'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 6

அன்று பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்தவர் "ரிலையன்ஸ்' குழும நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 6

அன்று பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்தவர் "ரிலையன்ஸ்' குழும நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதற்குப் பிறகு அவர் பிரணாப்தாவை சந்திக்க வீட்டுக்கு வந்ததாக நினைவில்லை. ஒருவேளை, அவர் சந்திக்க வந்தபோது நான் இல்லாமலும் இருந்திருக்கலாம்.

பொதுவாகவே, தொழிலதிபர்களையும், தனது அமைச்சரகம் தொடர்பான சந்திப்புகளையும் பிரணாப்தா தனது வீட்டில் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது வழக்கம். அலுவலகரீதியிலான சந்திப்புகளை அவர் அலுவலகத்தில்தான் வைத்துக் கொள்வார். வீட்டில் வந்து காத்திருந்து அவரைச் சந்திப்பவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தொடர்பான தலைவர்களாகத்தான் இருப்பார்கள். கட்சிக்காரர்கள் அவரைச் சந்திப்பதற்கு முன் அனுமதி தேவையில்லை என்பது 13, தல்கத்தோரா சாலை இல்லத்தின் எழுதப்படாத சட்டம்.

அதேபோல, பிரணாப்தாவுக்கும் சாமானிய தொண்டர்களுக்கும் தொடர்பில்லை என்கிற தவறான கருத்து நிலவுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சாதாரண அடிப்படைத் தொண்டர்கள் அவரைச் சந்திக்க வருவதுண்டு. தலைவர்களுக்குத் தரப்படும் அதே மரியாதை அந்தத் தொண்டர்களுக்கும் கிடைப்பதைப் பார்த்து நான் அதிசயித்திருக்கிறேன்.

பெரிய தலைவர்கள் எல்லாம், தொண்டர்களைக் கூட்டம் கூட்டமாக, ஐந்து  பேர், பத்து பேர் கொண்ட குழுக்களாக  தங்களது அறைக்கு அழைத்து அவர்களிடம் உரையாடி அனுப்புவதுதான் வழக்கம். பிரணாப்தா அப்படியல்ல. முடிந்தவரை, அவர்களைத் தனித்தனியாக சந்திப்பார். சில நொடிகளில் அவர்களது பிரச்னையைக் கேட்டறிந்து, தீர்வு சொல்வார். அவர்களும் மகிழ்ச்சியாகத் திரும்பிச் செல்வார்கள்.

உதவி கேட்டு வருபவர்களுக்கு, அவர்களது மாநிலத்திலோ, மாவட்டத்திலோ உள்ள ஏதாவது தலைவருக்குக் கடிதம் கொடுத்து அனுப்புவது பிரணாப்தாவின் வழக்கம். பிரணாப்தாவுக்கு வேண்டியவர் என்கிற அங்கீகாரத்துடன் அந்தத் தொண்டர் கட்சியில் செயல்படுவதை அந்தக் கடிதம் உறுதிப்படுத்தும். இது ஒருவகையான உத்தி என்று நான் தெரிந்து கொண்டேன்.

அப்படி உதவி கேட்டு வந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சாதாரணத் தொண்டர் ஒருவர், சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் உயர்ந்தது எனக்குத் தெரியும். பிரணாப்தா ஜனாதிபதியான பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரைச் சந்திக்க நான் சென்றிருந்தபோது, அவரை அங்கே மீண்டும் சந்தித்தேன். பழைய நினைவை மறக்காமல் என்னிடம் அவர் நெகிழ்ச்சியுடன் கைகுலுக்கியபோது, பிரணாப்தாவின் அணுகுமுறையை நினைத்து நான் வியந்தேன்.

