'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 2

இந்திரா காந்தியின் முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவாக, சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 2

இந்திரா காந்தியின் முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவாக, சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர். வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு உள்ளிட்ட அவரது நடவடிக்கைகளால் கவரப்பட்டு மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பல இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் காங்கிரஸில் இணைந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ். விஜயலட்சுமியும் ஒருவர்.

1971 தேர்தலுக்குப் பிறகு, காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் தமிழகத்தில் வலுவிழந்து வந்த நேரம். போதாக்குறைக்கு எம்ஜிஆர் வேறு திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கி இருந்தார். தமிழகத்தில் இந்திரா காந்தி தலைமையிலான ஆளும் காங்கிரஸூக்குத் தொண்டர் பலமும், மக்கள் செல்வாக்கும் இல்லாதபோதும், சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், ஈ.வெ.கி. சம்பத், கவிஞர் கண்ணதாசன் போன்ற தலைவர்கள் பலர் இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில், 1973-ஆம் ஆண்டில் நான் சென்னைக்கு வந்தேன்.

அப்போது சென்னையில் என்னையும் ஓர் எழுத்தாளனாக அங்கீகரிக்க முன்வந்த ஒரே நபர் டாக்டர்எஸ். விஜயலட்சுமி மட்டும்தான். இடதுசாரி ஆதரவாளரான அவர் "புதிய அலை' என்கிற இதழை நடத்தி வந்தார். அதில் அரசியல், சினிமா, சங்கீதம், சிறுகதை என்று நான் எழுதியதை எல்லாம் ரசித்துப் படித்துப் பிரசுரிக்கும் பெரிய மனது அவருக்கு இருந்தது.

"புதிய அலை' எனக்குத் தமிழிதழியல் உலகின் வாயிலைத் திறந்து வழியமைத்துத் தந்தது. டாக்டர் எஸ். விஜயலட்சுமியின் தொடர்பால் ரங்கராஜன் குமாரமங்கலம் போன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.

இளைஞர் காங்கிரஸில் இருந்த ஜாவீத் கட்டாலா "நேரேட்டர்' என்கிற ஆங்கில இதழைத் தொடங்கினார். நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் அண்ணாவின் வீட்டுக்கு அருகில் இருந்த அவரது பங்களாவின் மொட்டை மாடியில் தென்னங்கீற்று வேய்ந்த இடத்தில்தான் "நேரேட்டர்' ஆங்கில இதழின் அலுவலகம் அமைந்திருந்தது.

"நேரேட்டர்' இதழில் பணியாற்றிய அனுபவம் அலாதியானது. ஆங்கிலத்தில் எழுதுகிறோம் என்கிற பெருமிதம் வேறு. காங்கிரஸ் கட்சி சார்ந்த இதழ் என்பதால், பேட்டிகளும், கட்டுரைகளும் அரசியல் சார்ந்ததாக மட்டுமே இருந்தன. உள்ளூர் தலைவர்களையே பேட்டி எடுத்துக் கொண்டிருந்த எனக்கு, பெரிய தலைவர்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் மத்திய அமைச்சர் ஒருவர் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் தங்கி இருக்கிறார் என்கிற செய்தி கிடைத்தது.

அவர் யார், எவர் என்கிற விவரம் எதுவுமே தெரியாது. சேப்பாக்கம் அரசினர் விடுதியை அடைந்தபோது மாலை சுமார் ஆறு மணி கடந்துவிட்டது. விசாரித்தபோது, வந்திருக்கும் மத்திய அமைச்சரின் பெயர் பிரணாப்குமார் முகர்ஜி என்றும், அவர் தொழில் வளர்ச்சித் துறை துணையமைச்சர் என்றும் தகவல் கிடைத்தது. சற்று நேரம் முன்புதான் கிளம்பி வெளியே சென்றார் என்றும், இரவு எப்போது வருவார் என்பது தெரியாது என்றும்சொன்னார்கள்.

ஒன்பது மணிவரை காத்திருப்பது என்று முடிவெடுத்து, வெளியில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது அவரைச் சந்திக்க வங்காளி அசோசியேஷனிலிருந்து சிலர் வந்தனர். காங்கிரஸ்காரர்கள் யாரும் வரவில்லை. அடுத்த நாள் அதிகாலையில் கிளம்பி அமைச்சர் பிரணாப்குமார் முகர்ஜி திருப்பதி போக இருப்பதாகவும், இப்போது தென்னிந்திய வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரவு உணவுக்கு வங்காளி அசோசியேஷன் ஏற்பாடு செய்திருக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் எனக்கு நம்பிக்கை பிறந்தது.

