ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொப்புள் உபாதைகள்... நிவாரணங்கள்!

என் உறவினரின் பிறந்த குழந்தைக்கு தொப்புள் வேக்காடு ஏற்பட்டு காய்ச்சல் வந்து அவதிப்பட்டது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொப்புள் உபாதைகள்... நிவாரணங்கள்!

என் உறவினரின் பிறந்த குழந்தைக்கு தொப்புள் வேக்காடு ஏற்பட்டு காய்ச்சல் வந்து அவதிப்பட்டது. இதைச் சரி செய்வதற்கு என்ன ஆயுர்வேதமருந்து பயன்படுத்தலாம்? பல குழந்தைகளுக்கு ஏற்படும் தொப்புள் உபாதைகள், அதற்கான நிவாரணங்கள் பற்றி ஆயுர்வேதம் கூறும் கருத்துகள் எவை?

- செளந்தர்யா, மதுரை.

தொப்புள் குழியுள்ள இடம் வெந்து புண்ணாகி, முதலில் ரத்தமும் பிறகு சீழும் வரும் நிலையில் குழந்தைக்குக் காய்ச்சல் வரும். துளி ரத்தக் கசிவு ஏற்பட்டால் கூட உடனே விரண சிகிச்சை செய்ய வேண்டும். தாமதித்தால், உடல் முழுக்க காமாலை, நீலம் பாரித்து பிராண பயம் கூட வரலாம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்களின் தோல் இவற்றுடைய நுண்ணிய சூரணத்திற்கு திரிபலா என்று பெயராகும்.

இதனுடன் சுத்தம் செய்த அன்னபேதி சூரணமும் கலந்து (சம அளவில் ஒன்று சேர்க்கவும்) தொப்புள் புண் மீது தூவலாம். இந்த சூரணத்தைத் தேங்காய் எண்ணெய்யில் குழைத்தும் தடவலாம். பொதுவாய் ரத்தம், சீழ் கசிவு உள்ளபோது, சூரணத்தைத் தூவி பஞ்சு வைத்துக் கட்டுவதே நல்லது.

கசிவு நின்று சுத்தமாய் புண் பொறுக்குத் தட்ட ஆரம்பிக்கும் முன்பு சூரணத்தைத் தைலத்தில் குழைத்துப் போடலாம். மஹாதிக்தகம் என்ற நெய் மருந்து புண்வராமல் தடுப்பதிலும் புண்ணை ஆற்றுவதிலும் மிகவும் சிறந்தது. எந்தநிலையிலும் உபயோகிக்கத்தக்கது.

தொப்புள் கொடிச் கத்திரிப்பின் தவறுதலினால் சில இடங்களில் தொப்புளின் வெளியே சிறு சதைகள் அசிங்கமான முடிச்சுகள் போல் வளருகின்றன. சரகர் எனும் முனிவர் இந்தக் கோளாறை நாலுவிதமாகக் கூறுகிறார்.

1. உத்துண்டிதா: நீளமாகவும் அகலமாகவும் மேலே எழும்பி நிற்கும் முடிச்சுப் போல் உள்ளது.

2. பிண்டளிகா: பெரிய கோலி போல் உருண்டு நிற்கும் முடிச்சு.

3. விநாமிகா: நடுவில் சிறு பள்ளத்துடன் விளிம்புகளில் சுற்றிப் பருத்து வளரும் முடிச்சு.

இந்த மூன்றும் வெளிப்பார்வைக்கு விகாரமாய்த் தோன்றுமே தவிர, தொந்தரவு தரக் கூடியதல்ல. இதைச் சரியாக்க அறுவைச் சிகிச்சையினால் முடியும். ஆனால் தொப்புள் ஒரு மர்ம ஸ்தானமானதால் மிகவும் அவசியம் நேர்ந்தால் ஒழிய ஆயுதம் வைக்கக் கூடாது என்கிறார் சஸ்திர நிபுணர் ஸூசுருதர் எனும் முனிவர்.

4.விஜ்ரும்பிகா: பலூன் போல தொப்புள் உப்புசமாவது. இது தொப்புளின் உள்புறத்தில் குடலின் சரிவு ஏற்படுவதால் உண்டாகிறது. குழந்தை தூங்கும்போது தொப்புள் நல்ல பள்ளத்தில் அமுங்கியிருக்கும், அழுதால் தொப்புள் வீங்கும். குடல் பகுதி வெளியில் தள்ளப்படுவதால் சிறுவலி வயிற்றில் ஏற்படும். அதனால் அழுகை அதிகமாகும். வீக்கமும் அதிகமாகும். இவ்வளவு தொந்தரவும் நாபி நாளத்தைத் துண்டிப்பதில் நேர்ந்த தவறினால்தான்.

ஒரு சிறிய ஒரு ரூபாய் நாணயத்தை துணியில் முடிந்து , தொப்புளின் மேல் வைத்து, வயிறு சுற்றிக் கட்டி வைக்க, அதனால் ஏற்படும் அமுக்கத்தினால் குடல் சரிவு தடுக்கப்படலாம்.

நாளடைவில் உள்துவாரம் அடைபட்டுவிடலாம். அதிகமாய் அழுகையில்லாத குழந்தை குப்புறப்படுத்து தரையில் வயிறு அமுங்க நீந்தும் விளையாட்டு வந்த பின்பு தொப்புள் வீக்கம் அடியோடு மறைந்து விடுகிறது. இந்த நாணய வைத்தியம் மூலம் சரியாகமலிருந்தால், குழந்தையின் உடல்நிலையைப் பொருத்து அறுவைச் சிகிச்சை செய்தே சரி செய்ய இயலும்.

( தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com