பல்லக்கு தூக்கிகள்

கதவைப் படீரென்று சாத்தினாள் ராமலட்சுமி. ""வேற வேலையில்லை! காலையிலே அந்த வாட்ச்மேன் வந்து "மூடை'க் கெடுத்தான்.
பல்லக்கு தூக்கிகள்

கதவைப் படீரென்று சாத்தினாள் ராமலட்சுமி. ""வேற வேலையில்லை! காலையிலே அந்த வாட்ச்மேன் வந்து "மூடை'க் கெடுத்தான். இப்ப இவன்'' என்று படபடவென்று சொல்லியபடியே சமையலறைக்குள் போனாள்.

""யாரு ராமு? கொஞ்சம் நிதானமா பேசறதுதானே?'' என்று இடத்தைவிட்டு எழுந்திருக்காமலேயேநாராயணன் வினவினார்.

""தானமாவது நிதானமாவது!'' என்று மீண்டும் சீறினாற் போலவே வெடித்தாள். ""அஞ்சு லட்சத்துக்கு இன்சூரன்ஸாம். 50000 வருஷ கட்டணமாம். பெரிய ரூம் ரென்ட், டாக்டர் பீஸ் எல்லாம் முழுக்க கிடைக்குமாம்! சே...'' இரண்டு நிமிடம் கழித்து ""என்னவோ வக்கில்லாதவன் கிட்டே சொல்லுவது போல் அளக்கிறான்!'' என்றாள்.
சிறிது நேரம் அமைதி, நாராயணன் வயிற்றை பிடித்துக் கொண்டு, தலையணையை இறுக்கிக்கொண்டார்.
""என்னங்க? வயிற்றுவலி பரவாயில்லையா? வெந்நீரிலே ஓமம் கலந்து தரட்டுமா? பசி எடுக்குமாம், ஊ.ஆ. யிலே படிச்சேன்.'' என்று சொன்னாள்
""ம்ஹீம்... வேண்டாம்.'' என்று மறுத்தார் நாராயணன். அவள் அக்கறையாகக் கேட்டதைப் பொருட்டே படுத்தவில்லை. மாறாக, மனைவியின் சுபாவம்தான் அவரை உறுத்திக் கொண்டிருந்தது.
இத்தனைக்கும் காலையில் நிகழ்ந்தது ஒரு சாதாரண சமாசாரம். ஆறரை மணி அளவில் அவரும், ராமலட்சுமியும் சற்று தொலைவு வாக்கிங் போய்விட்டுத் திரும்பி வந்தார்கள். பார்த்தால், தங்களுடைய "வெர்ணா' வண்டியை எடுக்க முடியாதபடி குறுக்கே ஒரு வாகனம் இருந்தது.
""யார் இங்கே நிறுத்தினாங்க? வாட்ச்மேன்... மணி'' என்று உரக்கக் கூவினாள். யாரும் வரக் காணோம்.
அதற்குள் ""நாந்தாங்க'' என்று அடுத்த தளக் காவாலாளி பவ்யமாக எதிரில் வந்து நின்றான்.
""துடைக்கறதுக்கு வேற இடமில்லையா? ஓனர் வீட்டுத் தளத்திலேயே வைச்சு...'' என்று ராமலட்சுமி முடிப்பதற்குள், மற்றவன் குறுக்கிட்டான்.
""செகன்ட் ஹாண்ட். நான்தான் வாங்கினேன்! அய்யா அம்மா கிட்டே காண்பிச்சு ஆசி வாங்கி...''
வெடுக்கென்று குறுக்கிட்டாள் ராமலட்சுமி, ""அதான் பாத்துட்டேனில்ல? வண்டியை எடு'' என்று மிக அலட்சியமாக வார்த்தைகளை உதிர்த்தாள். விடுவிடுவென்று கணவருடன் மின்தூக்கியில் ஏறி தன் குடியிருப்புக்குள் நுழைந்தாள். "சட்! வர வர பணத்துக்கும், படிப்புக்கும் மரியாதையே இல்லாமல் போச்சு' என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.
