ஆண மனம்

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கையொப்பம் பெற்று இன்றே மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும் அனுப்பியாக வேண்டிய அவசரப் புள்ளி விவர அறிக்கையொன்றினை
ஆண மனம்

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கையொப்பம் பெற்று இன்றே மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும் அனுப்பியாக வேண்டிய அவசரப் புள்ளி விவர அறிக்கையொன்றினை, நேற்றிரவு வெகுநேரம் கண்விழித்துத் தயார் செய்துவிட்டுப் படுக்கைக்குப் போகும்போது கெளசல்யாவுக்கு இரவு மணி 3.00. காலையில் சற்று தாமதமாகத்தான் எழ முடிந்ததால், வழக்கமாய்ப் பிடிக்கும் பேருந்தைப் பிடிக்க முடியாமல், அடுத்து வந்த பேருந்தைப் பிடித்து, அலுவலகத்திற்குள் நுழையும்போதுமுற்பகல் மணி 11.00.
கைப்பையை மேஜையில் வைத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்து பார்த்த கெளசல்யாவுக்கு, எதிரே அலுவலக உதவியாளர் ஆரோக்கியசாமி சொல்லிலும் செயலிலும் "வணக்கம்' தெரிவித்துக் கொண்டிருந்தார்.
""குட் மார்னிங் ஆரோக்கியசாமி, ஏ.ஈ.ஓ. ரூம் சாத்தி இருக்கு; இன்னும் அய்யா வரல்லியா?''
""வந்திட்டார், மேடம். வந்திட்டு கோபி சார் மனைவி இறந்த கேதத்துக்குப் போயிருக்கார்''
""என்ன... கோபி சார் வொய்ஃப் இறந்திட்டாங்களா? அய்யய்யோ... எப்போ?''
 ""நேத்து ராத்திரி, மேடம்''
""ம்... அய்யா என்ன சொல்லீட்டுப் போனார்? வருவாரா... அப்படியே "கேம்ப்' போயிருவாரா? அர்ஜெண்ட் தபாலெல்லாம் கையெழுத்தாக வேண்டியிருக்கு''
""மேடம், நாஞ்சொல்ல மறந்துட்டேன். சீக்கிரமா வந்திடுவாராம்... எல்லாம் ரெடியா வச்சிருப்பீங்களாம்''
 ""ம்... கோபி சார் வொய்ஃபுக்கு என்னா, திடீர்ன்னு? ஒடம்புக்கு முடியாம இருந்தாங்களா?''
""என்னன்னு தெரில்ல மேடம்.ரெண்டு மூணு மாதமா முடியாம இருந்திருந்தாங்க போல''
""ப்ச்..'' கெளசல்யாவிடமிருந்து கழிவிரக்க ஒலிக்குறியொன்று வெளிப்பட்டது.
நந்தகோபாலுக்கு கோபால்பட்டிதொடக்கப் 
பள்ளியொன்றில் ஆசிரியர் பணி. அவன் பணிக்கு வந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டன. கல்யாண வயதை அவன் தாண்டியது போலவே, கல்யாணமும் அவனைத் தாண்டித் தாண்டிப் போனது! காரணம் இவன் பணிக்கு வந்த மறுவருடமே இவனது தந்தை ராமானுஜம் இறந்து
விட்டார். தாய், தங்கை, தம்பி என்கிற முப்பரிமாணப் பாரங்களை இவன் சுமக்க நேரிட்டதால் இவனது கல்யாணம் தள்ளிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், உரிமை கொண்ட நண்பர் ஒருவரின் பிடிவாதமான முயற்சியால், ஒரு கார்த்திகை மாதத்தில் அவனது கல்யாணம் நடந்தேறியது.

பெண் மதுரைக்கும் தெற்கே ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம். நல்ல அழகான பெண்; எலுமிச்சம் பழ நிறம்; கண்களில் தீட்சண்யம்; எடுப்பான நாசி; அடர்ந்து நீண்ட கருமையான கூந்தல்; +2 படித்திருந்தாள்; எல்லோருக்கும் பரம திருப்தி; கல்யாணம் நடந்தேறியது. அந்தப் பெண்ணின் பெயர்தான் கெளசல்யா.

கெளசல்யாவும் நந்தகோபாலும் மனமொத்த தம்பதியராய் - கூட்டுக் குடும்பச் சூழ்நிலையிலும் பிரச்னைகள் ஏதுமின்றி ஐந்தாண்டு தாம்பத்யத்தை இனிதாய்க் கழி(ளி)த்தனர். ஆனாலும், அவ்விருவர் மனதையும் ஒரு விஷயம் சதா குடைந்து கொண்டே இருந்தது. இந்த ஐந்தாண்டு காலத்திலும் அவர்களுக்கு ஒரு குழந்தை ஏற்படவில்லையே என்கிற மனக்கவலைதான், அது. இருவரும்

சேர்ந்தும், தனித்தனியாகவும் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. சபரிமலை அய்யப்பனிடம் கூட வேண்டுதல் வைத்து மாலை போட்டு விரதமிருந்து பாத யாத்திரை போய் வந்தான், நந்தகோபால்!

