'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 12

அதிகாலை ஐந்து மணிக்கு பெங்களூரு மெயில் "சிட்டி' ரயில்நிலையத்தை அடைந்தது. மாலையில் பிரணாப்தாவின் விமானம் வரும்வரையில் காத்திருந்தாக வேண்டும்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 12


அதிகாலை ஐந்து மணிக்கு பெங்களூரு மெயில் "சிட்டி' ரயில்நிலையத்தை அடைந்தது. மாலையில் பிரணாப்தாவின் விமானம் வரும்வரையில் காத்திருந்தாக வேண்டும். ரயில்நிலையத்திலேயே உள்ள ஓய்வு அறையில் (ரிடையரிங் ரூம்) நல்லவேளையாக ஓர் அறை கிடைத்தது. ஒன்பது மணிக்குத் தங்கும் அறையிலிருந்து கிளம்பிக் கீழேவந்து, ரயில்நிலையத்தில் அமைந்திருந்த டெலிபோன் பூத்தில் நுழைந்தேன்.

ராமகிருஷ்ண ஹெக்டே அப்போது கர்நாடக முதல்வராக இருந்தார். ஹெக்டேயுடன் பழக்கமும், நெருக்கமும் இல்லாத தில்லி பத்திரிகையாளர்கள் மிகமிகக் குறைவு. மொரார்ஜி தேசாய் ஆட்சிக் காலத்தில் அவர் ஜனதா கட்சியின் செயலாளராக இருந்தபோதே அவருடன் எனக்குப் பழக்கம் இருந்தது. 

ராமகிருஷ்ண ஹெக்டேயைப் போல வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் மதித்துப் பழகும் ஒரு தலைவரைப் பார்க்க முடியாது. ராமகிருஷ்ண ஹெக்டேயின் அரசியல் வாழ்க்கை 1954-இல் உத்தர கன்னட காங்கிரஸ் கமிட்டித் தலைவரானதிலிருந்து தொடங்குகிறது. வீரேந்திர பாட்டீலும், ராமகிருஷ்ண ஹெக்டேவும் நிஜலிங்கப்பாவின் சீடர்களாக அரசியலில் களமிறங்கியவர்கள். நிஜலிங்கப்பா - வீரேந்திர பாட்டீல் அமைச்சரவைகளில் ஹெக்டே அமைச்சராக இருந்திருக்கிறார்.

முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவின் வீட்டிற்குத்தான் எனது முதல் அழைப்பு. அவரது தனி உதவியாளர் நாகராஜ்தான் எடுத்தார். ஹெக்டேவுக்கு யாரையெல்லாம் தெரியுமோ, அவர்களையெல்லாம் நாகராஜுக்கும் தெரியும். நான் பெங்களூரு வந்திருப்பதாகவும், இரண்டு நாள் தங்க இருப்பதாகவும், முடிந்தால் முதல்வரை மரியாதை நிமித்தம் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

""எங்கே தங்கியிருக்கிறீர்கள்?''

""சிட்டி ஸ்டேஷனில் உள்ள ஓய்வு அறையில்...''

""ஏன் அங்கு போய்த் தங்குகிறீர்கள்?''

""எனக்கு பெங்களூருவில் யாரைத் தெரியும்? வேறு எங்கே போய்த் தங்குவது?''

""என்னைத் தெரியுமே.. நேற்றைக்கே அழைத்திருந்தால் ஏற்பாடு செய்திருப்பேனே.. சரி, சுமார் 11 மணிக்கு என்னை இந்த எண்ணில் அழையுங்கள். நான் வீட்டில்தான் இருப்பேன்.''

இணைப்பைத் துண்டித்து விட்டார் நாகராஜ். அடுத்தாற்போல, பிரணாப்தா தந்திருந்த  தொடர்பு எண்ணை அழைத்தேன். இரண்டு மூன்று முறை அழைத்தும் யாரும் எடுக்க வில்லை. 

ரயில்நிலைய டெலிபோன் பூத் என்பதால் பலர் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தார்கள். அவரவர் அவசரம் அவரவருக்கு. அவர்களை மேலும் ஆத்திரப்படுத்த விரும்பாமல் தொலைபேசிக் கூண்டிலிருந்து வெளியே வந்து, வரிசையில் கடைசி ஆளாகப் போய் நின்று கொண்டேன்.

ஒருவழியாகத் தொலைபேசித் தொடர்பு கிடைத்தது. நான் யார் என்பதையும், பிரணாப்தா என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லி இருப்பதையும் தெரிவித்தேன்.

