பேல்பூரி 

மூன்றெழுத்துக் கவிதைகள் இரண்டு.1.அம்மா2.மனைவி
பேல்பூரி 


கண்டது


(சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

வண்டிக்கடை உணவகம்

த. லட்சுமி காந்த்,
சென்னை - 61.

(கும்பகோணம் பாலக்கரை அருகே நின்று கொண்டிருந்த ஓர் இருசக்கர
வாகனம் ஒன்றில்)

மூன்றெழுத்துக் கவிதைகள் இரண்டு.
1.அம்மா
2.மனைவி

மதிராஜா திலகர்,
சிங்கம்புணரி.

(புதுபெருங்களத்தூர் அருகே உள்ள ஒரு மருந்தகத்தின் பெயர்)

அப்பா, அம்மா மெடிக்கல்ஸ்

சங்கரி வெங்கட்,
சென்னை-63.

(சென்னை கே.கே.நகரில் காபிஷாப்புடன் கூடிய ஒரு நூலகத்தின் பெயர்)


நபஞதஐஉந

மல்லிகா அன்பழகன்,
சென்னை-78.

கேட்டது

(தஞ்சாவூர் காவேரி நகர்காய்கறி மார்க்கெட்டில் இருவர்)


""அந்த டாக்டர் கிட்டேயா போயிருந்தீங்க? நல்லா பொறுமையா சோதித்துப் பார்த்து இருப்பாரே?''

""நீங்க வேற! 1மணி நேரம் செக் பண்ணி பார்த்து என் பொறுமையைச் சோதிச்சிட்டாருங்க!''

-வி. ரேவதி,
தஞ்சை.

(அரக்கோணம் அருகே உள்ள நாகவேடு என்ற கிராமத்தில் ஒரு பாட்டி, சிறுவனுக்கிடையே நடந்த உரையாடல்)

""ஏன்டா பேரா... உன்னை உங்க அம்மா கஷ்டப்பட்டு வளர்க்குறாங்க. வயசானா அவங்களுக்குச் சோறு போடுவியா?''
"" போடமாட்டேன் பாட்டி, அவங்களுக்குதான் கை இருக்குதே... அவங்களே கிட்சனுக்குப் போய் போட்டுக்கட்டும்''

நா.வினோத்குமார்,
ராஞ்சி.


யோசிக்கிறாங்கப்பா!

பசி என்பது ஓர் உணர்வு தான்;
ஆனால் பணமில்லாத போது
ஏற்படும் பசி, அவமானமாகிவிடுகிறது!

எல்.மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி.



மைக்ரோ கதை


ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.

உடனே அந்த பெண் அவனிடம், ""நீ பாமுக் எழுதிய "அப்பா வீட்டில் இருக்கிறார்' என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?'' என்று கேட்கிறாள். உடனே அவன் அந்த பெண்ணிடம், ""இல்லை நான் ஹும்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக' என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன் என்கிறான்.

உடனே அந்த பெண், ""என்னிடம் அந்த புத்தகம் இல்லை. எனவே நீ என்னிடம் உள்ள கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு' என்ற புத்தகத்தைப் பெற்றுக் கொள்'' என்கிறாள்.

உடனே அவன் அந்த பெண்ணிடம்,

"" நீ நாளை பள்ளிக்கு வரும் போது, "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா'' என்கிறான்.

உடனே அந்த பெண் அவனிடம், "" பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்' என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.

உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், ""இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?'' என்று கேட்கிறார்.

உடனே அந்த பெண்,"" ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்திக்கூர்மையும் மிகுந்தவன்'' என்று கூறுகிறாள்.

உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்: ""நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை' என்ற புத்தகத்தையும் மறக்காமல் கொடு'' என்கிறார்.

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.


எஸ்.எம்.எஸ்.


"பிரசவத்திற்கு இலவசம்' என்று சொல்பவர் மருத்துவர் அல்ல, ஆட்டோ டிரைவர்.

எஸ்.சத்யா ரவி, கம்பைநல்லூர்.


அப்படீங்களா!


சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்போது, பறக்கும் கார்களைப் பற்றி கற்பனை செய்யாதவர்கள் இருக்க முடியாது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள டெர்ராஃபியூஜியா என்ற நிறுவனம் உங்களுடைய கற்பனையை நனவாக்கிவிட்டது.

கடந்த 2006 -ஆம் ஆண்டு 5 எம்ஐடி பட்டதாரிகளால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அப்போதிருந்து பறக்கும் கார்களைத் தயாரிப்பதில் முழுமூச்சுடன் தீவிரம் காட்டி வந்தது. அமெரிக்காவில் அந்தக் கார் சாலையில் செல்ல... வானில் பறக்க... இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் அனுமதி கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் "லைட் ஸ்போர்ட் ஏர்கிராஃப்ட்டுக்கான அனுமதி' அதற்குக் கிடைத்திருக்கிறது.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பறக்கும் கார் 10 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. இதன் இறக்கையின் நீளம் 27 அடி. இரண்டு இறக்கைகளையும் விரித்தால் 54 அடி அகலம் விரியும். சாலைகளில் செல்லும்போது இறக்கைகளை மடித்து வைத்துக் கொண்டு நல்லபிள்ளை போல செல்லும் இந்தக் கார், வானில் பறக்கத் தொடங்குவதற்கு முன்பு இறக்கைகளை விரித்துக் கொள்ளும்.

பறக்கும் கார் தானே... ஆன்லைனில் புக் பண்ணி யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்கு வாய்ப்பில்லை. இந்தப் பறக்கும் கார், விமான ஓட்டிகளுக்கும் ஸ்போர்ட்ஸ் பைலட் பயிற்சி பெற்று சான்றிதழைக் கைவசம் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே விற்கப்படும்.

வருங்காலத்தில் பறக்கும் கார் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, வானில் பறக்கத் தொடங்கினால், வானத்திலும் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புஉள்ளது.

என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com