பேல்பூரி

இங்கு எல்லா மொழிகளிலும் நல்ல முறையில் செராக்ஸ் எடுத்துத் தரப்படும். 
பேல்பூரி


கண்டது


(திருவாரூரில்  உள்ள செராக்ஸ் கடை பலகையில் உள்ள வாசகம்) 

இங்கு எல்லா மொழிகளிலும் 
நல்ல முறையில் செராக்ஸ் எடுத்துத் தரப்படும். 

வி.பாலசுப்ரமணியன்,  
மன்னார்குடி. 

(ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஒரு காரின் முன்புறத்தில்)

வாழவைக்கும் கருப்புசாமி 

கே. முத்துசாமி, 
தொண்டி.

(வேதாரண்யம் அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

விழுந்தெழுந்த மாவடு 

மருத.வடுகநாதன்,  
வேதாரண்யம்.

கேட்டது

(கோட்டாறு  பஸ் நிறுத்தத்தில்  நடத்துநரும் பெரியவரும்)

""யோவ்...  நாகர்கோவில்னு  போர்டு வெச்சிருக்கிறது கண்ணுக்கு  தெரியலையா... அதை நிறுத்தி எங்க போறதுன்னு கேட்காட்டி என்ன?''
""ஏம்பா நீங்கதானே  கேட்டு ஏறச் சொல்றீங்க''
""சரி... சரி... வேகமா ஏறும்''
""இல்ல எனக்கு மார்தாண்டம் போகணும்'' 

மகேஷ் அப்பாசுவாமி, 
பனங்கொட்டான் விளை. 

(திருச்சியில் பொன்மலைப்பட்டியில் உள்ள ஓர் உணவகத்தில்)

சர்வர்: ஏன் சார் சாப்பிடப் போகும்போதாவது முகக்கவசத்தை எடுக்கலாமில்ல?
சாப்பிட வந்தவர்:  கொஞ்சம் பொறுங்க ... சாப்பிடறதுக்கு முந்தி நான் கடன் வாங்கினவங்க யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்துக்கிறேன்.

அ.சுஹைல் ரஹ்மான், 
திருச்சி.


யோசிக்கிறாங்கப்பா!

தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை.
தெரிந்து செய்யும் தவறுக்கு  மன்னிப்புக் கேட்டு எந்தப்  பயனுமில்லை. 

எல்.மோகனசுந்தரி,  
கிருஷ்ணகிரி-1

மைக்ரோ கதை

ஆறுமுகம் அவசரமாக ஆட்டோவில் வந்து தன் வீட்டு முன்பு இறங்கியதைப் பார்த்ததும் நாராயணன் அதிர்ச்சியடைந்தார்.  இன்னும் நான்கு நாளில் ஆறுமுகத்தின் மகள் திருமணம். அழைப்பிதழ் எல்லாம் தந்து விட்டார். இப்போது எதற்கு வருகிறார்?
""நாராயணன்,  உங்களிடம் ஓர் உதவி வேண்டும். அதற்கு தான் வந்தேன்''  என்றார்.
"அடடே...  இவர் மகள் திருமணத்திற்கு மொய் செய்ய 200 ரூபாய் தயார் செய்யவே பெரிய பாடாக  இருக்கிறது.  இப்போது ஏதாவது கடன் கேட்க வந்திருப்பாரோ' - குழம்பினார் நாராயணன்.
""கேட்கவே கூச்சமாகத்தான் இருக்கிறது.
 நீங்க தப்பா நினைச்சிடக் கூடாது'' -பலமான பீடிகை போட்டார் ஆறுமுகம்.
"என்ன மனுஷன் இவர். கேட்கிறதைக் கேட்டுத் தொலைக்கமாட்டேங்கிறாரே' எரிச்சல் வந்தது நாராயணனுக்கு.
""அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன். தாராளமாகக் கேளுங்கள்''
""இதோடு ஏழு பேரிடம் கேட்டு வாங்கி வந்திருக்கேன். நீங்க எட்டாவது ஆள். தட்ட மாட்டீங்க என வந்தேன். என் மகளின் 
திருமண அழைப்பிதழ் எல்லாம் காலியாகிவிட்டது. 
இன்னும் முக்கியமான பத்துப் பேருக்கு  அழைப்பிதழ் கொடுக்கணும். அதனால் உங்களிடம் நான் கொடுத்த 
திருமண அழைப்பிதழைத் தர வேண்டும்'' என்றார் அசடு வழிந்தபடி. 

கு.அருணாசலம்,
தென்காசி.

எஸ்.எம்.எஸ்.


திருமணங்கள் சொர்க்கத்தில் 
நிச்சயிக்கப்படுவதில்லை;
 சொந்த வீடு  பார்த்து 
நிச்சயிக்கப்படுகின்றன.

- ராம்ஆதிநாராயணன்,  
தஞ்சாவூர் -1


அப்படீங்களா!

மூச்சுவிட காற்று அவசியம்.  தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை காற்றில் கலப்பதால்,  காற்று மாசடைகிறது.  வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, அறுவடை செய்யப்பட்ட  நெல் வயல்களில் தீ மூட்டுவதால் ஏற்படும் புகை ஆகியவற்றாலும் காற்று மாசடைகிறது. 
மாசடைந்த இந்த காற்றை நாம் சுவாசிப்பதால்,  காற்றிலுள்ள வேதிப் பொருள்கள் உடலுக்குள் கலந்து பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது.  காற்றில் கலந்துள்ள மாசுகளை நீக்கும் ஒரு கருவியை தைவான் நாட்டைச் சேர்ந்த  ரைஸ்  ஏர் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. 
கருவியின் பெயர்  லஃப்ட் டியு 3.0.   போட்டோகேட்டலிஸிஸ் முறையில் நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தக் கருவி இயங்குகிறது.  
இந்தக் கருவியிலுள்ள டைட்டானியம் டை ஆக்ûஸடு  புறஊதாக் கதிர்களின் மூலம் தூண்டப்பட்டு காற்றில் கலந்துள்ள  பாக்டீரியா,  வைரஸ், கெட்ட நாற்றம்,  
மாசுகள்,  நச்சுத்தன்மையுள்ள வேதிப் பொருள்கள் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது.  
அவ்வாறு அழிக்கும்போது இது ஓசோன் வாயுவை வெளியிடுவதில்லை. காற்றைத் தூய்மைப்படுத்த எந்தவிதமான வடிகட்டிகளையும் இந்தக் கருவி பயன்படுத்துவதில்லை.   
இந்தக் கருவியை  ஒருமுறை ரீ சார்ஜ் செய்து கொண்டால் ஓராண்டு வரை பயன்படுத்த முடியும்.

என்.ஜே.,
சென்னை-58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com