வள்ளலார்

காமராஜர் தெருவில் நுழையாமலேயே கண்ணன் தன் வீட்டுக்கு  நேராகச் செல்ல முடியும்.
வள்ளலார்


காமராஜர் தெருவில் நுழையாமலேயே கண்ணன் தன் வீட்டுக்கு  நேராகச் செல்ல முடியும்.
ஆனால் நுழைந்தான்.
காயத்திரி இல்லத்திற்கு முன்பாக இறங்காமல் அவன் தனது ஸ்கூட்டியை ஓட்டிச் செல்லலாம். யாரும் தடுக்கப்போவதில்லை. 
ஆனால் இறங்கிக் கொண்டான். 
ஸ்கூட்டியைத் தள்ளியபடியே "வீடு வாடகைக்கு விடப்படும்'  என்று இலக்கணசுத்தமாக அறிவிக்கும் வெளிறிய எழுத்துக்களைப் படித்தபடியே காயத்திரி இல்லத்தை அங்குலம் அங்குலமாய் அரை யுகமாகக் கடந்து கொண்டிருக்கிறான் கண்ணன்.
சில நொடிகள் அவனது கால்கள் நின்றாற்போலவும் இருக்கிறது.
மதில் சுவரை ஒட்டிக் காடாய் வளர்ந்திருக்கும் கற்பூரவல்லி, குழந்தையாய் ஒரு குட்டி வேப்பமரம், சங்குபுஷ்பக் கொடி, புதராய் மண்டியிருக்கும் அருகம்புல், அதோ கிணற்றின் அருகில் நாற்புறமும் அகல்விளக்கு வைக்கத் தோதான பிறைகளை வைத்திருக்கும் துளசிமாடத்தில் தீபாவளி தினத்தில் மலரும் பூச்சட்டி மத்தாப்பு போலச் சரேலென்று பரந்துவிரிந்திருந்த துளசிச் செடி, கொஞ்சம் தள்ளி, "கிட்டே வந்து தொடு பார்க்கலாம்'  என்று முட்களை வைத்துக் கொண்டு சவால் விடும் தூதுவளைக் கொடி, குப்பைமேனி, சென்ற வருடம்தான் முதன்முதலாகப் பழம் கொடுக்கத் தொடங்கிய சீதாப்பழ மரம் , நிறைசூலியாய்க் குலைதள்ளிய ஒரு வாழை மரம், அதன் காலடியில் கோழிக்குஞ்சுகளைப் போன்று நாலைந்து இளம் வாழைக்கன்றுகள்,  நட்டு வைத்த சவுக்குக்
கம்பைப் பிடித்துக் கொண்டு மலையேறும் வெற்றிலைக்கொடி, வெற்றிலைக்கொடிக்கு வேஷம் கட்டினாற்போன்ற மணி பிளான்ட்... இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ செடி கொடி வகைகள்...
ஒருவாரம்... ஒரே வாரம்தான் ஆகிறது, கண்ணன் இங்கிருந்து வேறு வீட்டுக்குச் சென்று... பாவம்... தாவரங்கள் அத்தனையும் தண்ணீருக்கு அல்லாடி வாடிக் கிடக்கின்றன. 
இவை போதாதென்று மொட்டை மாடியில் ஒரு கிருஷ்ணதுளசி வேறு உண்டு. கண்ணன் தினமும் அதோடு பேசுவதும் உண்டு.
எதிர்வீட்டுப் படிக்கட்டில் மழைநேரம் தவிர மற்றெல்லா நேரமும் உட்கார்ந்து கொண்டிருக்கும் லட்சுமிப் பாட்டி,  ""என்ன கண்ணா,  புது வீடு எப்பிடியிருக்கு. காவேரியும் கொழந்தைங்களும் நல்லாருக்காங்களா?''  என்று கேள்விகளை அடுக்கினாள்.
இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாய், "" எல்லாம் செளக்கியம்தான் பாட்டியம்மா''  என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியைக் கிளப்பினான் கண்ணன். மாதக்கணக்கான மழை வெயிலில் வெளிறிய எழுத்து
களில் ரங்காபுரம் மெயின் ரோடு என்று சாலையோர அறிவிப்புப் பலகை பிரகடனம் செய்த சாலையில் இடதுபக்கம் திரும்பினான். பத்துவருடம் முன்பு லேஅவுட் போடும் போது அதன் புளூ பிரிண்டில் அண்ணா சாலை ரேஞ்சுக்கு உயர்த்திக் கூறப்பட்ட சாலை இப்போது காங்கிரீட் சாலையா மண் ரோடா என்று குழம்பிப் பல்லிளித்துக்கொண்டிருந்தது.
வண்டியைக் கால்நடை போன்று மெதுவாக இயக்கத் தொடங்கினான் கண்ணன். 
செட்டியார் கொஞ்சம் கெடுபிடி செய்யாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கும்போதே புதுவீடு வந்துவிட்டது.

ஐந்து வருடப் பழக்கம் கண்ணனுக்கும் அந்தச் செடிகொடிகளுக்கும். 
வேலைக்குச் சென்ற நேரம் போக மீதி நேரமெல்லாம் அவற்றுடனே பேச்சுவார்த்தை  நடத்திக் கொண்டிருப்பான். 
""என்னங்கடா, இன்னிக்கு வெயில் ஜாஸ்தியா அடிச்சுட்டுதா... இந்தா இன்னும் ரெண்டு பக்கெட் தண்ணியக் குடி''  என்று கிணற்றுத் தண்ணீரைச் செடிகளுக்குக் குளிரும் வரையில் ஊற்றுவான். 
உள்ளூர்க் கோஆப்ரேட்டிவ் பேங்கில் கிளார்க் வேலை கண்ணனுக்கு. பிடித்தமெல்லாம் போக பதினாலாயிரத்துச் சொச்சம் சம்பளம். மனைவி காவேரி, இரண்டு குழந்தைகள்,  இவன் என்று மொத்தம் நான்கு பேருக்கான செலவுகள் எப்போதும் வாயைப் பிளந்து காத்துக் கொண்டிருக்கும். அக்கம்பக்கத்துப் பெண்களுக்குத் தைத்துக்கொடுத்துக் காவேரியும் கொஞ்சம் கை கொடுக்கவே ஓடுகிறது வண்டி. தையல் மிஷின் ரிப்பேராகிவிட்டால் அதற்காகும் செலவு தையலையே விட்டுவிடச் சொல்லிக் கழுத்தைப் பிடிக்கும். 
வாடகைக்கு நாலாயிரம் ஒதுக்குவதே ஜாஸ்தி. 
செட்டியார் வீடு கீழேயும் மேலேயுமாய் இரண்டு போர்ஷன்கள் கொண்டது. என்ன காரணத்தினாலோ மாடிப் போர்ஷனுக்கு வருபவர்கள் நிலைப்பதில்லை. வேலூரின் கோடை சீஸனில்  மாடிப் போர்ஷனே பிரஷர் குக்கராக மாறித் தகிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதற்காகக் கீழ் போர்ஷன் ஒன்றும் ஊட்டியாக மாறிவிடாது. கீழே கொஞ்சம் சமாளிக்கலாம். அவ்வளவே. சாயந்திரவேளைகளில் மரம் செடிகள் கொஞ்சம் விசிறிவிடும்.
மூவாயிரத்து அறுநூறுக்கு கீழ்போர்ஷனைச் செட்டியார்  கண்ணனுக்குக் கொடுத்தார். 
வருஷம் நூறு நூறு ரூபாயாக ஏற்றி நாலாயிரத்தைத் தொட்டபோது செட்டியாரின் மனசு தடம் புரண்டது. 
மாடிப் போர்ஷனுக்காக ஏறக்குறைய நிரந்தர நினைவுச் சின்னம் போலக் காட்சியளித்துக்கொண்டிருந்த டூ லெட்  போர்டைப் பார்த்துச் சென்ற யாரோ ஒரு புண்ணியவான் மறுநாள் செட்டியாருடன் வந்து பார்த்துவிட்டு, ""முழுவீடும் கொடுக்கிறீர்களா ?''  என்று மகுடி ஊத, கண்ணன் அங்கிருந்து கிளம்ப வேண்டிய தினம் அப்போதே குறிக்கப்பட்டுவிட்டது.
