தீய்மெய்

மருத்துவமனை வாசலில் இடப்புறம் சற்றுத் தள்ளி அமைதியாய் நின்று கொண்டிருந்தது வாகை. பரந்து விரிந்த கிளைகளில் எப்போதும் பறவைகளின் ஆரவாரம்...
தீய்மெய்

மருத்துவமனை வாசலில் இடப்புறம் சற்றுத் தள்ளி அமைதியாய் நின்று கொண்டிருந்தது வாகை. பரந்து விரிந்த கிளைகளில் எப்போதும் பறவைகளின் ஆரவாரம்... வெயில் நேரத்தில் பார்வையாளர்கள் இந்த இடத்தில் தான் உட்கார்ந்து இளைப்பாறுவர். கதை பேசுவர். இங்கு வரும் மனிதர்களின் அழுகைக்கு மனமிரங்கி ஆறுதல் சொற்களைப் போலத் தன் இலைகளை உதிர்க்கும். இன்று சம்புலிங்கத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திணறி நின்று கொண்டிருந்தது.

வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவர்களும் செவிலியர்களும் வரும் போதெல்லாம் உதட்டைப் பிதுக்கிச் செல்வது இன்னும் ரணவலியாய் எரிந்தது. கோகிலா இப்படிச் செய்வாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தனக்கே இப்படி இருக்கிறதெனில் தன் மகன் சங்கரன் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறானோ என்று சம்பு ஏங்கிப் பெருமூச்சு விட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஒரு பூஞ்சோலையாய் மகிழ்ந்து குலுங்கிய சங்கரன் குடும்பம் இப்படிப் பூகம்பக் குலுங்கலுக்கு ஆளாகுமென்று யாரும் நினைக்கவில்லை.
எல்லாம் ஒரு கனவைப் போல நிகழ்ந்துவிட்டிருந்தது. ஒரே இரவில் சம்புலிங்கத்தின் மானமும் மரியாதையும் கரித்துகள்களாக காற்றில் பறந்துவிட்டன. எவர் முகத்திலும் விழிக்க வெட்கப்பட்டார் சம்பு. ஊரில் இனி எப்படித் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்று மருத்துவமனையிலிருந்தே கற்பனை செய்து பார்த்தார். அவரால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலமும் சொத்து சுகத்தைச் சேர்த்தாரோ இல்லையோ, அவருக்கென்று சொல்லும்படி நற்பெயரைச் சேர்த்து வைத்திருந்தார். குருவி சேர்ப்பதைப் போல சேர்த்த அந்தப் பெயர் இன்று ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் சென்ற மண்கரையைப் போல சிதிலமாகிவிட்டதை எண்ணியபடி கீழே குனிந்தபடி அழுதே விட்டார் சம்பு.
கோகிலாவுக்கு அந்த வீட்டில் என்ன
குறைச்சல்? மாமியார் தொந்தரவா? சங்கரன் சிறு குழந்தையாய் இருந்த போதே அவனின் தாய் அமிர்தம் போய்ச் சேர்ந்துவிட்டாள். மாமனார் சம்புவால் சங்கடமா? அவர் "தாயி' என்று தான் மருமகளை அழைப்பார். அத்தனை பாசம். தன் மகளைப் போலத்தான் அவளை நடத்தினார். சங்கரனால் ஏதும் பிரச்னையா? அவன் வாயில்லாப் பூச்சி. உரிமையில் எப்போதாவது கோபம் கொண்டாலும் அடுத்த நிமிடம் வலிய பேசி விடுகிற ரகம். குழந்தை பாவனா, தீபா இருவரும் அப்பா செல்லம். ஆகவே அவர்களுடன் விளையாடவே அவனுக்கு நேரம் போதாது.
