'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 10

ராஜீவ் காந்தியும் மற்றவர்களும் கல்கத்தாவிலிருந்து வந்த விமானம் மதியம் சுமார் 3 மணி அளவில் தில்லி வந்து சேர்ந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 10


ராஜீவ் காந்தியும் மற்றவர்களும் கல்கத்தாவிலிருந்து வந்த விமானம் மதியம் சுமார் 3 மணி அளவில் தில்லி வந்து சேர்ந்தது. அவர்களை வரவேற்க அமைச்சரவைச் செயலாளருடன் அருண் நேருவும் விமானநிலையம் சென்றிருந்தார். அங்கிருந்து அனைவரும் நேராக "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு விரைந்தனர்.

பி.வி. நரசிம்ம ராவ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், சில மாநில முதல்வர்கள், பிரதமரின் முதன்மைச் செயலாளரான பி.சி. அலெக்சாண்டர் ஆகியோர் ஏற்கெனவே அங்கே குழுமி இருந்தனர். பி.சி. அலெக்சாண்டரின் பதிவுப்படி, அருண் நேருவும் வேறு சில அமைச்சர்களும், குடியரசுத் தலைவரின் வருகைக்காகக் காத்திருக்காமல், குடியரசுத் துணைத் தலைவர் ஆர். வெங்கட்ராமனால் ராஜீவ் காந்திக்கு உடனடியாக பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள்.

மருத்துவமனைக்கு பிரணாப்தா வந்ததும் இந்தத் தகவலை அவரிடம் தெரிவித்தவர் பி.சி. அலெக்சாண்டர். 

குடியரசுத் தலைவரை நம்பாமல் ஓரங்கட்டி, குடியரசுத் துணைத் தலைவர் மூலம் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது சட்டச் சிக்கலுக்கு வழிகோலும் என்பதை விளக்கினார் பிரணாப்தா.

குடியரசுத் தலைவர் வெளிநாடு சென்றபோது, தனது பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளும் அதிகாரத்தை குடியரசுத் துணைத் தலைவருக்கு வழங்கி இருக்கவில்லை. அந்த நிலையில், தான் புறக்கணிக்கப்பட்டு, தனது அதிகாரம் இன்னொருவரால் எடுத்துக் கொள்ளப்படுவதை எந்தக் குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏற்கெனவே, மனக்கசப்பில் இருக்கும் கியானி ஜெயில்சிங் அதை நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். "குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செல்லாது என்று அறிவித்துவிட்டால், அது மிகப் பெரிய அரசியல் குழப்பத்துக்கு வழிகோலும்' என்கிற பிரணாப்தாவின் வாதத்தை அங்கீகரித்தனர் பி.சி. அலெக்சாண்டரும், பி.வி. நரசிம்ம ராவும்.

பிரணாப்தாவும், பி.வி. நரசிம்ம ராவும் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான 1, அக்பர் சாலை அலுவலகத்துக்கு விரைந்தனர். ஆர்.கே. தவானும், காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜி.கே. மூப்பனாரும் ஏற்கெனவே அங்கே இருந்தனர். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் சார்பில் ராஜீவ் காந்தி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் ஒப்புதல் பிறகு பெறப்படும் என்றும் குறிப்பிட்டு, பொதுச்செயலாளர் என்கிற முறையில் ஜி.கே. மூப்பனார் கையொப்பமிட்ட கடிதத்துடன், பிரணாப்தாவும், பி.வி. நரசிம்ம ராவும் கையொப்பமிட்ட தீர்மானத்தை இணைத்து எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தனர்.

தில்லி வந்திறங்கிய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் நேராக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார். குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் எந்தவித மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு உடனடியாக ராஜீவ் காந்திக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க சம்மதித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் ஐந்து பேர் கொண்ட ராஜீவ் காந்தி அமைச்சரவை குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி, பி.வி. நரசிம்ம ராவ், பி. சிவசங்கர், பூட்டா சிங் ஆகிய நால்வரும்தான் ஏனைய அமைச்சர்கள். 

இந்த நேரத்தில், இன்னொன்றையும் கூறத்தான் வேண்டும். இத்தனை களேபரங்கள் நடக்கும்போது, குடியரசுத் துணைத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் எந்தவிதக் கருத்தும் கூறாமல் அமைதி காத்தார். ராஜீவ் காந்திக்கு அவசர அவசரமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. ""அவரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தால், அவர் நிராகரித்திருப்பார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நன்றாகத் தெரிந்த பழுத்த அனுபவசாலி அவர்'' என்று அன்றைய நிகழ்வு குறித்து ஒருமுறை நான் கேட்டபோது பிரணாப்தா தெரிவித்ததை இங்கே குறிப்பிட வேண்டும். 

இதற்கிடையில்தான், பிரணாப்தா பிரதமராக ஆசைப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. ஒருபுறம், பிரணாப்தாவுக்கு எதிரான வதந்திகள் பரப்பப்பட்டன என்றால், இன்னொருபுறம், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காட்டுத் தீயாகப் பரவியது, பரவச் செய்யப்பட்டது. அதன் பின்னணியிலும் அருண் நேருவும் அவருக்கு நெருக்கமானவர்களும் இருந்தனர்.

