திருஷ்டிப் பொட்டு

""ரொம்ப நாளா... உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு நெனைச்சிக்கிட்டேயிருக்கறேன், ஆனா, பேசத்தான் நேரங் கெடைக்கல'' என்று இன்று காலையில் வீட்டு வாசலில் கமலத்தைப் பார்த்து இப்படித்தான்...
திருஷ்டிப் பொட்டு

""ரொம்ப நாளா... உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு நெனைச்சிக்கிட்டேயிருக்கறேன், ஆனா, பேசத்தான் நேரங் கெடைக்கல'' என்று இன்று காலையில் வீட்டு வாசலில் கமலத்தைப் பார்த்து இப்படித்தான் விசனப்பட்டுப் பேசினாள் வட்டப் பொட்டு பாட்டி.

அவள் பொடி வைத்துப் பேசுவாளென்பது ஊரறிந்த விஷயமாக இருந்தாலும், பெரிதாக என்னச்சொல்லி விடப்போகிறாள் என்றுதான், ""அதுக்கென்னங்க! எப்ப வேணும்ன்னாலும் வீட்டுக்கு வாங்க... பேசுவோம்'' என்று இவளும் அந்தப் பாட்டிக்கு சிகப்பு கம்பளம் விரித்துவிட்டுதான் வந்தாள்.