உண்மையில் ராமலட்சுமிக்கு கிராமத்தை (ராஜபாளையம் அருகில்)விட்டுச் சென்னைக்கு வர விருப்பமேயில்லை. கொல்கத்தாவிலிருந்து மகளும், ஹூஸ்டனிலிருந்து மகனும் திரும்பத் திரும்ப சொன்னதால்தான் மனம் மாறினாள். மேலும் ஓர் அவசரத்தின் போது, மின் வெட்டு ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததும் பிரச்னையாக இருந்தது.
சென்னையில் ஸ்டார் ஓட்டலில் தங்கி வீடு பார்த்த போது, அடையாறிலுள்ள இந்த மூன்று படுக்கை அறை கொண்ட தளம் பிடித்துப் போயிற்று. "ஓனரை'ப் பார்க்கப் போன போது, ஏதோ பேட்டியில் கேட்பது மாதிரி கேள்விகள் எழுப்பினார்.
என்ன வேலை? தொடர்ந்து வாடகை தர முடியுமா? இரண்டு பேருக்கு ஏன் இத்தனை பெரிய ஃப்ளாட்? வாடகை 50000; முன் பணம் அஞ்சு லட்சம். எப்போது தருவீர்கள்?
பொங்கிய கோபத்தை ராமலட்சுமி அடக்கிக் கொண்டாள். மெதுவாக உடமையாளர் பெயரைக் கேட்டுக் கொண்டாள். சற்று தள்ளிப் போய் வங்கிக் கிளைக்கு போன் செய்தாள், அடுத்த ஒரு மணி நேரத்தில் வங்கி கடைநிலை ஊழியர் ஐந்து லட்ச ரூபாய் டிராப்டுடன் வந்து நின்றாள்.
வீட்டு எஜமானர், அசந்துதான் போய்விட்டார். ""சாரிம்மா! உங்களைத் தப்பா எடை போட்டுவிட்டேன்'' என்று மன்னிப்பு கேட்டு, சாவியை ஒப்படைத்தார். ""இதுக்கு முன்னாலே ஒரு கம்பெனி ஜி.எம். குடியிருந்தார். ஜபர்தஸ்துங்க, கடேசில ஏதோ சிக்கல் வந்து, வாடகையை இழுத்தடித்தாருங்க.'' என்று ஏதோ சொல்ல வந்தார்.
""விடுங்க! நாங்க இன்னும் நாலு நாள்ல குடி வரோம். வீட்டை கிளீன் பண்ணிவைங்க.'' என்றாள் ராமலட்சுமி கறாராக.
சென்னை சில மாதங்களிலேயே ராமலட்சுமிக்கு அலுத்துப் போயிற்று. ஊரில் என்றால் வி.ஐ.பி. என்று மதித்து சேவகர்கள் பணிவிடை செய்வார்கள். ஒரு கல்யாணம் கார்த்திகை என்று விசேஷத்துக்குச் சென்றால் விழிகளை உயர்த்தி, கை கட்டி, வாய் பொத்தி வரவேற்பார்கள் பல்லக்கில் பவனி வரும் மகாராஜாவுக்கு கிடைக்கிறாற் போல் மரியாதை!
இங்கு? தாங்கள் மட்டுமே மிகப் பெரிய தளத்துக்கு குடி வந்திருக்கிறோம் என்று யாருமே சட்டை செய்யவில்லை. பத்தோடு பதினொன்று என்கிற ரீதியில்தான் மதித்தார்கள்.
எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது? எவ்வளவு தடவைதான் பத்மநாபசாமி கோயிலுக்கு போவது? போதாக்குறைக்கு தொலைபேசியில் வரும் அழைப்புகள்.
