ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் வலுவைக் கூட்டும் எளிய வழி!

என் வயது 41. வெளியில் சுற்றித் திரிந்து வியாபாரம் செய்து வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் வலுவைக் கூட்டும் எளிய வழி!


என் வயது 41. வெளியில் சுற்றித் திரிந்து வியாபாரம் செய்து வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறேன். மருந்து வாங்கிச் சாப்பிட வசதியில்லை. உடல் சோர்வை அதிகம் உணர்கிறேன். பலவீனமாக உடல் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கிறேன். வறுமை ஒருபுறம்; உடல் - மன வலிமையின்மை மறுபுறம் எனத் துன்பப்படும் எனக்கு உடல் வலுவைக் கூட்டும் எளிய வழி ஏதேனும் உள்ளதா?

- நாராயணசாமி, திருநெல்வேலி.

பண்டைய காலங்களில் கிராமத்து வழக்கம் ஒன்று உங்களுக்கு பயனளிக்கலாம். ஒரு மண் பாத்திரத்தில் தூய்மையான நீரை நிரப்பி, அதில் சிறிது வில்வ இலைகள், துளசி இலைகள், அருகம்புல் இலைகள், வேப்பிலை மற்றும் வன்னி இலைகளைச் சேர்த்து, அதை வலது உள்ளங்கையால் மூடி "கங்கே ச யமுணே சைவ கோதாவரி... நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரு' என்று பிரார்த்தனை செய்து, அந்தப் புனித நீரை வீட்டிலுள்ளவர்கள் தாம் அருந்தப் பயன்படுத்தும் நீர்நிறைந்த குடத்திலோ, பானையிலோ ஊற்றி வைத்துவிடுவார்கள்.
இந்த பிரார்த்தனைக்கான அர்த்தம்: "இப்பாத்திரத்தில் ஏழு புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து மற்றும் காவிரி ஆகிய நதிகளின் புனிதம் வந்து சேரட்டும்' என்பதாகும். கூடவே இந்த புனிதநீரில் மருத்துவகுணம் நிறைந்த இலைகளும் நன்கு ஊறுவதால், அதைக் குடிக்கப் பயன்படுத்துவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், குடலில் தேவையற்ற கிருமிகளை அழித்து வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தித் தரும்.
வில்வ இலை: துவர்ப்பு, இனிப்பு, கசப்புச் சுவையும் குளிர்ச்சியான தன்மையும் கொண்டது. நோய் நீக்கி உடலைத் தேற்றும். ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். வியர்வையைப் பெருக்கும். மலமிளக்கும். காய்ச்சலைத் தணிக்கும். தண்ணீரில் ஊறிய இலைகளை எடுத்து, மைய அரைத்து, பசையாக்கி, கொட்டைப் பாக்கு அளவு காலையில் சாப்பிட, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும் என்பதைப் பெண்கள் குறித்துக் கொள்ளலாம். ஊறிய இலைகளைக் காய வைத்துப் பொடித்து, ஐந்து கிராம் அளவில் எடுத்து, பத்துகிராம் வெண்ணெய்யுடன் குழைத்து, உணவிற்குப் பிறகு சாப்பிட, வயிற்றுப் புண் நன்கு குணமாகும்.
துளசி இலை: வெப்பத்தன்மையுடையது. கோழையை அகற்றும். வியர்வையைப் பெருக்கும். மூச்சுக்குழல் அழற்சி, மூக்கடைப்பு, அஜீரணத்தைக் குணமாக்கும். குடல் கிருமிகளையும், வயிற்றுப் பூச்சிகளையும் அழிக்கும். உடலில் ஏற்படும் வட்ட வட்ட தடிப்புகளை அகற்றும்.
அருகம்புல்: இனிப்புச் சுவையும், குளிர்ச்சியான தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அகற்றும். சிறுநீர் பெருக்கும். ரத்தம் சுத்தமாகும். கண்பார்வை தெளிவடையும். நீரில் ஊறிய அருகம்புல்லைச் சிறிதளவு மஞ்சள் சேர்த்து, பசையாக அரைத்து, உடலில் தேய்த்துக் குளிக்க, சொறி சிரங்கு, புண்கள், படர்தாமரை, அரிப்பு போன்றவை குணமாகும்.
வேப்பிலை: குடல் புழுக்களைக் கொல்லும். குடல் வாயுவை அகற்றும். வீக்கம், கட்டிகளைக் கரைக்கும். தோல், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுவதற்கு உதவும். நஞ்சு நீக்கும். உடலைத் தேற்றும். முறைக்காய்ச்சலைக் குணமாக்கும். நீரில் ஊறிய இலைகளை அரைத்து, பசையை படை, சிரங்கு உள்ள பகுதிகளில் இரவு உறங்கும் முன் பூசி, மறுநாள் காலை கழுவி வர அவை விரைவில் நீங்கிவிடும்.
வன்னி இலை: தலைசுற்றுதல், பேதி, ரத்தபேதி, மூலம், குடல் கிருமிகள், ரத்தக் கசிவு உபாதை, இருமல், தோல் உபாதைகள் போன்றவை நீங்கி, உடல் வலுவைக் கூட்ட உதவும். மூளையை வலுவாக்கும். பற்சிதைவை அகற்றும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வாய் வறட்சியைக் குணப்படுத்தும். வாய்ப்புண்ணை விரைவில் ஆற்றிவிடும். ஆண்மைக்கு நல்லது. காக்காய் வலிப்பு உபாதையைக் குறைக்கும்.

( தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com