ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நுண்ணிய நரம்பு அமைப்புள்ள பாதங்கள்!

நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வலது, இடது கால்களில் ஆணி கால் ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நுண்ணிய நரம்பு அமைப்புள்ள பாதங்கள்!

நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வலது, இடது கால்களில் ஆணி கால் ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டேன். இடது கால் சரியாகிவிட்டது. ஆனால் வலது கால் பாதமேட்டில் ஆபரேஷன் செய்த இடத்தில் இன்னும் வலி உள்ளது. நடந்தால் காலில் வலி, எரிச்சல் ஏற்படுகிறது. இதை எப்படிக் குணப்படுத்துவது?

கே.நடராஜன், திருவண்ணாமலை.

ஆபரேஷன் செய்த இடத்தில் வெட்டுண்ட நரம்புகள், சதைப்பகுதிகள், நுண்ணிய ரத்தக் குழாய்கள் சரி வர இணையாமல் இருந்தாலோ, வெட்டப்பட்ட இடத்தில் ஆணி காலில் வேர் மிச்சமிருந்தாலோ, அவ்விடத்தில் வலி ஏற்படலாம்.

அப்பகுதியைச் சுட்டுத் தீய்த்துவிடுவதன் மூலமாக, மறுபடியும் ஆணி வளராமல் செய்துவிடலாம். அது சில நாட்களில் ஆறிவிடும். நடப்பதற்கு குஷன் வைத்த செருப்புகளைப் பயன்படுத்துவதால் வலியையும் எரிச்சலையும் பெருமளவு தவிர்க்கலாம்.

உடலின் கனத்தை முழுவதுமாக பாதமே தாங்க வேண்டியிருப்பதால், அதிலுள்ள நரம்புகள், சதை நார்கள், ரத்த நாளங்கள் போன்றவை எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

பாதம் சார்ந்த அறுவைச் சிகிச்சைகள் அனைத்தும் தாங்க முடியாத துயரத்தைத் தருவதற்குக் காரணம், அங்குள்ள நரம்புகளின் நுண்ணிய அமைப்பேயாகும்.

பாதத்தை மென்மையாகப் பாதுகாப்பதற்காக, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு இதமாகத் தேய்த்து பிடித்துவிடுவதையும், வெதுவெதுப்பான நீரில் உப்பைக் கரைத்து, அதில் பாதத்தைத் தொங்கவிட்டு சிறிது நேரம் வைத்திருப்பதையும் நம் முன் தலைமுறையினர் செய்து வந்தனர்.

நேரமின்மை எனும் காரணத்தினாலும், எடுத்துச் சொல்வதற்கு யாரும் இல்லாமற் போனதாலும், தற்சமயம் இந்தப் பழக்கம் மறந்து போய்விட்டது.

ரத்த ஓட்டத்தை, பாதங்களில் சீராகப் பெறுவதற்கு உட்கார்ந்த நிலையில் பாதத்தை மேலும் கீழுமாக உருட்டுவதும், விரல்களை மடக்குவதும், பிரிப்பதுமாகிய பயிற்சிகளைச் செய்வதை இன்று பெருமளவு மறந்து போய்விட்டோம். இவை அனைத்தும் தங்களுக்கு உதவிடக் கூடும்.

வலியையும் எரிச்சலையும் கட்டுப்படுத்தக் கூடிய பொன்மெழுகு, மஞ்சிட்டை, வெள்ளைக் குங்கில்யம், நன்னாரி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பிண்ட தைலம் எனும் மூலிகை எண்ணெய்யை , இளஞ்சூடாக உருண்டையான பஞ்சில் முக்கி, பாதப் பகுதியில் வைத்து, துணியால் கட்டி, சிறிதுநேரம் வைத்திருக்கலாம்.

காலை, மாலை உணவிற்கு முன் இவ்வாறு செய்யலாம். உள் மருந்தாக மஹாபலாதைலம் எனும் க்ஷீரபலா 101 எனும் மருந்தை, பத்து முதல் பதினைந்து சொட்டு வரை சுமார் 150 மி.லி. வெதுவெதுப்பான பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. பாலும் இம்மருந்தும் வாத, பித்த தோஷங்களால் ஏற்படும் வலியையும் எரிச்சலையும் குணப்படுத்தக் கூடியவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com