""0% வட்டி... கடன் தருகிறோம். என்ன வேண்டும்?'' என்பது போல
எல்லாம் இவரால்தான். ஒரு நாள் வெளிப்படையாகவே கணவரிடம் சொல்லிவிட்டாள்.
""எல்லாம் உங்களால்தான். எதுக்காக வசந்தியை கல்கத்தாவில் படிக்க அனுப்பிச்சிங்க?''
""அவள் படிக்கிற கோர்ஸூக்கு வசதி.''
""ஏன்... இங்கே கிடையாதா? அவளுக்கு ஒரு டிகிரி பத்தாதா? மேலே படிச்சா மரியாதைதான்'' என்றவள், ""ஆனா பாருங்க, இங்கே கூடவே இருந்தால் செளகரியம்தானே!''
""சரி... சரி... இப்ப என்ன? பட்டணம்னா, எல்லாம் தானிருக்கும்'' என்று நாராயணன் கூறினார்.
"உங்களுக்கென்ன? படுத்திட்டே இருக்கீங்க. எனக்கில்ல தொந்தரவு' என்று எண்ணிக் கொண்டாள் ராமலட்சுமி.
நாராயணன் சாய்ந்தவாக்கில் படுக்கையில் கிடந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தார். சின்னத் திரையில் ஒளிபரப்பான படக் காட்சிகளை விட விளம்பரம் ரசிக்கும்படி இருந்தது. ஆனால் எல்லாமே அறைகலன்களுக்கான விளம்பரமும், கடன் அளிப்பதும்தான். இஎம்ஐ 0% வட்டி.
திடீரென்று அவருக்குத் தன் சித்தப்பா, ஞாபகம் வந்தது. அந்த சித்தப்பா 1960-களிலே சென்னையில் குடிவந்தவர். அப்போது பிரபலமாக இருந்த டிரான்சிஸ்டருக்கும், பிற சோபா போன்ற வீட்டு பொருள்களுக்கும் ரேடியோவில் விளம்பரமும் வருமாம். ஏதோ ஒருவாசகம்... மறந்துவிட்டது.
குப்புறப் படுத்துக் கொண்டார். இரண்டு நாளாக "டாய்லெட்' போகாதது என்னவோ உபாதை செய்தது. திரும்பித் திரும்பி படுத்தார். மனைவியை அழைத்தார்.
பார்த்தவுடனே புரிந்து கொண்டு ""டைஜஸ்டிவ் டேபலெட் தரட்டுமா? '' என்றாள் ராமலட்சமி.
""அதெல்லாம் சரிப்படாது. டாக்டருக்கு போன் பண்ணி பார்த்துவிடலாம்'' என்றார் நாராயணன். தெரியவில்லை, ஒரே வாரத்தில் ஆஸ்பத்தியில் சேர்க்கும்படி ஆயிற்று.
அதற்கு முன் அடையாறில் தெரிந்த டாக்டரிடம் போய் ஆலோசித்தார். படுக்க வைத்து சிற்சில இடங்களைத் தொட்டு, அமுக்கி பார்த்தார். பின்னர் ""டெஸ்ட் எடுத்தால்தான் சரியாக தெரியும்.'' என்றார்.
ராமலட்சுமி, தன் ஊர்க்காரர் என்ற உரிமையுடன், ""ஏன்? உங்க மருந்தின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ?''
டாக்டர் உறுத்துப் பார்த்து, ""மருந்தின் மீது 100% நம்பிக்கைதான். உங்கள் மீதுதான் நம்பிக்கை இல்லை! லேட்டாகக் கூட்டி வந்து இருக்கீங்களே?'' என்றார் காரமாக. பின்னர் ஒரு தாளில், பிரபல ஆஸ்பத்திரி பெயர், நிபுணர் பெயர் எழுதித் தந்தார்.
""குணமாகலைன்னா இங்க போங்க.'' என்றார் சுருக்கமாக.
குணமாகத்தானில்லை, "டாய்லெட்' கொஞ்சமாகப் போனாலும் அடிவயிறு வலித்துக் கொண்டேயிருந்தது. கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதை போன் செய்து, மகனுக்கும், மகளுக்கும் தெரிவித்தாள்.