அது, அவனுக்கு மூன்றாம் வருட சபரி யாத்திரை. பூணூல் போட்டு அதில் ஒரு சிறு மணியைக் கட்டி, மணிகண்டன் ரூபத்தில் பயணமேகினான். அப்போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது. பம்பையில் குளித்து, இருமுடியேந்தி, சபரிமலையேறி, சரங்குத்தியையடைவதற்கே - அந்த 4.5 கிமீ. பயணத்திற்கே - ஒன்பது மணி நேரம் பிடித்தது. அந்த அளவுக்குக் கூட்டம்; நெரிசல். சரங்குத்தியிலிருந்து சந்நிதானத்திற்கான இறங்குமுக வழுக்குத்தரைப் பயணத்தின் போது இடதுபக்கப் பாதுகாப்புக் கயிறு அறுந்தபோது, பல பேர்அதலபாதாளத்தில் உருண்டனர். அதில் உயிர் இழந்தவர்களில்நந்தகோபாலும் ஒருவன். 

நந்தகோபால் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருந்த போது மேற்கொண்ட சபரி யாத்திரையில் இறந்து போனதால், மனைவி கெளசல்யாவுக்குக் குடும்பப் பாதுகாப்பு நிதியுதவி, ஓய்வூதியம், சேமநல நிதி மற்றும் சில நிதிகள் என ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் கிடைத்தன. அவற்றைக் கொண்டு, தன் கணவனின் விதவைத்தாய், கல்யாணத் தோரணையிலிருந்த தங்கை, ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த தம்பி ஆகியோரைக் கொண்ட குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு, தானும் அவர்களுடனே தங்கிக் கொண்டாள். சில மாதங்களில் கருணை அடிப்படையில்,அவளுக்குக் கல்வித்துறையில், இளநிலை எழுத்தர் பதவி கிடைத்தபோது, அந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணியில் அமர்ந்தாள்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தம் பள்ளியில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான தெளிவுரை பெற உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு வந்திருந்தான், பலராலும் "கோபி' என்றழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன். அது சம்பந்தமான பணிகளைக் கவனிப்பது கெளசல்யா என்பதால், அவள் சீட்டுக்கு எதிரே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான், கோபி.
வந்த காரியம் பற்றிய அவனது ஐயப்பாடுகளுக்குத் தெளிவுரை வழங்கிக் கொண்டிருந்தாலும், தன்னெதிரே அமர்ந்திருக்கும் கோபி சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு நடுத்தர வயது இளைஞன் என்கிற பட்சாதாபம் அவளது பேச்சிலும் பார்வையிலும் ஊடாடியது. அந்த இழப்பின் வலி அவளுக்குத் தெரியுமாதலால், அவன்பால் கொண்ட பட்சாதாப உணர்வோடு ஓர் அனுசரணைப் போக்கும் சேர்ந்து வெளிப்பட்டதை அவள் அறியவில்லை; அந்த வெளிப்பாட்டிற்கான அவளது உள்மனநிலைத் தன்மைகளை அவனும் அறியவில்லை!
இரண்டு மேஜைகளுக்கு அப்பால் தன் சீட்டில் அமர்ந்திருந்த அலுவலகக் கண்காணிப்பாளரின் குரல், ""கெளசல்யா மேடம், டி.ஈ.ஓ.வுக்கு ரெண்டு அர்ஜெண்ட் தபால் இருக்கு; ஆரோக்கியசாமிக்கு வேற வேலை இருக்கு; நீங்கவேண்ணா மதியத்துக்கு மேல் கிளம்பிப் போயி தபாலை டி.ஈ.ஓ. ஆபீஸில சேத்துட்டு அப்பிடியே கோபால்பட்டிக்கிப் போயிர்றீங்களா?''
""ஆகட்டும் சார்'' - கெளசல்யா.
 ""கோபால்பட்டியா? அங்க என்னங்க மேடம்?'' - கோபி.
""அதான் எங்க ஊர்'' - கெளசல்யா.
""அப்பிடியா? அப்பிடீன்னா... நித்யஸ்ரீ ஜவுளி ஸ்டோர்ஸ் வச்சிருக்கிற நாராயணசாமியத் தெரியுங்களா, மேடம்? - கோபி.
""ஓ... தெரியுமே! அவர் பையன் கோவிந்தராஜூக்குத்தான் என் நாத்தனாரைக் கட்டிக் குடுத்திருக்கோம்'' - கெளசல்யா.
""அப்பிடியா?! நாராயணசாமி எனக்கு ஒறவுக்காரர். மாமா முறை ஆகணும், கோவிந்தராஜ் மனைவி உங்க நாத்தனாரா, மேடம்?'' அவனையும் அறியாமல் மனசில் மகிழ்ச்சி! 
""உங்கள் கணவர் பெயர்?''
""நந்தகோபால்''
""என்ன செய்றார்?''
""இறந்திட்டார்''
மகிழ்ச்சியும் துள்ளலுமாய் ஆர்வமுடன் உரையாடிக் கொண்டிருந்த கோபியைக் குறுக்கடியாய் அடித்துப் போட்டது, கெளசல்யாவின் பதில்.
 ஆடிப்போன கோபி, ""சாரி, மேடம்... ரொம்ப சாரி, மேடம்... ரொம்ப ரொம்ப சாரி மேடம்...'' என்றபடி எதையும் சரியாகப் பேசமுடியாமல் திக்குமுக்காடிப் போய்விட்டான்!