இதுதான் சமயமென்று இன்று மாலையே வந்துவிட்டாள் வட்டப்பொட்டு பாட்டி.
""எங்கம்மா... ஒங்க மாமியார் இல்லையா?'' என்று கேட்டுக் கொண்டே வீட்டு வாசலில் வந்து நிற்கும் வட்டப்பொட்டு பாட்டியை பார்த்ததும் ஜோதினிக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.
அவளுடைய பதிலை எதிர்பாராமல் கதவைத் திறந்து கொண்டு, மெதுவாக நடக்க முடியாமல் நடந்து வந்தாள். வீட்டு சுவற்றைப் சோற்றுக் கையால் பிடித்துக் கொண்டு செருப்பை கிழக்குப்பக்கமாக தள்ளி கழற்றிவிட்டாள்.
"இதுதான் இன்று நாம் விளையாடப்போகும் வீடா? அவர்கள் தலையெழுத்து அப்படியிருக்குமென்றால் அதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்? என் கடமையைத் தானே நான் செய்ய வந்திருக்கின்றேன். இதுவும் நல்லபடியாக முடிந்தால், இதுவரை எத்தனை முடித்திருக்கின்றோம்' என்று எண்ணிக்கையை மனதில் ஓடவிட்டு, அதோடு இந்த வீட்டையும் கணக்கில் சேர்த்துக் கொண்டாள்.
அந்தப் பாட்டிக்கு, இந்தத் தெருவோட "கலக திலகம்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. யார் வீட்டுக்குள் புகுந்தாலும் மாமியார் மருமகளுக்குள் சிண்டு முடித்துவிடும் வேலையை கன கச்சிதமாக முடித்து விட்டுத்தான் வெளியே வருவாள். அப்படிப்பட்டவள் இன்று கமலம் வீட்டிற்குள் வந்திருக்கின்றாளென்றால் சும்மாவா போவாள்?
"என்ன நடக்கப்போகின்றதோ? பாவம் ஜோதினி'யென்று அக்கம் பக்கத்தார்வேறு இந்தப் பாட்டியின் வருகையைக்கண்டு முணுமுணுக்கத் தொடங்கினர்.
அந்தப் பாட்டியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் இவ்வளவுக்கருகில் பார்க்கின்றாள். பார்த்தவுடனே, வியர்த்து விறுவிறுத்துப்போய் விட்டது ஜோதினிக்கு.
"கடவுளே, என்ன சொல்லித் தர்றதுக்கு, இங்க வந்திருக்காங்களோ... தெரியலையே?' என்று அவள் மனம் பதறியது.
""வாங்கம்மா, வாங்க! ஒக்காருங்க! மாமி உள்ளயிருக்கறாங்க'' என்று வம்பை சிரித்துக் கொண்டே வரவேற்றாள். உள்ளுக்குள் வருந்தினாலும், அதை அவளால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.
"வயசான காலத்துல, எங்கியாவது ஒங்காந்திருக்க வேண்டியதுதானே பாட்டி? ஏன் இப்படி பொழுதுபோன நேரத்துல, கண்ணு மண்ணு தெரியாமவந்து கஷ்டப்படுறீங்க' என்று கேட்க வேண்டும் போல்தான் தோன்றுகிறது.
எப்படிக் கேட்பாள்? மாமியாரோட நண்பியாச்சே!
கவனிக்காமல் விட்டுவிட்டால், அது எதாவது தவறாகி விடப்போகின்றதென்று பயந்துபோய், ஒரு பிளாஸ்டிக் சேரை எடுத்துப் போட்டாள். அந்தச் சேரை அப்படியும் இப்படியும் நகர்த்திப் பார்த்து சரியான இடத்தில்தான் இருக்கின்றதா என்று உறுதிபடுத்திக் கொண்டுதான் உட்கார்ந்தாள்.
வேறெங்கேனும் உட்காருகின்றேனென்று கவிழ்ந்திருக்க வேண்டும். அந்த அனுபவமே அவளை அப்படிச் செய்ய வைத்திருக்கும். அடுத்தவர்களைக் கவிழ்க்க நினைக்கும்போது சமயத்தில் அவர்களே அதில் கவிழ்ந்துவிடுவதும் உண்டு. இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். அதெல்லாம் பார்த்தால் வேலைக்காகுமா?
சேரைப்பிடித்து வசதியாக உட்கார்ந்து கொண்டு, இதற்கப்பறம் வந்த வேலையை ஆரம்பிக்கலாமென்று, தன்னுடைய ஆஸ்தான குருவாகிய கூனியை மனதில் வணங்கி தொடங்கினாள் வட்டப்பொட்டு பாட்டி.
""உள்ள என்னம்மா பண்றாங்க?'' கேட்கும்போதே ஓர் அதட்டல். சமஸ்தான ராணியாக கம்பீரமாக உட்கார்ந்திருப்பதுபோல் அவளுக்கு ஒரு நினைப்பு.
""உள்ளே... உள்ளே... சமைக்கறாங்கம்மா...'' நன்றாக பேசிக்கொண்டிருந்தவளுக்கு பாட்டியைப் பார்த்ததும், நாக்கு நாலாபுறமும் உருண்டு புரண்டு, வார்த்தைக் குளறி உளறி, என்னவோ சொல்லி முடித்தாள்.
""என்னது சமைக்கறாங்களா? என்னம்மா நீ...
வயசான காலத்துல... அவுங்கள சமைக்கவுட்டுட்டு, நீ இங்க டி.வி பாத்துக்கிட்டிருக்கற? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்லம்மா?''என்று வந்ததும் வராததுமாக தனது வில்லங்கப் பேச்சை தரை
யிறக்கி எப்படியிருக்கின்றதென்று வெள்ளோட்டம் பார்த்தாள். எடுத்த எடுப்பிலே வெற்றிக்கனியை பறித்துவிட்ட மகிழ்ச்சி.
தான் பேசுவது சமையலறைவரை கேட்க வேண்டுமென்றுதான் குரலை சற்று உயர்த்திப் பேசினாள். அப்போதுதான் "தன்மேல் நண்பிக்கு எவ்வளவு அக்கரை இருக்கின்றது' என்று கமலம் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தாள்.
ஜோதினிக்கு இப்போதே படபடப்பாகி விட்டது. "வந்த வேலையை முடிக்காமல் போ மாட்டார்கள் போல் தெரிகின்றதே'யென்று பதறினாள்.
""போம்மா... போய் நான் வந்திருக்கேன்னு சொல்லு? இன்னேரம் போய் சொல்லியிருக்கறதில்லையா? சுறுசுறுப்பு கொஞ்சம் கம்மிதான் போ?''
மாமியாரோட நண்பி என்பதற்காக இப்படியா அதிகாரம் செய்வது?
தன்னை ஒரு கொடுமைக்கார மருமகள்போல் அந்தப்பாட்டி குத்திக்காட்டியது, அவளை என்னவோ செய்தது.