இதற்கிடையில், அருண் நேருவின் ஒப்புதலின்படிதான் ஜெகதீஷ் டைட்லர், ஹெச்.கே.எல். பகத், சஜ்ஜன் குமார் உள்ளிட்ட தில்லி காங்கிரஸ் தலைவர்களால் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தூண்டிவிடப்பட்டது என்கிற குற்றச்சாட்டு உண்டு. அருண் நேரு தவிர ஏனைய தலைவர்கள் பலர் அந்த வழக்கில் தண்டனையும் பெற்றனர். 

டிசம்பர் மாதமே மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. வேட்பாளர்கள் தேர்வின்போது, பிரணாப்தா பெரும் பங்கு வகித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. 

வேட்பாளர் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது ஒருசில நாட்கள் நான் தில்லியில் இருந்தேன். இன்று தமிழக காங்கிரஸின் முன்னணித் தலைவர்களாக வலம் வருபவர்கள் சிலர் பிரணாப்தாவால்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்றனர் என்பது எனக்குத் தெரியும். பிரணாப்தாவுக்கும், ஜி.கே. மூப்பனாருக்கும் நெருக்கமான நட்பு நிலவியதால், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தந்தார் பிரணாப்தா.

அதேபோல, ஆர்.வெங்கட்ராமனிடமும், சி. சுப்பிரமணியத்திடமும் மிகுந்த மரியாதை பிரணாப் முகர்ஜிக்கு உண்டு. ""இரண்டு பேருமே தலைசிறந்த நிர்வாகிகள், நேர்மையானவர்கள்'' என்று அவர்கள் குறித்து அடிக்கடி பாராட்டுவார். சி. சுப்பிரமணியம் நிதியமைச்சராக இருந்தபோது அவரது துணை அமைச்சராக பிரணாப்தா பணியாற்றியிருக்கிறார். ஒருசிலருக்கு அவர்கள் சிபாரிசு செய்தபோது, சற்றும் தயங்காமல் அந்த வேட்பாளர்களைப் பிரணாப்தா பட்டியலில் இணைத்து வாய்ப்பு வழங்கினார். ஆனால் அது குறித்து அவர் ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை.

ரங்கராஜன் குமாரமங்கலம் பிரணாப்தாவின் தேர்வு. பிரணாப்தாவின் அரசியல் குருவான அஜாய் முகர்ஜியின் சகோதரியின் மகள்தான் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தாயார் கல்யாணி முகர்ஜி. அதனால் ரங்கராஜன் பிரணாப்தாவுக்கு செல்லப் பிள்ளை என்றுதான் கூற வேண்டும்.

1984 தேர்தலில் வைஜயந்தி மாலாவுக்கு தென்சென்னைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இது பற்றி பிரணாப்தா என்னிடம் வேடிக்கையாக, ""ஜெயலலிதாவுக்குப் போட்டியாகக் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் ஒரு கனவுக் கன்னியைக் களமிறக்குகிறோம், தெரியுமா?'' என்று சொன்னார்.

அதற்கு நான் சொன்ன பதிலைக் கேட்ட பிரணாப்தா, விழுந்து விழுந்து சிரித்தார். நான் என்ன சொன்னேன் தெரியுமா?

""திறமையும் நேர்மையும் கொண்ட சிறந்த நாடாளுமன்றவாதியை தோற்கடிக்க, முன்னாள் கனவுக் கன்னியைக் களமிறக்கி இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!''

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வைஜயந்தி மாலாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் இரா. செழியன்!

எதிர்பார்த்தது போலவே, இந்திரா படுகொலையால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றியை அடைந்தது. 514 மக்களவைத் தொகுதிகளில் 404 இடங்களைப் பெற்றிருந்தது. 1984 டிசம்பர் 31 அன்று, பிரணாப் முகர்ஜி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம், ராஜீவ் காந்தியை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. 

மாலையில் ராஜீவ் காந்தியின் தலைமையிலான புதிய அமைச்சரவை  குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றது. மூன்று மணி சுமாருக்கு அறிவிப்பு வந்ததும் சென்னையில் இருந்த நான் அதிர்ந்தேன். அமைச்சரவைப் பட்டியலில், நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பிரணாப் முகர்ஜியின் பெயர் இடம் பெறவில்லை. உடனே பிரணாப்தாவின் அலுவலகத்துக்கு டிரங்க் கால் போட்டுப் பேசினேன்.

""பிரணாப்தா வீட்டிலிருந்து அலுவலகம் வரவில்லை. தொலைக்காட்சியில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என்று தெரிவித்தார்கள். என்னாலேயே தாங்க முடியவில்லை என்றால், அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தபோது தாங்க முடியாத சோகம் என்னைக் கவ்வியது. அழுகை வந்துவிட்டது. அன்று இரவில் நான் சரியாகத் தூங்கவில்லை. 

அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்ட அடுத்த நாளே, பிரணாப்தா தனது பங்களாவைக் காலி செய்வதாகக் கடிதம் அனுப்பிவிட்டார். சாதாரண உறுப்பினர்களுக்கான இருப்பிடம் தனக்கும் ஒதுக்கப்பட்டால் போதும் என்று தெரிவித்திருந்தார். இது புதிதல்ல. பதவியில் இல்லாதபோது, அவர் பெரிய பங்களாக்களில் தங்குவதில்லை.

ஒருமாத இடைவெளிக்குப் பிறகு நான் தில்லி சென்றபோது, பிரணாப்தா கல்கத்தா சென்றிருந்தார். முன்புபோல யாரும் அவரை சந்திக்க வருவதில்லை என்று உதவியாளர்கள் தெரிவித்தனர். எம்.கே. முகர்ஜியும் ஏனைய உதவியாளர்களும் நிரந்தர விசுவாசிகள் என்பதால் வழக்கம்போலத் தொடர்ந்தனர்.

அமைச்சரவையிலிருந்து பிரணாப்தா விலக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றம், நிதியமைச்சராக விஸ்வநாத் பிரதாப் சிங் பொறுப்பேற்றது. பிரதமர் ராஜீவின் அமைச்சரவையில் அருண் நேரு, அருண் சிங் இருவரும் இடம் பெற்றனர் என்றால், ராஜீவ் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக சத்தீஷ் சர்மா உயர்ந்தார். 

1984 டிசம்பரில் அமைச்சரவையிலிருந்து பிரணாப்தா அகற்றப்பட்டதற்குப் பிறகு, அவர் சிறிது காலம் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த மூன்று ஆண்டுகள் ராஜீவ் காந்தியை சந்திக்கவோ, ஏன் அமைச்சரவையிலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டார் என்று கேட்கவோ இல்லை. இடைப்பட்ட காலத்தில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிது காலம் ராஷ்ட்ரீய சமாஜவாதி காங்கிரஸ் என்கிற கட்சியை பெயரளவுக்கு நடத்தினார். 1988-இல் ராஜீவ் காந்தி வலிய அழைத்து அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்குள் மிகப் பெரிய பிரளயங்கள் ஏற்பட்டிருந்தன.

ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்னையால் ராஜீவ் காந்தி அரசு மிகப் பெரிய எதிர்ப்பலையைச் சந்திக்க நேர்ந்தது. பாதுகாப்புத் துறை இணையமைச்சராக இருந்த அருண் சிங், ஏன் ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் வெளிவருவதற்கு முன்னால் அமைச்சரவையிலிருந்து விலகினார்? நிதியமைச்சராக இருந்த வி.பி. சிங்கிற்குத் தெரியாமலோ, அவரது ஒப்புதல் பெறாமலோ, ஃபோபர்ஸ் பீரங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்குமா? அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்த வி.பி. சிங், அருண் நேரு, முஃப்தி முகம்மது சயீது உள்ளிட்டவர்கள், 1987  ஏப்ரல் மாதம் வெளியேறி, ஃபோபர்ஸ் ஊழலுக்கு எதிராக கோஷம் எழுப்பியதன் பின்னணி என்ன? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுப்பலாம். 

1988-இல் வி.பி. சிங், அருண் நேரு உள்ளிட்டவர்கள் வெளியேறி ராஜீவ் காந்தியின் மீது ஊழல் சேற்றை வாரி இரைத்து விட்டிருந்த நிலையில்தான், 

பிரணாப்தா மீண்டும் அழைக்கப்பட்டார். பிரணாப்தா அகற்றி நிறுத்தப்பட்ட மூன்றாண்டு இடைவெளியின் காரணமாக இந்தியா எதிர்கொண்ட சோதனைகள் ஃபோபர்ஸ் ஊழலும், ராஜீவ் காந்தியின் தேர்தல் தோல்வியும், காங்கிரஸின் செல்வாக்குச் சரிவும் மட்டுமே அல்ல. இன்னும் பல இழப்புகளை, தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டது.

பிரணாப்தா அமைதியாகத் தனது பைப்பைப் புகைத்தபடி தனக்கு இழைக்கப்படும் அவமானங்களைச் சகித்துக் கொண்ட அந்த மூன்று ஆண்டுகள் மிகவும் கொடுமையானவை. தான் தலைவியாகப் போற்றிய இந்திரா காந்தியின் மகனைக் காப்பாற்ற முடியாத அவரது கையறு நிலைக்கு நாங்கள் சாட்சியாக இருந்தோம்.

இத்தனைக்கும் காரணமான அருண் நேரு, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகும்கூட அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவராகத் தொடர்ந்தார் என்பதுதான் என்னால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியாத புதிர். பிரதமரானதைத் தொடர்ந்து வி.பி. சிங்கும், மண்டல்  கமிஷன் என்று தனது இலக்கை திசை திருப்பிக் கொண்டாரே தவிர, ஃபோபர்ஸ் ஊழல் குறித்து எதுவும் அதிகம் பேசாமல் இருந்ததும் வியப்பை ஏற்படுத்துகிறது. பிரணாப்தா அகற்றி நிறுத்தப்பட்டது இதற்கெல்லாம் தானோ?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com