பிறகு, கண்காணிப்பாளர்தான் கெளசல்யாவின் கணவர் நந்தகோபாலும் ஓர் ஆசிரியர் என்பதையும் சபரியாத்திரையின் போது அவர் இறந்து விட்டதையும் கருணை அடிப்படையில் அவளுக்கு வேலை கிடைத்ததையும் கணவனின் குடும்பத்தோடு கோபால்பட்டியில் அவள் இருப்பதையும் கணவனின் குடும்பம் அவளது பராமரிப்பில் இருப்பதையும் அந்தக் குடும்பத்தின் பாதுகாப்பில் அவள் இருப்பதையும் விளக்கிக் கூறினார்.
கோபியும் கௌசல்யாவும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டபோது அவர்களுக்கு மத்தியில் இருந்த பொதுவானதனிமங்கள், ஒருவருக்குள்ளொருவர் ஊடுருவும் வினை நிகழ்வை வேகப்படுத்தும் கிரியாவூக்கியாக அமைந்தன.
கோபியின் மனதுக்குள் கெளசல்யா அடிக்கடி வந்தாள்; அவளுக்கும் அப்படித்தான். அவள் மனதிலும் கோபி வந்து வந்து போனான். இருவர் மனதிலும் ஓர் இனம்புரியாத தவிப்பு. இயல்பான போக்குகள் தடுமாறின. ஈடுபாட்டைக் குலைக்கும் கவனச் சிதறல்கள்; தூக்கத்தில்கூட இடையிடையே தடங்கல்கள்!
இழப்புகளின் வலி இருவருக்கும் ஒரே மாதிரியானதால் அவர்களது எண்ணப் போக்குகளும் ஒரே மாதிரியாகவே இருந்தன. அதனால்தான் அவர்களின் அவஸ்தைகளும் ஒரே மாதிரியாக இருந்தன. இதுதான் "காதல்' என்பதை கௌசல்யா உணரவில்லை; உணர்ந்தாலும் அதைக் காதல் என்பதை ஒப்புக் கொள்ள தயங்கினாள்."ஒப்புக் கொள்வதும் அதுமாதிரியான நடத்தைக்கு ஏற்பளிப்பதும்பாவம் , சமூக கலாசாரத்திற்கு ஒவ்வாதது. அதன் ஒழுங்குக்கு எதிரானது' என்பது காலங்காலமாகப் பெண்ணினத்திற்கு மட்டும் ஊட்டப்பட்டு, வரும் போதனையாகும்.எனவேதான், கெளசல்யாவும் "ச்ச்சீச்சி... அதெல்லாமில்லை... சும்மா... வெறும் கழிவிரக்க உணர்வே' என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டாள்.
கோபியைப் பொறுத்தவரைப் பெரிதாக ஒன்றும் பிரச்னைகள் எழவில்லை; சம்பாதிக்கும் மனைவி அமைவது ஒரு ப்ளஸ் பாயிண்ட் என்றே கருதினான். ஆனால், ஒரு விதவையை - ஏற்கெனவே ஒருவருடன் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தவளை - திருமணம் செய்து கொள்வது கலாசாரத்திற்கு எதிரானது என்று ஆண்களுக்கு ஊட்டப்பட்டுள்ள கருத்து அப்போது கோபியின் மனதில் தலை தூக்கவில்லை.
கெளசல்யாவைப் பொருத்தவரை தன் பிறந்த வீட்டார் அபிப்பிராயம்கூடத் தேவையென எண்ணவில்லை; தன் பராமரிப்பில் - தன் பொறுப்பில் - இருக்கும் தன் கணவன் நந்தகோபால் குடும்பத்தார் அபிப்பிராயமே பெரிதாகப்பட்டது. ஏனெனில், கோபியைத் திருமணம் செய்து கொள்வதால், தனது சம்பளம் கோபியிடம் போய் சேர்ந்துவிடும். நந்தகோபால் இறப்பை முன்னிட்டுக் கிடைத்து வரும் குடும்ப ஓய்வூதியமும் நின்றுவிடும். நந்தகோபாலன் குடும்பத்தின் வாழ்வாதாரமே முற்றிலும் அற்றுப்போய் விடும்! அவர்களுக்கு வேறு வழி? அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று யோசித்தாள். மாமியாரிடம் அபிப்பிராயம் கேட்டாள் - அந்த மகராசி - மாமியார் - ஆண்டாளம்மாள், ""அம்மாடி, ஒனக்கு வாழவேண்டிய வயசு; நீ வாழணும்; எங்களுக்குப் பெறகு ஒனக்கு யார் இருக்கா? கடைசிக் காலத்துல ஒன்னிய யார் பாத்துக்குவா? புருசன் புள்ளகுட்டீன்னு இருந்தாத்தான் ஆகும்; தாராளமா நீ கல்யாணஞ் செஞ்சுக்கிட்டு நல்லா இரும்மா; ஏதோ ஒம் புண்ணியத்துல பொம்பளப் புள்ளயக் கரை சேத்தாச்சு; இன்னம் யார் இருக்கா? ஆம்பளப்பய ஒருத்தன் தானே? அவனும்ஆம்பளையாகிட்டான்; பன்னெண்டாவது படிக்கிறான்; எப்பிடியும் பொழச்சுக்குவான்; என்னப்பத்தி நீ கவலப்படாதே; ஆந்துபோனக் கட்டை; எப்பிடியானாத்தான் என்னா? நீ நல்லா இருக்கணும்; நீ வாழணும்; அதுக்கு அந்தப் பையன் ஏத்தவனான்னு நல்லா யோசிச்சுக்கம்மா'' என்றார்!
மாமியாரின் கால்களில் விழுந்து கதறியழுத கெளசல்யாவைத் தூக்கி நிறுத்தி, அணைத்தபடியே இழுத்துச் சென்று, பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த நந்த
கோபால் படத்துக்கு முன் நிறுத்தி, அங்கே தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டாள், குணவதி ஆண்டாளம்மாள்!
இளமையிலேயே இணை வாழ்வைப் பறிகொடுத்த கோபியையும் கெளசல்யாவையும் இணை வாழ் நுகர்ச்சியின் மறு தொடக்கத்திற்கு இட்டுச் செல்ல சில நல்ல உள்ளங்கள் எடுத்த முயற்சி எளிதாக நிறைவேறின.