தேர்தல் வெற்றி தோல்விகளைக் கணிப்பதில் பிரணாப்தாவுக்கு இருந்த அசாத்தியத் திறமையைப் பார்த்து திருமதி இந்திரா காந்தியே ஆச்சரியப்பட்டிருக்கிறார். 1980 தேர்தலுக்கு முன்பு, ஒருநாள் பரபரப்பில்லாமல் வீட்டில் இருந்தார் பிரணாப்தா. அன்று அவரைச் சந்திக்க விருந்தினர்கள் யாரும் வந்திருக்கவில்லை. உதவியாளர்கள் அருகில் எங்கோ போயிருந்தார்கள். நான் வெளியே வரவேற்பறையில் அமர்ந்து, தினசரிகளில் வந்திருந்த தேர்தல் பிரசாரம் குறித்த செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.

மணி அடித்தது. பிரணாப்தா உதவியாளரை அழைக்கிறார் என்று தெரிந்தது. யாரும் இல்லாததால், நான் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

""நீ அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?''

""வெளியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறேன். உதவியாளர்கள் அருகில் எங்கோ போயிருக்கிறார்கள். அழைக்கவா?''

""வேண்டாம், உட்கார். இந்தப் பேடையும் பேனாவையும் எடுத்துக்கொள். மாநிலம் வாரியாக நான் சொல்வதைக் குறித்துக் கொள். இதை அப்படியே தட்டச்சு செய்து நான் இந்திரா காந்திக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எழுதிக் கொள்...'' என்றபடி சொல்லத் தொடங்கினார் அவர். அப்போது கணினிப் பயன்பாடு வந்திருக்கவில்லை.
ஒவ்வொரு மாநிலமாகச் சொல்லிக் கொண்டு வந்தார். மொத்த இடங்கள் எவ்வளவு, அதில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும், எந்தெந்தத் தொகுதிகளில் தோல்வியடையும் என்று கையில் எந்தவிதப் புள்ளிவிவரமோ, குறிப்போ இல்லாமல் அவர் சொல்லச் சொல்ல நான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். எப்படி இத்தனை விவரங்களையும் பிரணாப்தா தனது விரல் நுனியில் வைத்திருக்கிறார் என்கிற அன்றைய பிரமிப்பு இன்றுவரை எனக்கு அகலவில்லை.
விதர்பா, மராத்வாடா, கொங்கண் என்று மகாராஷ்டிராவையும், மேற்கு, மத்திய, கிழக்கு என்று உத்தர பிரதேத்தையும், மால்டா, புந்தேல்கண்ட், மகாகோஷல், சம்பல், குவாலியர் என்று மத்திய பிரதேசத்தையும், தெற்கு, வடக்கு, செளராஷ்ட்டிரா என்று குஜராத்தையும், தெற்கு, வடக்கு, மைசூர், கூர்க் என்று கர்நாடகத்தையும் இப்படி இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் பிரித்து, அதிலுள்ள மக்களவைத் தொகுதிகள் எத்தனை என்பதைக் குறிப்பிட்டு, வெற்றி - தோல்விப் பட்டியலை அவர் பட்டியலிட்டதைப் பார்த்து மலைக்காமல் வேறு என்ன செய்வது ?
தேர்தல் நடந்த 542 தொகுதிகளில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 375 இடங்
களில் வெற்றி பெறும் என்று தொகுதி வாரியாகப் பட்டியலிட்டு பிரணாப்தா கணித்திருந்தார். காங்கிரஸ் அந்தத் தேர்தலில் 374 இடங்களை வென்றது. மாநிலங்கள் அளவிலும் அவரது கணிப்பு ஏறத்தாழ சரியாகவே இருந்தது.
""எப்படி இத்தனை விவரங்களையும் நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று அவரை ஆச்சரியத்துடன் கேட்டேன்.
அவருக்கே உரித்தான சிறு புன்னகையை உதிர்ந்தபடி பிரணாப்தா சொன்ன பதில் : "இதுகூடத் தெரியாவிட்டால் நான் தேசிய அளவிலான அரசியலில் இருப்பதற்கு லாயக்கற்றவன். அரசியல்வாதி மட்டுமல்ல, உன் போன்ற பத்திரிகையாளர்களும் அடிப்படைப் புள்ளிவிவரங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.' அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களில் இதுவும் ஒன்று.
