'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 5

பிரணாப்தா என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் - ""தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?''
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 5

பிரணாப்தா என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் - ""தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?''

""அது எப்படி சாத்தியம்? இந்திரா காந்தி அம்மையாரைக் கொலை செய்ய முற்பட்ட திமுகவுடன் கூட்டணி என்பதைத் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? திமுக ஆட்சியைக் கலைத்து, மிசா சட்டத்தில் பலரைச் சிறையில் அடைத்து, கருணாநிதி உள்ளிட்ட பலர் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட்ட காங்கிரûஸ திமுக தொண்டர்கள்தான் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அப்படியொரு கூட்டணி சாத்தியமில்லை...''

எனது பதிலைக் கேட்ட பிரணாப்தா அமைதியாகத் தனது பைப்பை உறிஞ்சி புகையை விட்டபடி, யோசனையில் ஆழ்ந்தார். ஐந்து நிமிடம் எதுவும் பேசவில்லை. பிறகு சொன்னார் :

""நானும்கூட அப்படித்தான் நினைக்கிறேன். இந்திரா காந்தியும் அதையேதான் சொல்கிறார்.

ஆனால், சஞ்சய் பாபு பிடிவாதமாக இருக்கிறார். மூப்பனார்ஜியும் அப்படியொரு கூட்டணி அமைவதை விரும்புகிறார்.''

""எம்ஜிஆரின் செல்வாக்குக்கு முன்னால் திமுக - காங்கிரஸ் கூட்டணி எடுபடாது என்று நான்நினைக்கிறேன்.''

""போட்டி எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்குமாக இருந்தால் நீ சொல்வது சரி. நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டி எம்ஜிஆருக்கும் இந்திரா காந்திக்கும் இடையே நடக்கிறது. அதில் இந்திரா காந்தி வென்று விடுவார் என்று நினைக்கிறேன். அதை உறுதிப்படுத்துவதுபோல நீ குருவாயூர் பிரசாதத்துடன் வந்திருக்கிறாய். பார்ப்போம்.''

இந்திரா காந்தியின் 1, சப்தர்ஜங் சாலை இல்லத்தை நோக்கிக் கிளம்பியது பிரணாப் முகர்ஜியின் கார். கேட்டைக் கடக்கும்போது கார் நின்றது. என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். நான் காரை நோக்கி விரைந்தேன்.

""நீ கிளம்பி விடாதே. இங்கேயே இரு. இந்திரா காந்தியைச் சந்தித்துவிட்டு வந்து விடுகிறேன். திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சஞ்சய் காந்தி பிடிவாதமாக இருப்பதற்கும், அதை இந்திரா காந்தி ஆமோதிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. வந்து சொல்கிறேன்...'' என்றபடி அவர் புறப்பட்டார்.

வரவேற்பறையில் பிரணாப்தாவின் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தேன்.

சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு தான் பிரணாப்தா திரும்பினார். சற்று களைப்பாகக் காணப்பட்டார். வரும்போதே கையில் நிறைய கோப்புகள் இருந்தன. உதவியாளர்கள்கூட யாரும் இருக்கவில்லை. மெதுவாக அறைக் கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தேன்.

என்னைப் பார்த்ததும், வழக்கமான புன்னகையுடன், ""கம்... கம்...'' என்று அழைத்தார்.
""திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு என்ன காரணம் என்று சொல்வதாகக் கூறினீர்கள்'' என்று அவருக்கு நினைவுபடுத்தினேன். சிரித்தார்.

""தஞ்சாவூரில் இந்திரா காந்தி போட்டி போடுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, பிறகு மொரார்ஜி தேசாயின் வற்புறுத்தலால் எம்ஜிஆர் பின்வாங்கியதை இந்திராவும், சஞ்சயும் மன்னிக்கத் தயாராக இல்லை. எம்ஜிஆருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் என்ன சொன்னாலும் கேட்பதாகவும், எத்தனை இடங்கள் கேட்டாலும் தருவதாகவும் திமுக கூறுகிறது. எம்ஜிஆரைத் தோற்கடிக்க இந்திரா காந்தியால் மட்டும்தான் முடியும் என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.''

""காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெறாமல் போனால், அது இந்திரா காந்திக்கு மிகப் பெரிய பின்னடைவாகிவிடாதா?''

""தஞ்சாவூரில் இந்திரா காந்தி போட்டியிடுவதை எம்ஜிஆர் தடுத்தார் என்பது ஒன்றே போதும், இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகுவதற்கு. வேண்டுமானால் பார்த்துக் கொள், இந்தக் கூட்டணி பெரும் வெற்றி பெறும்.''

""அப்படியானால் எம்ஜிஆர் சகாப்தம் முடிந்துவிடும் என்று கூறுகிறீர்களா?''

""அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். குறிப்பாக, சஞ்சய் காந்தி நினைக்கிறார். ஆனால், நானும், இந்திரா காந்தியும் அப்படி நினைக்கவில்லை. சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தால், எம்ஜிஆர் ஜெயிக்கக் கூடும். இப்போதே எதுவும் சொல்ல முடியாது.''

அடுத்த இரண்டு வாரங்கள் பரபரப்பாக ஒன்றன் பின் ஒன்றாக அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்தன. தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது போன்ற பணி
களில் பிரணாப்தா முழுமூச்சாக இறங்கிவிட்டார். 1980 தேர்தலில், வேட்பாளர் தேர்வு அநேகமாக சஞ்சய் காந்தியின் மேற்பார்வையில் வெல்லிங்டன் கிரெசன்ட்டிலுள்ள அவரது வீட்டில்தான் நடந்தது. அதில் பிரணாப்தாவுக்கு பங்கெதுவும் இல்லை.

இந்திரா காந்தி திரும்பவும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில், பெரும் தொழிலதிபர்கள் அனைவரும் குறியாக இருந்தனர். தேர்தலை எதிர்கொள்வதற்கு இந்திரா காந்தியிடமோ, கட்சியிடமோ போதிய நிதி இருக்கவில்லை. தொழிலதிபர்களில் பெரும்பாலோர் கட்சிக்கு நன்கொடை வழங்கத் தயங்கினார்கள். இதெல்லாம் பிரணாப்தாவின் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தெரிந்தது.

1980 தேர்தலில் வேட்பாளர் தேர்வில் சஞ்சய் காந்தி தரப்பினரும், தேர்தல் பிரசாரத்தை இந்திரா காந்தியும் அவரது நம்பிக்கைக்குரிய சில தலைவர்களும் பார்த்துக் கொண்டார்கள் என்றால், கட்சிக்கு நிதி திரட்டும் பெரும் பணியில் ஈடுபட்டது பிரணாப்தாவும், மும்பையின் ரஜினி படேலும்தான்.

இந்த இடத்தில், இதனுடன் தொடர்பில்லாத ஒரு செய்தி. பிரதமராக இருந்த சரண் சிங் குறித்து மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. சரண் சிங் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார் என்பதும், மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஜனதா ஆட்சியைக் கலைத்தார் என்பதும் உண்மை. அதே நேரத்தில், சரண் சிங் ஒரு தலைசிறந்த நிர்வாகி என்பதும், லஞ்ச ஊழல் கறைபடியாத, அப்பழுக்கில்லாத பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் என்பதும் பலருக்கும் தெரியாத அவரது பண்புகள்.

ஜாட் இனத்தவர்களின் தலைவராகவும், விவசாயியாகவும் மட்டும்தான் அவர் அறியப்படுகிறார். ஆனால், வழக்குரைஞரான சரண் சிங் கிராமப் பொருளாதார நிபுணர். இந்திய வேளாண் பொருளாதாரம் குறித்த அவரது புத்தகங்கள், ஆராய்ச்சியாளர்களை வியப்பிலாழ்த்தும். சுதந்திரப் போராட்டத் தியாகியான சரண் சிங், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர் என்பது வெளியுலகம் அறியாத இன்னொரு உண்மை.

ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிற நிலைமை. சில முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர் அலுவலகத்தில் சரண் சிங்கை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் அவரது கட்சிக்கு நன்கொடை வழங்கத் தயாராக இருந்தனர். அவர்களது நன்கொடையை வாங்கக் கூடாது என்று சரண் சிங் பிடிவாதமாக இருந்துவிட்டார். இந்த செய்தியை பிரணாப்தா பின்னொரு சந்திப்பின்போது என்னிடம் கூறினார். இரா. செழியனும், ரபி ரேயும் அதை என்னிடம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

விஷயத்துக்கு வருவோம். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து, வேட்பாளர்கள் தேர்வுக்காகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தில்லியில் முகாமிட்டிருந்தனர். கே.டி. கோசல்ராம், ஏ.ஜி. சுப்பராமன், குடந்தை ராமலிங்கம், பிரபு, இரா. அன்பரசு உள்ளிட்ட பல தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் 13, தல்கத்தோரா சாலைக்கு பிரணாப்தாவைச் சந்திக்க வருவார்கள். அவர்களில் பிரபு மட்டும்தான் ஏற்கெனவே எனக்கு அறிமுகமானவர். இப்போது ஏனையவர்களும் அறிமுகமானார்கள்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, எல்லோரும் அவரவர் மாநிலத்துக்குச் சென்றுவிட்டனர். தில்லியே வெறிச்சோடிவிட்டாற்போல இருந்தது. ஆனால், பிரணாப்தாவின் அலுவலகம் மட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

இப்போதுபோல செல்லிடப்பேசி இல்லாத காலம். தொலைபேசியில் "டிரங்க் கால்' போட்டு மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும். வெளி அலுவலகத்தில் அமர்ந்து, பிரணாப்தா ஒரு சீட்டில் குறித்து அனுப்பும் எண்களுக்கு "டிரங்க் கால்' அழைப்பைப் பதிவு செய்வதுதான் எனக்குத் தரப்பட்டிருந்த பணி. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டு வரும் அழைப்புகளைக் குறித்துக் கொள்வதும், சமாதானம் சொல்வதும் பிரணாப்தாவின் பிரதம உதவியாளர் எம்.கே. முகர்ஜியின் வேலை.

ஒருநாள் மாலை சுமார் ஆறு மணி அளவில் மும்பையிலிருந்து ரஜினி படேலின் நண்பரொருவர் பிரணாப்தாவை சந்திக்க வந்திருந்தார். ரஜினி படேல் வந்திருக்கவில்லை. அவருக்காகக் காத்திருந்தார் அவர். நான் "டிரங்க் கால்' பதிவு செய்வதையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் யார், எனக்கும் பிரணாப்தாவுக்கும் என்ன தொடர்பு என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.

சிறிது நேரம் கழிந்ததும் ரஜினி படேல் வந்து சேர்ந்தார். அந்த மனிதரை அழைத்துக் கொண்டு ரஜினி படேல் பிரணாப்தாவின் அறையில் நுழைந்தார். தேர்தலை எதிர்கொள்ள நிதியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குக் "கை' கொடுக்க அவர் வந்திருக்கிறார் என்று எனக்கென்ன தெரியும்?

தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திரா காந்தியைச் சந்திக்க பிரணாப்தாவுடன் அவர்கள் இருவரும் இரவு பத்து மணிக்கு மேல் புறப்பட்டுச் சென்றார்கள். நானும் எனது தங்கையின் வீட்டுக்குக் கிளம்பினேன்.

காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள அதற்கு நன்கொடை வழங்க அவர் வந்திருந்தார் என்பதை அடுத்த நாள்தான் தெரிந்து கொண்டேன். அவர் எவ்வளவு நன்கொடை வழங்கினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் அடைந்த அசுர வளர்ச்சி அசாத்தியமானது. டாடா, பிர்லாக்களையே பின்னுக்குத் தள்ளிக்கொண்டு மிகப் பெரிய தொழிலதிபராக அவர் உயர்ந்தது, இப்போது நினைத்தாலும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.

என்னிடம் ஒரு சாமானியராக, சாதாரணமாகச் பேசிக் கொண்டிருந்த அந்த மனிதரை அதற்குப் பிறகு நான் பத்திரிகை புகைப்படங்களில்தான் பார்க்க முடிந்தது. அவரது வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த இந்திரா காந்தியிடம் மட்டுமல்ல, அவரை இந்திரா காந்திக்கு அறிமுகப்படுத்திய பிரணாப்தாவிடமும் அவர் கடைசிவரை நன்றியுடையவராக இருந்தார். அவர் யார் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com