'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 49

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவான ஒரு சில நாள்களில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 49


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவான ஒரு சில நாள்களில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். தல்கத்தோரா சாலை 13-ஆம் இலக்க பங்களாவில் வழக்கமான பரபரப்போ, சாலையை ஒட்டி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களோ இல்லை. 

தனது அலுவலக அறையில் கொஞ்சம் கூடப் பதற்றமோ, பரபரப்போ இல்லாமல் அமர்ந்திருந்தார் பிரணாப்தா. அவர் ரிஸாக்ஸாக இருக்கிறார் என்றால், தனது மேஜையில் அமராமல் தனியாக சோபாவிலோ, அந்த அறையில் இருக்கும் சாய்வு நாற்காலியிலோ கால்களை நீட்டிக்கொண்டு, தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருப்பது வழக்கம்.

அந்த சந்தர்ப்பத்தில்தான் முன்னாள் ஜனாதிபதிகள் குறித்த பேச்சு வந்தது.

""உங்கள் சென்னை ராஜதானிதான் இந்தியாவுக்கு மிக அதிகமான நிதியமைச்சர்களையும், குடியரசுத் தலைவர்களையும் தந்திருக்கிறது, தெரியுமா?''

""நிதியமைச்சர்கள் தெரியும், குடியரசுத் தலைவர்கள்....'' என்று நான் யோசிப்பதற்கு முன் அவரே பெயர்களைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார்.

""டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், வி.வி. கிரி, சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், அப்துல் கலாம் என்று ஐந்து குடியரசுத் தலைவர்களைத் தந்திருப்பது மதராஸ் ராஜதானிதான். உத்தரபிரதேசம் உள்பட வேறு எந்தப் பகுதிக்கும் இந்தப் பெருமை கிடையாது.''

அவர் சொன்னபோதுதான் யோசித்துப் பார்த்தேன். வி.வி. கிரி 1939 ராஜாஜி அமைச்சரவையிலும், சஞ்சீவ ரெட்டி குமாரசாமி ராஜா அமைச்சரவையிலும் இடம் பெற்றவர்கள். 1936 தேர்தலில் பொப்பிலி அரசரைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்திய வி.வி. கிரி, ராஜாஜி அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராக இருந்தவர். அவரது பதவிக்காலத்தில்தான் பல தொழிலாளர் நல சீர்திருத்தச் சட்டங்களும், ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டன. தலைசிறந்த தொழிற்சங்கவாதியான வி.வி. கிரியின் அரசியல் பின்னணி பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

""ஆர். வெங்கட்ராமனைத் தொடர்ந்து நிதியமைச்சர் ஆனீர்கள். அதேபோல, இப்போது அவர் வகித்த குடியரசுத் தலைவர் பதவியையும் வகிக்கப் போகிறீர்கள்...'' என்றேன். 

""தேர்தல் இன்னும் நடக்கவில்லை அதற்குள் எதையும் முடிவு செய்துவிட முடியாது''

பிரணாப்தா ஏன் அப்படிச் சொல்கிறார் என்று ஒரு நொடி நான் நினைத்தேன். அதற்குக் காரணம் இருந்தது என்பதைப் பிறகு விளக்குகிறேன். அதற்குள் அவரே பேசத் தொடங்கிவிட்டார்:

""ஆர். வெங்கட்ராமனுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. 1977-இல் அவர் மக்களவை உறுப்பினராகவும், நான் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தோம் என்றாலும் எங்களுக்குள் அதிகமான தொடர்பு இருக்கவில்லை. நான் அரசியலுக்கு வரும்போது அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சற்று விலகியே இருந்தார். தீவிர அரசியலில் பங்கு பெறவில்லை. 1980-இல் இந்திரா காந்தி அமைச்சரவையில் இரண்டாண்டுகள் அவர் நிதியமைச்சராகவும், நான் வர்த்தகத்துறை அமைச்சராகவும் இருந்தபோது நிறைய சந்தித்திருக்கிறோம், பேசியிருக்கிறோம், விவாதித்திருக்கிறோம். எல்லாமே அலுவலகரீதியாக இருந்தனவே தவிர, தனிப்பட்ட முறையில் நெருக்கமான தொடர்பு இருக்கவில்லை.''

""உங்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவியதாகச் சொல்கிறார்களே, உண்மையா?''


""அதெல்லாம் வெறும் வதந்தி. நிர்வாகரீதியாகக் கருத்துவேறுபாடுகள் எழுவது என்பது அமைச்சரவையில் சகஜம். அது தனிப்பட்ட உறவைப் பாதிக்காது. அப்படிப் பார்த்தால் இந்திரா காந்தி உள்பட எல்லோரிடமும் ஏதாவது ஒரு பிரச்னையில் நான் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறேன். அதற்காக அதைத் தனிப்பட்ட விரோதமாகவோ, நட்புறவு இல்லை என்றோ சொல்லிவிட முடியாது.''
""உங்களுக்கும் சி.சுப்பிரமணியத்துக்கும் இடையே நெருக்கம் அதிகமாக இருந்ததாகக் கூறுவார்கள். அதற்கென்ன காரணம்?''