கல்யாணம் நடந்த அன்று கெளசல்யா, முதல்முதலாகக் கோபியின் வீட்டு வாசற்படியை மிதித்த போது, வீட்டின் கூடத்தில் பெரிய அளவிலான, ஒரு பெண்ணின் படம், மாலை அணிவிக்கப்பட்ட நிலையில், வைக்கப்பட்டிருந்தது!. அவள், நின்று நிதானமாய் அந்தப் படத்தைப் பார்த்தாள். அது, கோபியின் இறந்து போன மனைவியின் படம் என்பதை உணர்ந்த கௌசல்யா, அந்தப் படத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவளின் இந்தச் செய்கை கோபியை வெகுவாகக் கவர்ந்தது. "அற்புதமான பெண்' என்று மனதுக்குள் வியந்து மகிழ்ந்தான்.
அவர்களது கல்யாணத்துக்குப் பிறகு வந்த முதலாவது முதல் தேதி, அது. மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அன்று மதியம் 3.00 மணியளவில் மாதாந்திரக் கூட்டம். கூட்டம் முடிந்து வீடுவந்து சேரும் போது மாலை மணி 6.00 ஆகிவிட்டது, கெளசல்யவுக்கு.
அவள் வருகையை எதிர்பார்த்து வீட்டில் காத்திருந்த கோபி, அவள் வந்ததும் ""மீட்டிங்கெல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சுதா? என்னமும் பிரச்சனை இல்லையே?''என்று கேட்டான்.
 ""அதெல்லாம் ஒன்னுமில்லே; நல்லாவே நடந்து முடிஞ்சது''
""இந்தா... ஆரோக்கியசாமி குடுத்தார்'' ஒட்டப்பட்டிருந்த கவர் ஒன்றை நீட்டினான், கோபி.
""அது என் சம்பளக் கவர்; நீங்களே வச்சுக்கங்க''
கோபி முகத்தில் பூக்கள் மலர்ந்தன! "அற்புதமான பெண்!' மீண்டும் ஒருமுறை மனதிற்குள் வியந்து மகிழ்ந்தான், கோபி!
மணம் முடித்த மூன்றாவது மாதத்தில் ஒரு நாள், கோபியின் முதல் மனைவி நினைவு நாள் வந்தது. அப்படியான நாட்களில் மனைவியின் படம் மற்றும் சாமிகளின் படங்களையும் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலை சாற்றி, வீட்டில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மற்றும் கடைகளில் இருந்து தருவிக்கப்பட்ட பலகாரங்கள், இனிப்புகள், பழங்களுடன் மற்றும் சமைத்த உணவு வகைகள் பலவற்றையும் இலையிலிட்டு மனைவிக்குப் படைத்து அவளை நினைவு கூர்ந்து கும்பிடுவான், கோபி. அதன் பிறகே அவனும் வீட்டாரனைவரும் உணவருந்துவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் நடந்தது.
கெளசல்யாவுக்கு இது ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. கோபியின் இந்தச் செயல் போன்று, "கணவன் பாத்திரமேற்ற பிற ஆடவர்கள் இறந்துபோன தம் மனைவியை நேசிக்கவும் பூஜிக்கவும் செய்வார்களா? இது சாத்தியமா?' என்று கெளசல்யா எண்ணிய போது, அவள் மனதில் கோபி வானுயர ஓங்கி நின்றான். அப்படிப்பட்ட கோபியோடு நீண்ட நாள் வாழக் கொடுத்து வைக்காமல் இடையிலேயே போய்விட்ட அந்தப் பெண்ணை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டாள்; தனக்கு அந்தப் பாக்கியம்
கிடைத்ததை எண்ணிப் பெருமையோடு கூடிய பெருமகிழ்வு கொண்டாள், கௌசல்யா.
அன்றொரு ஞாயிற்றுக்கிழமை; விடுமுறை நாள். கூடத்தில் கோபியுடன் அமர்ந்து வாஞ்சையுடன் பேசிக் கோண்டிருந்தாள், கெளசல்யா. அப்போது, முன்வாசலில் ஓர் இளைஞன் நுழைந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் துள்ளியெழுந்து எதிர்நோக்கிச் சென்ற கோபி, ""வா... பாலாஜி... வா...''என்றபடி அவன் கையைப் பிடித்து அழைத்து வந்து கெளசல்யாவுக்கு அறிமுகப்படுத்தினான்.
அந்த இளைஞன் கோபியின் மைத்துனன்; முதல் மனைவியின் தம்பி; பொறியியல் மாணவன். நீண்ட நேர சேம லாப விசாரணைகளுக்கும் உபசரிப்பு
களுக்கும் பிறகு அவன் ஊருக்குக் கிளம்பினான். அப்போது செமஸ்டர் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்திற்காக, ஏற்கெனவே அவன் கேட்டிருந்ததன் அடிப்படையில், பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பினான், கோபி. கெளசல்யாவுக்கு வியப்பான வியப்பு! "இப்படியெல்லாங்கூட சொந்த பந்தங்களை ஆதரிக்கும் மனிதர்கள் இருக்கிறார்களா?' என்ற வியப்புதான், அது! கோபியின் மீதிருந்த நல்லபிப்பிராயம் மேலும் கூடியது, கெளசல்யாவுக்குள்.
இவ்வாறு கோபியும் கெளசல்யாவும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட மகத்துவங்கள் மென்மேலும் பெருக, வாழ்க்கை என்னும் ஒளிவிளக்கு மங்காமல் எரிந்து கொண்டிருந்தது.
