முன்னறி தெய்வம்!

வேலுச்சாமிக்குச் சரிக்குச் சரியாக நின்று, நிரை போட்டுப் பூப்பறித்த முத்தழகு, சற்றுதூரம் தள்ளிப் பார்வையைச் செலுத்தினாள்.
முன்னறி தெய்வம்!

வேலுச்சாமிக்குச் சரிக்குச் சரியாக நின்று, நிரை போட்டுப் பூப்பறித்த முத்தழகு, சற்றுதூரம் தள்ளிப் பார்வையைச் செலுத்தினாள். ஏதோ கண்ணுக்குப் படவே, வேலிப் பக்கமாக விரைந்தாள். அங்கே மூன்று கறுப்பு நிறக் "கேன்' டப்பாக்கள் இருந்தன.

""ஏங்க, இங்கே வாங்க...'' என்று கணவரை அழைத்தாள்.

""என்ன புள்ளே'' என்று கேட்டுக் கொண்டே வேலுச்சாமி அங்கே போனார்.
""இது என்ன டப்பாக்கள்... நம்மளது இல்லையே'' எதிரொலித்தார் வேலுச்சாமி.
""உங்களது இல்லேன்னா, எப்படி அதுகள் உங்கள் காட்டுக்குள்ளே கிடக்கும்?'' ஒரு முரட்டுக்குரல் கர்ஜித்தது. அவரும் அவளும் திரும்பிப் பார்த்தார்கள். இரண்டு காக்கிச்சட்டைக்காரர்கள் நின்றார்கள். வேலுச்சாமிக்கும் முத்தழகுக்கும் "திக்' என்றது.
""நீங்க... இதுகள்... எப்படி... என்ன...?'' அந்தக்காலத் தந்தி மொழியில் பேசினார் வேலுச்சாமி.
""என்ன, எப்படிங்கிறதெல்லாம் எங்களுக்குத் தெரியும். கள்ளச் சாராய கேன்கள் அதுகள். காய்ச்சினது நீ. நட ஸ்டேஷனுக்குப் போகலாம்'' என்றார் தொங்கு மீசை போலீஸ்.
""என்ன இது, அபாண்டமா ஏதேதோ சொல்றீங்க''
என்றாள் முத்தழகு.
""சார், தப்பா நினைக்காதீங்க... இதுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லே... யாரோ செஞ்ச வேலையிது... சரிசரி... முத்தழகு, சீக்கிரமா ஓடிப்போய் ஐயாக்களுக்குக் காப்பி போட்டுக் கொண்டா, ஓடு சீக்கிரம்...'' வேலுச்சாமி காவலர்களையும் முத்தழகுவையும் பார்த்துப் பேசினார். வேறு யாரும் இங்கே நடப்பதைப் பார்க்கிறார்களோ என்று நாலாபுறமும் பார்த்துக் கொண்டார்.
""ஏங்க, எங்களைப் பார்த்தா காப்பி குடிச்சுட்டுக் காசு வாங்கிட்டுப் போற பார்ட்டி மாதிரி தெரியுதா?''
""அந்த அர்த்தத்திலே சொல்லலீங்க சார். ஒரு மரியாதைக்காக கேட்கிற நடைமுறைப் பழக்கம் சார். கிராமத்து மண்வாசனை எங்களை விட்டுடாதே ''
""மண்வாசனையோ, சாராய வாசனையோ, நடங்க போகலாம் ''
அவர்கள் அவசரப்படுத்துவதைப் பார்த்தால் யாரிட
மாவது சொல்லி உதவிக்கு அழைக்க வேண்டும் என்று முத்தழகுக்குப் பட்டது. மகாதேவன் ஐயாவுக்குச் சேதி போனால், உடனடியாக வந்து அவர் உதவி செய்வார்.
தூரத்தில் மகாதேவனே வந்து கொண்டிருந்தார். வேலுச்சாமியோடு நிற்கும் காவலர்களைப் பார்த்து, ""இவர்களுக்கு இங்கே என்ன வேலை? யாருடைய விலாசத்தையாவது வேலுச்சாமிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ...''
""போகலாமா'' என்று மிரட்டும் குரலில் மீசைக்காரக் காவலர் வேலுச்சாமியைப் பார்த்துக் கூப்பிட்டவுடன்தான், ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்று அவருக்குப் பட்டது. மகாதேவனைப் போலீஸ்காரர்களுக்கு அறிமுகம் செய்யப் பேச்செடுத்தார் வேலுச்சாமி. அவரைப் பேசவிடவில்லை. அவசரப்படுத்தினார்கள். "ஐயா, அவசரப்படாதீர்கள். அவர் உங்களை மீறி எங்கேயும் ஓடி விடுபவர் அல்ல. என் நண்பர் நல்லவர்' மகாதேவன் முதல் தகவல் அறிக்கை அது.
