திரைக் கதிர்
By - ஜி.அசோக் | Published On : 06th September 2020 08:16 PM | Last Updated : 06th September 2020 08:16 PM | அ+அ அ- |

சூர்யா தனது "சூரரைப் போற்று' படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு திரையுலகின் ஒரு தரப்பில் வரவேற்பும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் ஓடிடி தளத்தில் "சூரரைப் போற்று' வெளியாகவிருப்பது சூர்யாவின் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. சூர்யா தன் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு ரசிகர்கள் இணையதள பக்கங்களில் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
--------------------------------------------------------
கர்நாடகத்தில் தகுந்த கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர். சுமார் 50 படங்களின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த விதத்தில் "கேஜிஎப் 2' படக்குழுவினர் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இப்படப்பிடிப்பில் தற்போது பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
--------------------------------------------------------
"கைதி' படத்திற்குப் பிறகு கார்த்தி நடித்து வரும் படம் "சுல்தான்'. இப்படத்தை "ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். "சுல்தான்' படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பும், முக்கிய படத்தொகுப்பு பணிகளும் முடிந்துவிட்டன. இதர ஒரு சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
--------------------------------------------------------
தமிழில் "துப்பறிவாளன்', "நம்ம வீட்டு பிள்ளை' படங்களில் நடித்திருந்தவர் அனு இம்மானுவேல். "நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் வரும் "காந்த கண்ணழகி' பாடல் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. தமிழில் நடிக்க தொடர்ந்து வித விதமான போட்டோக்களை தன் இணையதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அனு.
--------------------------------------------------------
தமிழ் சினிமாவில் ஒதுங்கியிருந்த மீனா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ரஜினிகாந்துடன் "அண்ணாத்த' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 17 கிலோ உடல் எடையை அவர் குறைத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் மீனா.
--------------------------------------------------------
விமானப் பணிப்பெண்ணாக இருந்த அஞ்சனா கீர்த்தி சினிமா ஆசை காரணமாக நடிப்பதற்காக துபாயில் இருந்து சென்னை வந்தார். தற்போது, "மாநாடு' படத்தில், சிம்புவுக்கு வில்லியாக நடிக்கிறார்.
--------------------------------------------------------
விரைவில் ஓடிடி தளத்துக்கு வருகிறார் நயன்தாரா. ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் "மூக்குத்தி அம்மன்' ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்காக 48 நாள்கள் விரதம் இருந்து நடித்துள்ள நயன்தாரா, இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். ஓடிடி தள வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.