""யப்பா, கண்ணா. தப்பா நெனைச்சுக்காதே. உன்னைக் கிளப்பணும்னு எனக்கு ஒண்ணும் ஆசையில்ல. நேத்து வந்து பார்த்தவர் கவர்மெண்டுல பெரிய உத்யோகம். வேலூருக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாராம். கொஞ்சம் பெரிய குடும்பம். கீழ் மேல் போர்ஷன் ரெண்டும் தேவைப்படுது அவருக்கு. மொத்தமா பத்தாயிரம் வரைக்கும் கொடுக்கத் தயார் மாதிரி  தோணுது. நானும் புள்ளைக்குட்டிக்காரன். நாலு காசு கூட வந்தா நல்லாத்தானே இருக்கும். உன்னால ரெண்டு போர்ஷனுக்கும் சேர்த்துக் கொடுக்க முடியாதுன்னு தெரியும்'' என்று என்னென்னவோ கெஞ்சல் போன்று தோன்றுகிற ஒரு கட்டாயத் தொனியில் பேசிக் கண்ணனைச் சம்மதிக்க வைத்துவிட்டார். 
வேறு வீடு செல்வதில் வருத்தம் ஒன்றும் இல்லை கண்ணனுக்கு. ஒருவாரம் சுற்றினால் அக்கம்பக்கத்திலேயே ஏதாவதொரு வீடு கிடைத்துவிடும். 
அந்த மரம் செடி கொடிகளைவிட்டுச் செல்வது மட்டுமே அவனது ஒரே உறுத்தலாக இருந்தது.
                    
ஐந்து வருடங்கள் முன்பு இங்கு குடியேறும்போதே மனைவி சொல்லிவிட்டாள், ""இதோ பாருங்க. ரெண்டு குழந்தைங்களையும் வெச்சிக்கிட்டு, சமையலையும் தையலையும் பார்த்துக்கிட்டு இந்தச் செடிகொடிங்களுக்குத் தண்ணி ஊத்திப் பராமரிக்க என்னால் முடியாது. முடிஞ்சால் நீங்க ஊத்துங்க. இல்லைன்னால் வீட்டுக்காரச் செட்டியார் கிட்டக் கேட்டுக்கிட்டு எல்லாத்தையும் வெட்டிப் போட்டுடுங்க'' என்றாள்.
""சும்மா இரு காவேரி... செடி கொடிங்களை வெட்டுறாதாவது''  என்று மறுத்த கண்ணன் அன்று முதல் அவற்றுக்குத் தாயுமானான்.
மழைக்காலம் தவிர்த்த மற்றைய காலங்களில் இரண்டு வேளையும் தாவரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தான். தான் குடியேறுவதற்கு முன்பு கவனிப்பாரற்றுக் கிடந்த தோட்டத்தை வாரஇறுதிகளில் ஒரு தவம் போலச் சீர்திருத்தினான்.
வாழைக்குச் சற்றே பெரிய பாத்தியும் இதர செடிகொடிகளுக்குச் சிறிய பாத்திகளுமாக வெட்டித் தண்ணீர் தேக்குவான். புஷ்பிக்கும் பூக்களை ஆசையாகப் பறித்துத் தன்னுடைய பூஜையறைப் பிள்ளையாருக்கு வைத்து அழகு பார்ப்பான். காய்ந்து உதிர்ந்த சருகு
களைப் பெருக்கி அப்புறப்படுத்துவான். இதோ 
விழுந்து விடுவேன் என்று இடுப்பை வளைத்து அடம் பிடிக்கும் கொடிகள் செழித்துப் படர ஒரு மூங்கிலையோ சவுக்கையோ பக்கத்தில் நட்டு முட்டுக் கொடுப்பான். கண்ணனின் கவனிப்பால் சந்தோஷமாக வளரத் தொடங்கிய தாவரங்களை வட்டமிட வண்ணத்துப்பூச்சிகள் முதன்முதலாக ஆஜர் கொடுத்தன. மண்புழுக்கள், தும்பிகள் இன்னும் பெயர் தெரியாப் பூச்சிகள் வலம் வரத் தொடங்கின. மழைக்காலங்களில் அந்தக்காலத்து நடராஜ் பென்சிலைப் படுக்க வைத்துக் கால்கள் வரைந்தது போன்ற மரவட்டைப்பூசிகள் கிளம்பி வெய்யில் ஜாஸ்தியானதும் உயிர் ஒடுங்கின.