அடுத்த ஒரு மணி நேரம், பிரணாப்குமார் முகர்ஜி குறித்த எல்லா விவரங்களையும் அவர்களிடம் பேச்சுக் கொடுத்துத் தெரிந்து கொண்டுவிட்டேன். சுமார் எட்டரை மணிக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபுவுடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்து சேர்ந்தார். அவர்கள் அவசர அவசரமாக முதல் தளத்தில் இருந்த அறைக்கு விரைந்து விட்டனர். வங்காளி அசோசியேஷன் நிர்வாகிகளுடன் நானும் பிரணாப்குமார் முகர்ஜி தங்கியிருந்த அறை வாசலில் காத்திருந்தேன்.

அமைச்சர் குளித்துத் தயாராகி வந்துவிடுவார் என்று வங்காளி அசோசியேஷனின் நிர்வாகிகளிடம் தெரிவிக்க அறையிலிருந்து வெளியே வந்த பிரபு (பின்னாளில் மக்களவை உறுப்பினர், மத்திய இணையமைச்சர்) சட்டென்று என்மீது பார்வையைத் திருப்பினார். "யார் இது,இவர்களுடன் தொடர்பில்லாமல்?' என்று நினைத்திருக்கக் கூடும். எனக்கு அவருடன் அறிமுகம் இல்லாததால், என்ன வேண்டும் என்பதுபோல என்னைப்பார்த்தார்.

"நேரேட்டர்' இதழைக் காட்டி, அமைச்சரைப் பேட்டி காண வந்திருப்பதாகச் சொன்னபோது, பிரபு சிரித்தார். ""முன்கூட்டியே நேரம் வாங்காமல் நீங்கள் நினைத்தபோது பேட்டி எடுத்துவிட முடியாது. அவர் மத்திய அமைச்சர் என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்ட பிரபு, ""இப்போது எப்படி இருந்தாலும் அவரைப் பேட்டியெல்லாம் எடுக்க முடியாது. அதற்கு நேரமில்லை. உங்களை அறிமுகம் செய்து வைக்க முடியுமா பார்க்கிறேன்'' என்றபடி, " நேரேட்டர்' இதழையும் வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.

அடுத்த பத்து நிமிடங்கள், பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும் கணவனைப்போல, நான் தவித்த தவிப்பு எனக்குத்தான் தெரியும். கதவு திறந்தது. பிரபுவைத் தொடர்ந்து அமைச்சர் பிரணாப்குமார் முகர்ஜி வெளியே வந்தார். மற்றவர்கள் பூங்கொத்தும், அங்கவஸ்திரமுமாக நின்று கொண்டிருக்க, கையில் ஒரு குறிப்பேடு மட்டும் வைத்துக் கொண்டு நான் நின்று கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம், அவரது பார்வை அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்மீது பதிந்தது.

""இப்போது சந்திக்க முடியாது. நாளை காலை திருப்பதி சென்று விடுகிறேன். எப்போது திரும்புவேன் என்று சொல்ல முடியாது. இரவு விமானத்தில் கல்கத்தா கிளம்ப வேண்டும். நாளை மாலையில் வாருங்கள். நேரம் கிடைத்தால் உங்களுடன் பேசுகிறேன்'' என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு, வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தார் பிரணாப் குமார் முகர்ஜி. அவருடன் அனைவரும் நகர்ந்தனர்.

நானும் மெதுவாக இறங்கி, பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அடுத்த நாள்அமைச்சர் திருப்பதியிலிருந்து சீக்கிரமே கிளம்பி வந்துவிட வேண்டும் என்று மனதுக்குள் நான் வேண்டாத தெய்வமில்லை. எனது வாழ்க்கையில் முதன் முதலில் ஓர் அமைச்சரை, அதுவும் மத்திய அமைச்சரைப் பேட்டி காணும் வாய்ப்பு நழுவிவிடக் கூடாது என்று ஏழுமலையானையும் வேண்டிக் கொண்டேன்.

அடுத்த நாள் மத்தியானத்திலிருந்து சேப்பாக்கம் அரசினர் விடுதியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். எதிர்த்தாற்போல இருந்த பெல்ஸ் ரோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் சில நண்பர்கள் இருந்தனர். அவர்களைச் சந்திப்பதும், அரசினர் விடுதிக்கு வருவதுமாக நேரம்நகர்ந்தது.