""இருக்கட்டுங்க... எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். இதோ அவர் தோட்டத்திலே கைப்பத்தின கள்ளச் சாராயக் கேன்கள். அதுகளை எடுத்துக்கிட்டு, அவரைக் காவல் நிலையத்துக்குக் கொண்டுபோறோம். அவ்வளவு தான்.'' மேற்கொண்டு அவர்களோடு பேசிப் பயனில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார் மகாதேவன்.
""அப்படியா... புறப்படுங்க... வேலுச்சாமி... நீங்க பயப்படாதீங்க, நான் இருக்கேன். நானும் உங்களோடு வர்றேன்''
""என்ன வெள்ளைச் சட்டைக்காரரே... உங்க குரலிலே ஏதோ "நான்'ங்கிற கவுரவத்தைக் காட்டுறீங்க... அதெல்லாம் வேண்டாம்...''
""கவுரவமா, நானா? நான் ஓய்வு பெற்ற ஒரு சாதாரண ஆசிரியர். அவ்வளவு தான். சரி... சரி... நீங்க உங்க கடமையைச் செய்யுங்க... நான் தனியா, பின்னாடி வந்துக்கிறேன்.''
வேலுச்சாமி கண் கலங்கினார். காவல் நிலையம் கறுப்பா சிவப்பா என்று தெரியாத அப்பாவி அவர். அந்தப்பக்கம் செல்ல வேண்டிய அவசியமே அவருக்கு வந்ததில்லை. டவுனில் வேறு சில இடங்களுக்கு வேறுவேறு வேலையாகச் சென்றிருக்கிறார். அவ்வளவு தான்.
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஏதோ ஒரு ரெஜிஸ்டரைப் புரட்டிக் கொண்டிருந்தார். கேட்டில் நுழைந்த காவலர்களையும், அவர்கள் யாரோ ஒருவரை அழைத்து வருவதையும் பார்த்து அதை அவர் ஓர் ஓரத்தில் தள்ளினார்.
காவலர்களில் ஒருவர் மகாதேவனைப் பார்த்து, ""சார், நீங்க இங்கேயே ஒரு ஓரமா நில்லுங்க. உள்ளே எல்லாம் வரப்படாது. நாங்க இவரை முதலிலே இன்ஸ்பெக்டர் ஐயாகிட்டே ஆஜர் படுத்தணும்'' என்றார்.
சல்யூட் அடித்தவர்களைப் பார்த்த இன்ஸ்பெக்டர், ""என்னையா, ஒரு சொத்தக் கேசைக் கொண்டு வர்றீங்க... எங்கேய்யா உங்க சப்-இன்ஸ்பெக்டர், வில்லங்கம் துரைசாமி. இந்த ஸ்டேஷனுக்கேன்னு வாய்ச்ச நல்ல ஆளுய்யா அவரு'' என்றார்.
புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டரைத் திருப்திப்படுத்தணுமே என்கிற பயத்தில், செயல்படுபவர் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி.
""சார், அவர் கல்குவாரிப் பக்கம் போயிட்டு, அப்படியே இன்னொரு இடத்திற்கும் போயிட்டு மத்தியானமா வர்றதாச் சொன்னாரு சார்...'' மீசை பணிந்துரைத்தார்.
""ஆமா, என்கிட்டேயும் சொன்னாரு. அதுசரி, இதென்ன கள்ளச் சாராயமா?'' வேலுச்சாமியை மேலும் கீழும் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
""உன் பேரு என்ன, எந்த ஊர், எத்தனை நாளா இந்தத் தொழில்''. வேலுச்சாமி தன் பெயர் சொல்ல இன்ஸ்பெக்டர்முன் வந்தார்.
""ஏய்யா.... இந்த ஆளு முகத்தைப் பார்த்தா, முயல் பிடிக்கிற வேட்டை நாய் மாதிரி தெரியலையே?'' 
நெட்டைக் காவலர் நெளிந்தார். மீசையும் தான்.
""ஏம்பா, உன் பேரைக் கேட்டா இன்னும் பதிலே சொல்லலை... வாயிலே என்ன கொழுக்கட்டையா? கேட்கிறபடி கேட்டால்தான் பதில் சொல்வியா?''
""என் பேரு வேலுச்சாமி சார்''
இன்ஸ்பெக்டர் தன் நீண்ட முகத்தை ஒரு தடவு தடவிக் கொண்டார்.