அந்த வீட்டில் ஒரு ராணியைப் போலத்தான் இருந்தாள் கோகிலா. அவளைத் தவிர பெண்ணென்று யாருமில்லை. அவள் அரசாண்டு கொண்டிருந்தாள். அத்தனை செல்வாக்கு. வீட்டில் ஏதும் பிரச்னை என்றாலும் பரவாயில்லை.
வெளிப் பிரச்னைக்குப் பயந்து இப்படி ஒரு முடிவெடுக்க எப்படி அவளுக்கு மனது வந்தது என்று தெரியவில்லை. முத்து முத்தாய் இரண்டு பிள்ளைகள். அதுவும் பெண் பிள்ளைகள். கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? பாவி இப்படிச் செய்து தவிக்க விட்டுவிட்டாளே.
சம்புவால் எந்த நிலையிலும் அவள் செய்ததை நியாயப்படுத்த முடியவில்லை. தன் மகன் சங்கரன் தலையில் இப்படியா எழுதியிருக்கும்? சிறு வயதிலேயே தாயை இழந்தான். அவன் பிள்ளை
களுக்கும் இப்போது அப்படி ஆகிவிடுமோ என்று நினைக்கும் போது ஈரக்குலை நடுங்கிற்று. தாயை இழந்த பிள்ளையைக் காப்பாற்றி வளர்க்க என்ன பாடுபட்டேன்? எத்தனையோ பேர் அடுத்த திருமணம் குறித்துப் பேசினார்கள். ஆனால் வருபவள் தன் பிள்ளையை எப்படி நடத்துவாளோ என்ற பயத்தில் அந்த யோசனையை தொடக்கத்திலேயே கிள்ளி எறிந்து விட்டார். அது பற்றி யாரும் பேசினால் முகத்தில் அடித்தாற் போல் பேசி அணை கட்டிவிடுவார் சம்பு. கொஞ்சநாளில் அந்தப் பேச்சு முற்றிலும் மறைந்து போயிற்று.
சங்கரன் தாயில்லை என்று ஒரு நாளும் ஏங்கிவிடாதபடி அன்பைப் பொழிந்தார் சம்பு. அவன் என்ன நினைக்கிறானோ அதற்கு உடன்பட்டார். சில நேரங்களில் அடம் பிடிப்பான். தவறென்று தெரியும். இருந்தாலும் பொறுத்துக் கொள்வார். பின் அவன் நல்ல மனநிலையில் இருக்கும் போது தவறைப் புரிய வைப்பார். செல்லம் கொடுத்து வளர்ப்பது என்பது அவன் வாழ்க்கையைப் பாழாக்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவனை ஒழுக்கச்சீலனாக வளர்த்து எடுத்தார்.
படிப்பு மட்டும் தான் அவனுக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. அவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். எட்டாவது வரை அவன் சென்று வந்ததே பிறகு பெரிதாகப் பட்டது. அத்துடன் நிறுத்திக் கொண்டான். சொந்தமாய் விவசாய நிலம் இருந்தது. இரண்டு ஏக்கரும் பொன்னாய் விளையும் பூமி. அவற்றில் இறங்கி விட்டான். கடுமையாக உழைக்கத் தொடங்கினான். சம்புவிற்கு ஒரு வகையில் நிம்மதி. மகன் பிழைத்துக் கொள்ளுவான் என்று நம்பிக்கை வந்தது.
வீட்டில் பெண்வாசம் அடித்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. சம்புவும் சங்கரனும் தான் பெண்ணைப் போல அத்தனை வேலைகளையும் செய்து வந்தனர். ஆகவே தாமதப்படுத்தாமல் மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணினார். தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை. இனியாவது தாயைப் போல ஒரு பெண்ணைப் பார்க்கட்டும் என்று எண்ணினார். வருபவள் தாய்க்குத்
தாயாகவும் மனைவிக்கு மனைவியாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கோகிலாவை முத்துப்பேட்டைக்கு அருகில் இடும்பாவனம் என்ற ஊரில் பார்த்து முடிவு செய்தார்.
