'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 3

நேற்று இருந்ததை விட அந்த அறையில் அதிகக் கூட்டம் காணப்பட்டது. சுற்றிலும் நோட்டம் விட்டேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 3

நேற்று இருந்ததை விட அந்த அறையில் அதிகக் கூட்டம் காணப்பட்டது. சுற்றிலும் நோட்டம் விட்டேன். மடிப்புக் கலையாத, கஞ்சி சலவை செய்த கதர் ஜிப்பாக்களிலிருந்து, அழுக்குப் பிடித்துக் கசங்கிய கதர் ஜிப்பாக்கள்வரை நிற, இன, மொழி வேறுபாடுள்ள பலர் அங்கே காத்திருந்தார்கள்.

அன்று அந்த அறையில் நான் பார்த்த பல முகங்கள், வருங்காலத்தில் மத்திய அமைச்சர்களாகவும், மாநில முதல்வர்களாகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களாகவும் வலம் வரப்போகிறார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே கூட தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் பிற்காலத்தில் பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட போதெல்லாம், பிரணாப்தாவின் 13, தல்கத்தோரா சாலை வீட்டு வரவேற்பறையில் அவர்கள் காத்திருந்த காட்சி, எனது மனத் திரையில் தோன்றும். எனக்குள் நானே சிரித்துக் கொள்வேன்.

அந்த அறையில் உட்கார்ந்திருந்த சிலரின் பெயரை நான் இங்கே பட்டியலிடுகிறேன். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் - குலாம்நபி ஆசாத், முன்னாள் ஆந்திர முதல்வர் ஜனார்தன ரெட்டி, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், இன்றைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தர பிரதேசத்தின் மறைந்த பிரமோத் திவாரி, அம்பிகா சோனி, மார்கரெட் ஆல்வா என்று இன்னும் பலர் பிரணாப்தாவின் தரிசனத்துக்காக அந்த வரவேற்பறையில் காத்திருந்தார்கள்.

அப்போது ரப்பர் செருப்பும், ஜோல்னா பையுமாக வங்காள மொழியில், சண்டை போடுவதுபோல உரக்கப் பேசிக்கொண்டு மூன்று நான்கு பேருடன் ஒரு கல்லூரி மாணவி போன்ற ஒரு பெண்மணி நுழைந்தார். அவர் வந்ததும் அந்த வரவேற்பறையே களை கட்டியது. சிலருக்கு வணக்கம் சொன்னார். சிலரிடம் சிரித்து கைகுலுக்கினார். வயதான ஒரு தலைவரின் பாதம் தொட்டு ஆசி பெற்றார். அம்பிகா சோனியிடம் சண்டை போடுவதுபோல உரையாடினார்.

அவரை உட்காரச் சொல்லிப் பலர் எழுந்து இடம் கொடுத்தார்கள். அவர் உட்காரவில்லை. பரபரப்பாக உள்ளும் வெளியுமாகப் போய் வருவதும், பிரணாப்தாவின் உதவியாளர்களைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசுவதுமாக இருந்த அவரை நான் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் பின்னாளில் பெரிய தலைவியாகி, அசைக்க முடியாத மாமலை என்று கருதப்பட்ட வங்காளக் கம்யூனிஸ்ட் கட்சியை மண்ணைக் கவ்வ வைத்து, மேற்கு வங்கத்தையே ஒரு கலக்குக் கலக்கி முதல்வராவார் என்று அப்போது நான் என்ன கண்டேன்? இப்போது தொலைக்காட்சியிலும், எப்போதாவது தில்லியிலும் நான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைப் பார்க்கும்போது, அந்த வரவேற்பறை நிகழ்வுதான் நினைவுக்கு வரும்.

அன்றைய பொழுது கழிந்தது. நள்ளிரவு கடந்தும் பலர் வரவேற்பறையில் காத்திருந்தனர். இனி அடுத்த நாள்தான் பிரணாப்தாவைப் பார்க்க முடியும் என்று சொல்லி விட்டார்கள். மம்தா பானர்ஜியாலும் சந்திக்க முடியில்லை. அவருக்கு ரொம்பக் கோபம். எச்சரிப்பதுபோல ஏதோ சத்தமாகச் சொல்லிவிட்டு வெளியேறினார் அவர்.

வங்காள மொழியில் அவர் என்ன சொல்லிவிட்டுப் போகிறார் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆவல் பிறந்தது. எனக்கருகில் உட்கார்ந்திருந்து சந்திக்க முடியாமல் கிளம்பிய மனிதரிடம் வினவினேன். ""யார் யாரோ வந்தால் அவர்களை எல்லாம் பிரணாப்தா உடனடியாகச் சந்திக்கிறார். ஆனால் என்னைப் போன்ற நெருக்கமானவர்களை மட்டும் இப்படிக் காக்க வைத்துவிட்டு, நாளைக்கு வா என்று அனுப்பி விடுகிறார். அவருக்கு நெருக்கமாக இருப்பதால் கிடைக்கும் பரிசா இது?'' என்று அவர் கேட்டதாகச் சொன்னார் அவர்.

எனக்கு மனதிற்குள் அதுவரை இருந்த சோர்வு பறந்தே பறந்து போய்விட்டது. இப்படி காத்திருந்து பார்க்க முடியாமல் திரும்புகிறவர்கள், பிரணாப்தாவுக்கு நெருக்கமானவர்கள், அவரால் உரிமை எடுத்துக் கொள்ளப்படுபவர்கள் என்கிற உண்மை எனக்குப் புரிந்தது.

சொல்ல மறந்துவிட்டேனே, எனக்கு அருகில் உட்கார்ந்திருந்தவர் யார் தெரியுமா? அந்தமான் நிகோபார் தீவுகளின் மக்களவை உறுப்பினராக 1977 முதல் தொடர்ந்து ஏழு முறை 1999 வரையிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோரஞ்சன் பக்தா.

மம்தா பானர்ஜி அவர் இருக்குமிடம் தேடிவந்து, அவரிடம் கைகுலுக்கிச் சென்றார். அதே மனோரஞ்சன் பக்தா, தனது இறுதிக் காலத்தில் மம்தா பானர்
ஜியின் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார். அன்று பிரணாப்தாவின் வீட்டு வரவேற்பறையில் தொடங்கிய எங்கள் தொடர்பும், நட்பும் மனோரஞ்சன் பக்தாவின் இறுதிக்காலம் வரை (2015) தொடர்ந்தது.

எதற்காக என்னை பிரணாப்தா அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல் லாம் வரச் சொன்னார் என்பதை நான் விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். சில முக்கியமான தலைவர்கள் அவரைச் சந்திக்க வருவார்கள்.

அப்போது காரணமே இல்லாமல் பிரணாப்தா என்னை அழைப்பதாக உதவியாளர் தெரிவிப்பார். ஏதாவது புத்தகத்தையோ, ஃபைலையோ நேர்முக உதவியாளரிடம் கொண்டுபோய் கொடுக்கச் சொல்வார். அல்லது, யார் யாரெல்லாம் வெளியில் காத்திருக்கிறார்கள் என்று பட்டியல் போட்டு வாங்கி வரச் சொல்வார்.

பிரணாப்தா என்னைப் பெயர் சொல்லி அழைப்பதையும், எனக்குக் கட்டளை இடுவதையும் வந்திருக்கும் பிரமுகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த வேலைகளை அவரது உதவியாளர்களிடமே அவர் சொல்லி இருக்கலாமே என்று நான் நினைத்துக் கொள்வேன். ஏதோ ஒரு காரணமாகத்தான் அவர் அப்படிச்
செய்கிறார் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. இப்போது புரிகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com