தீபாவளி ஜவுளி

இரவு மணி பதினொன்று ஆனது. நைட் லாம்பின் வெளிச்சத்தில் அசையாமல் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் சிவானந்தம். ஒன்பது மணிவாக்கில் உட்கார்ந்தவருக்கு எழுந்து படுக்கைக்குப் போக மனது வரவில்லை. சரஸ்வதி
தீபாவளி ஜவுளி

இரவு மணி பதினொன்று ஆனது. நைட் லாம்பின் வெளிச்சத்தில் அசையாமல் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் சிவானந்தம். ஒன்பது மணிவாக்கில் உட்கார்ந்தவருக்கு எழுந்து படுக்கைக்குப் போக மனது வரவில்லை. சரஸ்வதி என்றுமில்லாத வகையில் இன்று அவரைக் காயப்படுத்திவிட்டாள். தீபாவளிக்குப் பட்டுப்புடவை வேண்டுமென மூன்று தீபாவளியாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறாள். அடுத்த தீபாவளிக்கு வாங்கலாம்... அடுத்த தீபாவளிக்கு வாங்கலாம்...என்று தட்டிக் கழித்து வந்தார். இந்த தீபாவளிக்கும் வாங்க இயலவில்லை. அவருக்கு வாங்கித் தரக் கூடாது என்கிற எண்ணமெல்லாம் கிடையாது. அவரால் அவரது சம்பளத்தில் வாங்க முடியவில்லை. அவ்வளவுதான்... சம்பள வரவையும் செலவையும் மாதந்தேறும் சரிக்கட்டுவதற்கே படாதபாடு படவேண்டி இருக்கிறது. பற்றாக்குறையில் வரவு செலவு இருக்கும் போது பட்டுப் புடவை வாங்கினால் எப்படி சமாளிக்கிறது?

பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைமைக் குமாஸ்தாவாகப் பணிபுரிகிறார் சிவானந்தம். பண்டிகை முன் பணமாக ஆபீஸில் ஐந்தாயிரம் ரூபாய் வாங்கினார். அரசு அலுவலர்கள் வருஷத்திற்கு ஒரு தடவை பண்டிகை முன்பணம் தேவைப் பட்டால் வாங்கிக் கொள்ளலாம் என்பது விதி. ஐந்தயிரத்திற்கு கூடவோ குறைத்தோ பெற இயலாது. இதனைப் பத்து தவணைகளில் சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். ஐந்தாயிரத்திற்கு மேல் வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்தால் கூட முன்பணம் வாங்கி சரஸ்வதியின் ஆசையை நிறைவேற்றி விடலாம். அதற்கு வழிவகை கிடையாது.

தீபாவளி நேரம். அலுவலகத்திலோ அண்டை அயலார்களிடமோ கடன் வாங்க முடியாது. அவரவர்பாடு அவரவர்களுக்கு. எல்லாருமே மாதாந்திர ஊதியதாரர்கள். நம்மைப் போல் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நகர்த்துபவர்கள். அதனால் சரஸ்வதியிடம் பக்குவமாகப் பேசி சரி பண்ணிக்கிடலாம் என்று ஐந்தாயிரத்தில் துணிமணிகளை எடுத்தார். இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் ஆயிரம் ரூபாயில் சுடிதார். ஐநூறு ரூபாய்க்கு தனக்கு சாதாரண விலையில் வேட்டி. இரண்டாயிரம் ரூபாயில் மனைவிக்குப் புடவை. மீதமுள்ள தொகையினை தீபாவளிக்கான பிற செலவுகளைச் சமாளித்து விடலாம். இப்படிக் கணக்குப் போட்டு புதுத்துணிகளை பண்டிகை முன்பணம்  வாங்கி எடுத்திருந்தார்.