முன்பணம் செலுத்தி வசதியான அறையில் படுத்திருந்தார். மூன்று நான்கு நிபுணர்கள் அவ்வப்போது வந்து சோதனை செய்துவிட்டு போனார்கள். வேறு ஒரு தனியான பரிசோதனைக்கு வெளி இடத்தில்...
ஆனால், நாராயணனின் இறுக்கமான வயிற்றுக்கு "விடிவு' ஏற்படக் காணோம். பலவீனமாக இருந்ததால், அனைத்தும் பெட்- இல் தான்.
பிற்பகல் மகளிடம் பேசிவிட்டு செல்போனை வைத்தாள்.
ஒரு நர்ஸ் வந்து, ""பேஷண்ட் நாராயணன்.''
""யெஸ்'' என்றாள் ராமலட்சுமி.
""உங்களை காஷ் கவுன்டரில் கூப்பிடுறாங்க''
""பயாப்ஸி டெஸ்ட் வந்துடுத்தா?''
""அது டாக்டர் சொல்லுவார். இப்ப உடனே கவுண்டருக்கு வாங்க.''
ராமலட்சுமிக்கு சினம் பொங்கியது. கேவலம் பணிபுரிகிற பெண், தனக்கு உத்தரவு போடுவது!
சில நிமிடத்துக்குப்பின், அவள் பற்று அட்டையையும், கைப்பையையும் எடுத்துக் கொண்டு போனாள். தொகையைச் சரி பார்த்துக் கொண்டாள்.
அவளைப் பார்த்ததுமே, அந்தப் பெண் ""இன்னும் 30000 தரணுமே?'' என்றாள்.
""என்னங்க இது? வந்த போதே, அட்வான்ஸ் நிறையக் கொடுத்தோமே?'' ராமலட்சுமி திகைத்தாள்.
""யாரு இல்லேன்னு சொன்னது. அதெல்லாம் ரூம் ரெண்ட், டாக்டர் பீஸ், மெடிசன் இதுக்காக. இப்ப கேட்கறது ஸ்பெஷல் டெஸ்ட்டுக்கு!''
ராமலட்சுமிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
""ஒன் மினிட் என்றாள். அருகிலுள்ள ஏடிஎம்க்குச் சென்றாள். அட்டையைச் செருகினாள்.''
"தொகை இருப்பினில் இல்லை" என்ற பதிலுடன் அட்டை திரும்பி வந்தது. மறுபடியும் செலுத்தி பரிவர்த்தனை தாளைக் கவனித்தாள்.
"அட தேவுடா! இரண்டு மாதத்திற்கு முன் வெட்டிய ஒன்றரை லட்ச ரூபாய் செக் பற்று ஆகியிருந்தது. கடன் அட்டையை நுழைத்துப் பார்க்கலாமா?' பொதுவாக அதில் தொகையை எடுத்ததேயில்லை. குருட்டாம் போக்கில் நினைவிலிருந்த என்னை அழுத்தினாள்.
பின் எண் சரி இல்லை. இரண்டாம் முறை வேறு எண்ணைப் பதித்த போது மீண்டும் திரும்பியது. ""கிரடிட் கார்ட் ப்ளாக்டு''
மனம் வெறுத்து ஆஸ்பத்திரி வாசலுக்குச் சென்றாள். இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தாள். ""பாக்கி நாளைக்கு தரேனே'' சொல்கையிலேயே, கிரெடிட் கார்ட் எண்ணை எப்படி சரி பார்ப்பது என்கிற எண்ணம் உதித்தது.
கவுண்டர் பெண் ""என்னவோ போங்க. அட்மிட் ஆகிற போது இன்சூரன்ஸான்னு கேட்ட போது, பெரிய ராஜ வம்சம்னு பேசினீங்க!''