அதற்குப் பிறகு நான் நெருங்கிப் பழகிய அரசியல் தலைவர்களில் பலருக்கும், பிரணாப்தாவைப் போன்ற புரிதல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சந்திரசேகர், ராமகிருஷ்ண ஹெக்டே, பிஜூ 
பட்நாயக், வி.என். காட்கில், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திரஜித் குப்தா, அஜித் சிங் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்கள் குறித்தும், மாநில அரசியல் நிலவரம் குறித்தும் ஆழமான புரிதல் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. பிரணாப்தாவுக்கு இந்திரா காந்தியிடம் இருந்த அளவிலான நெருக்கமும், இணக்கமும் சஞ்சய் காந்தியிடம் இருக்கவில்லை. வெல்லிங்டன் கிரசென்டிலுள்ள சஞ்சய் பாபுவின் வீட்டிற்கு நான் போகும்போது, வெளிப்படையாகவே பிரணாப் முகர்ஜிக்கு வேண்டியவர் என்று  என்னை முத்திரை குத்திப் பேசுவதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
எதையும் மனதிற்குள் ஒளித்து வைத்துக் கொள்ளாமல், முகத்துக்கு நேராகக் கூறிவிடும் பண்பு சஞ்சய் பாபுவுக்கு உண்டு. அதே நேரத்தில், இந்திரா காந்தியைப் போல அல்லாமல், முகஸ்துதிக்கு மயங்குபவராகவும் அவர் இருந்தார். அதை வி.பி. சிங், பன்சிலால், என்.டி. திவாரி போன்றவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
சஞ்சய் காந்தியை வி.பி. சிங் "யுவராஜ் ஜி' 
(இளவரசரே) என்று அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன். அதை சஞ்சய் பாபு சட்டை செய்ய மாட்டார் என்றாலும், "அப்படி எல்லாம் என்னை அழைக்காதீர்கள்' என்று சொன்னதும் இல்லை. இது குறித்து ஒருநாள் நான் பிரணாப்தாவிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தபோது, அவர் அதை ரசிக்கவில்லை. என்னை அவர் கண்டித்த விதம் வித்தியாசமானது.
""ஓர் இடத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, அங்கே நடந்த நிகழ்வுகளையும், காதில் விழுந்த செய்திகளையும் மூட்டை கட்டி நினைவின் ஓர் ஓரத்தில் வைத்து விட வேண்டும். அடுத்தாற்போல, நீ போகும் இடத்தில் அதைப்பற்றிப் பேசக்கூடாது. அப்படிப் பேசினால், உன்னிடம் ஏதாவது சொன்னால் அதை நீ இன்னொருவரிடம் சொல்லக்கூடும் என்கிற சந்தேகம் எழும். அது உனக்கு நல்லதல்ல'' என்று அறிவுரை கூறி நிறுத்தினார் பிரணாப்தா. பிறகு தொடர்ந்தார்:
""மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதுபோன்ற வெட்டிப் பேச்சில் ஈடுபட்டால், நாம் செய்ய வேண்டிய வேலைகள் கெட்டுவிடும். யாரோ என்னவோ செய்யட்டும், சொல்லட்டும். நாம் நமது வேலையைப் பார்ப்போம்.''
பிரணாப்தாவின் வெற்றிக்கு இதுதான் முக்கியமான காரணம் என்பதை நான் போகப் போகத் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் முக்கியமான பல தலைவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது நம்பிக்கையையும், அன்பையும் நான் பெற முடிந்ததற்கு பிரணாப்தா கற்றுத்தந்த பாடம்தான் காரணம்.