மாலையில் சுமார் ஐந்தரை மணிக்கெல்லாம் அமைச்சரின் கார் விடுதிக்குள் நுழைந்தது. அன்றைய அமைச்சர்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் இருந்தனர். பாதுகாப்புக்கு இரண்டு காவலர்கள் போடப்பட்டிருந்தனர், அவ்வளவே. அமைச்சருடன் வந்த பிரபு, உடனே கிளம்பிவிட்டார். அறைக்குப் போன அமைச்சர், அடுத்த சில நிமிஷங்களில் ஒருவரை அனுப்பி என்னை அழைத்துவரச் சொன்னார். உள்ளே நுழைந்தேன்.

சிரித்தபடி, "கம்.. கம்..' என்று அழைத்து எதிரில் அமரப் பணித்தார். நான் நிஜமாகவே மிதந்து கொண்டிருந்தேன்.

ரொம்பவும் ரிலாக்ஸ்டாக அவர் இருந்தார். திருப்பதி பிரசாதம் தந்தார். என்னைப் பற்றி, "நேரேட்டர்' இதழைப் பற்றி எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தமிழக அரசியல் பற்றி நிறையவே கேட்டார். நான்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். சொல்லப்போனால், அவர்தான் என்னைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இப்படியே அரை மணி நேரத்துக்கு மேல் ஓடிவிட்டது.

"பேட்டி' என்று நான் பேச்சையெடுத்ததும், அவர், ""அதெல்லாம் இப்போது வேண்டாம். அடுத்த முறை சென்னை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார். எனக்குச் "சப்'பென்றாகிவிட்டது. எனது முக வாட்டத்தை அவர் புரிந்து கொண்டுவிட்டார்.

""வருத்தப்படாதீர்கள். நான் இப்போது வெறும் துணையமைச்சர்தான். பேட்டி கொடுக்கும் அளவுக்கு கட்சியில் நான் பெரிய தலைவரொன்றுமில்லை. நீங்களும் இப்போதுதான் பத்திரிகையாளராகி இருக்கிறீர்கள். வருங்காலத்தில் உங்களுக்கு நான் நிறைய பேட்டிகள் தரப்போகிறேன். நீங்களும் எடுக்கப் போகிறீர்கள். நான் சென்னை வந்தாலும் சரி, நீங்கள் தில்லி வந்தாலும் சரி. என்னைக் கட்டாயம் சந்தியுங்கள். இது நீண்டநாள் தொடரப்போகும் உறவு'' என்று சமாதானம் செய்தார்.

அவர் சொன்னதெல்லாம் உண்மையாகிவிட்டது. எங்கள் உறவு அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது என்பது மட்டுமல்ல, அதற்குப் பிறகு அவரை நான் பலமுறை பேட்டியும் எடுத்திருக்கிறேன்.

இடையில் ஆண்டுகள் உருண்டோடின. அவசரநிலைப் பிரகடனம், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி, காமராஜரின் மறைவு, காங்கிரஸ் இணைப்பு மாநாடு, மூப்பனார் காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டது. எம்ஜிஆர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானது, ஜனதா ஆட்சி, இந்திரா காந்திக்கு எதிராக வழக்குகள், ஷா கமிஷன் விசாரணை என்று எத்தனை எத்தனையோ வரலாற்று நிகழ்வுகள்.

இடைப்பட்ட காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும் மூன்று நான்கு தடவை பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன். மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்தது, சரண்சிங் பிரதமராகி இருந்த நேரம். நான் தில்லி சென்றிருந்தேன்.

தில்லிக்குச் சென்றிருந்த எனக்கு சற்று தயக்கம். இரண்டு மூன்று ஆண்டுகள் இடைவெளி விழுந்துவிட்டது. அவருக்கு என்னை நினைவிருக்குமோ, இல்லையோ தெரியாது. பிரணாப் முகர்ஜியின் வீடு 13, தல்கத்தோரா சாலையில் இருக்கிறது என்கிற விவரத்தை, அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து பெற்றிருந்தேன். ஏதோ ஒரு துணிச்சலில் அவரது வீட்டை நோக்கி ஒருநாள் மாலையில் நடையைக் கட்டினேன்.