அன்றும் ஒரு மாதத்தின் முதல் தேதி; வழக்கம் போல கெளசல்யாவுக்குகல்வி அலுவலகத்தில் மாதாந்திரக் கூட்டம். அதில் பங்கேற்க தன் அலுவலகத்தில் முதல் நாளே அனுமதி பெற்றிருந்ததால், வெள்ளனவே வீட்டைவிட்டுக் கிளம்பி, திண்டுக்கல் வந்து, 11.00 மணிக்கெல்லாம் கோபால்பட்டி வந்துவிட்டாள், கௌசல்யா.
நந்தகோபால் இறந்தது தொடர்பாகக் கிடைத்த நிதிகளில் தன் நாத்தனார் (நந்தகோபாலின் தங்கை) கல்யாணச் செலவுபோக, எஞ்சிய பணத்தில் இரண்டு இலட்ச ரூபாயைத் தன்பெயரில் வைப்பு நிதியாக அங்குள்ள வங்கியொன்றில் போட்டிருந்தாள், கெளசல்யா. அது நேற்றுடன் கெடு முடிந்து முதிர்ச்சியுற்றதால், அதைப் பெற்று, அதில்நான்கு இலட்ச ரூபாயை மாமியார் (ஆண்டாளம்மாள்) பெயரில் மாதா மாதம் வட்டி கிடைக்கும்படியான திட்டத்தில் போட்டுவிட்டு, மீந்த சொச்சத்தையும் மேற்படி வைப்புநிதி ஆவண ரசீதையும் மாமியாரிடம் கொடுத்தாள், கெளசல்யா. பாசத்துடன் மாமியார் கையால் பொங்கிப் போட்ட மதிய உணவை உண்டுவிட்டு, மாமியாரிடம் சற்று
நேரம் உரையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஆண்டாளம்மாள் -
""அம்மாடி... சந்தோசமா இருக்கியா?''
""நல்ல இருக்கேன், அத்தை... சந்தோசமா இருக்கேன்''
""அந்தப் பையன் ஒன்ன நல்லபடியா வச்சுக்கிறானா? ஏதும் சங்கடப்படுத்துகிறானா?''
""அய்யய்யோ... அதெல்லாம் ஒன்றுமில்லை, அத்தே... ரொம்பச் சந்தோசமா வச்சுக்கிறார்... என்கிட்ட ரொம்பப் பிரியமா நடந்துக்கிறார்''
""அப்படியா? ரொம்பச் சந்தோசம்மா... நீ எங்களை நெனச்சுக் கவலப்படாதே... அந்தப் பையன் போக்குல சமத்தா நடந்து சந்தோசமா இரும்மா''
""சரிங்க, அத்தை''
பேச்சு நீண்டு கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் கூட்டம் இருப்பதைச் சொல்லி விட்டுக் கிளம்பினாள், கெளசல்யா. கிளம்பியவள் மாவட்டக் கல்வி அலுவலகம் வந்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது மாலை மணி 6.00 ஆகிவிட்டது. அவளை எதிர்பார்த்துக் காத்திருந்த கோபி, அவள் வந்து சேர்ந்ததும், -
""மூணு மணிக்குத்தான் மீட்டிங்காமே?''
""ஆமா''
""நீ காலையிலேயே போயிட்டியாமே?''
""ஆமா... கோபால்பட்டி போக வேண்டியிருந்துச்சு... அதான் வெள்ளனேயே போனேன்'' 
கோபால்பட்டி என்றதுமே அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. முகவாட்டம் சற்றே மாறியது.
""அங்க என்னா, திடீர்ன்னு?''
அனைத்தையும் விபரமாகச் சொன்னாள், கெளசல்யா.
""எவ்வளவு ரூபாய்ன்னு சொன்னே?''
""வட்டியோட சேர்த்து நான்கு லட்ச ரூபாய்க்கு மேல''
""அது... அது... அது ஓம் பணந்தானே?'' கோபியின் தொனியில் பிசிர்; ஒருவிதமான வித்தியாசம் தெரிந்தது.
""அது எப்படீங்க? அது அவர் எறந்ததாலக் கெடச்ச பணம்; அவர் தங்கச்சி கல்யாணச் செலவுபோக மீந்த பணம்; வயசான அந்த அம்மாவுக்கும்
வளர வேண்டிய அந்தப் பையனுக்கும் தேவைப்படுகிற பணம்; அதப்போயி எம்பணம்ன்னு எப்பிடிங்க சொல்றது?''
""ஓகோ!... ப்ப்ச்ச்...''இழப்பு மற்றும் ஏமாற்ற உணர்வுகள் அவன் உள்ளத்தில் மேவியதன் வெளிப்பாடாக அந்த ஒலிக்குறி அமைந்திருந்தது. குப்பென்று பாய்ந்த அந்த உணர்வின் தாக்கத்தியிருந்து மீள அவனுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு, ""சரி... போகட்டும்... எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் செஞ்சிருக்கலாமுல்ல... ஏன் என்னைக் கேட்கல?''
இப்படி அவன் கேள்வி கேட்பதும் உணர்வெய்துவதும் சரியல்ல எனப்பட்டது, கெளசல்யாவுக்கு. உள்ளப்பூர்வமாக கௌசல்யா அப்படி எண்ணவில்லை யென்றாலும், ஒரு வாதத்திற்காக, "அவனது மைத்துனன்' பாலாஜிக்குப் பண உதவி செய்தபோது தன்னைக் கேட்டுக் கொண்டா செய்தார்? என்ற உணர்வோட்டம் அவள் மனதில் மின்னி மறைந்தது. அதே சமயம், கோபால்பட்டி வங்கியில் போட்டிருந்த அந்தப் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து விட்டது பற்றி இவர் ஏன் இவ்வளவு ஃபீல் பண்ணுகிறார்?என்று மனதில் எண்ணியவாறு மெளனம் கடைபிடித்தாள், கெளசல்யா.