"இந்த விஷயம் சமையலறையிலிருக்கும் தன் மாமியார் காதில் எப்படியும் விழுந்திருக்கும். இந்தப்பாட்டி சொல்வதை அவர்கள் கேட்க ஆரம்பித்தால், நம் நிலைமை என்னாவது' என்று மனதிற்குள் குமைந்தாள்.

முன்னறையிலிருந்துக்கொண்டே, ""வட்டப்பொட்டு வந்திருக்காங்க அத்தை'' என்று சொல்ல வாயெடுத்தாள். நல்லவேளை சுதாரித்துக்கொண்டாள். அந்தப்பாட்டியின் பட்டப்பெயரை யாரும் அவள் முன் சொன்னதில்லை. முன் நின்று பேசுவதற்கே பயப்படுகின்றாள். இதில் பெயரை எங்கிருந்து சொல்வது?
""தோ... போய் சொல்றேன்ம்மா'' என்பதுபோல சைகை செய்தவாறு சமையலறைக்குள் சென்றாள் ஜோதினி.

எல்லாருக்கும் அந்தப்பாட்டியின் நிஜப்பெயர் என்னவென்றே தெரியாது. தெருவே வட்டப்பொட்டு என்றுதான் சொல்வார்கள். இப்படிச் சொன்னால்தான் மற்றவர்களுக்கும் புரியும்.

வட்டப்பொட்டு என்றால், கிட்டத்தட்ட ஒரு ரூபாய் நாணயமளவிற்கு, நெற்றியில் "பளீச்'சென்று வட்டநிலாபோல் காட்சிக்கொடுக்கும் குங்குமப்பொட்டு. நெற்றி வகிட்டிலும் கிட்டதட்ட அதே அளவிற்கு இல்லையென்றாலும், ஒரு வட்டப்பொட்டு எப்போதும் இருக்கும். ரிங் கொண்டை போட்டு, அதில் கொஞ்சம் பூ வைத்திருப்பாள். முகத்தில் பூசிய மஞ்சள், அப்படியே காது பக்கம் நரைத்த முடியில் பட்டு அதுவும் மஞ்சளாக மாறிப் பளீச்சிடும்.

""என்னை எல்லாரும் வட்டப்பொட்டுன்னு சொல்றாங்களாமே... மத்தவங்கல்லாம் யாரும் பொட்ட வட்டமா வைக்கறதில்லையா? எவ அவ சொன்னவ? என் முன்னாடி சொல்லட்டும்'' என்று பொதுப்படையாக, அனைவர் காதிலும் விழட்டுமென்று, ஒரு நாள் தெருவிலே சவால் விட்டுச் சென்றிருக்கின்றாள்.

அந்தப் பயம் மனதிலிருந்தாலும், வேறெப்படிச் சொல்வது? உள்ளே சென்று தனது மாமியாரிடம் மெதுவாக, ""அவுங்க வந்திருக்காங்க, அவுங்கதான்'' பயத்தில் உளறியவளுக்கு சட்டென்று பட்டப்பெயர் மறந்து விட்டதா! சொன்னால் அவர்கள் காதில் விழுந்து விடுமென்று நினைத்தாளா என்னவோ! நெற்றியில் வட்டமாக பொட்டுபோல கையால் வரைந்து காட்டினாள் ஜோதினி.

""வட்டப் பொட்டா?''

""ம்...ம்...'' என்று வேகமாக தலையாட்டினாள்.

""அப்படிச் சொல்லலாம்! அவுங்க அங்கதானே ஒக்காந்திருக்காங்க! தெரியவா போவுது? சரி, தாளிச்சிக் கொட்டியிருக்கறேன்... ஒரு கொதி வந்ததும் எறக்கி வச்சிடு'' என்று தனது மருமகளிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு, முந்தானையால் கழுத்துப் பகுதி, நெற்றி, முகமென்று அரும்பியிருந்த வியர்வையை ஒற்றி ஒற்றி எடுத்துக் கொண்டே முன்னறைக்கு வந்தாள் கமலம்.
""வாங்க... வாங்க?'' என்று கூப்பிட்டுக்கொண்டே, அவள் பக்கம் இன்னொரு பிளாஸ்டிக் சேரை இழுத்துப்போட்டு "அப்பாடா' என்று மின்விசிறிக்கு கீழே உட்கார்ந்தாள்.

கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வந்த முதியோர் சங்கத்தலைவிபோல் தன்னை நினைத்து, "நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க? அதுக்குத்தான் நான் வந்துட்டேன்ல்ல' என்பதுபோல் கமலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ""ம்...க்கும்...'' என்று ஒரு கனைப்போடு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நேராக உட்கார்ந்தாள் வட்டப்பொட்டு பாட்டி.

""என்ன, சமையல் பண்ணிக்கிட்டிருந்தீங்களா?''

""ம் கூம்... எப்படி சமைக்கறதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்''

""ஏங்கிட்ட ஏன் மறைக்கறீங்க? சமைக்கறேன்னு சொல்லுங்க? வாயில்லாப்பூச்சி மாதிரியிருந்தீங்கன்னா... இப்படித்தான் ஒங்களையே வேலை வாங்குவா? ஆளப் பாத்தா, வெடுக்கு வெடுக்குன்னு ஒடிச்சி இடுப்புல வச்சிக்கற மாதிரியிருக்கா! எப்படியெல்லாம் ஒங்கள வேலை வாங்கறாப் பாத்தீங்களா? நான் என்ன சொல்றேன்னா?''

அருகில் நெருங்கிவந்து காதோடு காதாக, ""நீங்க ஏன் இதெல்லாம் செய்யறீங்க? ஒங்களுக்கென்ன தலையெழுத்தா?''

ரகசிய வார்த்தைகள் காற்றோடு காற்றாக பரிமாறப்பட்டன. எவ்வளவுதான் குரல் தாழ்த்திப் பேசினாலும் ஏழுகட்டை குரலை, அப்படி ஒன்றும் அமுக்க முடியவில்லை.

ஜோதினிக்கு உதறல் எடுத்துக் கொண்டது. குரலை தாழ்த்திப் பேசுகின்றாளென்றாலே, மருந்தை துப்பாக்கிக்குள் கிடுக்குகின்றாள் என்றுதான் அர்த்தம்.

""எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிட்டு, நீங்க வந்து "ஹால்ல' ஒக்காந்துக்க வேண்டியதுதானே? அதைவுட்டுட்டு சமையக்கட்டுலே... கெடக்குறீங்க? ஒங்கள பாக்கவே எனக்கு பாவமாயிருக்கு... ப்ச்?'' என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, அவளைப் பரிதாபமாக பார்த்தாள் வட்டப்பொட்டு பாட்டி.

பாட்டிக்கு தொடர்ந்து பேச முடியவில்லை. மூச்சு இரைப்பு, வார்த்தைகள் தொடர்ந்து வர முடியாமல் திணறுகின்றன. மக்களுக்கு சேவை செய்யும்போது, இதுபோன்ற அசெளகரியங்களையெல்லாம், அறுபத்தைந்து வயது தலைவி தாங்கித்தான் ஆகவேண்டும்.

""இங்க பாருங்க... இதெல்லாம் ஆரம்பத்துலே அடக்கி வைக்கணும்! இல்லன்னு வச்சிக்குங்க... தலைக்கு மேல ஏறி ஒக்காந்துக்கும். அதுக்கப்பறம் ஒங்களால எறக்கவே முடியாது? கல்யாணமாகி மூனுமாசமாகிடுச்சில்ல, அப்பறென்னா? அவளே செஞ்சிக்க வேண்டியதுதான்?''

""...........''

""புதுப்பொண்ணாச்சேன்னு பாவம் பாத்து செய்யறீங்க. அப்பறம், அவ ஒங்களையே தொடர்ந்து சமைக்க சொல்லிடுவா? கூண்டுக்குள்ள மாட்டின எலி மாதிரி ஒங்களால ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது'' என்று பயமுறுத்திவிட்டு, அவளின் முக பாவனையில் எதாவது மாற்றம் தெரிகின்றதாவென்று, மேல் கண்ணால், சுருங்கி விரியும் முக ரேகையை ஆராய்கின்றாள். அதனை வைத்துதான் தொடர்ந்து சொல்வதா வேண்டாமாவென்று முடிவு செய்வாள்.