தேர்தல் பிரசாரம் முடியும்வரை, நான் தில்லியில் இருக்கவில்லை. வாக்குப் பதிவுக்கு முன்னால் நான் தென்னகம் திரும்பிவிட்டேன். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றபோது, பிரணாப்தா கூறியதுபோல திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ஒரு மாற்றம் காணப்பட்டதை உணர்ந்தேன். ஆனால், அப்போதும் கூட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அணி குறைந்தது 20 இடங்களிலாவது வெற்றி பெறும் என்பதுதான் எனது கணிப்பாக இருந்தது.
காங்கிரஸ் தொண்டர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததை, ஆர் வெங்கட்ராமன் போட்டியிட்ட தென் சென்னை மக்களவைத் தொகுதியில் என்னால் உணர முடிந்தது. திமுகவினர் சரியாக வேலை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டை செங்கல்பட்டில் போட்டியிட்ட இரா. அன்பரசு, சிவகாசியில் போட்டியிட்ட வி. ஜெயலட்சுமி, நீலகிரியில் போட்டியிட்ட பிரபு ஆகியோரும் தெரிவித்தனர். காங்கிரஸ் வேட்பாளர்களைப்போல, திமுக வேட்பாளர்கள் எந்தவிதக் குற்றச்சாட்டையும் வைக்காமல் முழுமூச்சாக வேலை பார்த்தனர். அதையும் நான் கவனித்தேன்.
பிரணாப்தா சொன்னது போலத்தான் நடந்தது. காங்கிரஸ் 374 இடங்களில் வென்றிருந்தது. தமிழகத்திலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி இருந்தது. தேர்தல் வெற்றி தோல்வியைப் பிரசாரம் மட்டுமே தீர்மானிக்காது என்பதை நான் புரிந்து கொண்டேன்.
தேர்தல் முடிந்து, இந்திரா காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பதவி ஏற்புக்குப் போக வேண்டும் என்று மனது துடித்தாலும், அதற்கான வாய்ப்பும் வசதியும் அமையவில்லை.
தொலைக்காட்சி வந்திராத காலம் அது. பிரணாப்தா அமைச்சராவார் என்பது தெரிந்ததுதான் என்றாலும், அவருக்கு என்ன பொறுப்பு தரப்படுகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன். ஏற்கெனவே 1974 முதல் நிதித்துறை இணையமைச்சராகவும், பிறகு வருவாய், வங்கித் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பதால் அவருக்கு நிதித்துறை வழங்கப்படும் என்று எதிர்பார்த்தேன். அவருக்கும்கூட அந்த எதிர்பார்ப்பு இருந்தது என்றுதான் நினைக்கிறேன்.
உள்துறை அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ஆர். வெங்கட்ராமன் நிதியமைச்சராகவும், பிரணாப்தா முகர்ஜி வர்த்தகத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுவதாக வானொலி அறிவித்தது. வர்த்தகத் துறை மட்டுமல்லாமல், அவருக்கு இரும்பு எஃகு, சுரங்கத் துறைகளும் வழங்கப்பட்டிருந்தன. 
ஆர். வெங்கட்ராமனுக்கும் அது ஒருவகையில் ஏமாற்றம் தான் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சர்தார் வல்லபபாய் படேல், ராஜாஜி, கோவிந்த் வல்லப பந்த், குல்ஜாரிலால் நந்தா வரிசையில் தானும் உள்துறை அமைச்சராக வேண்டும் என்று ஆர்.வி. விரும்பியதாக  தில்லியில் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
இதற்கிடையில் எனக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்ததால், தில்லியில் நீண்டநாள் போய் தங்க முடியவில்லை. எனது திருமண அழைப்பிதழைக்கூட அவருக்குத் தபாலில்தான் அனுப்பி வைத்தேன். நான் நேரில்போய் அழைக்கவில்லை. 
திருமணம் முடிந்து ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு நான் தில்லிக்குச் சென்றபோது அவரை சந்தித்தேன். அதற்குள் பல அரசியல் நிகழ்வுகளும், மாற்றங்களும் நடந்திருந்தன. எனது வாழ்க்கையிலும்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com