நடுவில் ஒருதரம் முருங்கை மரத்திற்கு ஆசைப்பட்டுவிட்டான்.  ஆளுயரத்திற்கு அது வளர்ந்து தளதளக்கையில்  ""வேண்டாம்பா, அக்கம்பக்கம் எல்லார் வீட்டுக்கும் கம்பளிப்பூச்சி வரும். என் வீட்டுக்குள்ளே ஒரே ஒரு பூச்சி நுழைஞ்சாலும் நான் சும்மாயிருக்கமாட்டேன்''  என்று எச்சரித்த அண்டைவீட்டுக்காரரை மனசுக்குள் வைதுகொண்டே முருங்கையை அகற்றினான். சீதாப்பழ மரத்தின்முதல் பிஞ்சு தரிசனம் கண்டு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தான். மாங்கன்று ஒன்று வைத்தது,  ஓமக்குச்சி நரசிம்மன் போல நாலைந்து இலைகளுடன் காட்சியளிக்க, ஆயுதபூஜைக்கு அதிலிருந்து மாவிலையைப் பறிக்காமல் கடைத்தெருவில் காசு கொடுத்து வாங்கினான் கண்ணன். 
குழந்தையின் உள்ளங்கை போல் "மெத்'தென்றிருக்கும் கனகாம்பரப் பூக்களைப் பறித்து மனைவியிடம் கொடுப்பான். 
""ஆமாம், இது ஒண்ணுதான் குறைச்சல்'' என்று பூத்தொடுக்க மனமின்றி நொடித்துக் கொள்ளும் மனைவிக்கு பதில் சொல்லாமல், கிடைத்த கனகாம்பரம் அத்தனையும் தன் பூஜையறைப் பிள்ளையாரின் மேல் சொரிந்து மூடுவான். அருகம்புல் கனகாம்பரம் காம்பினேஷனில் பிள்ளையார் ஜொலிப்பது வழக்கம்.
  மொட்டை மாடியில் இருக்கும் கிருஷ்ண துளசி கைப்பிடிச் சுவரின் மூலையில் வேர்பிடித்து வளர்ந்திருந்தது. கோயில் கோபுர அடுக்குகளிலிருந்து தாவரங்கள் எட்டிப் பார்ப்பது போன்று. வெய்யில் மழை எதுவானாலும் தாக்குப் பிடித்து வளர்ந்தது அது. கண்ணன் வேறுவீடு மாறியதிலிருந்து அவ்வளவாக வெய்யில் இல்லைதான். மேகம் நிழல் மூட்டம் போட்டு அவ்வப்போது அட்சதை போன்று மழைத்துளிகளைத் தூவிவிட்டுச் செல்கிறது. ஆனால் காமராஜர் தெரு காயத்திரி இல்லத் தோட்டத்திற்கு அதெல்லாம் போதாது. தண்ணீர் ஊற்றுவதோடு மட்டுமின்றி,   அதனுடன் பேசுவதற்கு ஆள் இல்லாமல் அந்தக் கிருஷ்ணதுளசி மாடி கைப்பிடிச் சுவரின் மேலாக எட்டிப் பார்ப்பது போன்றதொரு பிரமை கண்ணனுக்கு இருக்கவே செய்தது.
                
இரண்டு வாரம்... மூன்று வாரம் என்று நாட்கள் வேகம் காட்டிப் பறக்கின்றன. 
ஆபீஸ் போகும் போதும் வீடு திரும்புகையிலும் காமராஜர் தெரு காயத்திரி இல்லத்தைக் கடந்து நடந்து போவதும் பின்னர் வண்டியில் ஆரோகணிப்பதுமாகக் கண்ணனின் வழக்கம் தொடர்ந்தது.