உடலில் தள்ளாட்டம் இருந்தாலும், அவளது எண்ணம் முழுவதும் பேச்சில் இறங்கி, கமலத்தை யோசிக்க வைத்துவிட்டது.

ஜோதினிக்கு இவர்கள் பேசிக்கொள்வது அரைகுறையாக காதில் விழுந்தாலும், தனக்கெதிராகதான் வட்டப்பொட்டு ஏதோ வத்தி வைக்கின்றாளென்று புரிந்துகொண்டாள்.

"நல்லாதானே போய்க்கிட்டிருக்கு, நடுவுல இவுங்க வந்து ஏன் கொழப்பறாங்க' என்று நினைத்தவள் பதிலுக்கு மாமியார் என்னச் சொல்கிறார்களென்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். சரியாக காதில் விழவில்லை.

இரண்டு பேருக்கும் "காபி' தயார் செய்துகொண்டு வந்து கொடுத்தாள்.

சூடாக இருப்பதால் இருவரும் வாங்கி பக்கத்திலிருந்த "டீபாய்' மேல் வைத்துவிட்டார்கள். ஏனென்றால், அதைவிட சூடான விஷயம் போய்க் கொண்டிருக்கின்றதே, அதற்கு இடையூறாக வந்து விட்டாளேயென்று பாட்டி தவிக்கின்றாள்.

யார் யாரெல்லாம் வந்தால் "காபி' போட்டுத் தர வேண்டுமென்று மாமியார் ஏற்கெனவே சொல்லியிருந்த பட்டியலில் வட்டப்பொட்டு பெயரும் உண்டு. காபியைக் கொடுத்துவிட்டு இவளும் அங்கேதான் நின்றிருக்கின்றாள்.

அடுப்பில் வைத்துவிட்டு வந்ததைப்பற்றி மாமியார் எதாவது சொல்வார்களென்று பார்த்தாள்; எதுவும் சொல்லவில்லை. நிமிர்ந்தும் பார்க்கவில்லை. பாட்டி பற்ற வைத்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டாள். ஜோதினிக்கும் முகம் சரியில்லை.

"காபி குடுத்திட்டல்ல உள்ள போ... இங்க கொஞ்சம் வேலையிருக்கு' என்பதுபோல் கமலத்திற்கு மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

""நீ ஏம்மா நிக்கற? உள்ள போய் எதாவது வேலையிருந்தா பாரு... போ'' என்று மெல்ல அங்கிருந்து நகர்த்தினாள் வட்டப்பொட்டு பாட்டி.

இஷ்டமில்லாமல்தான் அவளும் மெதுவாகச் செல்கிறாள்.

உள்ளே போய்விட்டாளா, இல்லையா? என்பதை எட்டிப்பார்த்து உறுதிப் படுத்திக்கொண்டவள், ""நீங்க என்னமோ சொல்ல வந்தீங்களே, சொல்லுங்க... அவ உள்ள போயிட்டா'' என்று கிசுகிசுத்தவாறு, கமலத்தின் எண்ணத்தை தூண்டில்போட்டு வெளியே இழுக்க முயற்சித்தாள் பாட்டி.

""நீங்க சொல்றதெல்லாம் சரிதான். நான் இல்லேன்னு சொல்லல? ஆனா, நடைமுறையில சில சிக்கல்கள் இருக்கு. நானும் இவளைப்போல வாக்கப்பட்டு வந்த ஒடனே... எங்க மாமியார் என்ன பண்ணாங்க தெரியுங்களா?''

வட்டப்பொட்டு நெற்றியை உயர்த்தி ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

""கட்டிக்கிட்டு வந்தன்னைக்கே, இந்தா சமையக்கட்டு... இனிமே நீதான் சமைக்கணும்னு சொல்லிட்டாங்க. நல்லவேளை எனக்கு சமையல் தெரியும். இருந்தாலும், நான் என்ன சமைச்சாலும், எப்படி சுவையாயிருந்தாலும், எங்க மாமியார் மட்டும் எப்பவும், ஏதாவது ஒரு கொறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.