""நிர்வாகரீதியாக எனது குரு சி. சுப்பிரமணியம்தான் என்று கூறுவதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது. 1973-இல் பிரதமர் இந்திரா காந்தியால் நான் முதன்முதலில் மத்திய அமைச்சரவையில் தொழில் வளர்ச்சித்துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டேன். அப்போது அந்த அமைச்சகத்தில் கேபினட் அமைச்சராக இருந்தவர் சி. சுப்பிரமணியம். நான் நிர்வாகத்திற்குப் புதிது. கோப்புகளைக் கையாள்வது, அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உள்ளிட்ட எல்லா நிர்வாகச் செயல்பாடுகளையும் அவரைப் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன்.''
பழைய நினைவில் சிறிது நேரம் ஆழ்ந்தார் அவர். தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டபோது, அந்த நாள் ஞாபகத்தில் திளைக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.
""சிறிது காலம் கப்பல் மற்றும் கடல்வழிப் போக்குவரத்துத்துறை துணையமைச்சராக மாற்றப்பட்டேன் என்றாலும், ஒன்பதே மாதங்களில் மீண்டும் சி. சுப்பிரமணியத்துடன் இணைய நேர்ந்தது. 1974-இல் ஒய்.பி. சவாணை அகற்றிவிட்டு நிதியமைச்சராக சி. சுப்பிரமணியத்தைப் பிரதமர் இந்திராகாந்தி நியமித்தபோது, பதவி உயர்வு அளிக்கப்பட்டு நான் நிதியமைச்சகத்தில் இணையமைச்சராக்கப்பட்டேன். அடுத்த ஒரே ஆண்டில் நிதியமைச்சக வருவாய், செலவினங்கள் துறையின் இணையமைச்சராக எனக்குப் பொறுப்பு தந்தார் பிரதமர். அந்தகாலகட்டங்களில் சி.எஸ்ஸூடன் மிக நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது என்பது மட்டுமல்ல, அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைஉற்று கவனித்துக் கற்றுக் கொள்ளவும் என்னால் முடிந்தது.''
""சி.சுப்பிரமணியத்திடம் நீங்கள் கற்றுக் கொண்ட மிக முக்கியமான பாடம் எது?''
""1975-76 பட்ஜெட் தயாரிப்பில் நான் அவருடன் முழுக்க முழுக்க இருந்திருக்கிறேன். ஒவ்வொரு சின்னச் சின்ன அம்சம் குறித்தும் அவர் குறிப்பெடுத்து வைத்திருப்பதும், கவனம் செலுத்துவதும் தேசத்தின் நிதி நிர்வாகி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். விரைவிலேயே நாங்கள் அரசியல்ரீதியாகப் பிரிய வேண்டி வந்தது...''
கூறிவிட்டு மெளனமானார் பிரணாப் முகர்ஜி. நான் குறிப்பறிந்து விடைபெற்றுக் கொண்டேன்.
இந்திரா காந்திக்கு எதிராக சி. சுப்பிரமணியம் மாறியதும், ஷா கமிஷனில் சாட்சியம் அளித்ததும், இந்திரா காந்தியை விமர்சித்துப் பேசியதும் பிரணாப் முகர்ஜியால் கடைசிவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திராகாந்திக்கும் காமராஜருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சி. சுப்பிரமணியமாக இருக்கக்கூடும் என்கிற அபிப்பிராயம் பிரணாப் முகர்ஜிக்கு உண்டு. ஆனால் அதை அவர் வெளிப்படையாகப் பதிவு செய்ததில்லை.
இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக, அவர் பிரதமரான 1966 முதல் இருந்துவந்த சி. சுப்பிரமணியத்துக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு தோன்றி பிளவு ஏற்பட்டதற்கு "அவசரநிலைப் பிரகடனம்' முக்கியமான காரணம். அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதற்கு சி.எஸ். எதிர்ப்புத் தெரிவித்தாரா அல்லது அவரைக் கலந்தாலோசிக்காமல் இந்திரா காந்தி அந்த முடிவை எடுத்ததால் எதிர்த்தாரா என்பது அந்த நாளிலிருந்து விவாதிக்கப்படும் விஷயம்.
மத்திய நிதியமைச்சராக இருக்கும்போதே சி. சுப்பிரமணியத்தின் செயல்பாடுகளும், அவர் தெரிவிக்கும் சில கருத்துகளும் தனக்கு எதிராக இருப்பதை இந்திராகாந்தி மோப்பம் பிடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, காமராஜரை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த கருணாநிதி தலைமையிலான திமுகவுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம் அவர்மீதான சந்தேகத்தை அதிகரித்தது. சி. சுப்பிரமணியத்துக்கு பதிலாகத் தமிழகத்திலிருந்து நிர்வாகரீதியாக திறமைசாலி ஒருவர் இந்திராகாந்திக்குத் தேவைப்பட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் ஆர். வெங்கட்ராமன்.