செட்டியார் சொன்னபடி புதுமனிதர்கள் யாரும் குடிவருவதாகத் தோன்றவில்லை. 
செடி கொடி மரங்கள் எல்லாம் வாடத்தொடங்கியிருப்பதைத் தங்களின் கண நேர தரிசனத்தில் கண்ணனுக்கு உணர்த்தத் தொடங்கியிருக்கின்றன. 
வயிற்றைப் பிசைந்தது கண்ணனுக்கு. 
மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை வெய்யில் போடு போடென்று போட்டது. இத்தனைக்கும் ஆவணிமாதம். 
""என்னாப்பா, கண்ணா, கண்டுக்காமப் போறியே'' என்று அவை கேட்பது போன்று அந்த ஞாயிற்றுக் 
கிழமையின் ராத்திரி முழுவதும் கனவுகள் துரத்தின.
காலையில் காப்பி குடித்ததும், "" இதோ வந்துர்றேன் காவேரி''  என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். 
பையுடன் வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த செட்டியார்,  ""வாப்பா கண்ணா, என்னா விசேஷம்?'' 
""நம்ம வீட்டுக்கு இன்னும் யாரும் வரலீங்களே?'' 
""ஆமாம்பா கண்ணா, அட்வான்ஸ் குடுத்துர்றேன்னு சொல்லிட்டுப் போனவருதான். நேத்து கூடப் போன் பண்ணிக் கேட்டதுக்கு இன்னும் ஒரு ரெண்டு மாசம் ஆகும்னு சொல்றாரு. டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டுட்டாங்களாம். ஆனா, அவரு எடத்துக்கு வர்ற வேண்டிய அதிகாரி ஏதோ டிரெயினிங்குல இருக்காராம். அந்தாளு வந்தப்புறம்தான் இவரை வேலூருக்கு அனுப்புவாங்களாம். கட்டாயம் வந்துர்றேன்னு சொல்லிருக்காரு''
""அப்டீங்களா?'' 
""ஆமாம்பா கண்ணா... இன்னும் அட்வான்ஸூ கூட கொடுக்கல. உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லு. வாடகை பத்தாயிரம் சொல்லு. வந்துர்றோம்னு சொன்னா கொஞ்சம் முன்னே பின்னே குறைச்சுக்கூட வாங்கிக்கலாம்''
""அதுக்கில்லீங்க செட்டியார் ஸார்... நான் வந்ததே வேற விஷயமா?'' 
""ஏன் நீயே வந்துர்றியா சொல்லு. உனக்குன்னா எட்டாயிரம் போதும். முழு வீட்டையும் நீயே எடுத்துக்கோ'' 
""அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது ஸார்...'' 
 ""பிறகு?'' 
 ""செட்டியார் ஸார்... அஞ்சு வருஷமா நான் பார்த்துப் பார்த்து வளர்த்த செடி கொடிங்கல்லாம் வாடிப் போகுது. சென்னையிலேருந்து வர்ற ஆபீஸர் எத்தனை மாசம் கழிச்சாவது வரட்டும். அவர் வர்றவரைக்கும்  நானே என் கையால அதுங்களுக்குத் பாத்தி கட்டித் தண்ணி ஊத்த அனுமதி கொடுத்தீங்கன்னா''
""ஹ்ம்''
கண்ணனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த செட்டியார் வீட்டுக்குள்ளே சென்று சாவிக்கொத்தை எடுத்து நீட்டினார்.
""தாங்க்ஸ் செட்டியாரே''  என்று கூறி ஸ்கூட்டியில் ஏறி விரட்டியவன், காமராஜர் தெரு காயத்திரி இல்லத்தின் பெர்ம் சப்தம் எழுப்பும் கேட்டைத் திறந்தான்.
""இதோ வந்துட்டேன்டா கண்ணுங்களா''  என்ற
படியே உள்ளே நுழைந்தான். 
அந்தநேரத்திய "ஜில்'லென்ற காற்று கைகுலுக்கி வரவேற்றது. கசிந்த தனது கண்களைத் துடைத்த
படியே தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை உயிர்ப்பித்தான் கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com