""வேலுச்சாமி சாரா?.... ம்.... "சார்' போட்டது உனக்கா, இல்லே எனக்கா?'' காவலர்கள் இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டார்கள்.
""இல்லே, "வேலுச்சாமிசார்'ன்னு சொன்னியே... அந்த "சார்', உன்பெயரின் மறுபாதியா, இல்லே மரியாதை காட்டுறதுக்கு எனக்குப் போட்ட சாரா? சாரை எங்கே சேர்க்கிறது?''
காவலர்களுக்கு மீண்டும் மனசுக்குள் சிரிப்பு.
""எல்லாம், ஐயாவுக்குப் பள்ளிக்கூடத்திலே வாய்ச்ச வாத்தியாரைச் சொல்லணும்.'' 
""சார், உங்களுக்கு மரியாதை காட்டத்தான் சார் அப்படிச் சொன்னேன். வாய் தவறி ஏதாவது தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க சார்...'' வேலுச்சாமி.
தன்னிச்சையாக இன்ஸ்பெக்டரின் கண்கள் காம்பவுண்டு கேட்டுக்குத் தாவின. மீசைப் போலீûஸ அழைத்தார்.
""ஏய்யா மீசை, யாரோ ஒருத்தர் கேட்டுலே நின்னுக்கிட்டு, இங்கேயே பார்த்துத் தவியாய்த் தவிக்கிறாரே, யாரு அவர்?''
வேலுச்சாமி சற்று அவசரம் காட்டினார்.
""என் நண்பர் சார். என் கூட வந்திருக்கிறார். இவங்க அவரை கேட்டிலேயே நில்லுங்கன்னு நிறுத்திட்டாங்க, அவர் ஒரு ஆசிரியர் சார்?''
வேலுச்சாமி மெதுவாய் முனகினார்.
இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
""ஆசிரியரா? ஏம்ப்பா கனகு, இங்கே வா...''
மீசை கனகு இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து சல்யூட் அடித்தார், இரண்டாம் முறையாக.
""இவர் சொல்றவரா அவர்?''
""ஆமாங்க ஐயா.''
இன்ஸ்பெக்டர் கனகுவைப் பார்த்து ஒருமுறை முறைத்தார். கனகுவுக்கு ஒன்றும் புரியவில்லை.
""போயி அவரை அழைச்சிக்கிட்டு வாய்யா...''
கேட்டருகே விரைந்த கனகு, ""இன்ஸ்பெக்டர் உங்களை வரச் சொல்றார், வாங்க...'' என்றார் மகாதேவனிடம்.
புத்துணர்வு கொண்டார் மகாதேவன் ஐயா.
வேலுச்சாமியை இந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல இன்ஸ்பெக்டரிடம் எப்படிப் பேசலாம், என்ன பேசலாம் என்று மனக் கணக்குப் போட்டபடி, சாணக்கிய நடையில் இறங்கினார். நுழைவாயிலின் படிக்கட்டில் ஏறினார்.
தூரத்தில் மகாதேவனைக் கண்ட இன்ஸ்பெக்டரின் கண்களில் நொடி நேரத்தில் "பளிர்' என்று ஓர் ஒளி தோன்றியது. தன் அறையின் முன்புற வராண்டாவில் காலடி எடுத்து வைத்தவரை உற்று நோக்கினார். "என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மகாதேவன் ஐயாவா அவர்... ஆம், அவரே தான்.' தொப்பியைக் கழற்றியவாறு எழுந்தார் ஆய்வாளர். பெல்ட்டைப் போதுமான அளவு தளர்த்திக் கொண்டார். மகாதேவனை நோக்கி இரண்டு மூன்றடி வைத்தவர், ""ஐயா, என்னைத் தெரிகிறதா'' என்று வணக்கம் வைத்தார். முன்னாள் தமிழய்யா மகாதேவனின் காலைத் தொடக் குனிந்தார்.
தன் பழைய மாணவர்களில் ஒருவரைப் பல ஆண்டுகளுக்குப்பின் புதுக்கோலத்தில் அடையாளம் காண்பதற்கு மகாதேவன் ஐயாவுக்கு ஐந்தாறு விநாடிகள் ஆயின.
""ஓ... பரமசிவமா... புதுக் கோலத்தில் உடனே கண்டுபிடிக்க முடியலே பரமசிவம்...'' என்றார்.
""ஐயா, இப்படி உட்காருங்க ஐயா''
சிம்மாசனம் போட்டார் ஆய்வாளர்.
""ஏம்ப்பா, எல்லாரும் வாங்க. வந்திருக்கிறது யாரு தெரியுமா, எனக்குத் தமிழ்ப் பால் ஊட்டிய ஆசிரியர். பார்த்துக்கங்க''
அனைவரும் அவருக்கு வணக்கம் வைத்தார்கள்.
