம்மா, ப்ரியா... காபி போடம்மா என குரல் கொடுத்தார்.
பேசிக் கொண்டிருக்கும்போதே காபியைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மின்னலென மறைந்தாள் ப்ரியா.
கணநேரத்தில் கிறங்கிப் போனான் கோபி.
அவள் வேறு யாருமில்லை, சிலநாட்களுக்கு முன் கோபியை ஓர் இக்கட்டிலிருந்து காப்பாற்றியவள்தான். அன்று மட்டும் அவள் தலையிட்டு உண்மை நிலவரத்தை விளக்காமல் இருந்திருந்தால், பெண் போலீஸ் வந்து ஈவ்டீஸிங்கில் உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டியிருப்பார்கள்.
இதுவரைஅவன் பார்த்த பெண்களில் இவளைப் போன்ற ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை. நேர்மை, நியாயம், நீதிக்குத் துணை போகும் அவளின்
துணிச்சல், பிறருக்கு உதவும் மனப்பான்மை எல்லாமே அவனை அசர வைத்தது.
காபியும் பிரமாதம்.
""உங்க பொண்ணு போட்டோ இருக்குங்களா?''
""எதுக்கு தம்பி?''
""இல்லை, என் அலுவலகத்தில் யாராவது இருந்தால் பார்க்கலாமேன்னுதான்...'' எனஇழுத்தான்
""பி.எஸ்.ஸி., ஃபைனல் இயர் படிக்கிறா தம்பி. படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிடணும்னு நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன். காலம் கனியணுமே, ஹூம்...'' என்றவாறு பையிலிருந்த ப்ரியாவின் புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தார் தங்கப்பன்.
வாங்கிக் கொண்டு விடைபெற்றான் கோபி.
""நீங்க என்ன சொல்றீங்க..?'' என பதறிவிட்டார் தங்கப்பன்.
""உட்காருங்க தங்கப்பன் '' என்றார் தணிகாசலம்.
அவர்அமர்ந்ததும்தொடர்ந்தார்:
""இதோ பாருங்க தங்கப்பன்.. என் மகன் கோபி சொன்ன அனைத்து விஷயங்களையும், அவனுடைய நியாயமான வாதங்களையும் வைத்து ஆர அமர யோசித்த பிறகுதான் நானும் என் மனைவியும் இந்த முடிவுக்கு வந்திருக்கோம். என் வீட்டுக்கு மகாலட்சுமியா வர உங்க பொண்ணு ப்ரியாவுக்குத்தான் தகுதி இருக்கு. பொய் பித்தலாட்டங்கள் நிறைந்த இந்த உலகில் உண்மையான, அப்பழுக்கற்ற, நல்லொழுக்கமாக வளர்க்கப்பட்ட உங்க பொண்ணுதான் இந்த வீட்டு மருமகள். போய் ஆக வேண்டிய காரியங்களை கவனியுங்க. எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதீங்க. எதுவானாலும் எங்கிட்ட சொல்லுங்க. நான் கவனிச்சுக்கிறேன்.''
""ஐயா... இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்'' தணிகாசலத்தின் கரம்பற்றி தழுதழுத்தார் தங்கப்பன்.
""ஐயா, சார்... இதெல்லாம் வேணாம். சம்பந்தின்னு கூப்பிடுங்க.''
தங்கப்பனைக் கட்டித் தழுவிக் கொண்டார் தணிகாசலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com