""மாலை ஏழரை மணிக்குத்தான் விமானம் வருகிறது. நீங்கள் விமான நிலையத்துக்கு வந்து விடுங்கள். அங்கே பார்க்கலாம்.''

""நீங்கள் யார்  என்று நான் தெரிந்து கொள்ள லாமா?''

""ஐ ஆம் குண்டுராவ்'' என்று கூறித்தொடர்பைத் துண்டித்துவிட்டார் அவர்.

எனக்கு வியர்த்து விட்டது. முன்னாள் முதல்வர் குண்டுராவின் தொலைபேசி எண்ணைப் பிரணாப்தா தந்திருப்பார் என்று நான் எதிர்பாக்கவே இல்லை.

பதினொன்றரை மணிக்கு முதல்வர் ஹெக்டேயின் வீட்டை அழைத்தேன்.  நாகராஜ் மறுமுனையில்.

""முதல்வரிடம் தெரிவித்து விட்டேன். நீங்கள் மெட்ராஸ் திரும்புவதற்குள் கட்டாயம் சந்திப்பதாகத்  தெரிவித்திருக்கிறார். இன்றே முடியுமா, நாளையா என்று தெரியாது. உங்களுக்கு பாலாப்ரூயி கெஸ்ட் ஹெளசில் அறை ஒதுக்கச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ரயில்வே ஸ்டேஷன் ஓய்வு விடுதியைக் காலிசெய்துவிட்டு அங்கே போய்விடுங்கள். உங்களைத் தொடர்பு கொள்ளவும் அது வசதியாக இருக்கும்...''

""எங்கே இருக்கிறது அந்த கெஸ்ட் ஹெளஸ்? எப்படிப் போவது?''

""பேலஸ் ரோடில் இருக்கிறது. எந்த ஆட்டோக்காரரிடம் கேட்டாலும் கொண்டுபோய் விட்டுவிடுவார். உங்கள் பெயரைச் சொன்னாலே, அறை ஒதுக்கி விடுவார்கள்.''

டெலிபோன் பூத்திலிருந்து வெளியே வந்தேன். அறையைக் காலிசெய்துவிட்டு, ஆட்டோவில் ஏறி பாலாப்ரூயி கெஸ்ட் ஹெளஸýக்கு - கெஸ்ட் ஹெளஸா அது, மாளிகை என்று சொல்ல வேண்டும் - வந்து சேர்ந்தேன். எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் எனக்கு பிரம்மாண்டமான அறை ஒதுக்கப்பட்டது.

பாலாப்ரூயி கெஸ்ட் ஹெளஸ் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெங்களூரு மாநகர ஆணையராக இருந்த சர் மார்க் கப்பன் என்பவரால் 1850-இல் கட்டப்பட்டு "பாலாப்ரூயி' என்று பெயரிடப்பட்ட இந்த மாளிகை, இந்தியா விடுதலையாவது வரை, மாநகராட்சி ஆணையர்களின் பங்களாவாக  இருந்தது. சர் மார்க் கப்பனின் சொந்த ஊர் அயர்லாந்து அருகிலுள்ள "ஐல் ஆப் மேன்' என்கிற தீவு. அந்தத் தீவிலுள்ள பெயரான "பாலாப்ரூயி' என்பதைத் தனது பெங்களூரு வீட்டுக்கு சூட்டினார் அவர்.

சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவில் அமைந்த அந்த பங்களாவில் பல பிரமுகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மைசூர் சமஸ்தான திவான்களாக இருந்த சர் இஸ்மாயில் மிர்ஜாவும், விஸ்வேஸ்வரய்யாவும்கூட பாலாப்ரூயியில் சில காலம் வசித்திருக்கிறார்கள். மைசூர் மாநிலத்தின் முதலாவது முதல்வர் கே.சி. ரெட்டியின் இல்லமாக இருந்த பாலாப்ரூயியில்தான் கர்நாடக முதல்வர்களாக இருந்த பி.டி. ஜாட்டி, எஸ். நிஜலிங்கப்பா, தேவராஜ் அர்ஸ் ஆகியோரும் முதல்வராக இருந்தபோது தங்கினார்கள். பாலாப்ரூயியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக வைத்துக்கொண்ட கடைசி முதல்வர் எஸ்.ஆர். பொம்மை.

மகாத்மா காந்தி, பண்டித ஜவாஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட இந்தியாவின் தவப்புதல்வர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேட்டில் காணப்படுகிறது.