கோகிலாவுடன் பிறந்தவர்கள் ஆறு பெண்கள். சிரமத்தில் உழன்று வளர்ந்த பெண். பொறுப்பாக இருப்பாள் என்று எண்ணினார். ஆறேழு பெண்களுடன் பிறந்தவள் மற்றவர்களை அரவணைத்துச் செல்வாள் என்பது சம்புவின் எண்ணம். அவர் நினைப்பு பொய்க்கவில்லை. கோகிலா அப்படித்தான் நடந்து கொண்டாள்.
அமிர்தம் இறந்த பிறகு வீடே கதியென்று கிடந்த சம்பு சற்று வெளியில் தலை காட்டத் தொடங்கினார். எல்லாப் பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். ஊரில் அவர் மீது அனைவருக்கும் ஒரு மரியாதை இருந்தது. அவரின் நேர்மையும் உண்மையும் வாய்மையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே விரைவில் ஊர் நலக்கமிட்டியின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு ஓய்வு ஒழிச்சலில்லை. எல்லா நல்லது கெட்டதிலும் பங்கெடுத்துக் கொண்டார். கிராமத்திற்குத் தேவையான வசதிகள், குளம் குட்டை வெட்டுதல் தென்னை மரங்களை ஏலம் விடுதல் என்று எப்போதும் கிராம வேலைகள் இருந்து கொண்டிருந்தன.
மகன், மருமகள் ஒற்றுமையுடன் வாழ்வது கண்டு சம்பு உள்ளுக்குள் பூரித்தார். அடுத்தடுத்து இரண்டும் பெண் பிள்ளைகளாகப் பிறந்தன. ஊரில் சிலர் முகம் சுழித்தனர். சம்புவும் சங்கரனும் இறைவன் கொடுத்த தேவதைகள் என்று கொண்டாடினர். ஒருத்தி அமிர்தம் முகச்சாடையிலும் மற்றொருவள் சம்புவின் முகச்சாயலிலும் இருந்தனர். இருவரும் தாத்தாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டனர். வெளியில் சென்று வரும் போது தவறாமல் பிள்ளைகளுக்குத் தின்பண்டங்கள் வாங்காமல் வர மாட்டார் சம்பு. அமிர்தம் போனதிலிருந்து வீட்டில் ஒரு சொல்ல முடியாத இறுக்கம் குடியிருந்தது. அது மெல்ல மெல்ல நழுவி வீட்டில் குழந்தைகள் சப்தம் கேட்டுக் கொண்டிருப்பதில் சம்புவுக்கு முழு நிறைவு.
மருத்துவமனையில் மருத்துவர் அழைப்பதாக பங்காளிப் பையன் சாரதி ஒடிவந்தான். மரத்தடி யோசனையிலிருந்த சம்பு பரபரவென எழுந்து ஓடினார். மருத்துவரைக் கண்டு கும்பிட்டார். அவர் கண்களில் மருத்துவர் நல்ல செய்தி சொல்லமாட்டாரா என்ற ஏக்கம் கண்ணீராய்த் தளும்பி நின்றது.
""உடம்பு முழுசும் தீப்பிடிச்சி எறிஞ்சதுல உள்ளுறுப்புகள் வரையும் வெந்து கெடக்கு. முக்கால் வாசிக்கு மேல வெந்திட்டு. நம்ம கையில என்ன இருக்கு? மருந்து எழுதியிருக்கேன். கொஞ்சம் கஷ்டம் தான். மனசைத் தேத்திக்கிடுங்க''
மருத்துவர் நிற்காமல் போய்விட்டார். அருகில் நின்றிருந்த கோகிலாவின் அம்மாவும் அக்காளும் கட்டிக்கொண்டு குலுங்கத் தொடங்கியிருந்தனர். வாழை இலையில் முழுவதும் மூடி பிறந்த குழந்தையாய்க் கிடந்தாள் கோகிலா. மஞ்சள் கிழங்கைப் போல இருந்தவள் கரிக்கட்டையாய் கருகிக் கிடந்ததைப் பார்க்க சகிக்க முடியவில்லை. கண்ணை மூடி முனகியபடி சவமாய்க் கிடந்தாள். சங்கரன் அப்பாவைக் கட்டிக் கொண்டு கதறினான். சம்பு மகன் வாழ்க்கை இப்படிப் பாழாகி விட்டதை எண்ணிக் குலுங்கினார். சங்கரனைச் சாரதி மெல்ல அணைத்து வெளியில் அழைத்துச் சென்றான். திரும்பவும் மரத்தடித் தனிமைக்கு தன்னை அடை கொடுத்தார் சம்பு.