பக்கத்திலிருந்த ஒல்லிப் பெண், ""பேரு பெத்த பேரு... கையிலே டப்பு லேது.''
""சரி... சரி... போங்க. காலையிலே கொடுங்க சாக்குப் போக்கு சொல்லாம.''
அவளை ராமலட்சுமி வெறித்து நோக்கினாள், விழி பிதுங்கியது, தொண்டையை அடைத்து, தலை சுற்றியது.
""பணமுடை எல்லாருக்கும் வருமுங்க. எல்லாருக்கும் வருமுங்க'' என்று அலறியபடி கீழே சாய்ந்தாள்.
""என்னம்மா இது? ஏதாச்சும் கனா கண்டீங்களா? விழற மாதிரி ஆயிட்டீங்களே?'' என்று சீருடை நர்ஸ் ராமலட்சுமியை உட்கார வைத்தாள்.
ராமலட்சுமி கண்ணைக் கசக்கிக் கொண்டாள். இது கனவா? கனவுதானா! கணவருக்கு "ரெக்டம்' மில் பயாப்ஸி எடுத்தார்களே, என்ன ஆயிற்று? பதற்றத்துடன் திரும்பிக் கணவரைப் பார்த்தாள்.
""கட்டிதான் ஆபரேஷன் பண்ணியாச்சே! அது சாதாரணம்தான்னு டாக்டர் சொன்னாரே!''
ம்... ஹூம்.... அப்பாடா! உடலைக் குலுக்கிக் கொண்டாள். ""பயங்கர கனவு. பில்லை செட்டில் பண்ணப் போறேனாம். கேவலமா பேசறாங்களாம்''
என்றாள்.
""அதிருக்கட்டும், ஏதோ முணுமுணுத்தாயோ''
""ஆ... அதுவா? பணமுடை எல்லாருக்கும் வருகிறதுதான்னு சொன்னேன்'' என்றாள் ராமலட்சமி ஞாபகப்படுத்திக் கொண்டு
நாராயணன் மனைவியை உற்று நோக்கினார். ""சரி... அதே மாதிரி... ஆடம்பரப் பொருளை எல்லாரும் வாங்கலாம்தானே?'' என்று கேட்டார்.
""பழைய விளம்பரம் இப்ப சொல்றேன். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்!''
ராமலட்சுமி விக்கித்துப் போனாள். பிரமை பிடித்தவள் மாதிரி சுவரையே பார்த்தாள். அடுக்கடுக்காக நிகழ்வுகள் மனத்துள் வந்து போயின. காவலாளி சிறுகச் சிறுக சேர்த்து வைத்து, ஒரு ஸ்கூட்டர் வாங்கின போது, தான் முகத்தைத் திருப்பிக் கொண்டது நினைவில் நின்றது. வேலைக்கு வருகிற பணிப்பெண், புருஷன் அன்புடன் வாங்கித் தந்த செல்போனை ஆசையுடன் காண்பித்த போது, அலட்சியப்படுத்தியது ஞாபகத்தில் வந்து நின்றது. தங்கள் குடியிருப்பிலேயே வசிக்கும் ஒரு குடும்பஸ்தர், பள்ளிக்கரணை வீட்டுப் புதுமனை புகுவிழா அழைப்பிதழைத் தந்தபோது, அதைக் கசக்கி வீசி எறிந்தது நினைவில் வந்து நின்றது.
இவை எல்லாமே, பல்லக்கு தூக்கும் நிலைமையிலிருந்து, அடுத்த நிலைக்கு செல்லும் முயற்சியின் அடையாளங்கள்தானே? அவற்றை உதாசீனப்படுத்தலாமா?
ராமலட்சுமி கூனிக்குறுகினாள். பல்லக்கு மகாராணி என்ற எண்ணம் மறைந்து போயிற்று.""என்னை மன்னிச்சுடுங்க'' என்று இரு கைகளைக் கூப்பிக் கணவனை வேண்டினாள். அவள் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com