மதிய உணவுக்குப் பிறகு சற்று ஓய்வெடுத்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு ஓர் ஆட்டோவில் பிரணாப் முகர்ஜியை சந்திக்க (வரவேற்க) விமானநிலையத்துக்கு விரைந்தேன். நான் என்ன விவிஐபியா, விமானநிலையத்துக்குள் சென்று அவரை வரவேற்க? அதனால் பயணிகள் வெளியே வரும் வாயிலுக்கு வெளியே கண்ணில் படும்படி, இடம்பிடித்து நின்று கொண்டிருந்தேன்.

விமானம் அரை மணிநேரம் தாமதமாக எட்டு மணிக்குத்தான் வரும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் குண்டுராவ், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எப்.எம். கான் உள்ளிட்ட பிரமுகர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் பிரணாப்தாவை வரவேற்க உள்ளே காத்திருந்தனர் என்று நினைக்கிறேன். பிரணாப்தா வெளியில் வரும்போது, அவரைச் சூழ்ந்தபடி அவர்களும் வந்தனர்.

தடுப்புக்கு வெளியில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்ததும், பிரணாப்தாவின் முகம் மலர்ந்தது. வரச்சொல்லி சைகை காட்டினார். பக்கத்தில் இருந்த எப்.எம். கானிடம் என்னையும் அவரது காரில் அழைத்து வரச்சொன்னார். காலையில் தொலைபேசியில் அழைத்தது நான்தான் என்பதைப் புரிந்துகொண்ட குண்டுராவ் புன்முறுவலுடன் என்னைப் பார்த்துத் தலையாட்டினார்.

குண்டுராவின் காரில் பிரணாப்தா ஏறிக்கொள்ள, பின்னால் நின்று கொண்டிருந்த எப்.எம். கானின் வெளிநாட்டுக் காரில் அவரது நான்கு ஆதரவாளர்களுடன் ஐந்தாவதாக நானும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டேன். வரிசையாக அந்த வாகனங்கள் பெங்களூருக்கு வெளியே அமைந்த ஒரு பண்ணை விடுதியை நோக்கி விரைந்தன.

அந்தப் பண்ணை விடுதியில், தனியாக அமைந்த ஒரு "காட்டேஜில்' பிரணாப்தா தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எப்.எம். கான். குண்டு ராவ், எப்.எம். கான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மட்டும் உள்ளே சென்றனர். நான் உள்பட, கூடியிருந்த அனைவரும் வராந்தாவிலும், காட்டேஜுக்கு வெளியே இருந்த புல்வெளியிலும் காத்திருந்தோம்.

அடுத்த அரைமணி நேரத்தில், குண்டு ராவ், எப்.எம். கான் இருவரும் கிளம்பினார்கள். அவர்களுடன் அவர்களின் ஆதரவாளர்களும் சென்றுவிட்டனர்.

நானும், பிரணாப்தாவைப் பார்ப்பதற் காகக்  காத்திருந்த ஒரு சிலர் பேர்கள் மட்டுமே இருந்தோம். அவரே அறை யிலிருந்து வெளியே வந்து எங்களை "கம்.. கம்..' என்று உள்ளே அழைத்தார்.

நானும் சிலரும் சோபாவில் அமர்ந்தோம். ஓரிருவர் நின்று கொண்டி ருந்தனர். முதலில் என்னிடம்தான் பேச்சுக்  கொடுத்தார் அவர்.

""எங்கே தங்கியிருக்கிறாய்?''

""பாலாப்ரூயி அரசினர் விடுதியில்...'' 

எனது பதிலைக் கேட்டதும் பிரணாப்தாவின் புருவம் உயர்ந்தது. இவன் எப்படி அரசினர் விடுதியில் தங்கினான் என்கிற நியாயமான ஐயப்பாடு எழுந்திருக்கக்கூடும். ஆச்சரியமாகப் பார்த்தார். நான் தொடர்ந்தேன்.

""முதல்வர் ஹெக்டேயின் உதவியாளர் நாகராஜ்தான் பாலாப்ரூயியில் தங்க 
ஏற்பாடு செய்திருக்கிறார். முதல்வர் ஹெக்டேயை சந்திக்கவும் நேரம் கேட்டிருக் கிறேன். பெங்களுரு வந்திருப்பதால், அவரையும் சந்தித்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன்.''