எல்லாம் அந்தச் செல் சனியனால் தானே நடந்தது? அது எவ்வளவு தொகையிருக்கும்? கொத்தனார் சொன்னான் என்பதற்காக திருடியாய் ஆகி விடுவோமா? அதற்காகவா இப்படி ஒரு முடி
வெடுப்பது?
சம்பு ஓட்டு வீட்டை இடித்துவிட்டு புதிதாக மாடி வீடு கட்ட வேலைகளைத் தொடங்கியிருந்தார். பக்கத்து ஊரிலிருந்து கொத்தனார் சித்தாள்கள் வேலை பார்த்து வந்தனர். சங்கரனும் கோகிலாவும் கூடமாட உதவிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் அழுதால் கோகிலா ஓடி விடுவாள். சங்கரன் ஆட்களுக்கு டீ வடை வாங்கிக் கொண்டு வந்து தருவான். கொத்தனார் புதிய செல் ஒன்று வாங்கியிருந்தான். அதை அனைவரிடமும் காட்டிப் பெருமை பேசிக் கொண்டிருந்தான். கோகிலாவும் அந்தப் புதிய செல்லை வாங்கி ஆசை தீரப் பார்த்தாள்.
""வழவழன்னு எவ்வளவு அழகாருக்கு? வீடு கட்டி முடிச்ச உடனே ஆளுக்கொரு செல்லு வாங்கணும்னு அவங்க சொல்லிக்கிட்டிருக்காங்க''
என்றாள்.
கொத்தனார் வேலையில் கவனம் கொண்டிருந்தார். உலை கொதித்துக் கொண்டிருந்ததால் கோகிலா அத்துடன் சமையலறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ""அண்ணே இந்தா வக்கிறன்.. எடுத்துக்கிடுங்க'' என்று பக்கத்துச் சுவற்றில் ஜன்னலுக்காக விடப்பட்ட பகுதியில் வைத்துவிட்டு சமையலறை நோக்கி ஓடி விட்டாள்.
சங்கரன் டீ, வடை வாங்கி வந்ததும் வேலையை நிறுத்திவிட்டு அனைவரும் சாப்பிட்டார்கள். கொத்தனார் அங்கிருந்த சித்தாளிடம் கோகிலாவிடம் இருக்கும் தன் செல்லை வாங்கி வரச் சொன்னான். அவளும் சமையல் கட்டிலிருந்த கோகிலாவிடம் கேட்க, தான் அப்போதே அங்கு வைத்துவிட்டு வந்த தகவலைச் சொன்னாள் கோகிலா. சொன்ன இடத்தில் சென்று பார்த்தாள் சித்தாள். அங்கு செல் இல்லை. கோகிலா பதறித் துடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள்.
""அண்ணே.. உங்ககிட்ட சொல்லிட்டு தான அங்க வச்சிட்டு வந்தன்?''
""அட என்னம்மா அங்க வச்சத சுவரா தின்னுட்டு? நீங்க தான் கையில வச்சிருந்திங்க. வீட்டுல நல்லா பாருங்க'' என்றான்.
அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
""இல்லண்ணே.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. இங்க தான் வச்சேன்'' திரும்பவும் கோகிலா..