வத்தக் கொழம்புல புளியக் கொஞ்சம் தூக்கலாப்போட்டிருக்கணும்? பொடலங்கா கூட்டுல... கடலைப் பருப்புகூட, கொஞ்சம் தேங்காவ துருவி போட்டிருக்கணும்? பொட்டுக்கடலை சட்டினியில கொஞ்சம் பூண்டு போட்டு அரைச்சாதான் நல்லாயிருக்கும்' என்று இப்படி எந்த வேலை செஞ்சாலும், குத்தங்கொறை சொல்லிக்கிட்டேதான்யிருப்பாங்க... "எங்கம்மா இப்படிதான் எனக்கு சொல்லிக்குடுத்தாங்க அத்தை... அதான் எனக்குத்தெரியும்ன்னு சொல்லுவேன்'' அதற்குள் அந்தப்பாட்டி ஏதோ சொல்ல குறுக்கிட்டாள்.

""இதக் கேளுங்க'' என்று தொடர்ந்தாள்.

"ஓங்கம்மா சொல்லிக்குடுத்ததெல்லாம் ஒங்க வீட்டோட வச்சிக்க. இங்க நான் எப்படி சமைக்கறேனோ அப்படித்தான் செய்யணும்'னு சத்தமா கத்தினாங்க. இவுங்க எப்படி செய்வாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?''என்று கேள்வி கேட்பதுபோல், வட்டப்பொட்டு பாட்டியைப் கோபமாகப் பார்த்தாள் கமலம்.

"அதுக்கேட்டியம்மா என்னை அப்படி மொறைச்சிப்பாக்கற' என்பதுபோல் பார்த்துவிட்டு, "மேற்கொண்டு என்னாச்சுன்னு சீக்கிரம் சொல்லு' என்பது
போல் கடமையேயென்று அவள் கண்ணை ஊடுருவிப் பார்த்தாள்.
""உங்கப்பழக்கம் எனக்கெப்படித்தெரியும்ன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க, தெரியலைன்னா... என்னை கேட்டுத்தான் செய்யணும்னு சொன்னாங்க...
தெரியலைன்னாதானே கேக்கணும்? எனக்குத்தான் எங்கம்மா சொல்லிக் குடுத்திருக்காங்களே! அப்பறம் நான் எதுக்கு கேக்கணும்னு சமைச்சிடுவேன்.
அவுங்க சொல்றது என்னான்னு போகப் போக புரிஞ்சிக்கிட்டேன். அதுக்கான அவகாசம், அப்ப எனக்கு அவுங்க குடுக்கல? அந்த தப்ப இப்ப நானும் பண்ணிடக் கூடாதுன்னுதான். இந்த மூனு மாசமா... நாந்தான் சமையல் பண்றேன். சும்மாயில்ல மருமகளையும் பக்கத்துல வச்சிக்கிட்டு, இதை எடு, அதைப்போடு, இதுக்கு அதைப் போடணும், அதுக்கு இதைப் போடணும். வீட்ல இருக்கறவங்களுக்கு இப்படி செஞ்சாதான் புடிக்கும்ன்னு பக்கத்துல நின்னு சொல்லிக்கிட்டிருக்கறேன்...
அவுளுக்கும் சமைக்கத்தெரியும். இருந்தாலும், நம்ம வீட்டு சமையல்மாதிரி இருக்கணும்ன்னா... நாம எப்படி சமைப்போம்? என்னென்ன போட்டு சமைப்போம்ன்னு, கொஞ்ச நாளைக்கு கூடவே நின்னு சொல்லிக்குடுக்கணும். அப்பறம் அப்பறம் அவளுக்கே எல்லாம் பழகிடும்.
என்ன ஒன்னு, சமைக்கறவங்க மனசு நல்லாயிருந்தாதான், சாப்படறவங்க வயிறும் நல்லாயிருக்கும். அதுக்காக பெருசா நாம எதுவும் செய்ய வேண்டியதில்ல. சமைக்கும்போதுமட்டும் கொஞ்சம் கூடமாட ஒத்தாசையா இருந்தாப்போதும்... அவ்வளவுதான்!'' என்று கமலம் தன்னுடைய கருத்தை "பளீச்'சென்று முகத்திற்கு நேரே சொன்னதும், திருஷ்டிப்பொட்டு பூசியதுபோல், வட்டப்பொட்டு பாட்டிக்கு முகம் கறுத்து, சிறுத்துப் போய்க் கொண்டேயிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com