தல்கத்தோரா சாலையில் யாருடைய வீட்டுக்கு முன்னால் சாலையில் நிறையக் கார்கள் நின்று கொண்டிருந்கிறதோ, அது பிரணாப் முகர்ஜியின் இலக்கம் 13
இல்லம் என்று தெரிந்து கொள்ளலாம். மாலை வேளைகளில் தான் அவர் விருந்தினர்களைச் சந்திப்பது வழக்கம். வாசல் கேட்டில் அப்போதெல்லாம் எந்தவிதக் கெடுபிடியும் கிடையாது. வரவேற்பறையில் வருபவர்களுக்கு எல்லாம் பிஸ்கெட்டும், சாயாவும் வழங்கப்படும்.
எல்லோரையும்போல நானும் காத்திருந்தேன். என்னிடம் விசிட்டிங் கார்ட் இருக்கவில்லை. ஒரு காகிதத்தில் பெயரைக் குறிப்பிட்டு சென்னை என்று மட்டும் எழுதி இருந்தேன். எல்லோரையும் அழைத்தார்கள். என்னை மட்டும் அழைக்கவில்லை.
மணி இரவு 11 கடந்துவிட்டது. என்னுடன் சேர்ந்து மூன்று நான்கு பேர் மட்டும்தான் வரவேற்பறையில் காத்திருக்கிறோம். எனக்கு ஒருபுறம் நல்ல பசி. இன்னொருபுறம் தூக்கம் வேறு வருகிறது. அப்போது என்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருக்கிறேன். திரும்பிப் போகப் பேருந்து கிடைக்குமா கிடைக்காதா என்கிற கவலை வேறு.
பிரணாப் முகர்ஜியின் உதவியாளராகப் பணியாற்றும் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது) நான் எங்கே தங்கி இருக்கிறேன் என்று விசாரித்தார். தனது வீடும் அங்குதான் இருக்கிறது என்றும், தன்னுடன் வரலாம் என்றும் சொன்னபோது சற்று ஆறுதலடைந்தேன்.
உள்ளே போகிறவர்கள் வெளியே வரக் குறைந்தது கால் மணி நேரமாவது ஆகிறது. கடிகாரம் நடுநிசியைக் கடந்துவிட்டதை உணர்த்தியது. எனக்கு அழைப்பு வந்தது. ஒருவழியாக நான் சுதாரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். சுமார் ஆறு மணி நேரம் வரவேற்பறையில் காத்துக் கிடந்த மனச்சோர்வு பறந்துவிட்டது.
"கம்.. கம்...' என்கிற அந்தக் குரலை மறுபடியும் கேட்டபோது, தாய்ப் பசுவை நாடி ஓடிச் செல்லும் கன்றுக்குட்டியைப் போல மனதுக்குள் ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும். அவர் என்னை மறந்துவிடவில்லை என்கிற பெருமிதம். எதிரில் அமர்ந்த எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.
""எங்கே தங்கி இருக்கிறாய்?'' என்று கேட்டார். சொன்னேன். "தில்லியில் இருக்கும்வரை தினமும் சாயங்காலம் வேறு வேலை இல்லையென்றால் இங்கே வந்துவிடு' என்று கட்டளையிட்டார். தலையை ஆட்டினேன். "இப்போது எப்படி திரும்பிப் போவாய்?' என்று கேட்டார். அவரது உதவியாளர் கொண்டு விடுவதாகச் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தேன்.
"இன்று எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நாளை பார்ப்போம்' என்றபடி ஏதோ ஒரு ஃபைலை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். நானும் கிளம்பிவிட்டேன்.
எதற்காக மாலையில் அவர் வீட்டுக்கு வரச் சொல்கிறார்? இப்படி நள்ளிரவு வரை உட்கார வைத்துவிட்டு எதுவும் பேசாமல் திருப்பி அனுப்பவா? எனக்கு எதுவும் புரியவில்லை. அந்த உதவியாளரின் ஸ்கூட்டரில் தில்லியிலுள்ள கால்காஜியில் இருக்கும் சகோதரி வீட்டை அடையும்வரை இதே சிந்தனை.
அடுத்த நாள் மாலை, "வீக் எண்ட் ரெவ்யூ' பத்திரிகை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய நான், சகோதரியின் வீட்டுக்குத் திரும்பவில்லை. பிரணாப் முகர்ஜியின் 13,
தல்கத்தோரா சாலை வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். துணைக்கு ஒரு பொட்டலம் "மும்ஃபலி' (வேர்க்கடலை).
முந்திய நாள் பார்த்தது போலவே வரவேற்பறை நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் சமோசாவும் சாயாவும் தந்து கொண்டிருந்தார்கள். நானும் போய் அமர்ந்தேன். சுற்றிலும் கண்களைச் சுழல விட்டேன்.
என்னை ஏன் தினமும் மாலையில் அவரது வீட்டிற்கு வரும்படி பிரணாப் முகர்ஜி பணித்தார் என்பதன் காரணம் புரிந்தது.


(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com