முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
சிறந்த மனிதர்!
By - சலன் | Published On : 04th October 2020 05:04 PM | Last Updated : 04th October 2020 05:04 PM | அ+அ அ- |

இது நடந்து சுமார் 25 ஆண்டுகள் இருக்கலாம். நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு திரைப்பட விழா. நான் சில விஐபிகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்தேன். என் கையில் ஒரு ஐஸ் கிரீம் கோப்பை இருந்தது. அதில் இருந்து நான் சிறிது ஐஸ் கிரீம் எடுத்துச் சாப்பிட்டிருப்பேன்.
""என்ன ஐஸ் கிரீமா?'' என்று கேட்டுக் கொண்டே வந்த எஸ்.பி.பி., நான் பதில் சொல்வதற்கு முன்பே, என் கையில் இருந்து ஐஸ் கிரீம் கோப்பையை வாங்கி, ஐஸ் கிரீமை எடுத்து சுவைக்கத் தொடங்கினார். ஒரு பாடகர் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறாரே என்ற ஆச்சரியத்தில் ""சார் இது ஐஸ் கிரீம் சார்'' என்று உரக்கவே கத்தினேன்.
""அதற்கென்ன?'' என்று அலட்சியமாகப் பதில் அளித்தார்.
""உங்கள் குரல்'' என்று நான் இழுத்த வண்ணம் அவருக்குப் பதில் கூறினேன். ""அதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான்'' என்று கூறியவாறு மீதி இருந்த ஐஸ் கீரிமையும் முடித்து விட்டார் எஸ்.பி.பி.
அவ்வளவு ஜாலியானவர். ஆனால் வேறு ஒரு சமயம் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது குரலைப் பாதுகாப்பது எப்படி என்பதற்கு அவர் ஒரு வரியில் பதில் கூறினார்: ""நான் ஒன்றுமே செய்வதில்லை. ஆனால் நான் இப்படி இருப்பதால் மற்ற பாடகர்களும் இப்படி இருக்கலாம் என்று நினைத்து விடக் கூடாது. அவரவர்களுக்கு ஏற்றபடி குரலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நானும் தொண்டை ஆபரேஷன் செய்து கொண்டேன். நீங்கள் அப்படி இருக்காமல் பத்திரமாகத் தொண்டையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
எஸ்பிபி எதற்கும் உணர்ச்சிவசப்படக் கூடியவர் அல்ல. அவர் இருந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டை இருமுறை பணம் கொடுத்து வாங்கினார் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் பலருக்கு இருக்கும். இதைப் படிக்கும்போது, எப்படி என்று நீங்கள் நினைக்கலாம். ஆமாம், நுங்கம்பாக்கம் வீடு விலைக்கு வந்தபோது அதன் உரிமையாளருடன் பேசினார் எஸ்பிபி. இருவரும் ஒரு விலைக்கு ஒப்புக் கொண்டார்கள். இவர் அடுத்த நாளே பணத்தைக் கொண்டு போய் கொடுத்து விட்டார். அந்த வீட்டின் உரிமையாளர், ""சில தினங்கள் கழித்து பத்திரப் பதிவு செய்கிறேன்'' என்று சொன்னார். ""சரி'' என்று எஸ்பிபியும் ஒப்புக் கொண்டார். ஒருவாரம் ஆகியது. உரிமையாளரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர் இறந்து விட்டார் என்றார்கள். நேரிலேயே போய் தெரிந்து கொள்ளலாம் என்று போய் பார்த்தால் அவர் இறந்தது உண்மை என்று அவரது மகன் தெரிவித்தார்.
ஆனால் எஸ்பிபி இடமிருந்து பணம் வாங்கிக் கொண்ட விஷயத்தை தங்களிடம் அப்பா சொல்லவில்லை என்று அவரது மகன் சொல்ல, திரும்பவும் அதே அளவு பணம் கொடுத்து அந்த நுங்கம்பாக்கம், காம்தார் நகர் வீட்டை வாங்கினார் என்று அவரே சொல்லி நான் தெரிந்து கொண்டேன். மற்றவர் என்றால் கோபம் வரும். கத்துவார்கள். இவர் அதை எல்லாம் செய்யாமல் திரும்பவும் பணம் கொடுத்து வாங்கி விட்டார்.
70 வயதிலும் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்தார் எஸ்பிபி. அவரது 50 ஆண்டு சேவையைப் போற்றும் விதமாக, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அவரது திரை இசைப் பாடல் கச்சேரிகளை அவரது மகன் எஸ்.பி.சரண் ஏற்பாடு செய்தார். அவருக்கு உறுதுணையாக நான் துபை நாட்டு கச்சேரியை ஏற்பாடு செய்து தந்தேன். அதற்காக நானும் எனது மனைவியும் அவருடனேயே துபை நாட்டுக்குப் பயணம் செய்தோம். வழி நெடுக, நம் சென்னை விமான நிலையத்தில் தொடங்கி, அவருடன் திரும்பி வரும் வரை, அவர் எப்படி இருக்கிறார், ரசிகர்களுடன் எப்படி நடந்து கொள்கிறார் என்று நேரிடையாகப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரைப் பார்த்தவர்கள் சிலர் உணர்ச்சி வசப்படுவதுண்டு. எல்லாரையும் அரவணைத்து, எல்லோரிடமும் பேசி, அவர்களை மகிழச் செய்வதில் அவர் சமர்த்தர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு முறை இவர் லதா மங்கேஷ்கருடன் ஒரு கச்சேரிக்காக அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. எஸ்பிபி அவர்களை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தும் போது, "இவர் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் சுமார் நாற்பதாயிரம் பாடல்கள் பாடியுள்ளார்' என்று கூற, கிளிண்டன் சிரித்துக் கொண்டே , ""இவர் தூங்க மாட்டாரா?'' என்று மறு கேள்வி கேட்டாராம். எஸ்பிபி நாள் முழுக்க தூங்காமல், சாப்பிடாமல் பாடிக் கொண்டே இருப்பாரா? என்பது அதற்குப் பொருள்.