சமூக நடைமுறையில், ஆணுக்கும் பெண்ணுக்குமான கலாசார உறவுகளில் இருந்துவரும் முரண்பாடுகளில் ஒன்று, கணவன் - மனைவி என்கிற கலாசார உறவில் வாழும் கோபி - கௌசல்யா என்கிற ஆண் - பெண்ணிடையே முதன்முதலாக வெளிப்பட்டது. 

இந்தச் சம்பவம் கோபியின் மனதில் இனம் புரியாத ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒருவித விரக்தியுணர்வின் சோபிதம் அவன் முகத்தில் படர்ந்தது! கணவனாகிய தன்னிடம் அனுமதியோ ஆலோசனையோ பெறாமல் அவள் இஷ்டத்திற்கு செய்து விட்டாளே என்கிற ஆணாதிக்க உணர்வு, அவனுள்ளத்தில் புழுங்கிக் கொண்டிருந்தது. ஏனோ அவன் கெளசல்யாவை ஏறெடுத்துப் பார்க்காமல் சட்டென எழுந்து எங்கோ சென்றுவிட்டான். இரவு வெகு நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. ஒருவித சங்கடத்திற்கு ஆட்பட்டாள், கெளசல்யா.
எப்போதும் கோபி, இப்போது போல் நடந்து கொண்டதில்லை. பள்ளிக்கும் பிற பணிகளுக்கும் வீட்டை விட்டுச் செல்லும்போது, கெளசல்யாவின் கண்களை ஊடுருவிப் பார்த்தபடியே, அவளைவிட்டு நீங்க முடியாமல் நீங்குவது போல, ஒரு தடவை போல இரண்டு, மூன்று தடவைகள் "போய் வருகிறேன்... போய் வருகிறேன்' எனக் கூறியபடியே அவளிடமிருந்து நீங்கும் கோபி, இப்போது சட்டென எழுந்து சென்றது அவளுக்கு வருத்தத்தை அளித்தது.