""வெரிகுட்... வெரிகுட்.. ரொம்ப நல்லதாகி விட்டது. சற்று பொறு, இவர்களை அனுப்பிவிட்டு உன்னிடம் பேசுகிறேன்'' என்றபடி அவர்கள் ஒவ்வொருவராகப் பெயரைச் சொல்லி அழைத்து, உரையாடினார்.

பிரணாப்தா தொடங்கி இருக்கும் ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியின் மாநாடு கூட்டுவது குறித்துக் கலந்தாலோசிக்க அவர் பெங்களூரு வந்திருக்கிறார் என்பது பேச்சிலிருந்து தெரிந்தது. அவர்கள் அனைவரும் போன பிறகு, அதுவரை இடித்தபுளியாக அமர்ந்திருந்த என்னிடம் திரும்பினார்.

""உனக்கும் ஹெக்டேவுக்கும் இடையே நல்ல நெருக்கம் உண்டு என்பதை நான் மறந்துவிட்டேன். கருணாகரன்ஜியை நீ சந்தித்து அவர் எனது புதுக்கட்சி குறித்து என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  அதனால்  தர்மசங்கடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், தயங்குவதாகவும் அவரிடம் தெரிவிக்க  வேண்டும்.''

தனது புதிய கட்சியின் மாநாடு விரைவில் நடக்க இருப்பதாகவும், அதற்கு நான் வர வேண்டும் என்றும் சொன்னார்.

""ஹெக்டேஜியை சந்திக்கும்போது நான் பெங்களூரு வந்திருக்கும் தகவலை அவரிடம் தெரிவித்து, நலன் விசாரித்ததாகச் சொல்'' என்றார்.

""இங்கிருந்து  தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா?''

""எதற்கு? யாருடன்?''

""நான் முதல்வர் ஹெக்டேவை எப்போது சந்திப்பது என்பதை அவரது உதவியாளரிடம் கேட்க வேண்டும். இப்போதே நேரமாகிவிட்டது.''

டெலிபோன் பூத்திலிருந்து அழைப்பதைவிட இங்கிருந்து அழைப்பதே மேல் என்று நான் நினைத்தேன். பிரணாப்தா மறுக்கவில்லை. 

முதல்வர் இல்லத்தைத் தொடர்பு கொண்டபோது, உதவியாளர் நாகராஜ் வீட்டுக்குச் சென்றிருந்தார். வேறு யாரோ தான் எடுத்தார்கள். நான் சென்னையிலிருந்து பத்திரிகையாளர் வைத்தியநாதன் பேசுகிறேன் என்று சொன்னதும், "உங்களைத்தான் பாலாப்ரூயியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தார் நாகராஜ்'  என்று அவர்  தெரிவித்தார்.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு முதல்வர் ஹெக்டேயின் சதாசிவநகர் சி.வி. ராமன் சாலை இல்லத்தில் நான் அவரைச் சந்திப்பதாக ஏற்பாடாகி இருந்தது. பிரணாப்தாவிடம் தகவலைத் தெரிவித்தேன். பாலாப்ரூயியில் இரவு உணவுக்குச் சொல்லியிருந்ததால், நான் விடை பெற்றேன்.

""எப்படிப் போகப் போகிறாய்? இது ஊருக்கு வெளியே உள்ள இடமாகத்  தெரிகிறதே?''

""எனக்கும் அதுதான் புரியவில்லை.''

""நான் காருக்கு ஏற்பாடு செய்கிறேன். நாளைக்கும் நீ அந்தக்  காரையே பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றுகூறி யாரையோ அழைத்துப் பேசினார். சிறிது நேரத்தில் கார் வந்தது.

அடுத்த நாள் காலையில் எட்டு மணிக்கு நான் முதல்வர் ஹெக்டேயின் இல்லத்திற்குச் சென்றபோது, வீட்டிற்கு முன்னால் திருவிழாக் கூட்டம்போல அவரைச் சந்திக்க பொதுமக்கள் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்துக்கு இடையே புகுந்து சென்று, உதவியாளர் நாகராஜை சந்திப்பதற்குள் மணி 8.15 ஆகிவிட்டிருந்தது.

என்னைக் கோபமாக முறைத்துப் பார்த்தார் நாகராஜ். கடிகாரத்தை நோக்கிக் கையை நீட்டினார்.

தாமதத்திற்கு என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். அழைப்பு மணி ஒலித்தது. நாகராஜ் எழுந்து முதல்வரை சந்திக்க வரவேற்பறைக்குள் சென்றுவிட்டார். 

நான் படபடப்புடன் காத்துக் கொண்டிருந்தேன்.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com