""செரி..அப்படின்னா நீங்களே எடுத்துக் கொடுங்க'' என்று சினந்தான் கொத்தனார்.
அவள் மனம் "திக்...திக்'கென்று அடித்துக் கொண்டது. அந்த இடத்தையே சுற்றி சுற்றிப் பார்த்தாள். அவளுக்கு அழுகை தொண்டையில் அடைத்து நின்றது.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த சங்கரன் எரிச்சலாய்ச் சொன்னான்.
""நீ ஏன் அவரு செல்லை வாங்கிப் பார்க்கணும்? இங்க வச்சது எங்க பறந்தா போயிட்டு?''
""இல்லங்க..புது செல்லுன்னு எல்லார்கிட்டயும் காட்டினாரு. பாத்துட்டு அங்கனயே வச்சிட்டுப் போயிட்டன்''
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. கொத்தனார், சித்தாட்கள், சங்கரன், கோகிலா என அனைவரும் ஆளுக்கொரு திசையில் தேடத் தொடங்கினார்கள். என்ன நினைத்தானோ தெரியவில்லை. சங்கரன் திடீரெனச் சமையல் கட்டில் போய் நோட்டம் விட்டான்.
கோகிலாவுக்கு அது பெருத்த அவமானமாய் இருந்தது. தன்னை நம்பாமல் தன் கணவனே வீட்டிற்குள் சென்று பார்த்தது அவளுக்குத் தீரா வேதனையைத் தந்தது. இருந்தாலும் சூழல் கருதிப் பொறுத்துக் கொண்டாள். அந்த இடத்தையே அலசி விட்டார்கள். செல் கிடைத்தபாடில்லை.
எல்லாரும் சேர்ந்து கோகிலா தான் செல்லை எடுத்து மறைத்துவிட்டாள் என்று முடிவிற்கு வந்தார்கள்.
""அவள் வழுவழுன்னு இருக்கு என்று சொன்ன போதே நான் நினைச்சன்'' என்று அதற்குத் தூபம் போட்டாள் குட்டையாய் இருந்த சித்தாள். வேலையை அப்படியே நிறுத்திவிட்டு உட்கார்ந்து விட்டனர். கொத்தனார் தன் செல்லைக் கொடுக்கவில்லையெனில் பெரிய பிரச்னையாகி விடுமென்று எச்சரித்தான். சற்று நேரத்தில் அவர்கள் வேலையை நிறுத்திவிட்டுக் கிளம்பிவிட்டனர்.
போகும் போது கொத்தனார் சங்கரனிடம், ""அண்ணே உங்களுக்காகப் பார்க்கிறேன் எப்படியோ என் செல் எனக்கு வந்து சேரணும். இல்லன்னா நான் மனுசனாவே இருக்க மாட்டன்... ஆமா'' என்று ஏசியபடி போய்விட்டான்.
கோகிலா அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குக் கொத்தனார் அல்லது சித்தாளில் ஒருத்தியே செல்லை எடுத்து மறைத்துவிட்டுத் தன் மீது பழி போடுவதாகச் சந்தேகம். அங்கே வைத்த செல் எங்கே தான் போயிருக்கும் என்று அவள் ஆந்து விழுந்தாள். சங்கரனுக்கு இன்னமும் கோகிலா மீது தான் சந்தேகம். அவள் அடிக்கடி புதிய கேமரா செல் வாங்க வேண்டு மென்று சொல்லியதையெல்லாம் நினைத்துப் பார்த்தான். அவன் மெல்ல கோகிலாவிடம் பேச்சு கொடுத்தான்.
""ஏ.. கோகி..ரொம்ப அசிங்கமா போயிடும். அந்தச் செல்ல எங்க வச்சிருக்க சொல்லு?'' என்றான்.
அவள் அவன் தலை மீது சத்தியம் செய்தாள். தன் பிள்ளைகள் மீது சத்தியம் செய்தாள். அவளுக்கு அழுகைப் பீறிட்டுக் கொண்டு வந்தது.