இரவு டிபன் முடித்து வழக்கம் போல் வராண்டாவில் கிடந்த சேரில் அமர்ந்தார் சிவானந்தம். 
""தீபாவளிக்கு இன்னமும் ஒரு மாசம் கூட இல்ல... இன்னமும் துணி மணி எடுக்கிறது பத்தி நீங்க வாயே தெறக்கல...''
""எல்லாம் எடுத்திருக்கு... அந்த ஆபீசுக்குக் கொண்டு போற பேக்கை எடு...''
""தீபாவளிக்கு புதுத் துணி எடுத்து வந்திருக்கிங்க... வந்தவுடனே காண்பிக்கிறதுக்கென்ன ?
பிள்ளைகளும் பாத்திருப்பாங்கள்ல... இப்ப அதுங்க தூங்கிடுச்சிங்க...''
""நல்ல வெலைல உயர்ந்த துணியா... நீ வருஷந்தோறும் வாங்கித் தரச்சொல்ற பட்டுப்புடவைய வாங்கிட்டு வந்திருந்தேன்னா... வந்ததும் சந்தோஷமாக் காட்டி இருக்கலாம்...எதோ கடமைக்கு 
ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் வாங்கி எடுத்திட்டு வந்திருக்கேன்... என்னமோ தெரியல... இத ஒடனே காண்பிக்கத் தோணல''
இந்த வருஷமும் தனக்கு பட்டுப்புடவை வாங்கவில்லை என்பதை அறிந்த சரஸ்வதியின் முகம் அஷ்டகோணலாயிற்று. என்னதான் வாங்கிட்டு வந்திருக்கிறாரென பாப்போமென அலுவலகம் கொண்டு போகும் லெதர் பேக்கதை திறந்து புதுத்துணிகளை எடுத்துப் பார்த்தாள் சரஸ்வதி.
""சாதாரண பியூனா இருக்கிறவன் கூட பெண்டாட்டிக்கு வருஷந்தோறும் பட்டுப்புடவையும் பிள்ளைகளுக்கு நகையும் வாங்கி குமிக்கிறான்... பெரிய ஹெட்கிளார்க் இவரு... கல்யாணமாகி எட்டு வருசமாச்சு.. மூணு வருஷமா பட்டுபுடவை வேணும்னு  கேட்டுக்கிட்டு இருக்கேன்... அடுத்த வருஷம் பாப்போம்.. அடுத்த வருஷம் பாப்போம்னா எப்பப் பாக்கிறது... நா... செத்தப் பெறகு எம் பொணத்துக்குத்தான் வாங்கிப் போடுவிங்க போல...''
ஆக்ரோஷமாக வாய்க்கு வந்த கனமான வார்த்தைகளை வாரி வீசிவிட்டு புதுத்துணிகளையும் வீசி எறிந்து விட்டு படுக்கப் போய் விட்டாள் சரஸ்வதி.
அலுவலகத்தில் அவர் சற்று வளைந்து நெளிந்து நடந்து கொண்டால் போதும். பட்டுப் புடவை என்ன... பளபளக்கும் சட்டைகள் என்ன... நகை நட்டுகள் என்ன... நாள்தோறும் தீபாவளி கொண்டாடலாம். நேர்வழியில் நடக்க வேண்டுமென எடுத்த முடிவால் இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. இல்லாளோட ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய நிலமை. வருகிற பார்ட்டியிடம் இவ்வளவு வேண்டும்... அவ்வளவு வேண்டுமென வற்புறுத்தாமல் கொடுத்ததை வாங்கினாலே போதும்... கொடிகட்டிப் பறக்கலாம். எண்ணியெண்ணி செலவு செய்யத் தேவை இல்லை. 
ஆரம்பத்தில் இருந்தே அன்பளிப்பு என்ற பெயரில் கையூட்டு வாங்குவது அவருக்கு அருவருப்பாகவே தோன்றியது. சிவானந்தம் அறிந்த வகையில் லஞ்சம் வாங்கியவர்களில் பெரும்பாலோரின் வாழ்க்கை, ஓய்வுக்குப் பிறகு நிம்மதியாகக் கழிந்ததில்லை. மித மிஞ்சிய  பண வரவால் குடிக்கப் பழகி உடல்நலம் கெடுத்தவர்கள்... மன நிம்மதியைத் தொலைத்தவர்கள்... பண இருப்பால் ஓகோவென வாழ்ந்து... ஓய்விற்குப் பிறகு திண்டாடித் திணறியவர்கள் இத்தியாதி நபர்களை அவர் நேரடியாகத் தெரிந்திருந்தார். அதனால் சம்பளம் மட்டுமே போதும் என்கிற வட்டத்திற்குள் வாழப் பழக்கப்படுத்திக்கொண்டார்.
இப்போது நினைத்துப் பார்த்தால் தாம் கடைபிடிக்கும் முறை தவறோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நாளைக்கு கிடைக்கப் போகிற நிம்மதிக்காக இன்றைக்கு சங்கடப்பட வேண்டுமா? எப்பவோ கிடைக்கப் போகிற பலாச்சுளைக்காக இப்ப கிடைக்கிற கிலாக்காயை இழக்கணுமா? இப்படியாக மனதில் விரக்தியான விஷயங்கள் அலைமோதும் வேளையில் சரஸ்வதி பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தாள். கணவன் உறங்காமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்.
""என்னங்க இன்னேரம் வரைக்கும் தூங்காமலா உட்கார்ந்து இருக்கிக?''
""என்ன பண்றது... கட்டுன பெண்டாட்டிக்கு பட்டுப்புடவை கூட வாங்கிக் கொடுக்க முடியாத வக்கத்தவனா இருக்கேன்... ம் என்ன செய்றது..? இனிமே என்னோட போக்க மாத்திக்கிட முடிவு பண்ணிட்டேன்... ஆமா நானும் லஞ்சம் வாங்கப் போறேன்... நடக்கிறது நடக்கட்டும்... ஒனக்கு பட்டுப்புடவை மட்டுமல்ல... பிள்ளைங்களுக்கும் பட்டுப் பாவாடை  இந்த தீபாவளிக்கே எடுத்திடலாம்...நேர்மையா இருந்து என்னத்தக் கண்டேன்... வீட்டுல ஏச்சுக்களும் பேச்சுக்களும் வாங்கியதுதன் மிச்சம். ஆபீஸ்ல பொழைக்கத் தெரியாததவன்னு பட்டத்தை வாங்கி வச்சிருக்கேன்''
கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்க தழுதழுக்கும் குரலில் தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார் சிவானந்தம்.
கணவனின் நிலை கண்டு சரஸ்வதி கலங்கிப் போனாள்.
""வேண்டாங்க... சம்பளம் தவிர வேறெதுக்கும் ஆசப்பட வேண்டாம்... தீபாவளிக்குப் புதுத் துணி போடணும்கிறதுதான் சம்பிரதாயம். பட்டுத்துணி கட்டணும்னு சொல்லல... பாவி.. நான் ஒங்க மனசு புரியாம ஆத்திரத்தில மோசமா நடந்துக்கிட்டேன்... பால் கூட காய்ச்சித் தராமப் படுக்கப் போயிட்டேன்... பால் காய்ச்சித் தர்றேன்.. குடிச்சிட்டு நிம்மதியாத் தூங்குங்க''
 சரஸ்வதியின் சமாதானமொழி கேட்டு ஆச்சரியம் அடைந்தார் சிவானந்தம். மனைவி வழங்கிய பாலைப் பருகி விட்டு படுக்கப் போனார்.
நாளையப் பொழுது வேதனை சேராத விடியலாக அமையப் போவதை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சிவானந்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com