அப்படிச் சென்றவன் இரவு11.00 மணி என ஆனபோதும் வீடு திரும்பாததும் அவளுக்கு வேதனையைத் தந்தது. இந்த வேதனையும் அந்த வருத்தமும் ஒன்று சேர, அவள் மனம் புண்ணாய் வலித்தது.

அந்த வலி தந்த விவேகம், அவள் சிந்தனையில் வினாக்கள் பலவற்றை அலையெழுப்பியது. புரண்டு புரண்டு படுத்தாள்; தூக்கம் பிடிக்கவில்லை; வலிகளும் குறையவில்லை. அவள் மனதில் வினாக்கள் வீரியத்துடன் வேகங்கொண்டு எழுந்தடித்ததால் கலக்கமுற்றுப் போனாள், கெளசல்யா!

கெளசல்யாவைப் பொறுத்தவரை, நந்தகோபாலின் குடும்பம் அவள் குடும்பம் தானே? 

நந்தகோபால் இறந்ததற்குப் பிறகு - அவன் இறப்பின் நிமித்தம் - அரசு அவளுக்கு அளித்தப் பணி நியமனமும் நிதி உதவிகளும் காட்டும் தாத்பரியம் என்ன? அவள் மூலம் அந்தக் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் காக்க கடமைப்பட்டவள் என்பது தானே? அவற்றை அவள் உதறித் தள்ளிவிட முடியுமா?
சிந்தனைகள் சுழன்று கொண்டே இருந்தன, கெளசல்யாவுக்குள்! தனது முதல் மனைவியின் மீது கொண்ட பாசத்தையும் அக்குடும்பத்தின் மீது காட்டும் அக்கறையையும் அவர்களுக்கு செய்யும் பண உதவிகளையும் வெளிப்படையாக்கிப் பெருமைகொள்ளும் கோபிக்கு, கெளசல்யா,நந்தகோபால் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்ததில் ஏன் இத்தனை வருத்தம் என கேள்விமேல் கேள்விகள்? அதேபோல திருமணப் பதிவு முடிந்த பிறகு கோபியின் வீடு வந்து சேர்ந்த அவர்கள், முதல் வேலையாக, பூஜை அறையில் இருந்த கோபியின் இறந்த போன முதல் மனைவியின் படத்திற்கு முன்நின்று கைகூப்பி வணங்கினார்கள். அது சரியான நடவடிக்கை, போற்றுதற்குரிய பண்பு என கௌசல்யா உணர்ந்தாள். அதே சமயம், கெளசல்யாவின் இறந்து போன கணவன் நந்தகோபால் படத்தை அந்த வீட்டில் வைப்பதற்கோ வழிபடவோ ஒப்புவதில்லையே ஏன்? இதுதான் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பதா? கேள்விக்கணைகள் மூளையைத் தாக்க பொட்டு நரம்புகள் தெறித்து விடும் போல் இருந்தது. அதேவேளையில், முதற்கணவன் நந்தகோபால் வந்து வந்து போனான், அவளது மனக் கண்களுக்குள்!