""நீ என் சட்டைப் பையிலிருந்தே அடிக்கடி காசை திருடுறவளாச்சே''
""ஏங்க.. உங்க பையிங்கறதால எடுப்பேங்க. இல்லைங்கள. அது திருட்டா? வீட்டுக்குத் தேவையானத வாங்கத் தான எடுத்திருக்கன்''
சங்கரன் மேலும் மேலும் பேசினான். திருமணம் ஆனதிலிருந்து இப்படிப் பேசியதில்லை. பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது. சண்டை இரவிலும் நீண்டுக் கொண்டே போனது. சம்பு வீட்டிற்கு வந்த பின்னும் அது நீடித்தது.
""சரி காலையில பாத்துக்கலாம். சத்தம் போடாமப் படுங்க'' என்றார் சம்பு.
மனம் ஆறாமல் தவித்தது. சங்கரன் தூங்கி விட்டான்.
கோகிலா தூக்கம் வராமல் தவித்தாள். தன்னைத் திருட்டுப்பட்டம் கட்டி விட்டார்களே என்று விசும்பினாள் . அவளால் படுக்க முடியவில்லை. எழுந்தாள்.
சற்று நேரத்தில் சமையலறையில் பேய் அலறல் கேட்டது. ஐந்தடி உயரத்தில் தீபமாய் எரிந்து கொண்டு ஓடினாள் கோகிலா.
சம்புவின் கண்களிலிருந்து தென்னம்பூக்களாய்க் கண்ணீர் உதிர்ந்தன
"அய்யோ'வென்று அலறல் சத்தம் கேட்டது. கோகிலாவின் அம்மாவும் அக்காவும் தலையிலடித்துக் கொண்டு அழுதபடி மருத்துவமனையிலிருந்து வெளியே ஓடிவந்தார்கள். சங்கரன் மருத்துவமனைச் சுவற்றில் முட்டிக் கொண்டு அழுதான். கோகிலா நிலைகுத்தியிருந்தாள்.
காரியங்கள் முடிந்து போயிருந்தன. சங்கரனைக் கட்டிக் கொண்டு பிள்ளைகள் தவித்தன. தலையில் கை வைத்தபடி அவன் செய்வதறியாது ஓரமாய் உட்கார்ந்திருந்தான். சம்பு மனத்தளவில் ஒடிந்து போயிருந்தாலும் பிள்ளைகளின் தெம்பிற்காக இயல்பாய் இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டார். கோகிலா வீட்டினர் கோபத்தில் சண்டையிட்டுச் சென்று விட்டனர். சம்புவின் பங்காளி வகை அக்கா மட்டும் தான் இப்போதைக்குத் தங்கியிருந்தாள். வீட்டையும் வாசலையும் கூட்டிச் சுத்தம் செய்தாள். புதிய வீட்டின் வேலைகள் அப்படியே நின்றன. சிமெண்ட் கலவை சிதறி அப்படியே சட்டியில் காய்ந்து கிடந்தன. பக்கத்துப் பெரிய குவளையில் சிமெண்ட் கரைசல் மேலே தெளிந்து கீழே படிந்திருந்தது. காய்ந்த சிமெண்ட்டை அள்ளி ஓரமாய்க் கொட்டினாள். சிமெண்ட் கரைசலைக் கலக்கி தூரமாய் ஊற்றினாள். அதிலிருந்து சிமெண்ட் படிந்த கல் விழுந்தது. ஏதோ ஓர் உள்ளுணர்வில் எழுந்து ஓடினான் சங்கரன்.
"அய்யோ' என்று அவன் தலையிலடித்துக் கொண்டு புரண்ட இடம் நோக்கி எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அங்கே கொத்தனாரின் அந்த செல், சிமெண்ட் கலவை படிந்து கல் போல மாறிக் கிடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com