அப்போது "ஆர்.வி.' தீவிர அரசியலிலிருந்து முழுமையாக விலகி இருந்தார். ராஜாஜியின் மறைவுக்குப் பிறகு அவர் "சுவராஜ்யா' இதழில் அவ்வப்போது தனது கருத்துகளைக் கட்டுரையாக எழுதுவதுடன் சரி. இடதுசாரி சிந்தனாவாதியான ஆர். வெங்கட்ராமனால் சுதந்திரா கட்சி, ஜனதா கட்சி போன்றவற்றைக் கருத்துரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த நிலையில்தான் பழ. நெடுமாறன் போன்றவர்களின் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்தார் இந்திரா காந்தி.
காமராஜர் மறைவு வரை ஆர். வெங்கட்ராமன் இந்திரா காங்கிரஸில் இணைவதைத் தவிர்த்து வந்தார். காங்கிரஸிலிருந்து இந்திரா காந்தி அகற்றப்பட்டதை அவரால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ, அதேபோல காமராஜருக்கு எதிராக எந்தவொரு அமைப்பிலும் சேர்வதும் அவரது மனதுக்கு ஒப்பவில்லை. அதனால்தான் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
காமராஜரும் மறைந்து, காங்கிரஸ் இணைப்பும் நடந்துவிட்ட நிலையில், இந்திரா காந்தியின் அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை. ஆர். வெங்கட்ராமனுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது முதலே, சி. சுப்பிரமணியமும் இந்திரா காந்தியுடனான நெருக்கத்தைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார். சி.எஸ். - இந்திரா பிளவுக்கு அதுதான் காரணம்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பிரணாப் முகர்ஜி ஓய்வு பெற்ற பிறகு அவரை சந்திக்கச் சென்றிருந்தபோது ஒருநாள் பொறுப்பில்லாமல் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. நான் ஒரு விநாடி பயந்தே போய் விட்டேன். அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்றாகிவிட்டது எனக்கு...
""சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் இருவரும் நிதியமைச்சர்களாக இருந்து பார்த்திருக்கிறீர்கள். இவர்களில் யார் அதிகத் திறமைசாலி என்று கருதுகிறீர்கள்?'' என்பதுதான் அந்த அசட்டுத்தனமான எனது கேள்வி.
""இப்படியெல்லாம் முட்டாள்தனமாக ஒப்பிட்டுப் பார்க்க நினைப்பதே தவறு (இட் இஸ் ஃபூலிஷ் டு கம்பேர் லைக் தட்!). இந்தியா மிகப் பெரிய தேசம். இதை நிதி நிர்வாகம் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவால் என்று தெரியுமா? அதென்ன விளையாட்டா, ஒப்பிட்டுப் பார்க்க? இதுவரை இந்தியாவில் இருந்த ஒவ்வொரு நிதியமைச்சரும் அவரவர் வகையில் திறமைசாலிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களது நிம்மதியையும், தூக்கத்தையும் தியாகம் செய்து தேசத்தைப் பாதுகாத்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. அவர்கள் பங்களிப்பை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது...''
சொல்லிவிட்டு என்னை சில நொடிகள் இமைக்காமல் கூர்ந்து பார்த்தார்.
""நான் சொல்வதைக் குறித்துக் கொள். உனக்கு பிற்காலத்தில் பயன்படும்.''
நான் குறித்துக் கொள்ளத் தயாரானேன்.
ஆர்.கே. சண்முகம் செட்டியில் தொடங்கி, ஜான் மத்தாய், சிந்தாமண் தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, மொரார்ஜி தேசாய், சச்சீந்திர செளத்ரி, யஷ்வந்த்ராவ் சவாண், சி. சுப்பிரமணியம், ஹெச்.எம். படேல், ஆர். வெங்கட்ராமன், வி.பி. சிங், சங்கர்ராவ் சவாண், மது தண்டவதே, யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங், ப. சிதம்பரம், ஜஸ்வந்த் சிங், அருண் ஜேட்லி என்று அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொண்ட சவால்களையும் அவர்களின் சாதனைகளையும் அவர் சொல்லச் சொல்ல நான் குறித்துக் கொண்டேன். அதை பிறகு எப்போதாவது பயன்படுத்துவேன்.

திட்டக் கமிஷன் துணைத் தலைவராகப் பிரணாப் முகர்ஜியும், நிதியமைச்சராக டாக்டர் மன்மோகன் சிங்கும் பிரதமர் நரசிம்ம ராவின் இரண்டு கரங்களாகச் செயல்பட்டு வந்தனர். மிகவும் மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்த மூவர் அணி மேற்கொண்ட நடவடிக்கைகள் அப்போதைக்கு தேசத்தைக் காப்பாறியது என்பதில் சந்தேகமே இல்லை.

நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வருகிறது என்கிற சூழல் காணப்பட்ட நிலையில்தான், ஒட்டுமொத்த தேசத்தையும் பேரிடியாகத் தாக்கியது அந்த நிகழ்வு. அந்த நிகழ்வின்போது நான் தில்லியில் இருக்கவில்லை. சென்னையில் இருந்தேன்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com