""தமிழ்ப் பால் ஊட்டிய என் ஆசிரியர் ஐயாவுக்கு, இப்போ நான் தரமான பாலும் பழங்களும் கொடுக்கணுமே... சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்க.''
பாக்கெட்டில் கைவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டைக் கனகு கையில் கொடுத்து விரட்டினார் இன்ஸ்பெக்டர் பரமசிவம்.
""பரமசிவம், உங்களைப் பார்த்தவுடனே ஒரே ஒரு சம்பவம் என் மனக் கண்முன் ஓடி வருது. சொல்லலாமா... உங்க வேலை கெட்டுடாதே...''
""சொல்லுங்க ஐயா'' இன்ஸ்பெக்டர்.
""ஒருமுறை நம் பள்ளி ஆண்டு விழாவிலே நாடகம் போட்டோம். அந்த நாடகம் பாரதிதாசன் எழுதிய "புரட்சிக்கவி'. அதிலே வர்ற கவிதை வரிகளை நீங்க நடிச்சுக் காட்டினீங்க. அப்போ கூடியிருந்த மாணவர்கள் எப்படிக் கைதட்டினார்கள், தெரியுமா... அது இன்னும் என் மனக் கண்ணில் தெரியுது பரமசிவம்.''
ஆசிரியரின் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் அடையாளமாகக் கைகுவித்தார் இன்ஸ்பெக்டர்.
""நீங்க மட்டும் என்ன சார், ஒருநாள் கம்ப ராமாயண வகுப்பிலே, சீதை அனுமன் சந்திப்பின்போது வரும் ஒரு பாடலை நாற்பத்தைந்து நிமிட வகுப்பு முழுவதும் நடத்தி, எங்களை அப்படியே அசத்திட்டீங்களே ஐயா. அதை ஒரு நாளும் மறக்கமாட்டேன் ஐயா. பொறாமையிலே சில ஆசிரியர்கள், "இப்படிப் பாடம் நடத்தினா எப்படி'ன்னு தலைமையாசிரியர்கிட்டே புகார் சொன்னாங்களே, அதெல்லாம் மறக்கமுடியுமா ஐயா''
பேச்சில் சுவைகூட்ட மகாதேவன் ஐயா, ""அந்தப் புகார் கிடக்கட்டும் பரமசிவம்... உங்ககிட்டே இப்போ பல புகார்கள் வருமே... பொய்ப்புகார், உண்மைப் புகார்ன்னு. எனக்குச் சிலப்பதிகாரத்திலே வர்ற புகார்க் காண்டப் புகார் பற்றி மட்டும்தான் தெரியும்''
காவலர்கள் கொண்டுவந்த பழங்களை ஒரு தட்டிலும், பால் டம்ளர்களை இன்னொரு தட்டிலும் தன் ஆசிரியரின் முன் வைத்தார் ஆய்வாளர்.
காவலர்கள் இருவரும் கண்கள் மூலமும், சைகை மூலமும் பேசிக் கொண்டார்கள்.
"போற போக்கைப் பார்த்தா, நாம எவனோ ஒரு துப்புக்கெட்ட பய கொடுத்த துப்பை வைச்சு இன்னிக்குக் கொண்டு வந்த கேசு, அம்பேல் ஆகிரும் போல இருக்கே...'
""ஏன் கனகு, இப்படி எனக்குத் தோணுது. அவனே இவரைப் பழிவாங்கணும்னு அவரோட பூக்காட்டிலே கேன்களை வச்சிட்டு வந்து நம்மளை முட்டாள் ஆக்கிட்டானோ...''
அது உண்மையாகிவிட்டது. மகாதேவன் ஐயாவின் நண்பராக இருக்கும் ஒருவர், இப்படிப்பட்ட அற்பக் காரியங்களில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்ற தீர்மானத்திற்கு வந்தார் இன்ஸ்பெக்டர்.
தமிழய்யா மகாதேவனுக்கு உரிய மரியாதைகள் செய்து அனுப்பி வைக்க எழுந்தார் இன்ஸ்பெக்டர். இன்னொரு முறை சாவகாசமாக அவர் வீட்டுக்கே சென்று பார்ப்பதாகச் சொன்னார். அவரது முகவரியையும் பெற்றுக் கொண்டார். வேலுச்சாமியிடம் ""கவனமாக இருந்துக்கங்க ஐயா'' என்றார்
சுருக்கமாக...

அது ஓர் உள்ளுறைச் சொற்றொடர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com