எழுந்து சென்று பீரோவில் பட்டுப் புடவைக்குள் வைக்கப்பட்டிருந்த நந்தகோபால் படத்தை எடுத்து வந்து படுக்கையில் படுத்தபடியே அதைப் பார்த்துக் கொண்டும் வாஞ்சையுடன் அதைக் கைகளால் தடவிக் கொண்டும் இருந்த கெளசல்யாவின் மனம், கனம் கொண்டது; கண்களில் பெருகிய நீர் மாலை மாலையாய்க் கன்னங்களில் வழிந்தது! இந்த உணர்ச்சிப் போராட்டத்தால் மூளையும் மேனியும் அயற்சியுறவே அந்தப் படத்தைத் தன் மார்போடு அணைத்தவாறு நித்திரைக் கடலில் மூழ்கிப் போனாள், கெளசல்யா.

வெகுநேரம் கழித்து அவளுக்கு முழிப்பு வந்து விழித்தபோது இரவு மணி 3.00! மார்போடணைத்திருந்த நந்தகோபால் படத்தைக் காணவில்லை! பக்கத்தில், தரையில், பாயில் படுத்திருந்தான், கோபி!

"எப்போது வந்தார்? ஏன் தன்னை எழுப்பவில்லை? எப்போதும் போல தன்னுடன் கட்டிலில் படுக்கவில்லையே, ஏன்? ஏன் தரையில் கீழே தனியாகப் படுத்திருக்கிறார்? இவருக்கு என்ன ஆச்சு? அவர் (நந்தகோபால்) படத்தை எங்கே காணோம்?' மீண்டும் கேள்விக்கணைகள் துளைத்தெடுக்க அவஸ்தைக்குள்ளானாள், கெளசல்யா!

மறுநாள் காலை அவரவர் அவரவர்கள் பணிகளுக்குச்  சென்றுவிட்டனர்.

எப்போதும் போல மாலை வீடுவந்து சேர்ந்தாள், கெளசல்யா. அதுபோல கோபி வரவில்லை. வீடு வந்த கெளசல்யா எங்கு தேடியும் நந்தகோபால் படம் கிடைக்கவில்லை கோபிதான் அதை எடுத்து எங்கோ மறைத்திருக்க வேண்டும். அவனிடம் கேட்க முடியுமோ? இரவு சாப்பாட்டு நேரத்திற்கு வீடு திரும்பிய கோபி, சாப்பிட்டு விட்டுக் கூடத்தில் கிடந்த - கட்டிலில் ஓய்வு எடுப்பதுபோல் படுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிவிட்டான். தூங்கி விட்டனா? அல்லது தூங்கிவிட்டது போல் நடிக்கிறானா? அது அவனுக்கே வெளிச்சம். எப்போதும் போல படுக்கை அறையில் படுத்திருந்தாள் கெளசல்யா. கோபியின் செயலால் வீட்டுச் சூழ்நிலையே மாறிப் போயிருந்தது.
கோபி தன் முதல் மனைவியின் படத்தைப் பூஜை அறையில் வைத்துப் பூஜித்து வருகிறான். அக்குடும்பத்தின்பாற் பாசமும் பற்றும் காட்டி வருகிறான். நிதியுதவிகள் கூடச் செய்து வருகிறான். இதில் குறுக்கிட்டு யாரேனும் ஏதேனும் சொல்லிவிடக் கூடும் என்கிற அச்சமே அவனுக்கு இல்லை. ஏனெனில், அவன் ஓர் ஆணாதிக்கச்சமுதாயத்தின் பிரதிநிதி! இந்த நெறி முறைகள் காலங்காலமாகக் கடத்தப்பட்டு ஆண்களின் ரத்த அணுக்களில் உறைந்து போய்க் கிடக்கிறது. அது கோபியையும் ஆட்டுவிக்கிறது!


ஆணாதிக்கச் சமுதாயம் என்றாலும் பெண்ணடிமைச் சமுதாயம் என்றாலும் ஒன்றுதான். பெண்ணடிமைச் சமுதாயத்தில், பாவப்பட்ட ஜென்மமாய் ஜன்மம் எடுத்துவிட்ட கௌசல்யாவை இதுவரையிலும் காத்து நிற்பதும் - இனிமேலும் காத்து நிற்கப் போவதும் அவளது பொருளாதார (சம்பளம் பெறும்) அந்தஸ்தே ஆகும்! எனவே, பயப்படத் தேவையில்லை; காலப்போக்கில் கோபியின் பிணக்குக் காணாமற் போய்விடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com